84 - 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல்.
இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது.
காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம், முன்னுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் 130 பக்கங்களில் 10 அத்தியாயங்களாக விரிகிறது கதை.
கதையை நான் சொல்வது தகாது. அது என் நோக்கமும் அல்ல. அது வாசகர்களின் முன்மொழிவுகள் இல்லாத பார்வைக்கும் ரசனைக்கும் அனுபவிப்புக்கும் உரியது. இருந்த போதும், கண்ணுக்குப் புலனாகாமல் உலவி வரும் ‘சமூகமிருகம்’ ஒன்று பற்றியது இந்த ’பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற இந் நாவல் என்று சொல்வது ஓர் அத்துமீறாத எல்லை. ஆனால் நான் இந்தக் கதைப்போக்குப் பற்றியும் அதனை அவர் எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்றும் பேசுதல் தகும்.
அதனை மூன்று பிரதான உப தலைப்பில் பார்ப்பது நான் விடயத்தை விட்டு விலகிச் செல்லாதிருக்க உதவும் என்பதால் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன்.
1. அவர் கதையை நகர்த்திப் போகிற பாணி.
2. அதில் எடுத்தாளப்பட்டிருக்கிற ஒரு சூட்சுமத்தளம்.
3. வரலாற்றுப் புள்ளி.
1, கதைப்பாணி:
மழைக்கால இரவொன்றின் குளிர் காலக் கும்மிருட்டில் கைநிறைய மின்னி மின்னிப் பூச்சிகளை அள்ளி கைகளை விரித்தால் பறந்து செல்லும் காட்சியை; அதே கும்மிருட்டில் ஒரே ஒரு வாண வேடிக்கை வானில் மலர்ந்து கீழே கொட்டும் ஒரு காட்சியை; பார்க்கும் போது நம்மை அறியாமல் முகத்தில் இயல்பாக மலரும் மந்தகாசமான புன்னகை போல கதை நிறையக் கொட்டிக் கிடக்கின்றன உவமைகள். அவை வலிந்து திணிக்கப்பட்ட வாடா மலர்களாக அல்லாமல் இயல்பாக மலர்ந்து மணம் வீசும் பூக்களின் புன்னகைகளை ஒத்திருக்கிறன.
ஒரு குழந்தையின் சிரிப்புப் போல இயல்பாக மலரும் அவை கதையை உந்தித்தள்ளுவதில் பிரதான இடத்தை வகிக்கின்றன. பொதுவாக ஒரு இடத்தைச் சம்பவத்தை விபரிக்க எழுத்தும் சொற்களும் வகிக்க வேண்டிய இடத்தை இங்கு உவமைகளே எடுத்துக் கொண்டுவிட்டதால் ஆசிரியருக்கும் விபரிக்க வேண்டிய தேவை ஏற்படாது கதை முன்நகர்ந்து போய் விடுகிறது. ஒரு ரோச் லைட்டைப் போல ஆசிரியர் உவமைகளைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
அதில் வரும் சில உவமைகள் என்னைச் சங்ககாலத்தின் இலக்கிய அழகியலில் கொண்டு சென்று நிறுத்தின. உதாரணமாக ‘இருட்டில் தனித்தெரியும் குழல்விளக்கைப் போல புன்னகை’ என்கிறார் ஆசிரியர். அது
‘மாக்கடல் நடுவண் எண்னாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுபயல் விளங்கும் சிறுநுதல்’ (குறு 129)
என்பதை நினைவூட்டிப் போகிறது. இருட்டில் தெரியும் 8 ம் பிறைபோல கருங்கூந்தலுக்கிடையே அவள் நெற்றி’ என்பது சங்கத்துக் கவிஞன் காட்டும் காட்சி.
