(101) – நினைவுகளின் சுவட்டில்
நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி கால் நடையாகவோ ரயில் பெட்டிகளில் அடைந்தோ ரயில் பெட்டியின் மேலே உட்கார்ந்தோ வந்த ஆபத்தும் அவதியும் நிறைந்த கதைகளைச் சொன்ன ஹரிசந்த், உத்தம் சந்த் எல்லாம் என் செக்ஷனின் வேலை செய்கிறவர்கள். ஒரு எக்ஸிக்யூடி என்சினீயர், கேவல் கிஷன் என்பவர் தனியர். அவர் பெற்றோர்கள் கூடப் பிறந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்தை தன் கண்களாலேயே பார்த்தவர். அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை இங்கு தொடங்கியுள்ளதைப் பார்க்கும் போது எவ்வளவு மனத்திடம், முனைப்பு என்று நினைப்பேன். அவர்கள் அந்த சோகத்திலேயே ஆழ்ந்து விடவில்லை.

இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே. - ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் தூரம் போனால் மகா நதி. மகா நதிப் பாலத்தைக் கடந்து இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால் புர்லா. விடுமுறையில் ஊருக்குப் போக ரயில் பிடிக்க சம்பல்பூர் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். சைக்கிள் ரிக்ஷாவில் போய்க்கொண்டிருக்கிறேன். மகாநதியைக் கடந்து விட்டான். ஆனால் நான் ரயிலைப் பிடிக்க நேரத்துக்குப் போய்ச் சேர்வேன் என்ற நம்பிக்கையில்லை. பின்னாலிருந்து ஒரு லாரி வருவதைப் பார்தேன். சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து இறங்கி, அந்த லாரியை நிறுத்தி, ”ரயிலைப் பிடிக்க வேண்டும்,. சம்பல்பூரில் விட்டு விடுவாயா?” என்று கேட்கிறேன். ”ஏறிக்கொள்,” என்கிறான். திரும்பி வந்து சைக்கிள் ரிக்ஷாக்காரனுக்கு பேசிய காசைக் கொடுத்து விட்டு லாரியில் ஏறிக்கொள்கிறேன். இன்னொரு சமயம் சம்பல்பூரிலிருந்து ஹிராகுட்டுக்கு ஒரு லாரி போகிறது. இப்போது புர்லா போகும் ரோடு வந்ததும், ”இங்கு இறக்கிவிடு, நான் நடந்து போய்க்கொள்கிறேன்,” என்று சொன்னேன். அவன் நிறுத்த வில்லை.” எவ்வளவு தூரம் நடப்பாய்”, என்று சொல்லி, புர்லா ரோடில் மகா நதியைத் தாண்டி, அவன் வழியை விட்டு எனக்காக லாரியைத் திருப்பி ஐந்து மைல் தூர என் நடையை மிச்சப்படுத்திக் கொடுத்துவிட்டு பின் தன் வழியில் செல்கிறான். என்னிடம் இதற்கு ஒரு பைசா காசு கேட்கவில்லை. யாருமே கேட்டதில்லை. அவ்வப்போது நினைப்பு வந்ததைச் சொல்லிச் செல்கிறேன்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









