அறிமுகம்
தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு", 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Diaspora Literature என குறிப்பிடுவர்.
புலம்பெயர் இலக்கியம் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் படைப்புகள்தாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னொரு கட்ட வளர்ச்சி கூறாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. புலம்பயர் படைப்புக்களில் கவிதை சிறுகதை நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையாகவும் காணப்படுகின்றன.
புலம்பெயர் இலக்கியங்கள் புலம்பெயர்ந்து சென்று ஈழத்து சமூக பண்பாட்டுச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவற்றை எதிர்கொண்ட விதங்கள் புல பாதிப்புக்கள் புலம்பெயர் அனுபவங்கள் பண்பாட்டுச் சிக்கல்கள் மொழி பிரச்சனை அகதியாக்கப்படுதல் போன்றவற்றை கூறுபொருளாகக் கொண்டு காணப்படுகின்றன.
மேற்கூறியவற்றை நுண்மையாக நோக்குகின்ற போது அவற்றில் அந்நியமாதல் தன்மை மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வகையில் அந்நியமாதல் கருத்தியலின் அடிப்படையில் 2021ம் ஆண்டு வெளிவந்த புகலிட அனுபவச் சிறுகதைகளின் தொகுப்பான வ. ந. கிரிதரன் அவர்களின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்ற தொகுப்பில் வெளிப்படும் அந்நியமாதல் கருத்தியலை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
அந்நியமாதல் பற்றிய விளக்கம்
அந்நியமாதலானது ஆரம்பத்தில் மார்க்சியச் சிந்தனையாக முன்வைக்கப்பட்டது. முதலாளி வர்க்கத்தினரால் உற்பத்தி உழைப்பு சுரண்டல் சார் காரணிகள் போன்றவற்றால் தொழிலாளர் வர்க்கம் அந்நியமாக்கப்படுகின்றனர். இதுவே அந்நியமாதல் பற்றிய ஆரம்ப கருத்தியலாக காணப்பட்டது.
பிற்காலத்திலேயே இக்கருத்தியல் விரிவாக்கம் பெற்றது. குறிப்பாக பொருளாதார அடிப்படையில் மட்டுமின்றி சமூகம், அரசியல், பண்பாடு, கல்வி, தொழில்நுட்பம் ஆகிய அனைத்து நிலைகள் சார்ந்தும் ஒதுக்கப்படும் சிறு குழுவினர் அந்நியமாதலைச் சுட்டுவதாக விரிவாக்கம் பெற்றது.
தற்காலத்தில் ஒருவர் பல்லேறு காரணங்களினடிப்படையில் அந்நியப்படும் நிலை ஏற்படுகின்றது. குடும்பம், சமூகம். நாடு என்பவற்றிலிருத்தும் நண்பர்கள் உறவினர்களிடமிருந்தும் பிரிதல், மொழி, சாதி, நிறம், தொழில், கல்வி, சார்ந்து ஒதுக்கப்படுதல் அந்நியமாதல் என்று கூறலாம். வீட்டாரால், உறவினர்களால், நண்பர்களால் தான் வாழம் சமூகத்தால் அன்பும் அரவணைப்பம் மறுக்கப்படுகின்றபோது அல்லது தன்னை ஒதுக்கிக்கொள்கின்றபோது ஒருவர் அந்நியப்படுத்தப்படுகின்றார். கூட்டுக்குடும்ப சிதைவு, சாதிப் பிரிவினைகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், தொழில், கல்வித்தரம் என்று வெவ்வேறு காரணங்களினடிப்படையில் ஈழத்திலிருக்கின்றவர்களும் குழ்நிலைகளுக்கேற்ப ஏற்படுகின்றபோதிலும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் கூடுதலான அளவு அந்நியமாதலுக்கு உட்படும் நிலை ஏற்பட்டது. புலம்பெயர் இலக்கியங்கள் அந்நியமாதலை பலவாறும் தன்னுடைய இலக்கியங்களில் கொண்டு காணப்படுகின்றது.
