ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் பெயர்தான் மறந்து போனது. அவர் பின்னர் இந்தியாவுக்கும் வந்திருந்தார். அவரோடு நிகழ்ந்த ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் நம் க.நா. சுப்ரமணியம் கலந்து கொண்டது பற்றி Quest என்னும் காலாண்டு பத்திரிகையில் படித்திருக்கிறேன். அதற்கும் முன் The God That Failed – ல் தன் அனுபவங்களை எழுதியவர்களில் இன்னொருவரான, Stephen Spender, Iஇவர் ஒரு ஆங்கில கவி, Encounter என்னும் ஒரு மிகச் சிறந்த மாதப் பத்திரிகையை நடத்தி வந்தார் அது எனக்கு 1950 களில். எனக்கு புர்லாவில் ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. அவரும் இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்திருந்தார். அவரையும் சந்தித்து அவர் சென்னையில் இருந்தவரை அவரோடு உடன் இருந்தவர் க.நா. சுப்ரமண்யம், அது பற்றி (கொஞ்சம் மூச்சை நிறுத்திக் கேட்டுக் கொள்ளலாம்) ஆனந்த விகடனில், ஆமாம் ஆனந்த விகடனில்தான், எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் க.நா.சு. எப்படி எழுத நேர்ந்தது? அவர் எழுதுவது ஒரு ஆங்கில கவிஞர் பற்றியல்லவா? புதுமைப் பித்தனைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால் இடம் கிடைத்திருக்குமா, சந்தேகம் தான்.
விஷயத்துக்கு வரலாம். ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகி வரமாத்திரம் இல்லை. அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது.. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித் ( ட்tapping ) தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை. அதை க.நா.சுப்ரமண்யம் மொழிபெயர்த்து தமிழிலும் வெளிவந்தது அந்த நாவல்.
இவையெல்லாம் சொல்லி தமிழ் நாட்டு நிலவரத்தைச் சொல்லாமல் விட்டால் எப்படி நியாயமாகும்?. ஐம்பதுகளின் பின்பாதியில் என்று நினைக்கிறேன். நம்மூர் முற்போக்கு எழுத்தின் மூலவரான ரகுநாதனும் அவர் சொல்ல விரும்பிய, கனவு கண்ட, அதையே நிஜமாகக் காண்பதாக ஒரு சோஷலிஸ் சமுதாயத்தைக் கற்பனை செய்துகொண்டார். ஒரு கதை பெயர் மறந்து விட்டது. பாட்டாளிகளின் போராட்டத்தில் ஒரு கைதி சிறையிலிருந்து தப்பி ஓடிவிடுகிறான். அவன் சரணடைவது சிறையிலிருக்கும் தன் இன்னொரு பாட்டாளி நண்பனின் வீட்டுக்கு. போலீஸ் துரத்தி வருகிறது. வீட்டுக் கதவைத் தட்டுகிறது. கைதி பின்பக்கமாகத் தப்பி ஓட் முயலும் போது தான் தப்பும் வரை போலீஸைத் தடுத்து நிறுத்தச் சொல்கிறான். அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவி கதவை உடைத்துக்கொண்டு வந்த போலீஸைத் தடுக்க தன் இடுப்பிலிருக்கும் குழந்தையை கதவின் நிலைப்படியின் மீது அறைகிறாள். போலீஸ் திகைத்து நிற்கிறது. கைதி தப்பி ஓடிவிடுகிறான் இதற்குள். எப்படி இருக்கிறது, பாட்டாளிகளின் போராட்டத்தை முன் எடுத்துச் செல்ல வழி காட்டும் முற்போக்கு இலக்கியம்?
