நேற்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre இல் மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு, விமர்சன நிகழ்வொன்று ஏற்பாடாகி இருந்தது. எனது வேலைப் பளு காரணமாக கடந்த பெருந்தொற்றுக்குப் பின்பான காலகட்டத்தில் நிகழ்ந்த நேரடி நிகழ்வொன்றிலும் நான் பங்கு பற்றியது கிடையாது. ஆனால் இப்போது இதுவரை காலமும் நான் பார்த்து வந்த வேலையை இழந்து ஒரு வேலையில்லாப் பரதேசியாக வாழ்கின்ற காரணத்தினால் எந்த வித அசைகரியமும் இன்றி இந்நிகழ்விற்கு போய் வர முடிந்திருந்தது.
மாஜிதாவின் 'பர்தா' என்னும் இந்த நாவல் வெளி வந்து பல வாரங்கள். கடந்து விட்டுள்ளது. ஆயினும் அதன் பரபரப்பு இன்னும் அடங்கயிருக்கவில்லை என்பதும் அது அடங்க இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதும் நேற்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது.. இங்கு எமக்கு அதன் பரபரப்போ அது ஏற்படுத்தும் சர்ச்சைகளோ முக்கியமில்லை. ஆனால் இந்நாவல் 'பர்தா' என்னும் ஒரு ஆடை மூலம் ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு கொடிய அடக்குமுறையையும் அந்த அடக்குமுறையினைப் பிரயோகிப்பதற்காக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் நிர்ப்பந்தங்களையும் அழுத்தங்களையும் பேசி, அதற்கு எதிராக தனது வலிமையான குரலை எழுப்பி நிற்கின்றது எனபதும், இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக நெறிபடுத்தப் பட வேண்டிய உரையாடல்களுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக விளங்குகின்றது என்பதுவுமே எமக்கு முக்கியமான விடயநக்கலாகப் படுகின்றன.
இந்நாவல் குறித்து ஆரம்பம் முதலே பல்வேறு தளங்களிலும் தொடர்ச்சியாக உரையாடல்கள் நடைபெற்று வந்தமுள்ளன. ஆரம்பத்தில் கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பல ஆளுமைகளும் இது குறித்து பல பதிவுகளை இட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் இந்நூல் குறித்த வெளியீட்டு, விமர்சன நிகழ்வொன்றினை நடாத்தி இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெண்கள் சந்திப்பு வட்டம் ஒரு மெய்நிகர் நிகழ்வொன்றினை நடாத்தி இருந்தனர். இந்நிகழ்வில் பல காத்திரமான கருத்துக்கள் பல வெளிப்படுத்தப் பட்டு இருந்தாலும், பலரும் ஒரு மூடுண்ட மனநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சமூகமானது தனது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறையானது அது மற்றைய சமூகத்தினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதம் என்ற ஒரு புரிந்து கொள்ளப்பட முடியாத வாதங்களை பலரும் முன் வைத்தது ஒரு திகைப்பினை ஏற்படுத்தி இருந்தது. இதிலும் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு அம்மையார் இப்பிரச்சினைக்கு காரணமாக 70 களின் காலப் பகுதிக்குச் சென்று அமிர்தலிங்கம், இராசதுரை போன்றவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளோடு முடிச்சுப் போட்டு எம்மைப் பலமாகச் சிரிக்க வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்விற்கு இத்தகைய அதிர்ச்சிகள், திகைப்புக்கள், நகைச்சுவைகள் என பலவும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே சென்றிருந்தேன்.