அந்நியமாதலானது பண்பாட்டு அந்நியமாதல், இருத்தலியல் அந்நியமாதல், பொருளாதார சுற்றியமாதல், அரசியல் அந்நியமாதல், சுய அந்நியமாதல், மொழியில் அந்நியமாதல், நிறவாதம் என பலவகைப்படுகின்றது.
இதனடிப்படையில் வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படும் அந்நியமாதல் கருத்தியல்களை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ. ந. கிரிதரன்
வ.ந. கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பை தன் புலம்பெயர்வின் பல்வேறு வழிகளிலும் பெற்ற அனுபவமாக எழுதி 2021ம் ஆண்டு வெளியிட்டார்.
மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமானளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது. இவ்வகையில் கிரிதரன் அவர்கள் இத்தொகுப்பில் வரும் ஒருசில கதைகளில் நேரடியாகவும், குறிப்பாவும் புலம்பெயர் மக்களின் அந்நியமாதல் - தனிமைப்படுத்தப்பட்ட தன்மையினை அனுபவ ரீதியாகவும் உண்மைச் சம்பவமாகவும் எடுத்துக்காட்டியிருக்கின்றார். தொடர்ந்து பலவகையிலும் வெளிப்படும் அந்நியமாதல் வகைகள் கிரிதரன் கதைகளில் வெளிப்படும் விதத்தினை ஆய்வுச் செய்யலாம்.
நிறவாத அந்நியமாதல்
சமூகத்தில் ஒருவரை அந்நியப்படுத்தும் காரணிகளுள் நிறமும் ஒன்று. ஒரு தன்மையான நிறக் குழுமமாக ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிதறி பல்வேறு நாடுகளில் வாழத்தலைப்பட்டபோது நிறம் சார்ந்த ஒடுக்குதலுக்கும் பேதங்காட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். வெள்ளையர் - கறுப்பர் என்ற சமூகப் பிரிவினையின் கொடூரத்தை முதன்முதலாக உணரத் தொடங்கினர். இவ்வொடுக்குமுறைகளை பாடசாலைகள், தொழில் புரியும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கடைகள், பொதுவிடங்கள் அனைத்து நிலைகளிலும் எதிர்கொண்டார்கள்.
இச்சிறுகதைத் தொகுப்பில் Where are you from? என்ற சிறுகதையில் நிறத்தினால் அந்நியப்படுத்தப்படும் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Where are you from? என்று தலைப்பிட்ட சிறுகதையானது, புகலிடத்தில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்களை அந்நாட்டவர்கள் முதலில் கேட்கும் கேள்வியாக அமைகின்றது. இந்தக் கேள்வியினை எதிர்கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சலை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் இவ்வாறு கேட்பதோடு அடுத்தடுத்த வினாக்களையும் தொடுப்பார்கள் 'அண்ணை ஊரில எந்த இடம்?" என்பார்கள். இவர்களின் வினாக்களில் தொக்கி நிற்பது சாதியத்தை அறியவேண்டும் என்பதே ஆகும்
மேலைத்தேயத்தவர்கள் நிறவாத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார்கள். நம்மவர்கள் சாதிய அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார்கள் என்று இச்சிறுகதையின் தொடக்கமும் முடிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது தனிக்கதையாக எழுதப்பட்டாலும் ஏனைய கதைகளிலும் இதன் உணர்வோட்டம் வௌ;வேறு விதமாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
Where are you from? என்ற கதையில் வரும் புலம்பெயர் நபர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து பத்து வருடங்களாகிவிட்டது. இவர் ஒரு பூரண உரிமையுள்ள கனடிய குடிமகன். ஆனால் இவரின் தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து இவரை சந்திப்போர் யாவரும் Where are you from? என்ற கேள்வியைக் கேட்கின்றனர். இக்கேள்வி இவருக்கு ஒருவித கோபத்தை ஏற்படுத்துகின்றது.