நாவலில் ஓரிடத்தில் வயிற்றில் கத்தியால் குத்திய இரத்தக் காயம். அது மேலாடையில் ஊறி ஆசிரியருக்கு சுதந்திரத்திற்கு முந்திய இந்திய வரை படம் போல இருக்கிறதாம். அது சங்ககாலத்தில்
‘கலைநிறத்து அழுத்திக்
குருதியோடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன உண்கண்’ (குறு 272)
ஆகத் தெரிகிறது. மானின் மார்பிலே ஆழமாகத் தைக்கப்பட்ட அம்பை வெளியே இழுத்தால் அது எப்படி இரத்தம் தோய்ந்து அதன் முனைப்பகுதி காணப்படுமோ அதனை எடுத்துப் (பக்கம்பக்கமாக) மாறுபட வைத்தது மாதிரி அப்பெண்ணின் கண்கள் காணப்படுகின்றனவாம்.
இன்னோர் இடத்தில் ஒரு காட்சியை ஆசிரியர் விபரிக்கிறார். ஒருவர் ஆட்டினால் குத்துப்பட்டு சரிந்து கிடக்கிறார். ‘ பெரிய மரக்கதிரையில் தலை சாய்த்துக் கைகளைக் கிழே தொங்கவிட்டபடி மேவாய் நெஞ்சில் தொட ஏதோ மங்கலச் சடங்கிற்காக வெட்டியபின் அந்தச் சடங்கு தடைப்பட்டதால் வெட்டிப் பல நாட்களாக, வேலியில் சாய்த்து வைக்கப்பட்ட வாழையாக அந்தக் கதிரையில் அவர்...’ இந்தக்காட்சி மனதில் படமாக எழுந்த போது தவிர்க்கமுடியாமல் ஒரு கலித்தொகைக் காட்சி (10) நினைவுக்கு வந்தது.
வாடி நிற்கும் மரத்தைக் கவிஞர் சொல்ல வருகிறார். ‘ இளமையில் வறுமை உள்ளவன் மாதிரி தளிர்கள் வாடி இருக்கிறது; கொடுக்கிறதுக்கு மனமில்லாதவர் போல அம்மரம் நிழல் குடுக்காமல் இருக்கிறது; தீங்கு செய்யிறவரின்ர இறுதிக்காலம் புகழ் இல்லாமல்; பார்க்கவும் யாரும் இல்லாமல் கெட்டுப் போன மாதிரி மரம் வெம்பி, வாடி, வதங்கிப் போயிருக்கு’ என்கிற அந்த கலித்தொகைக் காட்சியை நினைவு படுத்துகிறது எழுத்தாளரின் காட்சியமைப்பு.
இவ்வாறு அநேக காட்சிகள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. எனினும் அவை அழகுக்காகச் சேர்க்கப்பட்டவையல்ல; அவை கதையை உந்தித் தள்ளும் எத்தனங்களாகப் பயன் பட்டுள்ளன. ஒரு வெட்டுக்கிளியைப் போல கதைகள் துள்ளித் துள்ளி முன்னகர இவைகள் உந்துகோலாகியுள்ளன. இங்குதான் கற்பனை வளமும் அழகியலும் கதையோடு பின்னிப்பிணைந்து வாசகருக்கு சுவையூட்டுகின்றன. அது ஓர் ஓய்வு நாளொன்றில் ஓய்வான மனநிலையோடு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து சுவையாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பியோடு புத்தகம் வாசிக்கும் சுகம் போன்றது. கடனில்லாத ஒரு பெரு வாழ்வு போல; நோயில்லாதிருக்கும் உடல் போல சுகம் தருவது.
இலக்கியம் ஒன்றின் அழகு கதை மட்டும் அல்ல; கதையை ஆசிரியர் நகர்த்திச் செல்லும் அழகு, பாணி, நுட்பம், தமிழை - மொழியை எடுத்தாளும் இலாவகம் ... அவை சிறப்பாக அமைந்து அவைகளில் உங்கள் மனம் இலயித்து ஈடுபடுமானால் அது தானே இலக்கிய சுகம்! வாசிப்புச் சுவை. இல்லையா? இங்கும் வாசிப்புச் சுவைக்கு பஞ்சமிருக்கவில்லை.
