சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. கோவேறு கழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப் பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான் பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.
பிரசாரப்படுத்தப்பட்ட, தலித் இலக்கியத்தின் இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், அதில் தாம் காணவிரும்புவது என்ன என்றும், இலக்கியத் தளத்துக்குள் வந்த சில அரசியல் சட்டாம்பிள்ளைகள் வகுத்த சட்டகம் எதுவும் இவர்கள் எழுத்துக்கு ஒத்து வருவதாக இல்லை. கிறித்துவராக மாறிவிட்ட சலவைத் தொழில் செய்யும் ஒரு தலித் குடும்பம், காலனியில் இடம்பெற்றுவிட்ட தலித் குடும்பத்தின் வாசலில் நின்று “சாமியோவ்” என்று குரல் கொடுத்தால் தான் மிஞ்சிய சோறு கிடைக்கும். இது அன்றாட வாழ்க்கை. இந்த நிலையிலிருந்து தப்ப முடியும் தான். அதற்கு அவர்கள் டவுனுக்கு குடியேறி, சலவைக் கடையொன்று வைக்கவேண்டும். அப்போது கடைக்கு வந்து சலவைக்குத் துணி கொடுத்துப் போவார்கள் அந்த காலனிக் காரர்கள். வீட்டுக்குள் அனுமதி இல்லாதிருக்கலாம். ஆனால் சலூனுக்குள் நுழைவது பற்றியோ அரை மணி நேரத்துக்கு தலையைக் கொடுப்பது பற்றியோ தயக்கங்கள் இருப்பதில்லை.
இது ஒன்றும் எல்லாருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு தீர்வைத் தந்து விடுவதில்லை. எந்த சமூக பொருளாதார மாற்றத்திலும் இது தொடரத்தான் செய்கிறது பல்வேறு தளங்களில், ரூபங்களில். ஆனால் சாடப்படும் பழக்கங்களும், நம்பிக்கைகளும் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்ப தொடரவும் செய்கின்றன. கல்வி, பொருளாதாரம் எதுவும் சில அடிப்படையான அடையாளங்களை மாற்றுவது என்பது நடப்பதில்லை. கோஷமிடலாம். கற்பனையான எழுத்துக்களை பிரசாரமாக முன் வைக்கலாம். எத்தகைய எழுத்துக்கள் என்ன சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும் என்று விதிகள் செய்யலாம். ஆனால் வாழ்க்கை அனுபவம் வேறாகத்தான் வந்து முன்நின்று பயமுறுத்துகிறது.
யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள். தலித் சமூகத்திலும் பெண் குழந்தையை கோவிலின் பராமரிப்பில் விட்டு அது வளர்ந்ததும் அதற்கு பொட்டுக் கட்டி சுற்றியிருக்கும் எல்லா கிராமத்துக் கோவில்களுக்கும் பொதுவான தேவதாசி யாக்கப்படுவாள் என்று? இமையம் ”செடல்” என ஒரு நாவலையே எழுதி யிருக்கிறார். ஆரம்ப வருடங்களில், வரையறுக்கப்பட்ட சட்டகத்துக்குள் அடைபடாத தலித் வாழ்க்கையை எழுதியவர்களுக்கு சட்டாம்பிள்ளைகளால் எழுந்த எதிர்ப்பு இப்போது காணப்படுவதில்லை. வருடங்கள் செல்லச் செல்ல, எதிர்ப்புகள், மங்கி மறைந்து விட்டன. முற்போக்கு எழுத்துக்களின் அன்றைய ஜொலிப்பு இன்று மங்கியது போல, அன்றைய தலித் எழுத்துக்கான வாய்ப்பாடுகள் இன்று கேட்கப்படுவதில்லை. இமையம் தன் அனுபவத்தை, கேட்டதை, வாழ்ந்ததை மீறி எதுவும் எழுதுவதில்லை. எதையும் நாடகப்படுத்துவதில்லை. மிகைப் படுத்துவதில்லை. தன்னைச் சுற்றி, தான் கண்ட அனுபவங்களை அதன் இயல்பில் எழுதுகிறார். அவரது நான் படித்த பழைய கதைகள், நாவல்கள் நினைவிலிருந்து மங்கலாகத் தான் தெரிகின்றன. மறுபடியும் படித்தாக வேண்டும். படித்த மனிதர்களும் வாழ்க்கையும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, மற்றவை திரும்பப் படித்துத் தான் நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இப்போது முன்னிருக்கும் சாவுச் சோறு சிறு கதைத்தொகுப்பு பழகிய, பரிச்சயமான இமையத்தைத்தான் நினைவில் திரையோடச் செய்கிறது..
