- அண்மையில் ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) எழுதிய எம்.எம்.நெளஷாத்தின் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' என்னும் அவரது முகநூற் பதிவிது. நாவலைப்பற்றிய நல்லதொரு , மனத்தைக் கவரும் வகையில் எழுதப்பட்டிக்கும் விமர்சனமிது. நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்ற விமர்சனம். முகநூலில் வெளியான இக்கட்டுரை விபரிக்கும் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' நாவலினை உலகளாவியரீதியில் வசிக்கும் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதன் அவசியம் கருதி மீள்பிரசுரமாகின்றது. பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, - பதிவுகள்.காம் -
1.
நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
சமீபகாலமாக தமிழில் அந்நியப் பெயர்களை (குறிப்பாக அறபுப் பெயர்களை) வைக்கும் ”மோஸ்தர் நிலவுகின்றது. உதாரணமாக மூமின், சலாம் அலைக், பர்தா, ஆயத் போன்றவைகளைக் குறிப்பிடலாம். இதன் இன்னொரு வகையாக சமீபத்தில் மலையாள வாடை அடிக்கக்கூடிய இரண்டு தமிழ் வரவுகள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று ”என்டெ சீவியத்திலிருந்து…” என்ற எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களுடைய கட்டுரைத் தொகுப்பு. மற்றையது டொக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் ”பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்” என்ற நாவலுமாகும்.
பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, இந்தியா ரூ 220.00. லார்க் பாஸ்கரனின் அட்டை வடிவமைப்பும், நீல நிறத்தில் தரமான அட்டையும், சந்தோஸ் கொலன்ஜியின் புத்தக வடிவமைப்பும், சிறப்பான துாய்மையான நுாலாக்கமும், நாவலுக்கு மேலும் ஒரு பெறுதியைச் சேர்க்கின்றது.
மொனறாகலை நகரிலிருந்து பதுளை நகரிற்கு செல்லும் வழியில் பதினாறாவது மைல் துாரத்தில் இடது பக்கம் மேல் நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு கிராமம் இருக்கின்றது. அது குக்கிராமம். அதன் பெயர் சாம்பல்மேடு. இந்தக் கிராமம் வருடாந்த கந்துாரி ஒன்றுக்கும் பெயர் போனதாகும். இந்த மக்கள் விருநதோம்பலுக்கும், ஆதரிப்புக்களும் பெயர் போனவர்கள். அங்கு வாழ்ந்துவரும் பேகம் கதீஜா என்னும் பெண்ணுடன் அல்லது பெண்ணை மையமாக வைத்து அவளின் சாமானிய ஜீவியக் கதை தொடங்குகின்றது. பேகம் கதீஜா பிறக்கும் போது அவளது தாய் இறந்து போகிறாள். பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்ததும் தகப்பனும் அவளை விட்டு அல்லது அந்தக் கிராமத்தை விட்டு ஓடிப் போகிறான். அதன் பின்னர் கதீஜா அன்பானவளும், கண்டிப்பானவளுமான தனது பாட்டியுடன் வளர்கிறாள். (கதீஜாவின் தாய், கதீஜாவின் பாட்டிக்கு திருமணம் முடித்து ஒரு மாத இல்லற வாழ்வில் கிடைத்தவள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாட்டியின் கணவனும் சந்தேகம் கொண்டு பல காலங்களுக்கு முன்பு பாட்டியை விட்டுப் பிரிகிறான் என்ற கிளைக்கதையும் இங்கு இருக்கின்றது).
கதீஜா படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கிறாள். காடு, மலையெல்லாம் பட்டாம்பூச்சியாக சுற்றி வருகிறாள். தன்னிலும் ஒரு வகுப்பு அதிகமான அர்பஹான் என்ற பையனுடன் எங்கும் உலாத்துகிறாள். ஊருக்குள் கதையும் உலாவுகிறது. பாட்டி அவனையும், அவளையும் கண்டிக்கிறாள். பருவ வயதை அடைகிறாள். அரபஹானை வந்திப்பதற்கு தடுக்கப்படுகிறாள். பருவ வயதை அடைந்த கதீஜாவை பாடசாலைக்கு அனுப்பாமல், திருமணம் முடித்துக்கொடுக்குமாறு வரனுடன், ஜொஹறா என்ற சாகச்காரி வருகிறாள். அதனை பாட்டி மறுக்கிறாள்.