இக்கதையில் வரும் புலம்பெயர்வாளன் ஒரு டாக்ஸி ட்ரைவர். இவருடைய டாக்ஸியில் ஏறிய வெள்ளையினப் பெண் இவரிடம் 'நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்" என்ற கேள்வியை தொடுக்கிறார். இக்கேள்விக்கு 'எதற்காகச் சொல்லி வைத்தது மாதிரி நீங்கள் எல்லாருமே இந்தக் கேள்வியை கேட்கின்றீர்கள்? ஒவ்வொருவரின் தோற்றத்தை பார்த்ததுமே உங்களுக்குத் தெரிந்திருக்குமே" என்றவாறு ஒருவித ஆத்திரத்துடன் பதிலளிக்கிறார்.
மேலும் 'நான் கனடா வந்து 10 வருடங்களை தாண்டி விட்டன. நான் ஒரு பூரண உரிமையுள்ள கனடிய குடிமகன். என்னை பார்த்து கேட்கிறான் இந்த வயோதிப வெள்ளையின மாது எங்கே இருந்து வந்திருக்கிறேனென்று. நாளைக்கு இங்கு பிறந்து, வளரும் என் குழந்தைகளை பார்த்தும் இதே மாதிரி ஒரு கேள்வியை கேட்கக் கூடும்"
என்பதன் மூலம் இவர் மட்டுமல்லாது தொடர்ந்து வரும் பரம்பரையும் நிறத்தாலும் தோற்றத்தாலும் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்பதையும் கதையாசிரியர் குறிப்பாக இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு புலம்பெயர் நாட்டில் தான் குடியுரிமை பெற்றிருந்தாலும், தன்னுடைய நிறத்தாலும் தோற்றத்தாலும் புலம்பெயர்வாளர்கள் ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட நாட்டின் குடிமகனாக அன்றி அந்நியமான நிலையில் அதாவது அவர்களிலிருந்து தனித்து வைத்துப் பார்ப்பதை இக்கதையினூடாக அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார அந்நியமாதல்
புலம்பெயர் வாழ்வில் பொருளாதார அந்நியமாதல் என்பது புகலிடத் தமிழர்கள் தமக்கான பொருளாதார வாய்ப்புகள், வளங்கள், நிதி நிலைத்தன்மைகள் சார்ந்து எதிர்கொள்ளும் புறக்கணிப்பு நிலையைச் சுட்டுவதாகவே பெரும்பாலும் அமைகின்றது. வேலைவாய்ப்புக்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறிப்பாகத் தொழிலைத் தேடி அலைதல், மிகவும் கடினமான தொழில்களையே செய்யவேண்டியிருத்தல், தொழிலுக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறமுடியாமை, தொழிலாளர் நலன் மறுக்கப்படுதல், தொழிலாளர் சமத்துவமின்மை, நிதி ஒருங்கிணைப்புக்கான தடைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளில் புகலிடத் தமிழர்கள் சவால்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இதனால் புகலிடம் பெற்ற நாடுகளில் தொழில் சார்ந்த அந்நியமாதலைச் சந்தித்தனர்.
ஆசிரியனும் மாணவனும் என்ற கதையில் வரும் சுப்ரமணிய மாஸ்டரின் மகன் இலங்கையில் பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். ஆனால் அவன் புலம்பெயர்ந்து வந்து கனடாவில் இதைவிட்டு அடிமையான தொழில் செய்து பொருளாதார ரீதியி;ல் அந்நியப்பட்டிருக்கின்ற தன்மை இக்கதையில் காட்டப்பட்டு பொருளாதார ரீதியில் வரும் தொழில்சார் அந்நியமாதல் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.
மகன் ஊரில் ஒரு பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். இங்கோ ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். இங்கு வரும் குடிவரவாளர்கள் பலரும் இப்படித்தான் தமது படிப்பிற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு காலத்தினை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலர் டாக்ஸி ஒட்டுவதோ, 'பிட்சா" 'டெலிவரி" செய்வதோ அல்லது உணவகங்களில் கோப்பை கழுவதோ அப்படியொன்றும் புதிதானதொன்றல்ல. இவ்விதம் அந்தந்த நாடுகளிற்கு உரமாக விளங்க வேண்டிய அந்நாடுகளின் மூனை வளங்களெல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன. அந்த நாள் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. எவ்வளவு தூரம் சிரமப் பட்டு மகன் படித்துப் பட்டம் வாங்கியிருந்தான். பல்கலைக் கழகப் புகு முக வகுப்பில் மகன் அதி விசேட சித்திகள் பெற்ற போது ஊரே எவ்விதம் பெருமைப் பட்டுக் கொண்டது. இப்பொழுது நினைக்கும் பொழுது கூடப் பெருமிதமாகவிருந்தது.