இமையத்தின் கதைகளில் அவர் கதை சொல்வதில்லை. கதையில் வரும் மனிதர்கள் பேசுகிறார்கள். கதைகளில் அவர்கள் பேச்சைப் பதிவு செய்வதைத் தவிர இமையம் செய்வது வேறு ஒன்றும் இல்லை. பேச்சுக்கள் தான் அவர்கள் இருக்கும் நிலையை, அவர்கள் வாழ்க்கையின் அன்றைய நிலையை, அவர்கள் தவிப்புக்ளையும் பிணைக்கப்பட்டிருக்கும் சிக்கல்களையும் சொல்கிறது. பேச்சுக்களும் ஏதும் வர்ணணைகள், உணர்வுப் பெருக்கைச் கொண்டவை அல்ல.. சாதாரண அன்றாட மொழியில் அன்றாட செய்திகளைச் சொல்வது தான். உரையாடல்கள் மூலமே மக்கள் வாழும் வாழ்க்கையின் குணம் முழுமையும் அந்த சாதாரண சொற்கள் மூலமே கதை சொல்லிவிடுகிறது. தி.ஜானகிராமன் கதை சொல்வது போல. தி.ஜானகிராமனிலாவது அழகான கவித்வமான சொற்கள் வந்து விடும். சில வர்ணணைகள் அவருக்கேயான வர்ணனைகள் வந்து விழும். சூழலின் விவரிப்பும், மனிதர்களின் குண விவரிப்பும் ஓரிரு வாக்கியங்களில் வந்து விழும். இமையத்திடம் அதுவும் இல்லை. தொடக்கத்திலிருந்து கதையின் முடிவு வரை வெறும் அன்றாட கிராமத்தானின் பேச்சுக்கள் தான். கதை ஒரு பெண்ணின் அவல வாழ்க்கையைச் சொல்லும். அவலமென்றால், அதைச் சொல்ல புதிதாக ஒரு சொல்லை உருவாக்கத் தான் வேண்டும். நம் அன்றாட வழக்கில் சொல்வோமே, சும்மா உங்க ஊரு, எங்க ஊரு அவலமில்லை. பாத்துக்க”
திருட்டுப் போன பொண்ணு என்று ஒரு கதை. சாவு சோறு தொகுப்பிலேயே மிக நீளமான, 35 பக்கங்களுக்கு நீளும் கதை. “திருட்டுப் போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீடு தேடும் விசாரிப்புடன் தொடங்குகிறது கதை. அப்படித்தான் அவள் அந்த கிராமத்தில் அறியப்படுபவள். அவளுக்குப் பேர் என்னவோ அவளுக்கே தெரியுமோ என்னவோ. ஏ பொண்ணு” என்று தான் சின்ன பொடியனுகளும் அவளைக் கூப்பிடுகிறார்கள். அவள் பொன்ணு இல்லை. இன்னிக்கோ நாளைக்கோ என்று காத்திருக்கும் தொண்டு கிழம். பேட்டி காண வந்த இருவரோடு நிகழும் பேச்சில் அவள் வாழ்க்கை சொல்லியாகிறது, அலுப்பும், கோபமும், வெறுப்பும், இடையிடையே தன்னையே கிண்டல் செய்து கொண்டும் சொல்கிறாள் அதில் அந்த கிராமம், சுற்று வட்டாரத்து மக்கள், அவர்களது வன்மம், ஜாதிப் பிடிப்பு, நம்பிக்கைகள், எல்லாம் சொல்லியாகிறது. கிழவி சொல்கிறாள், அவளது சொற்களில், அந்த எளிய சொற்கள் மிகவும் பெரிதாக வியாபகம் பெறுகின்றன. அவற்றின் சாதாரணத்வத்தை மீறிய வியாபகம் கொள்கின்றன. அவள் வயதுக்கு வந்த எட்டாம் நாள் வெளிப்புறத்தில் குச்சல் கட்டி அதில் அவளுக்கு பரணும் கட்டி ஒதுக்கி வைக்கப்படுகிறாள். அதில் தான் அவள் இரவும் பகலுமாக 