’எதிர்பாராத போது யாரோ முகத்தில் கொதிநீரை நேரெதிரில் நின்று எற்றியது போல வார்த்தைகள் சுட்டன’,’நெருப்புப் பற்றிய வீட்டில் இருந்து வெளியேறும் அவசரம் மனதுக்குள்’, ’சேர்க்கஸ் புலி வனத்துக்குச் சென்றது மாதிரி’, ’நாடியும் நாளமும் பக்கம் பக்கமாக இருந்தாலும் பிரிந்து இருப்பது போல’, ’சிங்கம் ஒன்று தன் இரையைப் பங்கு போட மறுத்து மற்றய சிங்கத்தைப் பார்த்து உறுமுவது போல குறட்டை’, ’போரில் களைத்து இளைப்பாறும் யானைகளைப் போல குடிசைகள்’, ’சூரியன் நிலத்துக்கருகில் வந்து குளித்த குழந்தையின் தலை ஈரத்தைத் துவட்டும் தாயாக ஈரத்தை ஒத்தி எடுத்திருந்தது’, (மழைக்காட்சி ஒன்று) ’வானத்திலே தீபாவளி; (இடியும் மின்னலும்) அது அசுரர்களும் அரக்கர்களும் பூமியில் வந்து ஆடிக்குதித்துக் கொண்டாடுவது போல இருந்தது’, ’எடையைக் குறைக்க அளவாகச் சாப்பிடுவது மாதிரி பேச்சுவார்த்தை’, ’நீர் அள்ளாத கிணற்றில் கிடக்கும் பாசியாக நினைவுகள்’..... இவை நான் ரசித்த சில உதாரணங்கள். இவைகள் எல்லாம் வாசகருக்கு நல்லதொரு இலக்கியத்தரம் வாய்ந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது. தமிழ் மெல்ல புன்னகைக்கிறது. அது ஒரு வசீகரமான இலக்கியப் புன்முறுவல்.
ஆனால் இந்த அழகியலை அவர் ஏன் தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் கொண்டு செல்லவில்லை என்று தெரியவில்லை. அவர் பாணியில் சொல்வதானால் கரும்பின் சுவை மேலே மேலே போகப்போகக் குறைவதைப் போல கதையிலும் போகப்போக இந்த ’மின்மினிப்பூச்சிகளும்’ மறைந்து போய் விட்டன. ’இருள்’ சூழ்ந்து விட்டது.
2. சூட்சுமத்தளம்:
இந் நாவலைப் பின்ன ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்ட இன்னொரு உத்தி இந்தச் சூட்சுமத்தளம். இது ஒரு ஆழமான நோக்கிற்குரியது என்பது என் அனுமானம். இது குறித்த ஆழமான பார்வையும் அறிவும் எனக்கில்லை. இருந்த போதும், என் இனிய தோழி கீதா.மதிவாணன் மொழிபெயர்த்த ‘நிலாக்காலக் கதைகள்’ என்ற யப்பானிய 18ம் நூற்றாண்டுப் படைப்பாளி யுடா அஹினாரியை அறிந்த பின் யப்பானிய தத்துவார்த்தங்கள், அவர்களின் சிந்தனை மரபுகள், யென் மற்றும் சூஃபி தத்துவங்கள் பற்றிய மேலோட்டமான பார்வை கிடைத்தபின் பெற்ற விழிப்பு இந்த சூட்சுமத்தளம் பற்றிய என் பார்வை சிறிதளவேனும் விரியக் காரணமாயிற்று.
தமிழ் மரபு அறங்களைக் கொண்டாடி இருக்கிறது. ‘அவரவர் கருமமே’ கட்டளைக் கல்’ என்பது குறள் காட்டும் அறவழி. சீன,யப்பானிய அராபிய தத்துவார்த்தங்கள் பூவுலக வாழ்வோடு மட்டும் தம் சிந்தனையை நிறுத்துவனவல்ல. அவை இறப்புக்குப் பின்னாலும் ஆய்வை மேற்கொள்வன. இந்திய தத்துவ ஞானம் போல் அறக்கருத்துக்களைத் தோறணங்களாக அவை தொங்கப் போடுவனவல்ல. மாறாக அவை சமூக ஒழுங்குகளைப் புரட்டிப் போட்டு நம்மை சிந்திக்கத் தூண்டுவன. அதற்கு அவர்களும் 18ம் நூற்றாண்டு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து எழுத்தாளர்களும் கையாண்ட ஒரு யுக்தி தான் இந்த மஜிக் றியாலிசம், மாந்திரிக யதார்த்தம், மற்றும் மாய யதார்த்தம் என அழைக்கப்படுவன என்றறிகிறேன்.