மகனும் மருமகளும் நேரத்துடனேயே வேலைக்குப் போய்விட்டார்கள். மகன் பகல் வேலை முடிந்து அப்படியே இன்னு மோரிடத்தில் பகுதி நேரமாகச் செய்யும் 'பாதுகாவலன்" வேலை செய்து முடிந்து வீடு வர இரவு பத்தாகி விடும். மருமகளும் அப்படித்தாள். பகலில் ஒரு வங்கியொன்றில் 'டேட்டா என்றி ஒபரேட்ட" ராகக் கடமையாற்றுகின்றாள். மாலை நேரங்களில் புத்தகக் கடையொன்றில் பகுதி நேரக் காசாளராகக் கடமையாற்றுகின்றாள்.
வந்த புதிதில் ஏன் இவர்கள் இப்படி உடம்பை வருத்தி உழைக்கிறார்களென்பது விளங்கவில்லை. பிறகு தான் விளங்கியது. வீட்டிற்கு மாதாந்தம் மோட்கேஜ் கட்ட வேண்டும். அது தவிர வீட்டு வரி, 'யுடிலிட்டி" பில் அது இதென்று பல வகையான செலவுகள். இவைகளை ஈடு கட்டத்தான் இவ்வளவு உழைப்பும் களைப்பும்.
இவ்விதமாக புலம்பெயர்ந்த மக்கள் அந்நாட்டில் பல வழிகளிலும்; அடிமைப்பட்டு, தன்னுடைய சக்திக்கும் மீறிய உழைப்பை உழைத்து வருகின்றனர். தான் தாய் நாட்டில் எவ்வளவு பெரிய பட்டம் பெற்று ஒரு அந்நஸ்தான நிலையில் இருந்தாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அந்நியப்பட்டிருக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. இவ்விதம் புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியாக அந்நியப்பட்டிருக்கும் தன்மையை ஆசிரியனும் மாணவனும் என்ற சிறுகதையில் ஆத்மார்த்தப் ப10ர்கமாக வெளிக்காட்டியிருக்கின்றார் கிரிதரன்.
இருத்தலியல் அந்நியமாதல்
தனிநபர்கள் தமது தாயகத்திலிருந்து ஒரு புதிய நாட்டிற்கு அகதியாகச் சென்ற நிலையில் அவர்கள் அனுபவிக்கும் துண்டிப்பு மற்றும் பிரிவினையின் ஆழமான உணர்வை எடுத்துக்கூறுவது இருத்தலியல் அந்நியமாதலாகும். புலம்பெயர்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய மறுசீரமைப்பிலிருந்து எழும் அடையாளம், சொந்தம், உடைமை ஆகியவற்றின் சவால்களில் வேரூன்றிய ஆழமான இருத்தலியல் நெருக்கடியை இது பிரதிபலிக்கின்றது. புலம்பெயர்ந்தவர்கள் தமது கடந்தகால வாழ்நிலை, தற்போதைய வாழ்நிலை என்பவற்றை நினைத்துப் பார்க்கையில் ஆழ்ந்த பின்னோக்கு நினைவுக்கு அதாவது கடந்தகால நினைவுகளுக்குச் சென்று அவை இழந்துவிட்டதாகக் கருதும் தன்மை ஏற்படுகின்றது. 'ஒரு பழக்கமான கலாசாரச் சூழலின் இழப்பு மற்றும் ஒரு புதிய சமூதாயத்தில் ஒருங்கிணைப்பதில் சிரமம் ஆகியவை குழப்பம், தனிமைப்படுத்தல் மற்றும் சுய உணர்வு குறைவதற்கு வழிவகுக்கும்" இதுவே இருத்தலியல் அந்நியமாதல்.