16 அல்லது 21 நாள் இருக்கணும். அது தான் ராஜா கம்பளத்து தொட்டி நாயக்கர் இனத்து வழக்கம். இன்றும் காப்பாற்றப்படும் சம்பிரதாயம். இரவு மாத்திரம் யாராவது பரணடியில் காவல் இருப்பார்கள். அவள் ஒரு நாள் கடத்தப்பட்டு விடுகிறாள். யாரையோ தூக்கிவருவதற்குப் பதிலாக இவளைத் தூக்கி வந்துவிடு கிறார்கள். தவறு தெரிந்து அவள் திருப்பி பத்திரமாக, திருட்டுத் தனமாகத் தான், கொண்டு சேர்க்கப் படுகிறாள். ஆனால் ஒரு குமருப் பெண் கடத்தப்பட்டு நாலு நாள் கழித்துத் திரும்புகிறாள் என்றால், அவள் என்ன ஆனாள் என்பது மிக மோசமான கற்பனைகள் தான் நடந்ததாக உண்மையாக எல்லோராலும் நம்பப் படும்.
அப்படித்தான் நடந்தது. விஷயம் அந்த கிராமம் மட்டுமல்ல சுத்து வட்டாரம் பூராவும் பரவியாயிற்று. தேடினார்கள். பஞ்சாயத்து நடந்தது. துண்டு போட்டு சத்தியம் செய்தார்கள், நான் இல்லையென்று. கடைசியில் நடந்தது நடந்தாயிற்று. அவளைக் கட்டிக்கத்தான் ஆள் யாரும் வரவில்லை. வந்தார்கள். வைப்பாட்டியாக ஒரு நாளைக்கி கொஞ்ச நாளைக்கு என்று, தெரிந்து தெரியாமலும் வைத்துக்கொள்ளத் தயார், நிறையப் பேர். ஆனால் கட்டிக்கொள்ளத் தான் யாரும் வரவில்லை. யாரோ தூக்கிட்டுப் போய் திரும்பினவளை எப்படி கட்டிக்கிறது? அம்மாக் காரிக்குத் தாங்கவில்லை. யாரோடேயாவது ஓடிப்போயேண்டி, எவனா இருந்தா என்ன, என்ன சாதியா இருந்தா என்ன என்று. எங்கேயாவது திருட்டுத் தனமா பெத்துண்டாலும் சரி, எங்கேயாவது சுகமா இருந்த சரி, பெண்டு கழிந்தா சரி என்று ஆதங்கம். அக்காகாரிகள் சொல்கிறார்கள், ”எம் புருஷனுக்கு மூணாவதா வந்துடேன்,” என்று. ஆனால் இவளுக்கு இப்படியெல்லாம் வாழ சம்மதமில்லை. நாட்கள் கடக்கின்றன. சுத்திய உறவுகள் பிரசவங்கள், குழந்தை பராமரிப்பு என்று இவள் வாழ்க்கை கழிகிறது. இதிலும் அண்ணிமார்களின் ஏச்சு, பேச்சுககளுக்கும் இரையாக நேர்கிறது. துணையிருந்த அப்பனும், தாயும் மறைந்த பிறகு, அண்ணிகளின் ராஜ்யம் தான். வேலைக்குப் போய்விடும் அண்ணன்கள் என்ன செய்ய முடியும்? கொடுக்கற வேலையச் செய்யணும். திட்டுக் கேக்கணும். எளப்பாரம் தான். ஆக, இப்படியே கிழவி ஆயாச்சு. இப்போ தனிக்கட்டை. தலையைச் சாய்ககத் தான் இந்த வீடு. மற்றதெல்லாம் தெருவில் தான். வெகு சாதாரணமாக, “ஒலக்கயக் காணாத ஒரலுண்டா? என்று சொல்லி சற்று அலுப்புடன் ஒதுக்கிவிட முடிகிறது. ”கண்ணாலம் கட்டினவளுவ படுற பாட்டைப் பாத்தா, அடேயப்பா, கழுத்த நீட்டின பாவத்துக்கு……..” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்ல முடிகிறது.
