ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்…..
வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான்.
ராஜே: உங்களை யாரும் சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு கதை கொடுங்க என்று.
வெ.சா எழுத்தாளர் ஆகணும் என்கிற விருப்பமே எனக்கு இருந்த தில்லை. ஆசை ஏற்பட்டது கிடையாது. நான் தான் கொஞ்ச நேரம் முன்னாலேயே சொன்னேனே. அந்தக் கதையைப் படித்ததும் எரிச்சலாக இருந்தது. “செல்லப்பா ஏன் தான் அந்தக் கதையைப் போட்டார்” என்று. ஆகையால் எழுதினேன். நான் கெட்டிக்காரன். அவரைத் திருத்தணும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.
ராஜே: எழுத்தாளரே கூட, எழுத்தாளர் ஆகணும்னு ஆசைப் பட்டுத் தான் எழுதினீங்களா?
திலீப்: அது சொல்றது கொஞ்சம் கஷ்டம் தான். நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஒரு எழுத்தாளருக்கு, இதை சாமிநாதனே ஒத்துக்கொள்வார், ஒரு எழுத்தாளருடைய tone, voice
இன்னும் எங்கே இருக்கிறது என்று தெரியாது. நான் நாவலே எழுத முயற்சிக்கவில்லை. பள்ளிக் கூடத்தில் ஆறாவதோ எட்டாவதோ படிக்கும் போது எங்கள் வகுப்பில் எல்லோரும் குஜராத்திப் பசங்க. நானும் குஜராத்தி தான். என்னோடு இன்னும் ஒரே ஒரு தமிழ் பையனும் தான் தமிழ் தெரிந்தவர்கள். Actually school magazine – க்கு ஏதாவது contribute பண்ணனும். எல்லாரும் நேரு, காந்தின்னு எழுதிக் கொடுப்பார்கள். எனக்குத் தோன்றியது, 1962-ல் இந்தோ-சைனா சண்டை நடந்தது. அதை வைத்து ஒரு கதை எழுதினேன். அது என்னவென்றால், ஒரு இளம் பெண்ணுடைய புருஷன் வந்து போர்க் களத்தில் இறந்து போனதாக ஒரு செய்தி வருகிறது. அவள் ஒரு சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு, துடிக்க, ஒரு traditional emotional ஆன ஒரு கதைதான் அது. இதை நான் எழுதிக் கொடுத்தேன். எங்க வாத்தியாருக்கு ஒரே ஆச்சரியம். குஜராத்தி பையனாக இருந்து கொண்டு ஏண்டா இந்தக் கதையை தமிழில் எழுதினான் என்று. அந்தக் கதையின் பெயர் ‘அசம்பாவிதம்’ நான் இந்தத் துறைக்கு வந்ததே ஒரு அசம்பாவிதம் தான். நான் ஆசைப் பட்டதே இல்லை ஆனால் சிறுகதை என்பது ஒரு வகையில் அந்த form தான் என்று யோசித்து வைத்திருக்கிறோம். அந்த மாதிரி சாமிநாதன் கட்டுரையில் அந்த மாதிரி இருக்கலாம்.
ராஜே: நாம் யோசிக்கிறோம் என்பது மட்டுமல்ல. நாம் அதைக் கேட்டிருக்கிறோம். அதைச் சொல்கிறோம். அதையே எழுதுகிறோம். என்/று தோணுது. நீங்க அருமையா ஒண்ணு சொன்னீங்க. அதாவது சிரிப்பதற்கு யாரும் திட்டம் போட்டு சிரிக்கமுடியாது என்று. அப்படித்தான் எழுதுகிறோம். ரொம்ப அழகா இருந்தது. சிரிக்கிறது எனபதை plan பண்ணி செய்ய முடியாது. அது இயல்பாய் வருகிற விஷயம். அப்படித்தான் இந்த எழுத்தும் என்று தோணும்.
திலீப்: இவர் ஏன் சிறு கதை எழுதலை. நாவல் ஏன் எழுதலை என்றால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், எழுத பேனா எடுத்த பிறகு உள்ளுணர்வில் ஒன்று தோன்றும். இது தான் செய்யக் கூடியது என்று.