வ. ந. கிரிதரன் அவர்களின் ஆசிரியரும் மாணவனும் என்ற கதையில் வரும் சுப்பிரமணிய மாஸ்டர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கையில் மாஸ்டர் என்ற பெயருடன் பெருமையுடன் வாழ்ந்தவர். இவரின் பிள்ளைகள் கனடாவிற்கு வந்ததும் வரமாட்டேன் வரமாட்டேன் என்றிருந்த மாஸ்டரையும் கனடாவிற்கு வற்புறுத்தி வரவழைத்துவிட்டனர். இவ்வாறு இலங்கையில் இருந்து சென்று வேற்றுக்கிரகவாசியாக தனியாக தனித்திருக்கும் நிலையை ஆசிரியர் கதையில் வெளிகாட்டியிருக்கிறார்.
'வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவருக்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகிவிட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழ்க்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை ரசித்து ஆனந்தமாக பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.
ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்று போய்விட்டன. அங்கு... (இலங்கையில்) பொழுது விடிவதும் அழகு பொழுது புலர்வதும் அழகு. ஆனால் இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. நாள் முழுக்க நான்கு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள் வந்து சிக்கி விட்டோமோ என்று பட்டது.
சுப்ரமணிய மாஸ்டருக்கு தற்போதைய வாழ்நிலை என்பவற்றை நினைத்துப் பார்க்கையில் ஆழ்ந்த பின்னோக்கு நினைவுக்கு அதாவது கடந்தகால நினைவுகளுக்குச் சென்று அவை இழந்துவிட்டதாகக் கருதும் தன்மை ஏற்படுகின்றது. இந்நிலையிலேயே இவர் அந்நியப்பட்டிருக்கும் நிலை உணர்வுப் பூர்வமாக வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது."
இவ்வாறு புலம்பெயர்ந்து தனது நாட்டிலுள்ள சுகபோகங்களை விட்டு இங்குள்ள மனிதர்களோடு பழக முடியாமல் தனது வீட்டு சுவர்களுக்குள்ளே தனிமைப்படுத்தப்படுகிறார். இவ்வாறான சு10ழ்நிலைகள் மூலம் புலம்பெயர்வில் இருதலியல் அந்நியமாதலுக்கு உட்படும் நிலைமையை கதையாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார். இவ்வாறாக இக்கதையில் இருத்தலியில் அந்நியமாதல் வெளிப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாயிருக்கிறது.
பண்பாட்டு அந்நியமாதல்
மனிதனால் சமூகரீதியாகக் கட்டமைக்கப்பட்ட உலகத்திலிருந்தே அவனது சமூக பண்பாட்டு உருவாக்கமும், சமூக உளவியல் உருவாக்கமும் உருப்பெறத் தொடங்குகின்றன. தமக்குரிய உலகினையும், நியமங்களையும் மனிதர் கட்டமைத்துக்கொள்வதில் அவர்களுடைய உயிரியலும், சு10ழலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒவ்வொரு சமூகத்தினதும் வாழும் குழல் வேறுபடுவதனால், பண்பாடும் வேறுபடுவதுடன், பண்பாடும் பலவாதல் தவிர்க்கமுடியாது போகிறது. ஈழத்துப் பண்பாட்டுச் சு10ழலுக்குள் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் புலம்பெயர்ந்து வௌ;வேறு நாடுகளில் அகதிகளாகச் சென்றபோது பண்பாடு சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சுய பண்பாட்டு மனநிலையிலிருந்துகொண்டு தஞ்சம் நாடிச்சென்ற நாடுகளின் பண்பாட்டை எதிர்கொள்வது சவால்மிக்கதாக இருந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்து சென்ற மூத்த தலைமுறையினர் தமிழ்ப்பண்பாட்டினைப் புகலிட நாடுகளிலும் இறுக்கமாகப் பேண முற்பட்டனர். அதேவேளை புதிய பண்பாட்டை எதிர்க்கவும் முற்பட்டனர். இதனால் அந்நாட்டின் பண்பாட்டிலிருந்து அந்நியப்பட்டிருக்கின்ற நிலை ஏற்படுகின்றது.