நிகழ்வு ஓரளவு குறித்த நேரத்துடனேயே கவிஞர் நா.சபேசன் தலைமையில் ஆரம்பமாகியது. ஆரம்ப உரைகளை காணொளி வாயிலாக விமர்சகரும் எழுத்தாளருமான ஜிப்ரி ஹசனும், எழுத்தாளர் நஷீகா முகைதீனும் நிகழ்த்தி இருந்தனர். ஜிப்ரி ஹசன் தனதுரையில், இதுவரையில் இந்த பர்தா, அபாயா போன்ற ஆடைகள் குறித்து அபுனைவுகளாக பல கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் இவை அனைத்துமே மதச் சார்பாளர்களின் பக்கம் நின்று அதனை புனிதப்படுத்தும் விதமாக அமைந்திருந்தனவாகவும், ஆனால் இந்நூல் மதத்திற்கு வெளியில் நின்று தனது வாழ்வனுபவங்களின் அடிப்படையில் நின்று உண்மைகளைப் பேசி நிற்பதாகவும் குறிப்பிட்டார். நஷீகா முகைதீன் தனதுரையில் இந்நாவல் பேசுகின்ற சம்பவங்கள், உரையாடல்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் விட , இது பேசும் அரசியல் மிகவும் காத்திரமானது. இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள 'இறைவன் உங்கள் தோற்றங்களை பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் ' என்ற வார்த்தைகளுக்கு அமைய, முஸ்லிம் சமூகத்தில் ஒரு பெண்ணின் ஆடையை வைத்து அவளது நடத்தையத் தீர்மானிக்கும் கற்பிதங்கள் மாறவேண்டும், பெண்களது ஆடைகள் தொடர்பான சமூகத்தின் மனப்பாங்குகள் மாற வேண்டுமெனவும் கூறி இம்மாற்றத்திற்கான முதற்படியாக இந்நாவல் அமைகின்றது எனவும் கூறி முடித்தார்.
அதனைத் தொடர்ந்து மயூரனும் நூலிற்குள் மிக ஆழமாகச் சென்று தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் தனதுரையில் 'இலங்கை தீவில் உள்ள பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், சைவம் போன்ற அனைத்து மதங்களுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங்களே எனவும் உண்மையில் மதவாதிகள் தமது அடிப்படைவாத உணர்வுகளைத் தவிர்த்து கொஞ்சம் நெகிழ்ச்சித் தன்மையுடனும் நடந்து கொள்ளும்போது பல்வேறு விதமான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்ற தனது கருத்துணை தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பேராசியர் மு.நித்தியானந்தன் வழமை போலவே பல்வேறு தகவல்களையும் அள்ளி வழங்கி நகைச்சுவையாகவும் சுவாரஷ்யமாகவும் தனது உரையை நிகழ்த்தத் தொடங்கினார். அவர் தனதுரையில் ஈரானிய மக்களின் பர்தாவிற்கு எதிரான போராட்டம் 100 வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது என்றும், தான் கல்வி கற்ற காலத்தில் முஸ்லிம் மக்கள், தனது சக மாணவர்கள் எந்தவித ஆடை வேறுபாடும் இன்றியே இருந்தரர்கள் என்று கூறி 'இந்நாவலை மாஜிதா மிக அழகாக எழுதிச் செல்கிறார் ஆனால் இந்நாவலின் முடிவினைத்தான் சகிக்க முடியவில்லை' என்ற தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
எழுத்தாளர் பிரியா விஜயராகவன் 300, 400 பக்கங்களுக்கு விரிந்திருக்க வேண்டிய நூல் வெறும் நிகழ்வுகளை மட்டும் தொட்டுச் சென்று மிகச் சுருக்கமாக முடிவடைந்தது ஏமாற்றமளித்தது என்று குறிப்பிட்டார்.
பாரதி சிவராசா 'ஒவ்வொரு மதத்திற்கும் பெண்களை ஒடுக்குவதுதான் முக்கியமே தவிர இவர்களுக்கு இறை நம்பிக்கையில் எல்லாம் அக்கறை இல்லை' என்று குறிப்பிட்டு தனது வழமை போல் தனது ஆவேசமான உரையினை மு வைத்தார்.
