- முனைவர் கோ.சுனில்ஜோகி -
1
இறுகப் பொத்தியிருந்த தனது காதுகளிலிருந்து கைகளை லோசாக விலக்கிப்பார்த்தாள் கெப்பி. இன்னும் அலைபேசியின் அழைப்பொலி ஓய்ந்தப்பாடில்லை. மீண்டும் இறுக மூடினாள். அவளின் செவிப்பறை முழுக்க அந்த அழைப்பொலிக்கு அவளது மனமே ‘காடுபோக்க (காட்டுப்பூனை)… காடுபோக்க... காடுபோக்க… காடுபோக்க…’ எனும் வார்த்தையைக் கோர்க்க, இறையத் தொடங்கிற்று.
அவளின் கபாலத்திற்குள் கார் இடிகள்... மேலும், இறுக்கமாகக் காதுகளை இறுக்கினாள். அவளது சிறுவிழிகள் விம்பிப் புடைத்தன. பல்லைக் கடித்துக்கொண்டு நாசியகட்டி மூச்செறியும் அவளின் முகம் அடைமழைக் காலத்தில் புகைப்போக்கியில் ஒதுங்கிய காடுபோக்காவையே ஒத்திருந்தது. அதிலும், லேசாகப் புலரத் தொடங்கியிருக்கும் இந்தவேளையில் அவளின் மனநிலையும் அந்தக் காடுபோக்காவின் மனதொத்திருந்தது.
அவளால் முடிந்தவரை காதுகளை இறுக்கியாகிவிட்டது. அலைபேசியையே ஓர்ந்திருந்தாள். அது அணைந்தது. காதுகளிலிருந்து கையை விலக்க அவளுக்கு மனமில்லை. அது அடுத்தநொடியே மீண்டும் ஒலிக்குமென்று அவளுக்குத் தெரியும். அவள் நினைத்ததைப்போலவே அது ஒளிர்ந்தது. மீண்டும்… மீண்டும்… மீண்டும்…. முன்னினும் சத்தமாய் ‘காடுபோக்க… காடுபோக்க…’ இறுக்கத்தைக் கூட்டினாள்… கழுத்துப் புடைத்து நரம்பெழுந்தது… காதுகளில் அழுத்தியதின் வலி.. அழுத்தத்தின் வலி…. அலைபேசியை எடுத்து ஓங்கி சுவற்றில் அறைந்துவிடலாம் போலிருந்தது.
எத்தனைமுறைதான் சொல்வது… எவ்வளவுதான் சொல்வது… இப்படியே விட்டால் இது அடங்காது… சேற்றில் இறங்கிய எருமையைப்போல… அவள் தெரிந்தேதான் இறங்கியிருந்தாள்… இறக்கப்பட்டிருந்தாள்…. வேறு வழியில்லை… அதை மீட்பதும் கடமை... அதோடு காப்பதும் கடமை…. கடனிலுழலும் நெஞ்சம்.. பட்டுதான் தீரும்… விடவே விடாது… பாடாய்ப் படுத்தும்…. அலைபேசியை எடுத்தாள்… திரையில் அலைந்த பச்சைக் குமிழி கடப்பாட்டில் அலைந்தது. அதைச் சொடுக்கினாள்.
“அக்கா.. ஒனக்கு எத்தனவாட்டிதா சொல்றது….
அவரு நல்லாதா இருக்காரு…
இது, ஆஸ்பத்திரி...
இன்னு, திரும்ப திரும்பக் கூப்புடாதே…
அப்புறமா நானே கூப்புடரே…”
சடாரென பேச்சைத் துண்டித்தாள். சொடுக்கிய சிவப்புக்குமிழி அவளின் விழிமுழுக்க அலைந்தது. வெஃகாத வெறுமையின் சிறு துண்டினை அவள் வெட்டியெறிந்திருந்தாள். அவளின் புகுந்தகத்தின் கால்வழியில் மூத்த மருமகளிடம் அப்படிப் பேசியது வெட்டி வெட்டியெறிந்தது. வெட்டவியலாத விதியின் வெறுமை…
இன்று ஊரில் ஒரெப்படையல் தினம். இக்கணம் அங்கு நடந்துகொண்டிருப்பது அவளின் மனக்கண்ணில் மண்டியிருந்தது. இம்முறை அவள் அழைத்தது தன் கணவனை விசாரிக்கவல்ல என்று அவளுக்கு நன்கு தெரியும். நிச்சயம் அவள் அந்த பத்தாவிற்காகத்தான் (சாமைவகை) அழைத்திருப்பாள். அடுத்த ஆண்டிற்கென்று பக்குவம் செய்து வைத்திருந்த அந்த ஆண்டி பத்தாவைப் பதனமாய் வைத்த இடம் அப்படி.