இந்த சாம்பல் மேடு என்ற கிராமத்திலிருந்து சரியாக 90 – 100 மைல்கள் தொலைவில், இன்னொரு கிராமம். அங்கே ஒரு குடும்பம். வசதியான குடும்பம். அவர்களுக்கு பாட்டன் வழி வந்த ஜாம் பறங்கித் தோட்டம் என்ற செல்வம் கொழிக்கும் தோட்டம். அந்தக் குடும்பத்தின் தலைவன் சொத்துக்கள் எல்லாவற்றையும் வைத்து சூதாடி எல்லாவற்றையும் இழக்கிறான். ஜாம் பறங்கித் தோட்டத்தையும் இழக்கிறான். சொத்துக்களையும், செல்வங்களையும், வசதிகளையும் இழந்த அந்தக் குடும்பம் அந்த ஊரைவிட்டு போக்கிடம் தேடி இன்னொரு ஊருக்கு இடம்பெயருகின்றது. அந்தக் குடும்பத்தின் ஹாதி சுல்தான் என்ற ஒருவன். ஐந்தாம் வகுப்புவரை படித்த அவன் மட்டும் அவர்களுடன் இடம்பெயராமல் பிடிவாதமாக மறுத்து, தனது வாழ்வும், பொருளாதாரமும் நொடித்துப் போனதன் காரணமாக அந்தக் கிராமத்தை கைவிட்டு சாம்பல் மேடு கிராமத்திற்கு வருகிறான்.
அங்கு சாஹிபு என்ற இளைஞனைச் சந்திக்கிறான். சாஹிபு மொடாக் குடிகாரன், துஸ்டன் எனப் பெயர் பெற்றவன். சாஹிபு அவனைக் கவர்கிறான். சாஹிபு அவனுக்கு உறுதுணையாகிறான். பின்னர் அடர்ந்த மரங்களும், பற்றைகளும் இருந்த இடமொன்றை அடைகிறான். காடு வெட்டுகிறான். கழனியாக்குகிறான். அவனது ஊரில் சூதாட்டத்தில் தந்தையால் இழந்துபோன ஜாம் பறங்கித் தோட்டத்தை சாம்பல் மேடு கிராமத்தில் உருவாக்க பாடுபடுகிறான். ஒரு நாள் ஹாதி சுல்தானை பாம்பு தீண்டுகிறது. ஜொஹறா காப்பாற்றுகிறாள். ஜொகறா கதீஜாவை ஹாதி சுல்தானுக்கு கட்டிக்கொடுக்குமாறு பாட்டியை வற்புறுத்துகிறாள். பாட்டியும் ஒத்துக்கொள்கிறாள்.
படிப்பில் கெட்டிக்காரியான பேகம் கதீஜா ஹாதி சுல்தானை திருமணம் முடிக்கிறாள். 25 வயது வயதில் மூத்த கிழவனுக்கு 15 வயது பெண்ணைக் கொடுத்த கதையும் ஊருக்குள் பரவுகிறது. கணவனின் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போகிறாள். அதீத வீட்டு வேலைச் சுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடுகிறாள்.
2.
- நாவலாசிரியர் எம்.எம்.நெளஷாத் -
திருமண வாழ்க்கையில் பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கிறது. இரவின் வெகுநேரத்திற்கு பிறகு முடிகிறது. இடைப்பட்ட காலப் பகுதியில் கணவனாலும், கணவனின் தாயாலும், அதீத அழுத்தங்களுக்குள்ளும், வலிகளுக்குள்ளும் உள்ளாகிறாள். இவ்வாறான ஒரு காலத்தில், ஒரு நாள் அர்பஹான் கொக்கோ பழங்களை பேகம் கதீஜாவுக்கு கொண்டு அவளது வீட்டுக்கு வருகிறான். இருவரும் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். நினையாப் பிரகாரமாக வீட்டுக்குள் நுழைந்த ஹாதி சுல்தான் இதனைக் காண்கிறான். சந்தேகம் கொள்கின்றான். அர்பஹானை மண்வெட்டியுடன் துரத்துகிறான். இதன்பிறகு பேகத்தை கவனிக்காமல் இருக்கத் தொடங்குகிறான். சாஹிபுடன் கொட்டத்தையும் தீவிரமாக்கத் தொடங்குகிறான்.