ராஜே நிறைய கதை சொன்னாருங்க. அவர் சொன்னார். உங்களுக்கு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் போடும்போது அது ஒரு ஸ்டோரி form –ல் இருக்கிறது என்று. அது அவருக்கு கிடைத்திருக்கிறது. ரொம்ப அற்புதமாக. இல்லாவிடில் மற்றவர்களிடம் இல்லாமல் இவரிடம் அதிகம் பேர் படிக்க விரும்பும்படியாக இருக்கிறது அதனால் தான் என்று நான் நினைக்கிறேன்
திலீப்: அவருக்கு கண்டிப்பாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ராஜே: அந்த டிச்கிரிபசன் ஒரு அற்புதமாக இருக்கிறது. மாணவர்கள் எல்லாரும் சொல்வார்கள். அதெல்லாம் இருக்கு. ஆனால் ஏன் கதையாய்ச் சொல்லமாட்டேன் என்கிறார் என்று தெரியவில்லை.
திலீப்:: அதற்கு அதன் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லையோ என்னவோ. நான் வந்து என்ன சொன்னாலும் ஒரு கதையாகத் தான் சொல்ல விரும்புவேன். அது ஒரு விதமான……., அதை விவரிப்பது என்பது கஷ்டமானது. ஏன் நீங்க அதைக் கதையாய்ச் சொல்லணும், கட்டுரையாய் எழுதலாமே என்று தான் தோன்றும்.
துரைராஜ்: ரோட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். ரோடிலே ஒரு சம்பவம் நடந்துகொண்டிருக்கிறது. நம்மை அது ரொம்ப பாதிக்கிறது. இதை மற்றவர்களுக்குச் சொன்னால் என்ன, சொல்லுவோமே என்று நினைக்கத் தோன்றும்
ராஜே: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க சார் .அதில் நமக்கென்ன வேலை. நாம சொல்லணும் என்கிறது தான். அல்லது கேட்கணும். படிக்கணும். அவங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. உங்களால் முடியாது. சொல்லாமல் இருக்க முடியாது. அது தான் யாரிடமாவது ஒருவரிடம் சொல்லணும். யாரிடமும் சொல்ல முடியவில்லை என்றால் டைரி எழுதி வைப்பாங்க. ஆனந்த ரங்கம் பிள்ளை டைரி எல்லாம் வேறு எப்படி என்று நினைக்கிறீர்கள்?. அவங்க எழுதி வைத்தது பூராவும் பிரெஞ்ச்காரர்களுக்குத் தெரியாமல், இவங்க வந்து தமிழில் இவர்கள் மட்டும் புரிந்துகொண்டு, இந்த ரகசியம் வெளியில் தெரியாமல் இருந்து கொண்டு எப்படி கையாள வேண்டுமென்பது தான் டைரியாக அவர்கள் பாவிக்கிறார்கள். அப்பவும் நம் சக மனிதர்களோடு உரையாடுவதற்கு அந்த விஷயம் பிரச்னையாய் இருக்குமானால் எழுதி வச்சிடலாமான்னு தோன்றுகிறது. அப்புறம் முகம் தெரியாதவங்க யாருக்காவது போகட்டும். நம்ம முகம் தெரியாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தால் சொல்லலாம். ரோட்டில் நின்று கொண்டு ஒரு விஷயத்தைச் சொல்ல முடியாது. இவர் எழுதி அனுப்பினார் என்றால் அது ஆங்காங்கே போகும் இவர் பத்திரமாக ஒரு இடத்தில் இருக்கலாம். இவரென்று இல்லை. இவரு, அவரு, யாராக இருந்தாலும். இந்தப் பாதுகாப்பு இதில் இருக்கு. அதனாலே இதைப் போய் எல்லார் கிட்டேயும் சொல்ல வேண்டுமென்ற நோக்கமல்ல. நம்மால் சொல்லாமல் இருக்க முடியாது. எந்தத் தவறு செய்பவனும் பாருங்க, அவன் விட்டுவிட்டுப் போன தடயத்தில் தான் அவன் கண்டு பிடிக்கப் படுகிறான். முக்கியமான தடயம் அவன் இதைப் பற்றி எங்கேயாவது சொல்லியே ஆகணும். சொல்லாமல் இருக்க முடியாது. இது தான் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. அதை எப்படிச் சொல்கிறோம் என்பது அவர் அவர் கைவந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
திலீப்: நிறைய கவிஞர்கள் கவிதை எழுதியவர்கள், அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து வேறு மாதிரி experiment பண்ணுவார்கள். ஏன் என்றால் அவர்கள் voice எது என்று அவர்களுக்குத் தெரியாது. நாம் கவிதை எழுதிப் பார்க்கணும். அப்புறம் நமக்குத் தோணும். இது சரியா வராதுன்னு.. புதுமைப் பித்தன் கடைசி வரைக்கும் நாவலே எழுதலை. சிறுகதை மட்டும் தான் எழுதினார். சில சமயம் இரண்டையும் balance செய்யக் கூடியவர்கள் கொஞ்சம் பேர் இருக்காங்க. நாவலும் சிறுகதையும் இப்ப ஷண்முக சுந்தரத்தினுடைய சிறுகதையெல்லாம் பார்த்தீர்களானால் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.