அவர்களின் தொட்டமெனெ (மூதாதையர் இல்லம்) மெத்தையின் கடைமூலையில், கீழ் அவிரிக்கும் (ஒருவகை மண்குடுவை) மேல் அவிரிக்கும் இடையில் வைக்கப்பட்ட, சற்றுக் கருப்புப்பாவிய நிறம் என்பதைத் தாண்டி அதை வைத்திருந்த அவிரிக்கு வேறு அடையாளமில்லை. அதை அவள் கண்டறிவது சற்றுக் கடினம்தான்.
எல்லா வருடத்தையும்போல, அவளோடு இணைந்தே அதனைப் பக்குவம் செய்துவைக்கும்நிலை கடந்தாண்டு வாய்க்கவில்லை. அவளிடம் அதுகுறித்துச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்திற்கும் வாய்க்கவில்லை. ஒருவேளை வாய்த்திருந்தாள் இந்த வெறுமை சூழாமல் இருந்திருக்கலாமோ என்னவோ...
2
பல்நூறாண்டுகள் பொலிந்த அவர்களின் தொட்டமனெ இன்றும் அப்படியே நீண்டது. புதிதாய்ச் சிமெண்ட் பாவிய வீடுகளே சொற்பக் காலத்தில் சிதிலமடையும்போது அவ்வீட்டின் நிலைத்தன்மை வியப்பே. மூத்தோர் முறைவழுவாமையே இதற்குக் காரணமென்றொரு காரணமிருந்தது. அதிலும், அதன் பொறுப்பு கெப்பியின் புகுந்தகத்திற்கு வந்ததிலிருந்து அம்முறை மேலும் பொலிந்தது. குறிப்பாகக் கெப்பியின் கணவன் பெள்ளனோ அவ்வீட்டை வாரம் தவறாது, அங்குல அங்குலமாகத் தரைப்பொலிய, சாணமிட்டு வரிந்துபூசி.. அப்பாடா.. அவன்போல் யாராலும் முடியாது…. காடுபோக்க… காடுபோக்க…
இந்த ஒரெ படையல் நாளில், இந்நேரத்திற்கெல்லாம் பெள்ளன் பத்தாவை உரலிலிட்டுப் புடைத்து, தம் மூதாதையர்களுக்கான ஒரெ படையலை ஆக்கியிருப்பான். அதன்பிறகு தொடங்கும் அடுத்த போகத்திற்கான ஆயத்தத்திற்கான அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பான்.
இந்த இடைவிடாத எண்ணங்கள் அவளை இழைத்தன. இடைவிட்டிருந்த கண்ணீரை அது மீண்டும் உசுப்பின. யாரோ அறையின் கதவைத் தட்டும் சப்தம். நினைவு கலைந்தாள். அலைபேசியில் மீண்டும் ‘காடுபோக்க.. காடுபோக்க…’ அது எப்போது ஒலிக்க ஆரம்பித்தது…. எத்தனைமுறை ஒலித்ததென்றே தெரியவில்லை. எட்டும் தொலைவிலிருந்த கதவின் தாழ்ப்பாளை இருந்தவாறே திறந்தாள்…
“அம்மா…. டிபன்..
ஃபோன் பன்னே… நீங்க எடுக்கலே….
பழைய ரூமுக்குப் போயிருந்தே…
இங்கே அனுப்பிட்டதா சொன்னாங்க…
இந்தாம்மா….
மனசப்போட்டுக் கொழப்பிக்காதிங்க..
எதுவுமே நம்ம கையிலே இல்லெ…”
பார்சலை நீட்டிக்கொண்டே கண்கலங்கி நின்றிருந்த கேண்டீன் அம்மாவை வெறித்தவாறே பிரம்மை தைத்கக் கிடந்தாள் அவள்.
கேண்டீன் அம்மாவின் நடுங்கும் கரங்களில் துலாப்போல் அசைந்தாடியது அந்த ஒற்றை பார்சல். அவள் அசைவற்று அப்படியே கிடந்தாள்.
அந்த மருத்துவமனையின் விதிப்படி உணவுப் பார்சல் தருபவர்கள் அறையினுள்ளே நுழையக்கூடாது. பார்சல் அளித்துவிட்டு இனாம் எதிர்பார்த்து நீற்கிறார்களென்ற குற்றச்சாட்டிற்காக இச்சட்டம் கடுமையாக்கப்பட்டிருந்தது.