அவளது ஆரோக்கியத்தையும், உடல் நலத்தையும் கவனமெடுக்காதவனாகிறான். இந்நிலையில் கதீஜா கர்ப்பமாகிறாள். கதீஜாவிற்கான கவனிப்பின்மை தொடர, அவள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறாள். ஆஸ்பத்திரி்க்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவளுக்கு கொடுத்த குளிசைகளை ஆயுர்வேத, மாந்திரிக மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மாமி ஆற்றில் எறிகிறாள். பின்னொரு நாளில் கர்பப் கால வருத்தம் தீவிரமாகி வலிப்பாகிறது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கதீஜா மரணத்தின் விளிம்பிற்கு சென்று ஜமால் என்ற ஆண் மகவை பெறுகிறாள்.
ஹாதி சுல்தானுள் பணக்காரனாக வேண்டும் என்ற பேராசைக்காரன் அசுரனாய் வளர்கிறான். ஊரை கட்டி வைக்கும் பள்ளிவாசல் சமிட்டியில் அங்கத்தவராகி சமூகப் பெறுமானம் பெற எண்ணுகிறான். வெளியே ஆடம்பரமான நடை, உடை, பாவனைக்கு தன்னை மாற்றிக்கொள்ள தொடங்குகிறான். ஆனாலும் பணமிருந்தும் ஏடும்பத்தினருக்கு ஏழ்மையையே பரிசாக அளிக்கிறான். காசு சேர்ந்து கொண்டிருக்கிறது. மனைவிக்கு, ஆடைகளும், அணிகலன்களும், பாதணிகளும், போசணையான உணவுகளும் வாங்கிக்கொடுக்காமல் புறக்கணிக்கிறான்.
பின்னொருநாள் பள்ளிவாசல் கொமிட்டி மெம்பராகி செயலாளராகவும் மாறிவிடுகின்றான். பின்னர் சாஹிபுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையாகிவிடுகிறான். சாஹிபின் உம்மா ஹாதி சுல்தானின் வளர்ச்சி கண்டு பொறுக்காமல், அவனின் ஆடுகளை ஒன்றன் பின் ஒன்றாக நஞ்சூட்டிக் கொல்கிறாள். அதனை அவன் கண்டு பிடிக்கிறான். அவள் அவனின் பயிர்களை எாிக்கிறாள். அவன் அழிந்து போவதற்காகவும், கதீஜா இறப்பதற்காகவும் செய்வினையும் செய்கிறாள். மூன்றாவது பிள்ளைப் பேறின்போது கதீஜா தேறி வர 6 மாதங்களாகின்றன.
ஒரு நாள் சாஹிபின் தாய் அவளது வீட்டின் ஒரு மூலையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். ஹாதி சுல்தான் அதன் பிறகு நோய்வாய்ப்படுகிறான். அவனுக்கு மஞ்சட் காமாலை நீண்ட நாள் இருப்பதும், அவன் அதனை மறைத்து வந்ததும், அவன் மொடாக் குடிகாரன் என்பதும் தெரியவருகிறது. கதீஜாவிற்கு நான்கு பிள்ளைகள். மூத்தது இரண்டும் ஆண்கள். கடைசி இரண்டும் பெண்கள். இரண்டாவது மகன் பதுருவை சாஹிபு குடிக்கக் கொடுத்து கெட்டவனாக்குகிறான். அல்லது அவ்வாறு கதீஜா எண்ணுகிறாள். ஒரு நிலையில் ஊரில் இருந்த தபாலதிபரை பதுறு கத்தியால் குத்தி அவரிடமிருந்து இரத்தினக்கற்களை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகிறான்.