வெ.சா. புதுமைப் பித்தன் நாவல் எழுதுகிறேன் என்று ஆரம்பித்து ஒரு இடத்திலே “அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்ததாக” எழுதுகிறார். அந்த ஆளை முன்னாலேயே இரண்டு அத்தியாயம் முன்னாலே அவர் க்ளோஸ் பண்ணியாச்சு. அப்புறம் எங்கே அவரைக் கைத்தாங்கலா அழைத்து வர்ரது. அவரே இதை எழுதி இருக்கிறார். சித்தியோ என்னவோ நினைவில் இல்லை.
இன்னொரு விசயம் நான் சொல்லணும். திடீரென்று ஒரு நாள் ஜான் ஆபிரஹாம் வீட்டுக்கு வந்தார். இல்லை. ஜான் அபிரஹாம் இல்லை. சக்கரையாவின் மனைவி தான் முதலில் வந்தது. அவரும் என் இன்னொரு நண்பரும் என் ஆபிசுக்குப் பக்கத்தில் உள்ள ஆபிஸில் வேலை பார்த்ததினாலே அவரைத் தெரியும். ஜான் ஆபிரஹாம் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் அழைத்து வருகிறேன் என்றும் சொன்னார். நான் அவருக்கு film script எழுதித் தரவேண்டும் என்று சொன்னார். நான் film script ஒன்றும் எழுதுவதில்லைய்யா. எனக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாது நாப் சினிமா பார்க்கிறேன். அவ்வளவுதான் என்றேன். இல்லை, எனக்கு சக்கரையாதான் உங்களைப் போய் பார்க்கச் சொன்னார் என்றார் ஆபிரஹாம். நான் சக்கரையாவோடு சினிமா பார்த்திருக்கிறேன் அதற்காக film script எழுதணும்னு இருக்காய்யா. என்று சொல்லி பின் இங்கே பார்த்தசாரதின்னு ஒருத்தர் இருக்கார். அவர் நாடகமெல்லாம் எழுதுகிறவர். பிறகு ஜானகிராமன்னு ஒருத்தர் இருக்கார். அவர் நாடகங்களும் எழுதியிருக்கார். அத்தோடு சகஸ்ரநாமத்துக்காக சினிமாவும் எழுதியிருக்கார், நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் ;னு அவங்க கிட்டே வேணும்னா அழைச்சிட்டுப் போறேன் என்றேன் .ஆனால் ஆபிரஹாம் “சக்கரையா உங்க கிட்டே தான் போகச் சொன்னார். சக்கரையா சொல்றது எனக்கு வேதவாக்கு”ன்னு பிடிவாதமாகச் சொன்னார். சரி என்று “நான் எழுதித தரேன். பிடிச்சிருக்கான்னு பாரும்” என்று சொல்லி எழுதித் தந்தேன்.
சுப்பிரமணியன்: நீங்க அவரை வற்புறுத்தினால் அவர் எழுதிக் கொடுப்பார்.