“தாயி, நம்ம துக்கத்துக்காக, தூத்தர வானத்த தொடைக்கமுடியுமா என்ன?..
நம்ம கையிலெ என்ன இருக்குச் சொல்லு…
வவுத்த காயப்போடாதே… தாயி.. இந்தா… இதச் சாப்புடு…”
கீழுதடைக் கடித்துக்கொண்டு கெப்பி தலைகுனிந்தாள். கசிந்துகொண்டிருந்த அவளின் கண்ணீர் உதிரத்தொடங்கியது.
அவள் நீட்டிய ஒற்றை பார்சல் எதிர்வெயிலில் தரையில் நிழலாடியது. அவளின் சூழலைப் புரிந்த ஒருத்தி… அல்ல, இந்தச் சூழலிற்கு அவள் ஒரே ஒருத்தி…
கெப்பி குலுங்கி குலுங்கி அழுதாள். மருவத்தூருக்கு மாலை போட்டிருந்த கேண்டீன் அம்மாவால் தாங்கவியலவில்லை. விதிமீறி உள்ளே நுழைந்தாள். கையில் பர்சலுடனேயே, குலுங்கும் அவளின் தோளைப் பற்றினாள். அவளின் தலையைத் தன் வயிற்றோடு அணைத்துக்கொண்டாள். கெப்பியின் கண்ணீர் அவளின் பாதங்களில் சொட்டி வழிந்தது. கெப்பியின் குலுங்கல் நின்றபாடில்லை. கேண்டீன் அம்மா அவளை இறுக்கிக்கொண்டாள்.
அவ்வறையின் வலது மூலையில் கட்டிலில் கிடந்த பெள்ளனின் குலுங்காத தோள்களைத் கழுத்தைத் திருப்பி திருப்பிப் பார்த்தாள் கேண்டீன் அம்மா. மேசில் குஞ்சுகளை நோட்டமிடும் கோழியைப்போல... குலுங்கல்கள் அவளை அலைத்தன. அவளின் கைகளின் நடுக்கம் மேலும் கூடியது. கை மணிக்கட்டில் ஏற்றியிருந்த பார்சலின் பாரம் அவளின் மென்தோலை இறுக்கியது. விடாமல் கெப்பியின் தலையைக் கோதிவிட்டாள். மேலும் மேலும் விசும்பலோடு கூடிய கெப்பியின் முகம்புதைத்தல் தொடர்ந்தது. சூழல் இறுக்கிக் கொண்டிருந்தது.
‘அப்பவே போச்சு புள்ளே…
தொண்டையிலே எறக்கிய கொழாய பாதி எடுத்தாச்சு…
அந்த அம்மா இருக்காங்களே.. பத்ரகாளியாட்டோ… அப்பா…
பெரிய டாக்டரே ஒத்த நிமிஷோ நடுங்கிட்டாருன்னா… பாரே…
அந்த மூச்சுக் கொழாயா எடுக்காதிங்கேனு தாண்டவமாடிட்டாங்க…
அப்பவே, அடுத்த நிமிஷமே…. அந்த ரூமுக்கு போட்டுட்டாங்க…
அவிங்க மக வரனுனோ… என்னவோ..
அந்தம்மா பாவம்பா….
அவர இட்டாந்து ரூமுலே விட்டதூ சொளைய 500 நீட்டுனாங்க….
என்ன மொறெக்காதே…. சத்தியமா.. நா வாங்கலே தாயி…
எஞ் சோப்புலே வச்சுட்டாங்க….’
அந்த மருத்துவமனையில் வார்டு பாயான தனது கணவனின் வார்த்தைகள் மேலும் அவளை இறுக்கிக் கொண்டிருந்தன.
பெள்ளனின் மூக்கின்மேல் ஒப்புக்கு வைத்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க் அந்த இடத்திற்கு அவ்வளவு விகாரமாயிருந்தது. அந்த இடத்தை அளந்துகொண்டிருந்த மௌனமும் கூடதான்…
“கேண்டீன் அம்மா… கேண்டீன் அம்மா… வண்டிய நிறுத்திட்டு… எங்கிருக்கீங்க…”
கொழுத்தும் கோபமொழிகள் எழுந்தன. அது நிச்சயம் இந்த வார்டின் வாட்ச்மென்தான். அவனின் குரல் கெப்பிக்கு அவ்வளவு அத்துப்படி…. இறுதியாக,
‘இங்கே பாரும்மா…
இது உங்களுக்கே நியாயமா… சொல்லுங்க..
