“சமயம், சாதி, பல்துறை இலக்கியம், நவீன இலக்கியம், கவிதை, ஹைக்கூ கவிதை, நாடகம், திரை, கலை, ஓவியம், மார்க்சியம், பெரியாரியம், பொது அரசியல், தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், தொல்லியல், நாட்டுப்புற இலக்கியம், குறளியம், செய்தி இதழ்கள், தன்னம்பிக்கை, சூழலியம், தொழிலாளர், இலக்கணம், நூலறிமுக இதழ்கள், கல்வி, மாணவர் இதழ்கள், விளையாட்டு, சட்டம், தொழில், தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை, சிறுவர், மொழிபெயர்ப்பு, மனித உரிமை போன்ற பல துறைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிற்றிதழ்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.” என்று பட்டியலிடுவார் சிற்றிதழ்கள் குறித்து அதிக திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் கீரைத்தமிழன்.
தமிழில் வெளிவந்துள்ள சிற்றிதழ்களைப் பல்வேறு ஆர்வலர்கள் சேகரித்துப் பதிவு செய்துள்ளனர். அதில் குன்றம் இராமநத்நம், பொள்ளாச்சிநசன், நந்தவனம் சந்திரசேகரன், தி.மா.சரவணன், மு.முருகேஷ், கிருஷ் ராமதாஸ், சுந்தரசுகன், நவீன்குமார், சொர்ணபாரதி ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழம் இணையதளத்தில் தொடர்ந்து சிற்றிதழ்களைப் பதிவு செய்தும், அது குறித்தெழுதியும் வருவது சிறப்பிற்குரிய காரணங்களில் ஒன்றாகும். கீற்று இணையதளம் தொடந்து இவ்விதழ்களைப் பதிவிடுகின்றன. பதிவுகள் போன்ற வெளி நாட்டு இணையதளங்களும் சிற்றிதழ் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.