வெ.சா. இன்னுமொரு சம்பவம். இந்துமதின்னு ஒரு சின்ன பெண். 20 வயசு இருக்குமோ என்னவோ. டான்சர்.. என் நண்பர் ஒருவர் மூலமாகத் தெரிந்தவர். பக்கத்திலே கரோல் பாகில் இருந்தார். என் பெண் டான்ஸ் பண்றா. நீங்க பாக்க வரணும் என்றார். என் நண்பரும் வாங்க போகலாம் என்று அழைக்கவே எல்லோரும் போனோம். அது நண்பர் கூப்பிடுகிறாரே என்று போனது. ஆனால் அந்த அந்த பெண்னோட டான்ஸ் எனக்கு ரொம்பவுமே பிடிச்சிருந்தது. என் நண்பனிடம் சொன்னேன். நான் இதைப் பத்தி எழுதித் தரேன். உங்க பத்திரிகை Arts Section editor கிட்டே சொல்லு என்று சொல்லி எழுதித் தந்தேன். அதில் யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி critical சிலது சொல்லி யிருந்தேன். அந்த எடிட்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தியோட பரம ரசிகர். இருந்தாலும் நான் எழுதிக் கொடுத்தது பிரசுரமானது. என் நண்பனிடமும் அவர் சொல்லி அனுப்பினது. “‘சாமிநாதன் என்ன எழுதினாலும் கொண்டு வா. போடலாம்” என்று. அதன் பின் நான் Link, Patriot பத்திரிகைகளில் நிறைய எழுதினேன். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்
தில்லியில் நடக்கும் எல்லா நடன நிகழ்ச்சிகளையும் நான் பார்ப்பேன். கதக், ஒடிஸ்ஸி, குச்சிபுடி, பரத நாட்டியம் மணிபுரி மோஹினி ஆட்டம் இதெல்லாம், போக அங்கு ரமேஷ் ஷர்மா என்ற ஒரு முதியவர் Free style ஆடியதும் கூட. சங்கீத நாடக் அகாடமியின் பத்திரிகைக்காக எல்லா dance forms பற்றியும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. எழுதினேன். அதில் நிறைய பெரிய தலைகளைப் பற்றிக் கடுமையான அபிப்ராயங்களையும் பாராட்டுக்களையும் எழுதியிருந்தேன்
1. *#(ஆனால் அதனால் நிறைய சச்சரவுகள் வரும் என்று பிரசுரமாகவில்லை. கடைசியில் டைம்ஸ் டுடேயோ என்னவோ பத்திரிகையில் பிரசுரமானது இதன் தமிழ் வடிவத்தை தமிழ் ஹிந்து (www.tamilhindu.com) என்னும் இணைய இதழில் பார்க்கலாம்))
ஒரு சமயம் யாமினி க்ரிஷ்ணமூர்த்தி என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நாட்டிய மூர்த்தி என்னும் அவரது டிவி. சீரியலுக்கு நான் script எழுதித் தரவேண்டும் என்றார். அது இந்தியாவின் முக்கிய கோவில்களைப் பற்றியும் அதைச் சார்ந்து எழும் நாட்டியங்களைப் பற்றியும் 12 episodes கொண்ட தொடர். யாமினி க்ரிஷ்ணமூர்த்தியிடம், என்னைத் தெரியுமா? நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், “தெரியும்” என்று சொல்லி, தன்னிடம் இருந்த File-ஐ எனக்குக் காட்டினர். அதில் நான் எழுதிய கட்டுரைகள் எல்லாம் இருந்தன. அவரைப் பற்றி நான் critical - ஆக எழுதியவையும் இருந்தன. எதையும் மறைப்பானேன்.? பின் நான் அவரது நாட்டிய மூர்த்தி தொடருக்கு ஆறு episodes எழுதிக் கொடுத்தேன். எனக்கு முன்னால் முதல் ஆறு episodes வேறு ஒருவர் எழுதி அவை படமாகிக் கொண்டிருந்தன. அந்த ஆறு episodes script என்னிடம் இருக்கு.. பிரசுரிப்பார் தான் யாரும் இல்லை. Does this say anything?
ராஜே: கட்டாயப் படுத்தினால் மட்டும் இல்லை.எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பது உங்களுக்கு இஷ்டம் என்கிறதனால் மட்டும். செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம். இந்த இரண்டும் யதேச்சையாக நிகழ்கிற விஷயமாகத் தான் இருக்கிறது.
வெ.சா. அது மட்டுமல்ல. கால் தடுக்கி எல்லாவற்றிலும் விழுந்து தான் நான் வந்தேன். வந்துட்டேன்னு இல்லை. வந்திட்டே இருக்கேன்.