அத்தன பேஷண்டுங்க ரூமில்லாம காத்துக் கெடக்காங்க…
பெரிய டாக்டரு எத்தனவாட்டி சொல்லுவாரு…
ராத்திரி முடிஞ்சு விடிஞ்சே போச்சு…
வாழ்ந்த மனுஷ.... இது சரியில்லெ…
சீக்கிரோ ஆகுறத பாருங்க…’
மிரட்டும் தொனியில் அவன் பேசிய சொற்கள்வேறு களவின் கன்னமிட்டிருந்தன.
கேண்டீன் அம்மா விலக்க எண்ணுவதற்கு முன்னமே கெப்பி தன்னை விலக்கியிருந்தாள். அவளின் தலைமுடியை மீண்டும் சிலமுறை இறுகக் கோதிய கேண்டீன் அம்மா, அலைந்த அந்தப் பார்சலை அவளுக்கு அருகில் வைத்துவிட்டு வெளியேறினாள்.
அந்தக் காடுபோக்க.. விடாமல் அலறிக்கொண்டிருந்தது. கையிலெடுத்துப் பார்த்தாள். முட்டி நின்ற கண்ணீரின்வழி அது மங்கலாய்த் தெரிந்தது. தனது மகன்தான். கண்ணீரைத் துடைத்தாள். தொண்டையைச் செருமிச் சரிசெய்தாள். திரையில் உருண்ட பச்சைக் குமிழியை மீண்டும் மேல்நகர்த்தினாள்.
“ஏய்… கிவிடி (செவிடி)… எத்தனவாட்டி கூப்புடுறது…
அப்பா எப்படி இருக்காரு…
ஹலோ… ஹலோ…. ஓளவெ (தாயே)…”
“ம்….. சொல்லு….”
“அப்பா… எப்படியிருக்காரு….
நேத்து நைட்டிலிருந்து ஃபோன் ஆப்பா இருக்கு…
என்னாச்சு… ஒன்னு பிரச்சினையில்லையே…
ஹலோ…. ஹலோ…. ஏய் ஒளவெ…”
“ம்….”
“இரு.. இரு… பெரியம்மா பேசுனுமா… தர்ரே…”
“ஏய் கெப்பி… நீயெல்லா என்ன மனுஷி….
எத்தனவாட்டிதா கூப்புடுறது…. அந்த பத்தா..”
அவள் கேட்பதற்கு முன்பாகவே அது இருக்கும் இடத்தைக் கூறியவள் சட்டென அழைப்பைத் துண்டித்தாள். அடுத்த நொடி அது மீண்டும் ஒலித்தது.
“ஒளவெ… அப்படியென்ன அவசரோ…
பெரியப்பா அப்பாகிட்டே பேசனுமா… ஒருநிமிஷோ… இதோ தர்றே….”
“ஏய்… டாக்டர் இருக்காங்க…. ரவுண்ட்ஸ் வந்திருக்க…”
சடாரென தொடர்பை மீண்டும் அணைத்தாள். அவர் அழைப்பதன் நோக்கமும் அவளுக்குத் தெரியும். இன்னும் தீப்பெட்டியைப் பயன்படுத்தாத தொட்டமநெயின் அடுப்பிற்குத் தேவையான நெருப்பினைக் கடைந்தெடுக்க வேண்டும். ‘நேரிமரத்தின் கட்டையை மேல்கட்டையாக வைத்து, கீழ்க்கட்டையாகத் தவட்டையின் கட்டையை வைத்தால் அது ஆகாது. வெளிவரும் கங்கும் சன்னமாய் இருக்கும். மேற்கட்டை தவட்டையாக இருக்க வேண்டும்’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பெள்ளன் காரணமின்றி சொன்னதன் காரணம் புரிந்தது. இதை மாமாவிற்கு இப்போது அவர் விளக்காமல் நான் விளக்கினாலோ, துக்கத்தால் கூறும் விளக்கம் சிறிது பிசகினாலோ இந்தச் சூழலை அவர் கண்டுகொள்வார். அவரிடம் பேசாமல் அவர் திருப்திபடமாட்டார். துண்டிப்பின் நியாயங்கள் துளிர்த்தடங்கின.