பொண்ணுங்க திருட்டுப் போவது ஒன்றும் அதியசமில்லை. அப்பப்போ இப்போதும் நடக்கறது தான். திருட்டுப் போனதிலே, தூக்கிட்டுப் போனதிலே கல்லாணம் ஆவாம நின்னு போனது நான் மட்டும் தான். அதனாலே தான் எப்போ யார் திருட்டுப் போனாலும், தூக்கிட்டுப் போனாலும் அதைப்பத்தி யாரும் பேசறதில்லே, என்னப் பத்தித்தான் பேசறாக” என்று அவள் தன் நிலையை விளக்க முடிகிறது. யார் கதையையோ சொல்வது போல.
கடைசியில் அவள் பேட்டி இப்படித்தான் முடிகிறது. “பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். கொழுந்தியாளா, நாத்தியா….. ஆவ மாட்டன். மண்ணாத்தான் ஆவன். சோத்தப் போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்க மாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தலையெழுத்து. இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்.”
அவள் வாழ்க்கையே இடையிடையே ஏச்சும் கிண்டலும், சின்ன சின்ன சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்தன. இடையில் பேட்டி காண வந்தவர்கள் பாட்டில் தண்ணீர் குடிப்பது பார்த்து “நான் எந்தத் தண்ணி குடிச்சாலும் நோவு வராது. ஒரு ரூவா அரிசிதான் திங்குறன். உங்களுக்கு ஒரு நாளைக்கு தண்ணிக்கே நூறு ரூவா ஆகும் போல இருக்கு. நாங்க ஊர் ஊரா, காடு காடா அலைஞ்சாலும் எந்தத் தண்ணி குடிச்சாலும் உடம்புக்கு ஒண்ணும் வராது.” என்று சாகக் காத்திருக்கும் அந்தக் கிழவி சொல்கிறாள்.
இன்னொரு கதையில் முனிசாமி சிலைக்கு முன் பூ பொரிகடலை, வாழப்பழம், ஊதுவத்தி, ஒரு கவார்ட்டர் ப்ராந்தி, எலுமிச்சம் பழம் கற்பூரம், தேங்காய் வெத்திலை பாக்கு எல்லாம் ஒரு செய்தித்தாள் பரப்பி வைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் சாமிக்குப் படையல். ஒரு வேண்டுதலையுடன். போகும் காரியம் நல்ல படியாக முடிய சகுனம் தரவேண்டி எல்லாம் முறையாக, வெகு சிரத்தையுடன் செய்யபடுகிறது. பின் ரகசிமாக முணுமுணுப்பாக ஒரு வேண்டுதலையும் வைக்கப் படுகிறது.
“இன்னிக்கு மாசி மகம் தெப்பத் திருவிழா நடக்கற இடத்துக்கு தொழிலுக்குப் போறன். அதான் உங்கிட்ட உத்தரவு கேக்க வந்தன். நீ உத்தரவு கொடுத்தா போறன். இல்லன்ன திரும்ப ஊட்டுக்குப் போறன்.” .
இது வழக்கமாக நடப்பது. சாமி உத்தரவு கொடுப்பார். அக்கம் பக்கம் எங்கிருந்தோ ஒரு பல்லி சொல்லும். கௌலி சொன்னா உத்தரவு தான். சில சமயம் பலிக்கும். சில சமயம் அறுத்தது கவரிங்காகப் போகும். சில சமயம் செமத்தியாக அடி விழும். சில சமயம் அந்த பாவப்பட்ட சனியன் ஒரு கிழவியா இருக்கும். சில சமயம் அறியாப் புள்ளேயா இருக்கும். பாவமா இருக்கும் தான். இதயெல்லாம் பாத்த எப்படி சாமிக்கு படயல் செய்யறது? எப்படி நான் சோறு துன்றது?