இங்கு பாத்திரங்கள் இறந்த பின்னும் பேசும்; கனவுகளில் வழிகாட்டுதல்களை வழங்கும்; அதற்கும் இதற்கும் ஒத்தனவாக காட்சிகள் காணக்கிடைக்கும், கனவின் தொடர்ச்சியாக நனவுலகில் நிகழ்வுகள் நடக்கும். அவ்வப்போது அந்த உலகுக்கும் இந்த உலகுக்குமான காட்சிப்புலங்கள் ஒன்றுகலந்து விட்டிருக்கும். யுடா அஹினாரி அது போன்றவர். யப்பானிய படைப்பாளிகளால் பெரிதும் மதிக்கப்படுபவர்.
அது மாதிரி முல்லாவையும் காணலாம். பலரும் நினைப்பது மாதிரி அவர் இந்திய தென்னாலிராமன் மாதிரி விகடகவி அல்லர். அவர் ஒரு சூஃபி ஞானி. அவர் சமூக ஒழுங்குகளைக் குழப்பிப் போடுதலின் வழியாக மக்களைச் சிந்திக்கத் தூண்டியவர். இவ்வாறான சூஃபிகளை ‘இதயத்தின் ஒற்றர்கள்’ என்றும் ‘மனதின் இயக்கத்தை வேவு பார்ப்பவர்கள்’ என்றும் அறியப்படுகிறார்கள்.அவரின் கதை ஒன்று இப்படியாக வரும்.
‘அனுபூதி மரபுகளைஅறிந்துவர போய் வந்தார் முல்லா. வந்தபின் என்ன அறிந்துகொண்டீர்கள் என்று கேட்டனர் சீடர்கள். ‘கரட்’ என்று சொல்லிவிட்டு மெளனமானார் முல்லா. அதனைக் கொஞ்சம் விரித்துச் சொல்லுங்களேன் என்றனர் சீடர்கள். ‘கரட்டின் பயனுள்ள பாகம் மண்ணுக்குள் புதைந்து போயுள்ளது.வெளியே தெரியும் பச்சை இலைதழைகளைப் பார்த்து அதனடியில் ஒரேஞ் நிற கிழங்கு இருப்பதை அனுமானிக்க முடியாதிருக்கிறது. அதே நேரம் உரிய நேரத்தில் கிழங்கை வெளியே எடுக்காவிட்டால் அது மோசமடைந்தும் போய் விடும். அதோட அந்தக் கரட்டோட தொடர்புடைய பல கழுதைகளும் இருக்கின்றன’ என்றார் முல்லா. ( என்றார் முல்லா; முல்லா.நஸ்ருதீன் கதைகள், தமிழில் சஃபி, பக் 231)
இந்த அமானுஷ்யங்களும் கரட்டைப் போன்றவை தான். எழுத்தாளக் கமக்காரர் பேனாவால் கிண்டிக் கிண்டி கரட்களை பிடுங்கிப் போடுகிறார்கள். மரவெள்ளிக் கிழங்கோடு போராடும் நமக்கு கரட்கள் புதிய பார்வைகளை நல்குகின்றன. புதிய பார்வைப் புலங்களும் நவீன காட்சிகளும் அந்த அமானுஷ்ய கண்ணாடி வழியே புலப்படுகின்றன. தமிழ் சூட்சுமத்தளத்தில் ஏறி நிற்கிறது. அது ஒரு புதிய குன்றம். அதிலிருந்து பார்க்கக் கிடைக்கும் தமிழ் / தமிழகப் பண்ணைப் பரப்பும் வெளியும் சற்று வித்தியாசமானது. புதியது. அதனை ஆசிரியர் மிகுந்த எச்சரிக்கையோடு ஒரு சத்திரசிகிச்சை நிபுணரின் கைத்திறத்தோடு குன்றத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.