3
கெப்பிக்குத் துக்கத்தைத்தாண்டி வயிறு பசித்தது. உந்தியுள் இரைப் பூச்சிகளின் இறைச்சல் அவளது காதுகளையும் தின்றுகொண்டிருந்ததன. அவளது கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தன. சர்க்கரை ஏறியிருக்கும்போல… ஏதோவொன்று உணர்த்தியது. அறிவோ, மனமோ அறியமுடியவில்லை. தலை கீர்ரென்றது…
அலைபேசி கிர்ரென்று அணையும் சமிக்ஞை. வெள்ளைச் சட்டையில், பளிச்சென்ற பற்கள் தெரிய, தன் சப்பை மூக்குப் புடைக்க பெள்ளன் சிரிக்கும் நிழற்படம் சிரித்தடங்கியது. மெதுவாக எழுந்தாள். பனியாரம்போல் வீங்கிய கால்கள் தரையில் எழும்பி ஊர்ந்து நடந்தன. வெளியில் எட்டிப்பார்த்தாள். கேண்டீன் அம்மாவின் கோதல் தேவையாயிருந்தது. கதவைத் தாழிட்டாள். பசியின் பித்து… பார்சல் அவளை வெறித்தது. சாம்பாரின் வெப்பத்தில் சற்று இளகி ஒடுங்கிய அந்தப் பார்சலிற்குள் சுருட்டி வைத்திருந்த 500 ரூபாய் தெறித்தது.
பெள்ளனை நெருங்கினாள். செயற்கைச் சுவாசத்தில் எக்கி இறங்கிய அவரின் மார்பை வருடினாள். அவள் அவருக்கு நேற்றுப் போர்த்தியிருந்த ஆரஞ்சு பார்டரிட்ட வெள்ளைப் போர்வை உயிர்த்திருந்தது. நேற்றிரவு இந்த அறைக்கு வந்ததும் முதல் காரியமாக அவனுக்கு இதைப் போர்த்தியிருந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும்போது பெரும் யோசனைக்குப்பிறகு தெகப் பெட்டியிலிருந்து அவர் இப்போர்வையை எடுத்துநீட்டியதின் அர்த்தம் நேற்றுதான் அவளுக்குப் புரிந்தலர்ந்தது…. புரிந்துகொண்டிருந்தது.
அருகியிருந்த ஜன்னல் வழியே புலர்தலின் வெளிச்சம் படர்ந்தது. இங்கு வந்ததிலிருந்து, 20 நாட்களான தாடிக்குள் ஒடுங்கியிருந்த அவரின் கருத்த முகத்தை அது தெளிவாகக் காட்டியது. லேசாக ஆவிப்படிந்த அந்த ஆக்ஸிஜன் மாஸ்கிற்குள் அவரின் ஏந்துபல், கட்டிய உதடுதாண்டி பிதுங்கி, தோல்நீக்கிய அவரையைப்போல அகைத்தது. அவளுக்குக் கதறி அழுவேண்டும் போலிருந்தது. அழுகையை அடக்கிக்கொண்டாள்.
கட்டிலினையொட்டி வானத்தைப் பார்ப்பதற்கு உகந்ததாய் பெரிய கண்ணாடி. சிரமப்படாது தெரிந்த வானத்தில் முழுமதி மெலிந்தலைந்தது. இந்நேரம் அங்கு ஒரெபடையல் தயாராகியிருக்கும். மூதாதையர்கள் இறங்கும் இவ்வேளையில் கண்ணீர் சிந்துவது முறையல்ல. ‘துக்கம் தாளாது தவறி அழுத்தால்கூட முன்னோர்கள் படையலை உண்ணாது திரும்பிவிடுவார்களாம்…’ பாட்டி சொன்னது நினைவிலறைந்தது. சகலத்தையும் அடக்கிக்கொண்டாள்.
திறந்திருந்த ஜன்னல்வழியே உள்நுழைந்த காலைக் காற்றில் பெள்ளனுக்குப் போர்த்தியிருந்த மேற்போர்வை அசைந்தது. வானில் முழுமதிகூடும் நேற்றையநாளில் மேலுக்கு எதையும் உடுத்தாது இந்தப் போர்வையை மட்டும் போர்த்திக்கொண்டு, தொட்டமனெயில் பம்பரமாய் சுழலும் அவன் இரவெல்லாம் நிகழும் சடங்கான சவத்தெக்கு எரிக்கவேண்டிய நெருப்புக் குண்டத்தை ஏற்ற, முற்றத்தில் கடையும் நெருப்பிற்கு வேலியாய் சூழும் அந்தப் போர்வையைக் கெப்பி வருடினாள். அது ஆயிரம் அழல்பொறிகளைக் கக்கிக் கொண்டிருந்தது. மரபுபடி, பெள்ளியின் கால்வழியில் வயது முதிர்ந்தோரிடமிருந்து தொடங்கி இவன்முறை வரும்போது அவ்வளவுதான்… வெகு எளிதில் மூண்டுவிடும்…
‘ஏய்… கையா இது…
காடுபோக்க கையாட்டோ…
சரியான காடுபோக்க… காடுபோக்க..’