தனது ஏற்புரையில் இந்நிகழ்வில் பலரும் தெரிவித்த கருத்துக்கள், கேள்விகள் குறித்து தனது பதிலினை அளித்த மாஜிதா "நான் ஒரு வாழ்வை எழுதியிருக்கின்றேன். ஒரு வாழ்க்கையை எழுதியிருக்கின்றேன். இந்த நாவல் இப்போது வாகர்களிடம் சென்றடைந்துள்ளது. எப்போதும் நான் நாகரிகமாக வருகின்ற விமர்சனங்களை செவிமடுக்கத் தயாராக உள்ளேன். அதற்கு நான் பதில்களும் அளித்து வருகின்றேன். ஆனால் இங்கு எழுகின்ற கூக்குரல்கள் அழிச்சாட்டியங்களுக்கு நான் எந்தவிதத்திலும் பதில் கூறப் போவதில்லை. நான் அதனைக் கடந்துதான் போவேன்." என்று தனது பதிவினை ஆவேசமாக முன வைத்தார். பார்வையாளர்களும் உரையாடலில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதியாக நா.சபேசன் தனது தொகுப்புரையினை வழங்கினார். அவர் நிகழ்வின் ஆரம்ப முதலே ஒரு பதட்டமாக உட்கார்ந்திருந்ததினை அவதானிக்க முடிந்தது. இது கடந்த 30, 35 வருடங்களாக இருந்த பதட்டம். உண்மையில் கடந்த பல தசாப்த காலமாக முற்போக்கு தளத்தில் இயங்கியவர்கள் முஸ்லிம் சமூகம் குறித்த விமர்சனங்களை வைத்தால் தமக்கு ஒரு பிற்போக்கு முத்திரை குத்தப்பட்டு விடும் என்ற பயத்திலேயே இயங்கி வந்திருக்கின்றனர். அந்தப் பயம் சபேசனிடம் இப்போதும் இருப்பதினை அவதானிக்க முடிந்தது. அவர் நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இதே பிரச்சினைகள் அவ்வளவும் யாழ்ப்பாண சமூகத்திலும் இருப்பதாக தொடர்ந்தும் சொல்லிக் கொண்டு வந்தார். இப்போது யாழ்ப்பாணத்தில் ரியூஷன் சென்டர் இற்கு போகும் மாணவிகள் கட்டாயமாக சல்வார் கம்மீஸ் அணிய வேண்டுமென்ற ஒரு சட்டம் இருப்பதாக ஒரு குண்டினை தூக்கிப் போட்டார்.
பின் வரிசையில் இருந்த ராகவன் அவர்கள் 'இப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் சேலை அணிவது கட்டயமாக்கப்படுள்ளது' என ஆவேசமாக முழங்கியபோது இல்லை அப்படியில்லை என்று மற்றவர்கள் கூறியதும் அடங்கிப் போனார். உண்மையில் நாம் பேச வந்த விடயங்களை நீர்த்துப் போகும் வகையில் இவர்கள் வைக்கின்ற சில விவாதங்கள் உவப்பானவையல்ல.
இறுதியாக, முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள ஜனநாயக சக்திகள் இப்போது பேச ஆரம்பித்துள்ளார்கள். இதுவரை காலமும் இத்தைகைய முயற்சிகள் நடைபெற்றதில்லை. உரையாட முற்பட்ட அனைவரும் உடனடியாகவே தமது வாய்களை மூடப் பண்ணும் அளவிற்கு அவர்கள் மீது பலமான அவதூறுகளும் வேறு சில எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருந்தன. அந்த எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இதுவரை காலமும் தமிழ் ஜனநாயக சக்திகள் என்று தம்மை சொல்லிக் கொண்டவர்களும் முற்போக்கு முகமூடி அணிந்தவர்களும் துணை போயிருந்துள்ளார்கள். கடந்த 30 வருடங்களாகச் செய்த தவறுகளை இனிமேலும் செய்யாதீர்கள் . தயவு செய்து இனியாவது அவர்களைப் பேச விடுங்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.