ராஜே: தடுக்கி விழுந்தேன் என்பதெல்லாம் நீங்க எழுந்த பின் பிறகு தானே.. எழுதுறவங்க எழுதாமல் இருக்க முடியாது. என்பதாகச் சொல்றோம். என்ன அது அவங்களை எழுதச் செய்கிறது. இசைக் கச்சேரிக்குப் போய் உட்கார்ந்தால், அவங்க வந்து அவங்களுக்காகப் பாடி, அவங்களே ரசிச்சிட்டு இருக்கும் போது, ஆடியன்ஸும் ரசிக்கும்படியாகத் தோணுது. அல்லது அதற்கு முன்னாலேயே அவர்கள் ரசிக்க ஆரம்பித்து இருக்கிறார்களா என்று தோன்றுகிறது. உண்மையிலேயே அவன் அவனுக்காக ரிகார்டாத் தான் எழுதுகிறானா?
வெ.சா. சங்கீதத்திலே அப்படித்தான்.
ராஜே: படைப்பிலும் அப்படி ஏன் செய்யக்கூடாது, ஏன் பார்க்கக் கூடாது?
வெ.சா.: எழுதியிருக்காங்களே. Not for an audience. Kafka said, you destroy the whole thing, put it intop fire, he said to his friend, Max Brod.
ராஜே: அதை destroy பண்ணுன்னு சொன்ன காஃப்கா அதை ஏன் எழுதினான்.?
வெ.சா. ஏன் எழுதினான்னா, அதை அவன் கிட்டே தான் கேக்கணும்.
ராஜே: அந்த மன நிலை என்ன என்பதைக் கேட்கிறேன்.
வெ.சா. அது எனக்குத் தெரியாது ஸ்வாமி. அதை creative writers (திலீப்பைக் காட்டி) கிட்டே கேளுங்க
ராஜே: creative writer மனநிலை தெரியாம இவர் வந்து creative writer பத்தி எழுதறாரு. என்னங்க இது? நியாயமா இது?
வெ.சா. அதைத் தான் சொல்றேன். I feel like doing it and there is no opportunity. எனக்கு மேடை கிடைக்கலே என்றால் சும்மா உங்கார்ந்து கொண்டிருப்பேன் இல்லே யார் கிட்டயாவது வம்பு இழுத்துக்கிட்டு இருக்கேன். துரை ராஜ் பக்கத்திலே இருந்தா பேசிக்கிட்டு இருக்கேன். “என்னய்யா இந்த ஆளு சும்மா பிணாத்தறான். கண்றாவியா இருக்கே’-ன்னு. யாராவது எழுதச் சொன்னால், சரி அதைப் பத்தி எழுதணும்னு தோண்றினால், அதை எழுதியே ஆகணும்னா எழுதறேன். கேட்கறாங்க, எழுதறேன்.
ராஜே: இல்லே, நமக்கு இந்த புராணக் கதை பூசலார் நாயனார் கதை உங்களுக்குத் தெரியும். திருநின்ற ஊரிலே. அவன் கண்ணுக்கு நேரா ராஜராஜன் ஒரு பெரிய கோயிலைக் கட்டி யிருக்கான். இந்த ஆள் மனதுக்குள்ளேயே ஒரு கோயிலைக் கட்டிக்கிட்டு பிரார்த்தனை பண்றான். ஆக இரண்டு பேரும் ஒரே வேலையைத் தான் செய்றாங்க. அது அவனுக்கு வசதி என்கிறதினாலே அவன் கோயிலைக் கட்டறான். அது இல்லை என்பதினாலே பூசலார் மனசுக்குள்ளேயே அதைச் செய்யறார்
மேடை கிடைக்காவிட்டாலும் நீங்க எழுதிட்டுத் தான் இருக்கீங்க.
வெ.சா. மேடை கிடைத்த இடத்தில் எழுதுகிறேன். கிடைக்கவில்லை என்றால் எங்கே நான் மேடையையா உருவாக்க முடியும்? முடியாது.
ராஜே: பூசலார் நாயனார் மாதிரி மனத்திற்குள் என்கிறேன்..
வெ.சா. ஏன்? பக்கத்திலே யார் கிடைத்தாலும் போட்டுத்தள்ள வேண்டியது தான். செல்லப்பா என்னை எழுதச் சொன்ன வரைக்கும் பேசீட்டுத்தானே இருந்தோம். ஹிராகுட்டிலும் நண்பர்களோடு பேசிக்கிட்டுத்தான் இருந்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கிறபோதும் பேசிட்டுத்தான் இருந்தோம்
ராஜே: இல்லை, உங்களைப் போல ஒரு சிலர் தான் அப்படி பேசிட்டு இருந்தீங்களா? பெரும்பாலும் எதையாவது பேசிக்கிட்டு இருந்தீங்களா?