முன்னுரையில் சிவகாமி எடுத்துக் காட்டும் புத்தர் பிறக்குமுன் நிகழ்ந்தவை, யேசுவின் வருகைக்கு முன் நிகழ்ந்தவை, முகம்மது நபிக்கு கப்ரியேல் உரைத்தவை எல்லாமும் கூட அமானுஷம் சார்ந்தவையே. உலக இலக்கியங்களும் சமய புத்தகங்களும் அவற்றைக் கொண்டாடி வந்திருக்கின்றன. இந்துசமயப் புராணங்களிலும் நரகாசுரர்களையும் தேவர்களையும் காண்கிறோம்.
ஆனால் இந்த உத்திகளை உலக இலக்கியங்கள் போல தமிழ் இலக்கியங்கள் அதிகம் கொண்டாடவில்லை என்றே நம்புகிறேன். இறந்தோர், மூதாதையர், பேய், பிசாசுகள் என்பன நடமாடும் கதைகளை நாம் வாய்மொழியாகவும் ஆங்காங்கே சில கதைகளாகவும் கண்டறிந்திருந்தாலும் அவை வாழ்வு முழுமைக்கும் நம்மைத் தொடர்வனவல்ல. அவை வாழ்வை கொண்டு நடத்துவனவல்ல. வாழ்வு முழுமைக்கும் நீடித்து வருவனவல்ல. அமானுஷ்யங்களை தமிழ் உலகு வரவேற்பதுமில்லை. அவர்கள் கடவுள்களாகக் காவல் தெய்வங்களாக, குலதெய்வங்களாக உருமாறி விடுவார்கள். ’எல்லைகளை’ அவர்கள் தாண்டுவதில்லை. இதைத் தாண்டிய ‘இலக்கிய அந்தஸ்து’ அவர்களுக்குத் தமிழில் இல்லை.
இங்கு தான் இந்த நாவல் ஒரு வேலை செய்திருக்கிறது. அந்த உலக பாணியை நம்முடய அறசிந்தனையோடும் கர்மவிதியோடும் பொருத்தி இந்தக்கதையை இந் நாவலில் ஆசிரியர் பின்ன முயன்றிருக்கிறார். இந் நாவலில் வரும் அமானுஷ்ய சக்திகளுக்கான நியாயங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ‘அறவழியில்’ ஈட்டிக் கொடுக்கிறார் ஆசிரியர். அவை பல்வேறு நிகழ்வுகளின் வழி நிரூபிக்கப்படுகிறது. இந்துக் கடவுளர் ஆயுதங்களோடும் அவரவர் வாகனங்களோடும் நின்று “பயமுறுத்துவது” மாதிரி ஒரு மெய்மை மீதான நாட்டத்துக்கு, மனிதாபிமானம் மீதான நியாயத்துக்கு, தர்மம், அறம் என நாம் நினைக்கும் கோட்பாடுகளுக்குள் நின்று நியாயமான தீர்ப்புகளை இந்த சூட்சுமத்தளம் ஈட்டிக் கொடுக்கிறது.
இது அநிய்யாயங்கள் செய்பவருக்குக் கொடுக்கும் எச்சரிக்கையாகவும் ஆங்காங்கே நின்று ’ஐயனாராக’ கத்தியைக் காட்டுகிறது.
அதில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தான். இந்த அமானுஷ்யங்கள் வெகு இயல்பாக கதையோடு இணைந்து போகின்றன. இந்த இலக்கியப் போக்கு இயல்பாக அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அதை அவரே ஓரிடத்தில் சொல்வதைப் போல ‘மாய யதார்த்தம்’உண்மைக்கும் கற்பனைக்குமிடையே ஒரு இடைவெளியற்ற தன்மையை ஏற்படுத்தி தன்மை நிலையில் எழுதி இருப்பது வெற்றிக்கு அணுக்கமாக அவரைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது.
வாழ்க்கைத் தத்துவங்களோடு இந்தக் கதை அநாயாசமாக விளையாடுகிறது.
