பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் - இரண்டு புத்தகங்கள்
தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.. உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே அறிந்து கொள்ளும் ஆர்வமோ, துடிப்போ இல்லாது, தன்னுள் சுருங்கிக் கொள்ளும் சௌபாக்கிய மன நிலையை வரமாகப் பெற்றவர்கள். இந்த அன்னிய மண்ணின் மக்களின் வாழ்க்கை என்ன, அவர்கள் கொண்டுள்ள மதிப்புகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவுத் தாகம் வெளிநாட்டில் வாழும் தமிழ்ர்களிடையே கிடையாது. அவர்களது மனமும் ஈடுபாடும் தமிழ் நாட்டின் எல்லையோடேயே சுருங்கி வேலிகட்டி முடக்கப்பட்டவை. அன்னிய நாட்டில் சூழலில் வாழும் நிர்ப்பந்தங்கள் கூட அவர்கள் மனவெளியை பாதிப்பதில்லை விரிவு படுத்துவதில்லை. ஏனெனில், அவர்கள் நினைப்பில், தமிழ் நாடு, இலக்கியம்,, கலாச்சாரம், கலைகள், அறிவு விகாசம், என்று எதைத் தொட்டாலும் அதில் தமிழன் லிப்னிட்ஸின் Best of all possible-ஐச் சாதித்துவிட்டவன். Best of all possible – உலகில் வாழ்பவன். அதாவது தமிழன். தமிழ் நாட்டில் பிறந்தவனாயிற்றே அவன். அப்படியிருக்க இந்த அன்னிய நாட்டில் அன்னிய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள என்ன இருக்க சாத்தியம்? அவர்களும் இவன் சாதனையை மீறி எதுவும் செய்திருக்கப் போவதில்லை. செய்துவிடப்போவதில்லை. ஆக, வேறு எதுவும் தெரிந்து கொள்ளும் தேவையும் இல்லை.

[பாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001 பக்கங்கள் 503 விலை ரூ 220 ] பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும் ,வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு. என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









