நினைவுகளின் தடத்தில் - (27 & 28) - வெங்கட் சாமிநாதன் -
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
மே 2009 இதழ் 113
நினைவுகளின் தடத்தில் - (27 )
எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும், ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை எடுத்துக் கொண்டேன்.அப்படித்தான் என் மனதில் அது இறங்கியது. அத்தை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என்னைக் கேலி செய்து கொண்டும் இருந்தாள். அவள் கேலி பண்ணும்போது அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாகச் சத்தமிட்டுச் சிரித்தனர். என் வெட்கப்பட்ட முகம் அவர்களை இன்னமும் சத்தமிட்டுக் கொண்டாட வைத்தது. ஏதோ புதிதாக ஏதோ ஊரிலிருந்து வந்த உறவினர்கள், நான் புதிதாகப் பார்த்து உறவையும் தெரிந்து கொள்ளும் உறவினர்கள் என்று தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
அந்த நாட்களில், 1947 ஆரம்ப மாதங்களில், அவருக்கு வயது 30-35 இருக்க வேண்டும். லாகூரில் இருந்தவர் என்றால் தேவங்குடியிலிருந்து நேராக லாகூரில் வேலை கிடைத்துச் சென்றவரில்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்து, கடைசியாக லாகூர் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நல்ல சாஸ்திரோக்தமான, தெய்வ நம்பிக்கையுள்ள, தன் ஆசாரங்களை விட்டு விடாத மனிதர். லாகூர் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட ஊர். அதோடு இந்து முஸ்லீம் அரசியல் பகைமை தீவிரமாகிக்கொண்டு வந்த காலம். இனி உங்களைக் காப்பாற்ற முடியாது என்று அவரது முஸ்லீம் வீட்டுச் சொந்தக் காரர் கைவிரித்து விட்ட நிலைமை. அந்த காலத்தில் 25,000 ரூபாய் பாங்கிலிருந்து சேர்த்து வைத்ததை எடுக்கமுடியாது குடும்பத்தோடு ஓடி வந்தவர் என்றால், அது பெரிய பணம், பெரிய இழப்பு. அந்த அளவு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் அவருக்கு, எத்தனை வருடங்களாக அந்த வட இந்தியக் கோடியில் அவர் இருந்திருக்கிறார், ஆசாரம் மிகுந்த ஒரு தஞ்சை கிராமக் குடும்பம். அப்போது அவர் லாகூரில் தன் வாழ்க்கை பற்றிச் சொன்னதிலிருந்து அவரது லாகூர் நாட்கள் மிக சந்தோஷமாகத் தான் கழிந்திருக்கின்றன, கலவரங்கள் தீவிரமடைந்த கட்டம் வரை. லாகூர் அவருக்கு மிகப் பிடித்தமான இடமாகத் தான் இருந்திருக்கிறது.

கும்பகோணம் பள்ளிக்கூடம் போக தினம் ஐந்தரை மைல் காலையிலும் பின் உடையாளூர் திரும்ப ஐந்தரை மைல் மாலையிலும் நடந்து செல்லும் வாழ்க்கையென்றாலும், கும்பகோணம் பள்ளி நேரங்களும், அதோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்ட உடையாளூர் கிராம வாழ்க்கையும் கொஞ்சம் கொஞமாக பிடித்துத்தான் போயின. பள்ளிக்கூடத்தில் முற்றிலும் புதிய சூழல். என்னமோ இஷ்ட பாடம் (Optional subjects) எடுத்துக்கொள்ள வேண்டுமாக்கும் SSLC யின் கடைசி இரண்டு வருஷங்களில் என்று எனக்குச் சொல்லப்பட்டது. உயர் கணிதம், பௌதீகம், ரசாயனம் என்னும் மூன்று பாடங்கள் கொண்ட MPC க்ரூப் எடுத்துக்கொண்டால் பெரிய பெரிய வேலைக்குப் போகலாமாக்கும், எஞ்சினீயர் ஆகலாமாக்கும் என்று எல்லாரும் சொல்ல, எனக்கென்ன தெரியும், நானும் எஞ்சினீயராகப்போறேன் என்று அந்த க்ரூப் கேட்டேன். கொடுக்கப்பட்டது. முதல் நாள் பௌதீகம் நடந்த வகுப்புக்குப் போனால், வாத்தியார் சொன்னது ஒரு மண்ணும் புரியவில்லை. உயர் கணித வகுப்பு அதற்கு மேல். யாரிடம் போய் நான் என்ன கேட்டு விளங்கிக் கொண்டு படித்து தேறமுடியும்? இங்கு யார் இருக்கிறார்கள் எனக்கு சொல்லிக்கொடுக்க? வீடு திரும்பும் வரை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருண்டு வந்தது. அம்மா கேட்டாள், என்னடா ஆச்சு, என்னமோ போல இருக்கியே? என்று. அப்பா வந்ததும் அம்மா சொன்னாள், "அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, சொரத்தாவே இல்லை" என்று சொல்லி விட்டாள். எல்லோரும் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்பா அம்மா தான் என்றில்லை. மூன்று தங்கைகளும் சூழ்ந்து கொண்டு என் முகத்தையே கவலையோடு பார்த்தார்கள். "அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுத்து" என்று கவலை அவர்களுக்கு. நிலக்கோட்டையாக இருந்திருந்தால், மாமா திட்டி யிருப்பார். இங்கு என்னைச் சூழ்ந்து கொண்டு எல்லோரும் கவலைப் பட்டார்கள். இது புது அனுபவமாக இருந்தது எனக்கு.
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்