இந்த ஆராவாரத்தோடு மீண்டும் அவனது தோள்சேரும் அந்தப் போர்வை உயிர்த்து அசைந்தது. பேர்வைக்கு வெளியே மென்னிலவாய் ஒதுங்கியிருந்தது அவனது வலக்கரம். வறுத்து உப்புநீரில் இட்டு கொதிக்கவைத்த அவரையைப் போன்று மெலிந்த அவனது விரல்கள்… சுழன்றெடுத்து நெருப்பைக் கடையும் அந்தக் காடுபோக்கக் கைகள்… கண்ணீர் முட்டியது… அக்கரங்களை இறுகப் பற்றினாள். அந்த அம்கையை அவள் இதுநாள்வரை இவ்வளவு சில்லிட்டுக் கூடியது கிடையாது. துக்கம் கழுத்தை அடைத்தது. அவனது நியாயத்திற்காக நியாயமின்றி அழுகைக் காத்தாள். சட்டியில் ஆக்கிய ஒரெகூவினை உலையிலிருந்து இறக்கியதும், தமது வெறுங்கையால் அப்படியே எடுத்து மொரெத்தய்கெ தட்டிலிடும் அந்தக் காடுபோக்கனின் கைகள் சூடின்றி கிடந்தது அவளைச் சுட்டெரித்தது.
‘ஏய் முதுக்கு…. எப்படியோ இந்தப் பௌர்ணமிக்குள்ளே வீட்டுக்குப் போயிடுனு…
போயி, ஒரே ஒருவாட்டி ‘ஒரெய’ தொட்டுட்டேனா போது… என் ஆயுசுக்கு அதுபோது…’
கடந்தவாரம் அவன் பேசிய வார்த்தைகள் அவளைக் கடைந்துகொண்டிருந்தன. கடைந்து கடைந்து அன்பைக் கசியும் அந்தக் கைகளை லேசாகக் கடைந்தாள்.
4
தேறும் உடம்பு… புதுவிதையிடும் பித்தனெ சடங்கிற்குள் திரும்பிவிடலாமென்ற நம்பிக்கையிருந்தது. எங்கிருந்துதான் வந்ததோ.. மார்பில் அந்த இரத்தக்கசிவு.. என்றோ தாங்கவியலாத பாரத்தைத் தூக்கிய விளைவென்றார் தலைமை மருத்துவர். அவர் எந்தப் பாரத்தைச் சொன்னரோ தெரியவில்லை. அவர் சுமந்த எல்லாமும் அப்படித்தானே. நேற்றுக் காலையிலிருந்து ஒவ்வொரு உறுப்பாய் செயலிழந்துபோக, அவனது செயல்கள் மட்டும் எங்கும் செயலிழக்காமல் அலைந்தன.
நேற்றுமாலை, அவரின் நினைவுதப்பியதற்குச் சற்றுமுன்பு கெப்பியின் கைகளை இடுக்கியிருந்த அவரின் இதே கரம்.. அவரின் கடை விழி.. அவளுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தது. பேசும் அவரைவிட பேசாத அவரை அவளுக்கு நன்கு தெரியும். வெண்டிலேட்டரோடு வீட்டிற்கு எடுத்துச்செல்ல மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். பெள்ளனும் விரும்பியதும் இதுதான் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், அவரின் கடைவிழியிலாடியது அதுவல்ல…
செயற்கைச் சுவாசத்தை நீக்கியதும் மரணம் உறுதிபடும் இந்தநிலை அவளுக்குப் புதிதல்ல. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதேபோலொரு நாளில், தன் மாமனை இரவெல்லாம் முறம் கொண்டு முகம்மூடி, ஒரெ படையல் நிறையும்வரை அழுகையை அடக்கியிருந்த நினைவு.. கழுத்துவரை துக்கத்தை அடைத்துக்கொண்டு அலைந்த நிலைமை… அப்பாடா… இந்நாளில் மரணித்தால் புண்ணியம் என்றாலும், அழுகையெழா இந்த மரணத்தைச் சகித்திருப்பதென்பது பக்குவமின்மைக்குச் சற்றும் எட்டாதது.