தமிழ் நாட்டு முற்போக்கு இலக்கியத்துக்கு வித்திட்ட முன்னோடி நம்ம சிதம்பர ரகுநாதன் தான்.. ரகுநாதன் முற்போக்கு இலக்கியத்துக்கும், தமிழ் நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட ஆயுதமாக ஒர் நாவலும் எழுதியிருக்கிறார். அது தமிழ் நாட்டு நெசவாளர்கள் நலிவுற்று பரிதவித்த காலம். வேட்டியும் புடவையும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒதுக்கி விடவேண்.டும் என்றும் மில்களுக்கு இவை தடை செய்யப் பட வேண்டும் என்று நெசவாளர்களுக்கு வாழ்க்கை தர அன்றைய முதன் மந்திரி ராஜாஜி மத்திய அரசைக் கேட்டார். அது நடப்பதாக இல்லை. அந்த சமயத்தில் எழுதப்பட்ட நாவல் தான் .பஞ்சும் பசியும். என்ற நாவல்.. அதில் ஒரு ஆலை முதலாளியுடன் நம் கதாநாயனுக்கு மோதல் ஏற்படுகிறது. பாட்டாளிகளின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நம் கதாநாயகன் அவர்களுக்குத் தலைமை தாங்குகிறான். அதிலும் ஓர் சிக்கல். முதலாளியின் பெண்ணுக்கு நம்ம கதாநாயகன் மேல் காதல். அவனுக்கு காதலிக்க வேறு பெண் அங்கு கிடைக்கவில்லை. ஐம்பதுக்களில் இது ஒரு நல்ல சினிமா கதை. எம்.ஜி.ஆர். சரோஜா தேவி அல்லது சிவாஜி கணேசன் சாவித்ரி நடித்திருந்தால் சக்கை போடு போட்டிருக்கும். இந்த பஞ்சும் பசியும் தான் ரகுநாதனை முற்போக்கு ஆச்சாரிய பீடத்தில் அமர்த்தியது. இன்றைக்கும் கூட விஸ்வாசமான முற்போக்குகள் பஞ்சும் பசியும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
எனக்கு மிகவும் வருத்தம். இலக்கியத்தை மிக தீவிரமாக எடுத்துக்கொண்ட முதல் சிறுபத்திரிகையாக ரகுநாதனின் சாந்தி எனக்கு அறிமுகமானது. அவரது புதுமைப் பித்தன் வரலாறு, ரகுநாதன் கதைகள் என்று முதல் தொகுப்பு எல்லாம் என்னை அவரிடம் ஈர்த்த எழுத்துக்கள். அந்தத் தொகுப்பில் உள்ள முதல் கதை “வென்றிலன் என்ற போதும்” பின்னர் ஐந்தாம் படை போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. “புதுமைப் பித்தன் வரலாறு” புத்தகத்தில் ரகுநாதன் அந்தக் கதை பற்றிய ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் ரகுநாதன் அந்தக் கதையை புதுமைப் பித்தனிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். புதுமைப் பித்தனுக்கு அந்தக் கதை ரொம்பவும் பிடித்துப் போகவே, அப்போது வந்த ஒரு பத்திரிகைக்காரரிடம் “இந்தாரும், உம்ம பத்திரிகையில் இதைப் போடும் ஒரு நல்ல கதை உமக்குக் கிடைத்திருக்கிறது” என்று சொல்ல், அந்த பத்திரிகைக் காரர், அந்த கதைக்கட்டைப் பார்த்துவிட்டு , ”போடலாம், ஆனால் ரொம்ப நீளமா இருக்கே” என்று தயக்கத்துடன் இழுத்துக் குரல் கொடுக்க, “ புதுமைப் பித்தனுக்குக் கோபம் வந்தது. “போடறதுன்னா இதைப் போடும். இல்லயானா, உம்ம பத்திரிகை எல்லா பக்கத்திலும் எண்சுவடி வாய்ப்பட்டை அடித்துத் தள்ளும்” என்று கோபத்துடன் சொன்னாராம். அந்தக் காலத்தில் ரகுநாதன் எழுத்து என்றால் நான் மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். என் முதல் புத்தகம், பாலையும் வாழையும்” அவருக்கும் க.நா.சுப்ரமண்யத்துக்கும் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். ஆனால் பின்னர் வந்த அவர் எழுத்துக்கள் எனக்கு மிக ஏமாற்றத்தையே தந்தன
சோஷலிஸ கொள்கைகள் முதலில் வாலிப வயதில் எல்லோருக்கும் கவர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் அதன் நடைமுறைகளிப் பார்த்த பின்னும் அதன் கோஷங்களில் மாய்ந்து இருப்பது விவேகம் உள்ளவனின் காரியமில்லை. எது எப்படி இருந்தாலும் ரஸ்ஸல் போன்றவர்கள் முன்னரே கண்விழித்துக் கொண்டாலும், மற்றவர்கள், சுய சிந்தனை உள்ளவர்கள் ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு, க்ருஷ்சேவின் 20-வது காங்கிரஸ் உரைக்குப் பிறகும் கண்களை மூடிக்கொண்டிருப்பது மூர்க்கத்தனம் என்றே எனக்குப் பட்டது.