மூத்தபிள்ளை ஜமால் நன்றாக கல்வி கற்று, உத்தியோகம் எடுத்து, விரும்பிய பெண்ணுடன் ஊரை விட்டு ஒடுகிறான். தாயாரை கவனிக்காமல் விடுகிறான். ஊர் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால், ஊர் ஒதுக்கத்திற்கு கதீஜாவின் குடும்பம் ஆளாகவேண்டிய நிலை வருகிறது. அதனைத் தவிர்க்க கதீஜா பள்ளித் தலைவரின் மகனுக்கு ஊழியம் இல்லா வீட்டு வேலைக்காரியாகிறாள். ஜமாலின் காரணமாக லைலா, ஜெமிலா என்ற சகோதரிகளின் திருமணம் தடுபடுகிறது. கெட்டவனான பள்ளித் தலைவர் மகன் லைலாவை கட்டித்தரக் கேட்கிறான். பின்னர் அவனாலேயே லைலா கர்ப்பமாகிறாள்.
இப்படியான நிலையில் ஒரு நாள், பேகம் கதீஜா 15 வருடங்களுக்கு முன் இறந்த தனது கணவன் ஹாதி சுல்தான் மரணத்திற்கு நீதிகேட்டு, கோபத்துடன் சாஹிபிடம் செல்கிறாள். அவன் மரியாதை காட்டுகிறான். சாஹிபு எல்லா உண்மைகளையும் சொல்கிறான். ஹாதி சுல்தான் தனது உம்மாவை நஞ்சூட்டிக் கொன்றதிலிருந்து, அதனை தன்னிடம் கூற முடியாமல் அவதிப்பட்டதிலிருந்து, குற்றவுணர்விலிருந்து வெளியே வராமல் ஆழ்ந்து போனதிலிருந்து, மொடாக் குடியால் மஞ்சட் காமாலையால் பாதிக்கப்பட்டது வரை சொல்கிறான்.
பின்னர் சாஹிபு நல்லவன் என உணர்கிறாள். அவனை அடிக்கடி சந்திக்கிறாள். அவனிலும் படிப்படியாக மாற்றம் ஏற்படத் தொடங்குகின்றது. பேகம் கதீஜா குடும்பத்தின் ஜாம் பறங்கித் தோட்டம், உட்பட மொத்த சொத்துக்களையும் (அவனின் தாய் எழுதி எடுத்துக்கொண்டு) கர்ப்பமான லைலாவை பள்ளித்தலைவர் ஹாஜியார் மகன் திருமணம் முடிக்கிறான். ஏழு நாள் கெடுவுக்குள் அவர்கள் வாழ்ந்த வீடு, இடம் விட்டு கதீஜாவுடன் ஜெமீலா சாமான்களுடன் சாஹிபின் வீட்டுக்கு செல்கிறார்கள். சாஹிபு அவர்களை வரவேற்கிறான். பின்னர் ஜெமீலாவை திருமணம் செய்கிறான். இவ்வாறாக பேகம் கதீஜா என்ற பெண்ணின் சமானிய ஜீவிதம் தொடருகிறது.
3
நாவலும் நானும்
இந்த நாவல் எனது கைக்கு கிடைத்தபோது நிதானமாக வாசிக்கத் தொடங்குகின்றேன். ஆரம்பத்தில் கொஞ்சம் வேகம் குறைந்து இடறி வந்து, ஒரு நிலையில் வேகம் எடுக்கத் தொடங்கி இரண்டு, மூன்று மூச்சுக்களில் வாசித்து முடித்துவிடுகிறேன். உண்மையில் அந்தளவுக்கு அதன் மொழியும், வாசக ஈர்ப்பும், கதைப் பின்னலும் இருந்தது என்றால் என்னைப் பொறுத்தவரையில் மிகையில்லை. ஒரு வேளை இந்த ஈர்ப்பிற்கு எனது தனிப்பட்ட இயல்பும், இயற்கை மீதிருந்த நேசமும், சாம்பல் கிராம அமைவிடம் பற்றிய காடும், காடும் சார்ந்த இடங்களின் கற்பனைகளும் சில வேளை காரணங்களாக இருக்கலாமா என்று எண்ணினேன். இல்லை நிச்சயமாக அதற்கப்பாலும் இந்த நாவலில் நிறைய விடயங்கள் உள்ளன என எனக்கு உறுதியாகிறேன்.