வாழும் நாட்டின் பண்பாட்டுக்கு ஏற்ப கிரிதரன் ஆசிரியரும் மாணவரும் என்ற கதையில் வரும் சுப்ரமணியம் மாஸ்டரினூடாக பண்பாட்டு அந்நியமாதல் என்ற கருத்துநிலை வெளிக்காட்டப்படுகின்றது.
'பல்வேறுபட்ட பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது கனடாவின் டொரண்ட்டா நகரம். சுப்பிரமணிய மாஸ்டர் டொராண்டா வந்து ஒரு வருடமாகிவிட்டது. இவர்கள் இருந்த பகுதியில் அதிகமாக சீனர்களே இருந்தார்கள். அதிகாலையில் அங்கிருந்த பூங்காவில் பல சீன முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக தேகப் பயிற்சி செய்து கொண்டிருப்பதை இவர் அவதானிக்கின்றார். அப்பொழுது அவரின் பக்கத்து வீட்டுக்காரர் முதியவர் சிலவேளைகளில் சுப்பிரமணியம் மாஸ்டரையும் பூங்காவில் தேகப் பயிற்சி செய்ய அழைப்பார். ஆனால் சுப்பிரமணியம் மாஸ்டர் மறுத்து விடுவார்."
இவ்வாறு முதியவர்கள் தேகப் பயிற்சி செய்வது அந்நாட்டில் காலங்காலமாக நடைபெற்று வரும் பண்பாடான செயல்பாடு. ஆனால் மாஸ்டர் அந்த நாட்டிற்கு புதியவராகையால் அவருக்கு வெட்கம். இதனால் அந்தப் பண்பாட்டிற்குள் செல்ல மறுத்து விடுகிறார்.
இளையவர்கள் எனும் போது அவர்கள் புதிய பண்பாட்டோடு கலந்து சென்று விடுவார்கள். ஆனால் இவர் முதியவர் ஆகையால் இவருக்கு அந்நாட்டின் பண்பாடுகள் ஒத்து வரவில்லை. பண்பாட்டில் அந்நியப்பட்டு இருக்கின்ற நிலையே காணப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று அந்நாட்டின் பண்பாட்டிற்கு ஒத்து வராமல் அந்நியப்படும் தன்மை இயல்பானதாகும். இதனை பல புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் தமது படிப்புகளிலே இதனை வெளிகாட்டி இருக்கின்றனர். அவ்வாறே கிரிதரன் அவர்களும் பண்பாட்டு அந்நியமாதலை முதியவர் ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தினூடாக வெளிக்காட்டியிருக்கின்றார்.
சுய அந்நியமாதல்
சுய அந்நியமாதல் என்பது தனிநபர்கள் தமது உண்மையான அடையாளத்தில் இருந்து அல்லது நிஜமான மனவெளியிலிருந்து முழுமையான ஒதுக்களாக தம்மை உணர்கின்ற நிலையாகும். இது ஆழமான தத்துவ அடிப்படைகளை கொண்டது. உளவியல் கோளாறுகள், பதற்றம், வேதனை, ஆளமை, நசிவு, தனிமை, நிரானுகூலங்கள், மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஆகிய அனைத்தும் அந்நியமாதல் என்ற கூரையின் கீழ் ஒதுங்கிக் கொள்கின்றன. புகலிட நாட்டுச் சு10ழலில் ஒருவர் தனது தாய் மொழியில் பேச முடியாத நிலை ஏற்படும் போது அல்லது புகலிட நாட்டு மொழியை பேச தெரியாத போது, அருகில் இருப்பவர்களோடு பழகாத போது அவர்களைப் பற்றி எதுவும் அறியாத போது அவர்களோடு பழக பயப்படும் போது அல்லது அச்சப்படும் போது தாமாகவே தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
பொந்துப் பறவைகள் என்ற கதையில் வரும் புலம்பெயர்வாளன் மற்றவர்களிடம் பழக விரும்பாது தான் சுயமாக அந்நியப் பட்டிருக்கும் நிலையை ஆசிரியர் விவரிக்கிறார்.
'அவன் தனித்து இந்த பேச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிறீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம். வலப்புறமாக ஒரு யமேய்க்கன்.