இவையெல்லாம் என் கண் திறந்த காலம் என்று சொல்ல வேண்டும். பாதி, மிருணால், சீனுவாசன் இப்படி நிறையப் பேர், எல்லாரும் நண்பர்கள் தாம், என்னை விரல் பிடித்து அழைத்துச் சென்றாற் போல, நான் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எனக்குப் பாடம் எடுக்கவுமில்லை. நான் அவர்களிடம் பாடம் கற்றுக்கொண்டது என்னை அறியாது அவர்களுடன் பழகியதில் கற்றுக்கொண்டது தான் என்று இப்போது நான் அந்நாட்களைத் திரும்பிப் பார்த்து எண்ணும் போது தோன்றுகிறது.
பஞ்சாட்சரம் வீட்டில் கலைமகள் வந்திருக்கும். அதில் கி.வா.ஜ வும், அ.சீனிவாசராகவனும், இன்னும் மற்ற புலவர்களும் அவ்வப்போது எழுதி வந்ததால் அவனுக்கு கலைமகளில் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு அதில் தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், ந. பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யம், ஆர்.வி. போன்ற பல பெயர்களை, புதுசும் பலசுமாக பல பெயர்களை மாதா மாதம் படிக்க முடிந்தது. இரட்டைக் கதைகள் என்று ஒரே தலைப்பைக் கொடுத்து இரண்டு பேரை எழுதச் சொல்வது, போன்ற பல புதிய சமாசாரங்கள் அதில் காணப்பட்டன. இப்போது இத்தைகைய சோதனைகள் வேடிக்கையாகப் படலாம். ஆனால் அன்று, இதையும் மீறி தங்கள் எழுத்துத் திறனைக் காட்டியவர்கள் இருந்தார்கள். இப்போது எனக்கு நினைவில் இருப்பது, “கொட்டுமேளம்” என்ற தலைப்பில் லா.ச.ராமாமிருதமும், தி. ஜானகிராமனும் எழுதியது. லா.ச.ராமாமிருதத்தின் கொட்டு மேளம் கதை தமிழ் மொழியையே மந்திரம் போன்று எங்கோ இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. அதன் பின் நானே கலைமகள் வாங்க ஆரம்பித்தேன். இதெல்லாம் என்னிடமே இருக்க வேண்டும், திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்று. வருஷத்துக்கு சந்தா ரூபாய் ஆறு. அதிகம் என்றாலும் அதிகமாக எனக்குத் தெரியவில்லை. வந்த உடனேயே ஆபீஸிலேயே படித்து விடுவேன். ஆபீஸுக்குப் போவது படிக்கத் தானோ என்று தோன்றும். அதுவே எனக்கு அருமையான நண்பர்களையும் கொடுத்தது.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கலைமகள் இதழில் அவ்வப்போது கலைமகள் பிரசுரம் என்று விளம்பரங்கள் வரும். விலை அதிகம் இராது. எந்தப் புத்தகமும் ரூ 2 அல்லது 3 க்குள் தான் இருக்கும். நான் அதைப் பார்த்ததும் ஒரு கார்டு எழுதிப் போட்டு விடுவேன். “நான் உங்கள் சந்தாதாரரில் ஒருவன். எனக்கு இந்த புத்தகத்தை அனுப்பி வைக்கவும். இதன் விலையை சந்தாவிலிருந்து கழித்துக்கொள்ளவும்? என்று. இவ்வளவு தான் இரண்டு வரிகள் எழுதியிருப்பேன். வியப்படைய வேண்டாம். புத்தகம் வந்து விடும். என் சந்தா இவ்வளவு பாக்கி, புத்தக விலை போக இவ்வளவு பாக்கி” என்று எனக்கு பில் ஒன்றும் வராது. நானாக இந்த விவரங்களைச் சொல்லி சந்தா அனுப்பும் போது அனுப்பி வைப்பேன். அப்படி ஒரு காலம் இருந்தது என்று சொல்லத் தான் வேண்டும்.
கிரியா ராமக்ருஷ்ணன் சொல்வார்: அந்தக் காலத்தில் கலைமகள் புத்தகங்களின் அட்டைப் படம் தான் ஏதோ மாதிரி இருக்குமே ஒழிய, அச்சு மிக தரமானதாக, அதன் கட்டமைப்பும் பலமானதாக இருக்கும். நல்ல தாளிலும் இருக்கும். என்று. அதன் பிரகு வெகு காலம் வரை, கிரியாவும் சி.சு.செல்லப்பாவின் எழுத்து பிரசுரமும் புத்தக வெளியீட்டுத் துறையில் காலடி பதிக்கும் வரை கலை மகள் பிரசுரம் தான் எல்லை வகுக்கும் ஒன்றாக இருந்து வந்தது. .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.