3. வரலாற்றுப் பெறுமானம்
பல விதங்களில் இக்கதைக்கு ஒரு வரலாற்றுப் பெறுமானம் உண்டு என்று நான் நம்புகிறேன். அதிலொன்று இந்த ஆசிரியர் இலங்கையர் என்பது. ஒரு மூன்றாம் நபரின் பார்வையாக இந்தக்கதை தமிழகக் கிராமம் ஒன்றை விமர்சனம் செய்கிறது. நேற்றயதினம் 8.7.22 நடந்த ஆசிரியருடனான புத்தகக் கலந்துரையாடலின் போது சொன்ன ஒரு விடயத்தையும் இங்கு சேர்த்துக் கொள்ளல் பொருத்தமாக இருக்கும். ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, ’எங்கள் சமூகத்தின் மீது இந் நாவல் காறித் துப்பி இருக்கிறது’ என்று விமர்சித்திருந்தார் என்று தெரிவித்தார். அது சற்றுக் காட்டமான விமர்சனமாக இருந்த போதும் கண்ணியமாக தன் அபிப்பிராயத்தை ஒரு கணவானின் சொல்லைப் போல முன்வைத்திருக்கிறது இந் நாவல் என்று சொல்வேன்.
இன்னொன்று ஆசிரியரே தன் உரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இப்போது இந்தக் கிராமங்கள் இல்லாது போய் விட்டன. அந்த விவசாயப் பண்ணை நிலங்கள் மீது இன்று கட்டிடங்கள் முளைத்துவிட்டன. விவசாயக்கூலிகள் கட்டிடத் தொழிலாளர்களாக உரு மாற்றமடைந்து விட்டார்கள். வாழ்க்கை குலைத்துப் போடப்பட்டு விட்டது. வாழ்க்கைமுறைகள் வளர்ச்சி என்ற பெயரில் மாற்றமடைந்து விட்டன.
ஆனாலும் கட்டமைப்பு மாறவில்லை; காலம் மாறினும் கருத்தமைப்பு மாறவில்லை. அந்த ’மிருகம் வேறொரு உருக் கொண்டு விட்டது; தொடர்ந்து சூரனைப் போல, நர அசுரனைப் போல மீண்டும் மீண்டும் புத்துருக் கொண்டு வாழ்கிறது.
யாரேனும் எவரேனும் பழங்காலக் கட்டமைப்பு ஒன்று எப்படி இருந்தது என்பதை ஒரு மூன்றாம் நபராக நின்று பார்க்க விரும்பினால் இந் நாவல் அவர்களுக்கு ஒரு பார்வையைத் தரும். ஒரு view point கிடைக்கும்.
மற்றயது உலக இலக்கிய உத்தி ஒன்றை நம் பாரம்பரிய, பழக்கப்பட்ட அதே சிந்தனைகளின் வழியாக ’உரத்த எச்சரிக்கைக்கு’ பயன்படுத்தியது.
இந்த மூன்று அம்சங்களின் வழியாக இந் நாவல் கவனம் பெறுகிறது என்பது என் அபிப்பிராயம். வெளிப்படையாக, நேரடியாக இக்கதை புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும் உயர்ந்த உலகத் தரத்தில் இந் நாவலை எடைபோட / புரிந்துகொள்ள; உலகசிந்தனை மரபுகள் பற்றிய சிந்தனைப் புரிவை வேண்டி நிற்கிறது இந் நாவல் என்பதையும் சொல்லக் கடமைப்பாடொன்றுளது.
தமிழின் ஆழ இலக்கிய அழகியலிலும் சிந்தனை மரபிலும் வேரூன்றி, சமகால சமூக வாழ்வியல் களத்தில் கால்பரப்பி, அன்னிய இலக்கியபாணி ஒன்றைப் பின்பற்றி, கண்ணியமாக மூன்றாம் கண்ணாக நின்று ஒரு தமிழகக் கிராமம் ஒன்றை கண்முன்னே விரிக்கிறது இந் நாவல்.
தமிழுக்குக் கிடைத்த புதிய சிந்தனைப் புரிவு இது எனினும் தகும்.