இந்த நாவலை வாசித்ததற்குப் பிறகு இரண்டு, மூன்று நாட்களாக என்னுள்ளே ஒரு அதிர்வு இருந்து கொண்டே இருந்தது. சாம்பல் மேட்டினுள்ளே உலாவத் தொடங்குகின்றேன். இந்தக் கதை உண்மையாக இருக்குமா? உண்மை என்றால் எல்லாம் உண்மையாக இருக்குமா? அல்லது பகுதியளவில் உண்மை இருக்குமா? கற்பனையுடன் கொஞ்சம் உண்மையா? அல்லது உண்மையுடன் கொஞ்சம் கற்பனையா? பேகம் கதீஜா இப்போதும் உயிரோடு இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்குமா? அப்படி இருந்தால் வாழ்நாளில் ஒரு தடவையாவது பேகம் கதீஜாவை சந்தித்து கதைக்கக்கூடியதாக இருக்குமா? என்னுள் இருக்கும் கேள்விகளை கேட்க முடியுமா? அதற்கான பதில்களையும் பெற முடியுமா? சமூகவியலாளனுக்கும், மானிடவியலாளனுக்கும், வரலாற்றாளனுக்கும், சூழலியலாளனுகக்கும் அற்புத இடம்போல் தெரியும், அந்த சாம்பல் மேட்டுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் போக முடியுமா? இவ்வாறான பல மனவோட்டங்கள் தொடர்ச்சியாக எழுந்து கொண்டே இருந்தன.
பேகம் கதீஜா, ஹாதி சுல்தான், சாஹிபு, சாகசக்காரி ஜொஹறா, சூனியக்காரி சாஹிபின் தாய், பள்ளித் தலைவர் ஹாஜியார், மௌலவி, தபால் அதிபர், ஹாஜியார் மகன், மகேஸ்வரி நடராஜா ஆசிரியை, முஸ்தபா ஆசிரியர், அர்பஹான், ஜமால், பதுரு, லைலா, ஜமீலா எல்லோரும் மனக் கண்ணிலும், எனது அலைவுகளிலும் வந்து கொண்டே இருந்தார்கள். ஒரு பெண் படுகின்ற அல்லது உள்ளாக்கப்படுகின்ற துன்பத்திற்கு அளவேயில்லையா என்று பேகம் கதீஜாவின் நிமித்தவும் எண்ணத் தோன்றியது. சில வேளை இளகிய மனமுள்ளவர்களுக்கு கண்ணீருக்கு அருகிலும் அவர்களை நிறுத்தும்.
நாவலுக்கான பல அணுகுமுறைகள்
இந்த நாவல் பல்வேறு அணுகுமுறைகளில் அணுகப்பட வேண்டிய ஒன்று என நினைக்கின்றேன். சமூகவியல், உளவியல், பெண்ணிய, மார்க்சிச, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு முறைகளில் அணுகப்படத்தக்க பல்வேறு சாத்தியக்கூறுகளையும், தகவுகளையும் இந் நாவல் கொண்டு காணப்படுகின்றது.
1) பெண்ணிய நோக்கிலான அணுகுமுறை:
பெண்களை இழிவாக்கும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், அமைப்புக்கள் போன்றவற்றையும், அத்துடன் சமமாக நடாத்தப்படுவதை ஆதரிக்கும், கவனப்படுத்தும் சமூக, கலாச்சார, அரசியல் செயற்பாடுகள், கோட்பாடுகள் போன்றவற்றையும் பெண்ணியம் ஓரளவு சுட்டி நிற்கும். பொதுவாக இரு ஒத்த தகவுகளைக் கொண்ட பகுதிகளுக்கிடையே எப்போதும் முரண்பாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆண், பெண் தோன்றிய காலம் தொட்டு இது நடந்துகொண்டே இருக்கின்றது. இதனால் பெண்கள் பல சமூகப் போராட்டங்களையும், வாழ்வியற் பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
பெண் என்ற சக உயிரி சமூகத்திலும், குடும்பத்திலும், வேலை செய்யும் இடங்களிலும் அடக்கி ஒடுக்கப்படுகின்றாள். அவளை அதிலிருந்து மீட்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூகத்திலிருக்கின்ற பால்நிலை சம்பந்தமான ஏற்றத்தாழ்வுகளையும், ஆணாதிக்க சமூக அமைப்பையும் புரிந்து கொள்வதும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் குறித்த ஆணாதிக்கத்தின் அரசியலை வெளிப்படுத்துதலும் போன்றனவே பெண்ணிய நோக்கின் அல்லது திறனாய்வின் சில நோக்கங்களாகும். மேலும் பெண்ணிய இலக்கிய நோக்கு மானுடவியல், உளவியல், வரலாற்றியல், சமூகவியல், அரசியல், மருத்துவம், கலை போன்ற பல துறைகளுடன் சம்பந்தப்பட்டும் காணப்படுகின்றது.