இப்படித்தான் வழக்கம். பிக் பாக்கெட்டுதான். சின்னத் திருட்டுத் தான். ஆனாலும் சாமி கும்பிட்டாகணும். அவன் உத்தரவு இல்லாமயா ஒரு காரியம் நடக்கும். இவனும் என்ன தோட்டம் துறவு வாங்க, பங்களா கட்ட, கார்ல போகவா திருடறான் மத்தவங்க மாதிரி. அன்னன்னி சாப்பாட்டுக்கு. அதுவும் சாமி உத்தரவோடத் தான்.
இந்த வேண்டுதலை ரொம்ப நேரம் நடக்கிறது. இதிலே கெஞ்சல், கோபம், சிணுங்கல், பேரம் (”உனக்கு படயல் வச்சனா இல்லியா?”), ஆசை காட்டல் (உனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, க்வாட்டரு பாட்டுலு…) மிரட்டல் (உத்தரவை கொடு, முடியாட்டி விடு, இல்ல இருக்க சூலத்தை எல்லாம் இரும்புக்கடையிலே போட்டு அரிசி பருப்பு வாங்கிக்குவன்) வசவு (குலசாமியுமாச்சு, மயிருமாச்சுன்னு போற ஆளு நானு….) இடையிடையே ஏதாவது பல்லி சத்தம் வருதா என்று காதைக் கூர்மையாக்கிக் கேட்பான். எதுவும் சத்தம் வருவதாக இல்லாவிட்டால் மறுபடியும் மிரட்டல், கெஞ்சம் எல்லாம் தொடரும். (இப்ப செல்போனு எடுக்கறதையும் வுட்டுட்டன். அம்பது ரூபா கூட தேறமாட்டேங்குது. ,,,, நான் என்ன கலெக்டராக்கு, டாக்டராக்குன்னா கேக்குறன். ஏதோ வவுத்து சோத்துக்கு திருடறது குத்தமா? பின்ன ஏன் சவுனம் கொடுக்க மாட்டங்குற? எனக்கு நேரமாவுதில்லே சீக்கிரம் சவுனம் கொடு. சாம தான பேத தண்டம் எல்லாம் நடக்கறது. என்ன ஆனாலும் சவுனம் ஆகாம உத்தரவு இல்லாம போவதாயில்லை. அது தான் குல தர்மம். இவன் குல சாமி. கடைசியில் ஏதோ சத்தம் கேட்பதாக, கூர்த்து கேட்டால், ஏதோ பல்லி கத்திய மாதிரி தோன்றுகிறது. அவனுக்கு முகம் மலர்ந்து விடுகிறது. சிரித்துக்கொண்டே “இது போதும்டா” என்று சொல்லி சாமி கும்பிட்டு எழுந்திருக்கிறான். எதுக்கும் ஒரு தடவ பூவா தலையா போட்டும் பாத்துடலாம்னு கற்களைக் கையில் குவித்து, சாமி கும்பிட்டு ஜோடி ஜோடியாக எடுத்துக் கடைசில் மிஞ்சியது ஒரு கல்லாக இருக்கவே இதிலும் சாமி உத்தரவு கிடைத்துவிட்டதாக அவனுக்கு சந்தோஷம்.