அவள் அஞ்சியதைப் போலவே தன் கணவனுக்கும் அத்தகைய இரவு கடந்தொழிந்தது. சற்றும் வித்தியாசமின்றி… அவரின் முகம் பிடித்திருக்கும் செயற்கை வாயுவின் மாஸ்கிற்கும் முறத்திற்கும் பெரிதும் வித்யாசமில்லை. இரண்டுமே உயிரைப் புடைப்பன…
வீட்டின் முற்றத்திற்கு நடுவே பெள்ளனின் உடலைக் கட்டிலில் கிடத்தி முகத்தை முறத்தால் மூடிவைத்திருக்கும் காட்சி மின்னி மின்னி இடித்தது. அன்று, தன் மாமனுக்கு இப்படி நிகழும்போது, இந்நிலையில் மறந்தும் அழுகையெழாது நெறிப்படுத்திய காடுபோக்கனுக்கே இந்நிலையெனில் அதைக்காக்க யாரினி. இரவெல்லாம் உறங்காமல், அழாமல் உடற்றும் நினைவுகளைச் சுமந்தலையும் அந்த நெடுமரபின் தலைவிரி… உள்ளுடற்றும் துக்கம் துருத்தி துருத்தி கனல்கக்கும் காலக்கட்டியம்…
காலம்வந்து முறத்தை விலக்கியதும் துக்கம் கட்டி, பொட்டுக் கண்ணீரும் உதிராது நின்று இம்சிக்கும். கண்ணீர்க் கறக்க அஷ்ட்ட கோணலில் உழலும் துக்கமோ நெடும் பந்தத்தை எல்லோர் முன்பும் சில நொடிகளில் ஒன்றுமில்லாமலாக்கக்கூடும். இந்த அளவை… அப்படா… அந்த இரவிற்கு இந்த இரவே மேல்… என்னவொன்று, படையலிற்கு இறங்கும் மூதாதையரோடு நேரடியாக உடன்செல்லும் கொடுப்பினை மட்டும் கைகூடாது. கொடுப்பினைதானே, போகட்டும்… கொடும்பிணைக்கு அது எவ்வளவோ மேல்தானே..
5
இன்று பெள்ளன் இல்லை.. அந்தக் காடுபோக்கன் இல்லை… அவனின்றி அங்கு எதுவும் இல்லை…. அவன் இனிமேல் இல்லையென்று அறிந்தாலோ அவ்வளவுதான்… ஏற்கனவே, லேசாக கை நடுங்கும் அவனின் அண்ணனுக்கு ஒரெ அசிரியைக்கூட சட்டியில் போடவராமல் போகலாம்… ஒருவேளை, என்றோ நேர்ந்ததாகச் சொன்னதைப்போல இந்தச் சடங்கையே தள்ளிப்போட நேரலாம்… அப்படி செய்வது கார்போக விதைப்பைத் தள்ளிவிடும்…
சரியாக, அறுவடையின்போது, அறுவடைக்கு முந்தைய ஏகமழையில், விளைச்சல் முழுதும் மழைநீர்க் கொள்ளநேரும்… பெள்ளன் தன் கண்களால் கடத்திய இவற்றையெல்லாம் கெப்பி செய்திருந்தாள். அவன் காட்டாமல் இருந்திருந்தாலும் அவள் செய்திருப்பாள். இதுவரையிலும் அவன் கைவிடா அம்கை அவளின் கரத்திடை முற்றும் குளிர்ந்தது.
சூரியன் உச்சியேறி நிலவை அணைத்திருந்தது. பெள்ளனின்மேல் படர்ந்திருந்த, ஜன்னலை ஒட்டியிருந்த தென்னையின்நிழல் உச்சிக் கடந்ததை உரைத்தது. அந்த மரத்திலிருந்து ஒற்றைக் காகத்தின் ஓயாத கரைதல். இந்தக் காடுபோக்கனை அங்குகாணாது இங்கு தேடிவந்த முன்னோராக இருக்கலாம். எதோ.. தெரியவில்லை…
இந்நேரம் எல்லாம் முடிந்திருக்கும். அவர்கள் வந்து அறிவதைவிட முன்கூட்டியே இந்த நிலையைச் செல்வதுதான் சரி.. இல்லையெனில் அவ்வளவுதான்… அத்தனைக் கேள்விகளுக்கும் பதில்சொல்லி மாளாது… புரியாதவர்க்கெல்லாம் கல்நெஞ்சக்காரியாகலாம்… அழாமல் துக்கங்கட்டி, நெஞ்சில் விடாது தொக்கிச் சுமக்கும் கல்லிற்கு இது எவ்வளவோமேல்.