இந்த யமேய்க்கன் கறுவல்களையெல்லாம் அடித்துக் கலைக்க வேண்டும். குடியும் பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகிற்குக் காணும். ஒழுற்காக ஒழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது."
இவ்வாறு புலம்பெயர் நாட்டில் தான் வசிக்கும் இடத்தைச சுற்றி இருக்கும் ஏனைய மக்களை தான் கற்பனையில் வேறொரு விம்பத்தை உருவாக்கி வாழ்கிறார். தன்னோடு அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் ஏனைய மக்களை பிழையானவர்களாக கருதி அவர்களிடம் பேசி பழகாது மற்றவர்களிடமிருந்து தன்னை சுயமாக அந்நியப் படுத்திக்கொள்கிறார். என்ற சம்பவங்களினூடாக புலம்பெயர்வாளன் ஒருவன் புலம்பெயர்ந்து புதிய நாட்டில் மற்றவர்களை பற்றி அறியாது தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளும் தன்மையைப் பொந்து பறவைகள் என்ற சிறுகதையில் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் கிரிதரன்.
தொகுப்புரை
இலக்கியம் என்பது பல தலங்களிலிருந்து உருவாகக்கூடிய ஒன்றாகும். ஒரு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்று பூகோள, அரசியல் ரீதியில் முற்றிலும் மாறுபட்ட சு10ழ்நிலையில் படைக்கப்படுவது புலம்பெயர் இலக்கியங்கள் ஆகும். புலம்பெயர் இலக்கியம் என்று குறிப்பிடப்படும் சொற்றொடரூடாக ஈழத் தமிழர்களின் படைப்புக்களே கறுத்திற் கொள்ளப்படுகின்றன என்பதையும் மனங் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் இலக்கியங்கள் புலம்பெயர்ந்து சென்று ஈழத்து சமூக பண்பாட்டுச் சு10ழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சு10ழலில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவற்றை எதிர்கொண்ட விதங்கள் புல பாதிப்புக்கள் புலம்பெயர் அனுபவங்கள் பண்பாட்டுச் சிக்கல்கள் மொழி பிரச்சனை அகதியாக்கப்படுதல் போன்றவற்றை பாடுபொருளாகக் கொண்டு காணப்படுகின்றன. இவற்றை நுண்மையாக நோக்குகின்றபோது அந்நியமாதலும் ஒன்றாக காணப்படுகின்றது.
அந்நியமாதல் என்பது ஆரம்பத்தில் பொருளாதார பாதிப்புடன் தொடர்புடையதாக இருந்த போதிலும் பிற்காலத்தில் அது அரசியல், சமூகம், தொழில்நுட்பம் என பல துறைகள் சார்ந்து விரிவாக்கம் பெற்றது. இவ் அந்நியமாதலை அடிப்படையாகக் கொண்டு புகலிடத் தமிழ் இலக்கியங்களை ஆராய்கின்றபோது அவற்றில் அந்நியமாதல் சிந்தனை மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. அந்நியமாதல் என்ற கருத்தின் நிலை இவ்விலக்கியங்களில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எடுத்துக்காட்டப்படலாம். வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பிலும் புலம்பயர் சார்ந்த பல அனுபவங்களும் உண்மைச் சம்பவமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அந்நியமாதல் கருத்துநிலை நேரடியாகவும் குறிப்பாகவும் வெளிக்காட்டப்பட்டிருக்கின்றன. .இதனை மேற்காட்டியவாறு ஆய்வில் கூறப்பட்டது போல நிறம் மற்றும் தோற்றத்தில் அந்நியமாதல், பொருளாதார அந்நியமாதல், பண்பாட்டு அந்நியமாதல், சுய அந்நியமாதல், இருத்தலியல் அந்நியமாதல் என்றவறான பல அந்நியமாதல் கருத்தியல்கள் வெளிக்கபட்டப்பட்டிருக்கின்றக. அவற்றை ஆராய்வதாகவே இவ்வாய்வும் அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உசாத்துணை நூற்பட்டியல்
கிரிதரன். வ. ந. (2021) கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், ஜீவநதி வெளியீடு, கொழும்பு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.