இந்த நாவலில் வருகின்ற விடயங்கள் இந்த சமத்துவமின்மை எங்கிருந்து ஊற்றெடுக்கின்றது? எவ்வாறு அசமத்துவத்தை ஒழிக்கலாம்? பால் , பால்நிலை அடையாளங்கள் எங்கே விமர்சிக்கப்படுகின்றன? எந்த எல்லைகளுக்குள் நின்று கேள்விக்குட்படுத்தப்படுகின்றன? என்ற பல விடயங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முன்வைக்கின்றது. பெண்கள் எதிர்நோக்கும் பல சமூக சிறப்பு பிரச்சினைகள் வெளியே எடுக்கப்படுகின்றன. மேலும் பெண்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டாலே மனிதர்களின் பாதி பிரச்சினைகள் தீர்ந்ததற்கு சமனாகும்.
இந்த நாவலில் பெண்கள் தொடர்ச்சியாக சிக்கலுக்குள்ளாக்கப்பட்டும், சுரண்டலுக்குள்ளும், துஸ்பிரயோகங்களுக்குள்ளும் உள்ளாக்கபட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் ஆண்களால் மட்டும் அல்ல. நிறைய நேரங்களில் பெண்களாலேயே துஸ்பிரயோகங்களுக்குள், கொடுமைகளுக்குள், துன்பங்களுக்குள்ளும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
1) பேகம் கதீஜாவின் பாட்டியின் கணவன், பேகம் கதீஜாவின் பாட்டியை திருமணம் முடித்து, பாட்டி யாருடனோ தொடர்பாக இருக்கிறாள் என்ற சந்தேகத்தில், அந்த சந்தேகத்தின் உண்மை பொய்யை ஆராயாது ஒரு மாதத்திலேயே விட்டுவிட்டு ஓடும் பேகம் கதீஜாவின் பாட்டன்.
2) ஒரு மாத இல்லற வாழ்க்கையில் கதீஜாவின் தாய் உருவாகிறாள். கதீஜாவின் தாய், கதீஜாவை பெறும்போது தாய் இறந்துவிட, பிறந்தது பெண் பிள்ளை என அறிந்து ஊரை விட்டு ஓடும்.
3) பேகம் கதீஜாவின் பாட்டியின் வீட்டு வேலை உழைப்புக்களைச் சுரண்டும் கிராமத்தார்.
4) சிறிய பிழைகளுக்கும் ஒழுக்கம் கற்பித்தல், நன்றாக வளர்த்தல் என்னும் பெயரில் கடுமையாக கண்டித்து, தண்டிக்கும் கதீஜாவின் பாட்டி.
5) நன்றாகப் படிக்கும் பேகம் கதீஜாவின் படிப்பை நிறுத்தி திருமணம் முடிக்க வற்புறுத்தும், கதீஜாவிற்கெதிராக ஊரில்கதைகள் கட்டிவிடும் சாகசக்காரி ஜொகறா.
6) தன்னைவிட 25 வயது குறைந்த பேகம் கதீஜா என்ற பெண்ணை திருமணம் செய்து, தனது வீட்டுக்கு கூட்டி வந்து, போதிய வருமானம், வசதிகள், வாய்ப்புக்கள் இருந்தும் ஒழுங்கான உணவு, உடை, சாப்பாடு, நோய்க்கு மருந்து எதுவும் கொடுக்காமலும், அதீத வீட்டு வேலையும், தோட்ட வேலையும் வாங்கும், அவள் மூலம்நான்கு பிள்ளைகளை உயிராபத்திற்கு மத்தியில் பெறுகின்றவனும், பேகம் கதீஜாவையும், அவளின் பாடசாலைத் தோழன் அர்பஹானையும் பிழையாகக் கற்பிதம் கொண்டு கதீஜாவை புறக்கணிக்கும் கணவன் ஹாதி சுல்தான்.