வெ.சா. இல்லை. எனக்கு என்று சில நண்பர்கள் இருந்தாங்க.
ராஜே: ஒவ்வொருத்தரா, ஒரு க்ரூப்பா ஏது ஏதோ விசயங்களைப் பத்தி பேசிட்டு இருப்பாங்க இல்லையா? அப்படித்தானே?.
வெ.சா. ஆமாம். ஏற்கனவே ஷண்முகம் என்று ஒரு கவிஞன். நல்லா படிச்சவன் கவிதை எல்லாம் எழுதுவான். இதெல்லாம் நான் இந்த நரசிம்ம நாயுடு (எங்க தமிழ் வாத்தியார்) சொல்லிக் கொடுத்துத்தான் எழுதுகிறேன்னு இல்லை. இதையெல்லாம் அவர் எங்கும் சொல்லிக்கொடுத்தது இல்லை. நீ காவேரி கிடைச்சா போய்ப் பாரு என்றான். கடைசியில் அவனே கொண்டு வந்து காண்பித்தான். காவேரி அப்போது கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு மாதப் பத்திரிகை. ஒரு நாள் இவன் ஏதோ வாங்க கடைக்குப் போக, கடைக்காரன் பொட்டலம் மடிக்க ஒரு பத்திரிக்கையைக் கிழிக்கிறான். அது காவேரி பத்திரிகை. பழசு. அதில் இவன் எழுதிய ஒரு கட்டுரை, இவன் கவிதைகளோடு இருந்தது. அதை இவன் வாங்கிக்கொண்டு வந்து காட்டினான். அப்போ நாங்கள் 10-வது படித்துக்கொண்டிருந்தோம். அவனோடு தான் அதிகம் பேச்சு. அப்போது அன்பு கணபதி, ரா.பி. சேதுப் பிள்ளை மாதிரி ஆட்கள் பாடப்புத்தகத்தில். பின் பாரதி தாசன் கவிதை நாமக்கல் கவிஞர் எல்லாம் இருக்கும். எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. ஆனால் படித்தோம். பாஸ் பண்ணினோம்.
திலீப்: மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பத்தி உங்க கருத்து என்ன? மரபுக் கவிதையைப் பற்றி அதில் ஒரு சாத்தியமும் இலலைன்னு நினைக்கிறீங்களா?
வெ.சா. ஏன்.? திருலோக சீதாராம் எழுதவில்லையா? அவரிடம் தான் என்ன வேகம்!. என்ன தடையற்ற எளிமையான ஓட்டம்!.. ஆனால் அவரைப் பற்றி யாருமே பேசுவது கிடையாது
திலீப்: அவரைத் தவிர இன்னும் வேறு யாராவது? வேறே யாரும் நான் படிக்கவில்லை. அதனால் கேட்கிறேன்.
ராஜே: புதுமைப் பித்தனுக்கும் மு.அருணாசல் பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பற்றி, புதுமைப் பித்தன் கவிதைகள் என்றே இருக்கிறது.
திலீப்: ஜெயகாந்தன் கவிதைகள் இருக்கு. அவர்கள் மரபுக் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.. பிச்சமூர்த்தி மரபுக் கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாரும் மீட்டரில் தான் எழுதியிருக் கிறார்கள்.
வெ.சா. பிச்சமூர்த்தி யாப்பில் எழுதி fail ஆயிருக்கிறார் பார்த்தீர்களா? அவருடைய குயிலின் சுருதி கவிதையாகவே படலை. சரியா வரலை. பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார் என்கிறதுக்காக நாம் அதை கொண்டாடமுடியாது.
சுப்பிரமண்யம்: தமிழ் ஒளி படிச்சிருக்கீங்களா?
வெ/ சா/ தமிழ் ஒளி ஞாபகம் இல்லை. படிச்சிருப்பேன். ஆனால் மனதில் தங்கணும் இல்லையா? தங்கலை.
வெ/சா/: கண்ணதாசன் …
ராஜே: கன்ணதாசன் மரபுக் கவிதைகள் தான் எழுதியிருக்கார்..
வெ.சா. அவர் கிட்டே தான் வார்த்தைகள் என்னமா விளையாடுது
நன்றி: கணையாழி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.