இது போன்ற ஒரு காட்சி பழைய படம் என்.எஸ் கிருஷ்ணன் காட்சியிலும் வருகிறது. ”இந்த மாதிரி இக்கட்டிலிருந்து தப்பத் தான் சாமி கல்லா இருக்கறான்” என்று கிருஷ்ணனின் விளக்கம் வருகிறது. இது இன்றும் கூட, வெறும் பிக் பாக்கெட்டுக்கு மாத்திரம் அல்ல, அன்றாட சோத்துக்கு மாத்திரம் அல்ல, வெவ்வேறு தளங்களில், பல பெரிய இடங்களின், தேர்தல் வெற்றிக்கு, களவாடிய சொத்தைக் காப்பாற்ற, கோவில் உண்டியலை உடைக்க, காண்ட்ராக்ட் கிடைக்க, கோர்ட் கேஸிலிருந்து காப்பாற்ற, என்று பல இடங்களில், பல ரூபங்களில் சாமிகள் சோதனைக்கு ஆட்படுகின்றன தான். இது ஒரு கிராமத்து நடப்பின் காட்சி என்றும் சொல்லலாம். அல்லது ஒரு குறியீடாகக் கொண்டு இதன் அர்த்தத்தை விஸ்தரித்துக் கொள்ளவும் செய்யலாம் தான். வரம் என்று ஒரு கதை, அதே காட்சி. வேண்டுதல் இல்லை. எரிச்சலைக் கொட்ட. பெரியநாயகத்தின் பெண் செங்காணி அவளோட படிக்கும் பெரியப்பா பையன் கோபாலுவோட ஓடிப்போய்விட்டாள். ஊர் பூராவும் அவளைத் தான் திட்டுகிறது. கோபாலுவின் அம்மாவிலிருந்து தொடங்கி. “ அடப்பாவி தெய்வமே, ஓடுனவ, ஒரு சக்கிலிப் பய, வண்ணாரப்பய கூட ஓடியிருந்தாக் கூட தேவுலியே, என் நெஞ்சு ஆறியிருக்குமே, ஊரு உலகத்திலே இவளுக்கு ஆம்பிளையே இல்லியா? என்று பொறுமிக் கொட்டுகிறாள். கடைசியில் “ நீ சோதன வைக்கணும். நீ நல்ல சாமியா இருந்தா அடுத்த எட்டாம் நாளக்குள்ளார, அவ செத்தான்னு நல்ல சேதி எனக்கு வரணும்…அப்படி வரலேன்னா,சாமின்னு கூட பாக்காம உன் மூஞ்சிலே சாணியக் கரச்சு ஊத்திடுவேன்” என்று சாபத்தோடோ வேண்டுதலையோடோ சாமி முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு போகிறாள்.
பேராசை என்ற கதையில் கோகிலாவுக்கு கிராமத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்க, உறவினர் முன்னால் நின்று காத்திருப்பது பிடிக்கவில்லை. டவுனில் இருக்கும் மாப்பிள்ளையாக இருந்தால் இதிலிருந்து விடுபடலாம். கருப்பாக, அழகில்லாத செல்வமணியை, பெற்றோர் தடுத்தும் பிடிவாதமாக கட்டிக்கொள்கிறாள். புருஷன் வீட்டுக்குப் போகும் அவளது ரயில் பிரயாணம் கிராமத்தை விட பலமடங்கு சகிக்கமுடியாத அனுபவத்தைத் தந்துவிடுகிறது. அதிலிருந்து இவள் மீளப்போவதில்லை. ஸ்வச்ச பாரத் அப்படி ஒன்றும் சுலபத்தில் என்ன, என்ன ஆணையிட்டும் கிடைக்கப் போகும் ஸ்வச்ச பாரத் இல்லை தான். அதுவும் இக்கதை போல ஒரு விடம்பனத்தில் தான் முடியும் போலத் தோன்றுகிறது.
இத்தொகுப்பின் தலைப்புக் கதை சாவு சோறு. கிராமத்து சாதிப் பிடிப்போ, வன்மமோ, வெறியோ அதுதான் எவ்வளவு கொடூரம்! பூங்கோதையின் பெண் ஹம்சவள்ளியைத் தேடி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக அலைகிறாள். அவள் பெண் பரிட்சை எழுதப் போனவள் வீட்டுக்குத் திரும்பவில்லை. டவுனில் வீடியோக் கடையில் வேலை செய்பவனோடு ஓடிப் போய்விட்டாள். அவன் கீழ்சாதிக்காரன். பூங்கோதையின் பிள்ளைகள் வீடியோக்காரனையும் தங்கை ஹம்ச வள்ளியையும் தேடி கிடைக்காது, வெறிபிடித்து பையனுடைய அம்மாவின் மாரை அறுத்துவிடுகிறார்கள். மார் அறுபட்டவள் தூக்குப் போட்டுக்கொண்டு