7) இவை அனைத்திற்கும், உறுதுணையாவிருந்து, பேகம் கதீஜாவிற்குரிய நோய்களுக்கு ஒழுங்கான வைத்தியத்தை மறுத்து பில்லி, சூனியம், பேயோட்டுதல் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து அவளைக் கொடுமைப்படுத்தும் ஒரே வீட்டில்வசிக்கும் ஹாதி சுல்தானின் உம்மா.
8) பேகம் கதீஜாவின் முற்பகுதி வாழ்க்கையில் அவளுக்கு உளவியல் ரீதியான சவாலை அடிக்கடி விடுக்கும் அவளின் கணவனான ஹாதி சுல்தானின் நண்பன் சாஹிபு.
9) சாஹிபு குடிகாரன் என்ற காரணத்தால் அவனையும், அவனது தாயையும் ஊர்விலக்கம் என்னும் பெயரில் காட்டுக்குள் வாழ வைக்கும் பள்ளிவாசல் அமைப்பின் தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள், மௌலவிமார்கள்.
10) பெண் என்ற காரணத்தால் பேகம் கதீஜாவின் வீட்டு வேலைக்கான ஊழியத்தை சுரண்டும் கிராமத்தார், பள்ளிவாசல் தலைவர் ஹாஜியார், ஹாஜியார் மகன், வீட்டு வேலையின்போது பாலியல் ரீதியாக சுரண்ட முற்படும் தபால் அதிபர்.
11) கிராமத்து பெண்களை துஸ்பிரயோகம் செய்பவனும், பேகம் கதீஜாவின் மகள் லைலாவை திருமண பந்தத்திற்கு அப்பால் கர்ப்பமாக்கும் ஹாஜியார் மகன்.
12) பேகம் கதீஜா பிள்ளைப் பேறின்போது இறக்க வேண்டும், அவளது பிள்ளைகள் இறக்க வேண்டும், துன்பப்பட்டு நோய்வாய்ப்பட வேண்டும் என்று சூனியம் செய்யும் சூனியக்காரி சாஹிபின் தாய்.
13) கடுமையான வறுமையில் உழலும் தாய், திருமணமாகாத சகோதரிகள் என எவற்றையும் கவனிக்காமல் தனது வாழ்க்கையே முக்கியம் என ஊரைவிட்டுப் போய் திருமணம் செய்யும், பேகம் கதீஜாவின் மூத்த மகன் ஜமால்.
14) இவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இவர்களுக்கு தொல்லை கொடுத்து, குடிகாரனாகி, அவமானங்களைக் கொடுத்து, கொள்ளைக்காரனாகி தலைமறைவாக வாழும் இளைய மகன் பதுறு.
15) திருமணத்திற்கு முன் கர்ப்பமான லைலாவை திருமணம் செய்வதற்கு நிபந்தனையாக மற்றைய பெண் பிள்ளைக்கும் சேர வேண்டிய ஜாம் பறங்கித் தோட்டம் உட்பட முழுச் சொத்துக்களை எழுதி வேண்டி, ஒரு வாரத்திற்குள் அங்கிருந்து பேகம் கதீஜாவையும், ஜமீலாவையும் துரத்தும் பள்ளிவாசல் தலைவர் ஹாஜியாரின் மனைவி.
இப்படியாக வளைத்து வளைத்து அல்லது பெண்கள் சுற்றிவளைக்கப்பட்டு துன்பங்களிற்கும், கொடுமைகளுக்குள்ளும், சுரண்டல்களுக்குள்ளும், துஸ்பிரயோகங்களுக்குள்ளம் ஆக்கப்படுகின்றார்கள். குடும்ப, சமூக, மத நிறுவனங்களால் பெண்களுக்கு இழைக்கப்படும், அடாத்துக்களையும், அநீதிகளையும் இந்த நாவல் இவைகளை மிகவும் நேர்மையாகப் பேசுகின்றது. பெண்ணியநோக்கு தலையங்கத்திலேயே இந்த நாவலை சமூகவியல் கற்கின்ற அல்லது தமிழ்மொழி கற்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைத் தொடரலாம். ஏனெனில் அதற்கான ஆதரவான பல முகாந்திரங்கள் இந்த நாவலில் உண்டு
நன்றி: https://www.facebook.com/amritha.ayem