அவளின் நியாயத்தை நிரூபிக்க, இன்னும் முடியாமல் ஒன்று மிச்சமிருக்கிறது… இயற்கையோ, செயற்கையோ இன்னும் அவனுக்கு மூச்சிருக்கிறது… அதுபோதும்… அவர்களுக்குத் தேவையும் அதுதான்… மகனுக்காவது சொல்லியிருக்கலாம்.. சரிவிடு.. கரையதான் காகம்.. நடந்ததை நியாயப்படுத்தினால் உறவின் உரிமை, நியாயத்திற்கு அநியாயப் போர்வை போர்த்த நேரலாம். இப்போதுதான் நடந்தது என்று சொல்வதற்கும் சொல்லாமலேயே விடுவதற்கும் பெரிதும் வித்தியாசமில்லை. ஒருவகையில் இதுவே உசிதம். பலவேளைகளில் உடனடி கோபங்களே உடனிகழ்விற்கு உடனே வலிகோலுபவை..
அவளுக்குப் பெள்ளனின் தலையைக் கோதவேண்டும் போலிருந்தது. கையின் பற்றை விடாமலேயே பரட்டையேறிய அவரின் கேசத்தை வருடினாள். வியர்ப்பதை நிறுத்தியிருந்த அவ்வுடலில் காலையிலிட்ட திருநீறு அப்படியே கிடந்தது. கையைப் பற்றும் போதெல்லாம், தலைகோதும் போதெல்லாம் கண் உண்ணும் அந்தப் பழுப்பு வழிகளைக் காண மனம் ஏங்கியது. இறுதியாகத் தலைமை மருத்துவர் அவ்விழிகளை இமைவிலக்கி, ஒளிபாய்ச்சிப் பார்த்தபோது பார்த்தது. கல்லாகிப்போன அந்த உயிர்ச்சுழற்றும் விழியின் நினைவுகள். அதனைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம். அவ்விழிகளும் காடுபோக்கவை ஒத்ததுதான். அது இருட்டிலும் உயிர்ப்பவை. தான் உறங்காது தவித்ததைப் பலமுறை உணர்ந்தவை. மற்றவர்களுக்கு உறக்கம் கெடுமென்று, அறையின் விளக்கினை ஏற்றாமலேயே சூதானமாய் கழிவறைக்குச் சென்றுவரும் அந்தக் கண்களுக்குப் பலமுறை காடுபோக்காவை அவளே அடையாக்கியதுண்டு. இருட்டிலும் பார்க்கும் அந்தக் கண்கள்.. இந்த ஊழி இருட்டிலும் ஒருவேளை உயிர்த்திருக்குமோ.. அந்தக் கண்களைக் கடைந்து கொண்டிருந்த இமைகளை லேசாக வருடினாள்.
செயற்கைச் சுவாசத்தில் பெருமி பெருமி உயிர்க்கும் அந்த மார்மேல் அவளுக்குச் சாய்ந்துகொள்ள தோன்றியது. ஐய்யோ.. அந்த மார்பு…. உயிர்ப்பு… இதுநாள்வரை ஒருமுறைகூட செயற்கை சூடாதது.
கையின் இறுக்கத்தைக் கூட்டினாள். அந்தக் காடுபோக்கனின் கரங்கள் வாழ்க்கைக் கடலைக் மெலிதாய் கடைந்துகொண்டிருந்தன. கரைப்புரண்டோடிய கண்ணீரிலும் கனல் புரண்டுகொண்டிருந்தது… காடுபோக்கனின் கரமல்லவா.. அந்தக் கரங்களை விடவேகூடாது எனும் முடிவிலிருந்தாள் அவள். முடிந்த முடிபு.. முடிந்துகொண்டிருந்தது…
அறைக்கதவைத் தட்டும் சப்தம் வலுத்தது. நனவிற்கு மீண்டாள்.. “ஒளவெ.. ஒளவெ..” என்று உரக்கக் கத்திக்கொண்டே கதவைத் தட்டும் தன்மகனின் பேரொலி.. எப்போதிருந்து தட்டிக்கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. கதவைத்திறக்க வேண்டும். கூடவே பெள்ளனின் பெரியண்ணனின் குரல்வேறு கிசுகிசுத்தது. பெருங்கோபத்தின் பேரெலிகள் சூழ்ந்தலைந்தன.
காகத்தின் கரைதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தன் மார்மேல் இறுகி அணைத்துவைத்திருந்த, தன் காலத்தைக் கடைந்த அந்தக் காடுபோக்கனின் கைகளை அழுகைத் திமிரும் பெரும் உயிர்த்தலோடு ஒருமுறை இறுகப்பற்றி உயிர்வலிக்க, முடியாமல் தளர்த்தினாள். இறுதிவரை தளராத அந்தப் பிணைப்பிலிருந்து காடுபோக்காவொன்று பாய்ந்தோடி கதவின் தாழ்த்திறக்க அவளை முந்தியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.