சாகிறாள். வீடியோக் கடை நாசமாகிறது. கொலை வழக்கு, வீடியோக் கடையை நாசம் செய்த வழக்கு ஊர் கூட அமர்க்களம் செய்தது, யாரைப் பார்த்து என்ன பணம் கொடுத்தும், தப்ப முடியவில்லை. கவுன்சிலர் சொந்த சாதி என்றாலும், “ஒரு கஷ்டம்னாத் தான் சாதி தெரியுது உங்களுக்கு? என்று அவர்களுக்கு கோபம். அவர்கள் சிறையிலிருந்து திரும்பி வந்தால், இவளை மறுபடியும் தேடுவார்கள். ,மானம் கெட்ட சாதி கெட்ட தங்கையையே வெட்டி முலையை அறுத்து பிணமாக்கி விடுவார்கள்.. அல்லது தீவைத்துக் கொளுத்திவிடுவார்கள். கொலைகாரப் பசங்க. ஊர்லே மானத்தோட வாழமுடியாது. அதுக்கு முன்னாலே அவளுடைய பணத்தை, நகை நட்டை அவளுக்குக் கொடுத்துடணும். அவங்களுக்கு அவ செத்துட்டா. செத்தக்கான சடங்குகள் மும்முரமாக நடந்தது. ஊரில் எல்லோருக்கும் கறி வைத்து சாப்பாடு. அம்மாக் காரியும் அந்த சாவு சோறு திங்கிறாள். என் பசங்க எந்த கீழ் சாதிப் பெண்ணோட ஒடினாலும் அவங்க ஆம்பிளிங்க. என்று அதுக்கு ஒரு நியாயம் சொல்கிறாள். பெண்ணைத் தேடி வந்த ஒரு பள்ளிக்கூட வேலைக்காரியிடம் இந்தக் கதை அவ்வளவும் அவள் சொல்கிறாள். கீழ்சாதிப் பயலோட ஓடி போறத எங்க ஊர்க்காரங்க ஒரு நாளும் ஒத்துக்க மாட்டங்க. மேல் சாதிக்காரப் பயலோட ஓடிப்போயிருந்தாக் கூட சமாதானமா போயிருவாங்க. ஆனா கீழ்சாதிப் பயன்னா பஞ்சாயத்து கூடிடும் இப்படித்தான் ஒரு காலனிக்காரனோட சேர்மானம் ஆய்ப்போச்சு. சாதிப் பஞ்சாயத்து கூடி, “ உன்னாலே ஊர் மானம் போயிருச்சி, சாதி மானம் போயிருச்சி, ஒன்னைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது, ஊர்லே வச்சிருக்கவும் முடியாது. அதனாலே நீயே போய்ச் செத்துடு, இல்லேன்னா ஊரே சேந்து உன்ன செங்கல் சூளையிலே வச்சுக் கொளுத்திடுவம்னு” என்று பஞ்சாயத்து கட்டளை இட, அந்தப் பொண்ணு தானே செங்கல் சூளையெலே எறங்கி செத்தா, ஊரே அசந்து போச்சி. ஊர் மானத்த, சாதி மானத்த காத்தவ. அவ சூளைலே எறங்கின இடத்திலே கோவில் கட்டி மானத்த காத்த சாமின்னு பேரு வச்சாங்க. எங்க ஊர்லேயே அது தான் பெரிய சாமி”ன்னு சொல்கிறாள், பூங்கோதை.
பூங்கோதை கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பள்ளிக்கூட வேலைக்காரிக்கு, இந்த குடும்பமே கொலைகார குடும்பமாக இருக்கும் போலெ இருக்கே அந்த பசங்க இங்க தேடி வந்தா என்னாகிறது? என்று கவலை ஏற்பட, பள்ளி மணி அடிக்கிறது. இன்னும் இது போன்ற கதைகள் சில இத்தொகுப்பில் இருக்கின்றன. நமக்கு அசாதாரணமாகத் தோன்றும் இக்கதைகள் நம் தெரிவுக்கு எட்டாத சாதாரண்மாக நடக்கும் சம்பவங்கள் தான். வெகு சாதாரண சொற்களில் இந்த அசாதாரண மனித சுபாவங்களையும் வாழ்க்கை நடப்பையும் ஏதோ சிரமமின்றிச் சொல்வது போல இமையத்தால் சொல்லி விட முடிகிறது. அவர் சொல்லவில்லை. நமக்குக் காட்சிப் படுத்துகிறார் என்று சொல்ல வேண்டும்.
சாவி சோறு: சிறுகதைகள்: இமையம்; வெளியீடு: க்ரியா, 2, 17th கிழக்குத் தெரு,காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை 600041. பக்கங்கள் 160. விலை ரூ 170
19.12.2014
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.