அத்தியாயம் 33
கடைசியில் கடம்மாவைக் கூட்டிவர அவள் வேலை செய்யவிருக்கும் ஷேக் வீட்டிலிருந்து ஷேக்கின் அப்பனும் அந்த வீட்டு ட்ரைவரும் வந்து அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில் சேக்கின் அப்பனான கிழவன் அஸ்வினியைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருகிறான். அவ்வப்போது தன் கைத்தடியால் டிரைவரைக் குத்திக்கொண்டே வருகிறான். ட்ரைவர் உஸ்மானும் மலையாளிதான் முஸ்லீம். முஸ்லீமேயானாலும் அவன் அங்கு வயிறு பிழைக்க வந்தவன். வேலைக்காரன் தான். அயல் நாட்டு வேலைக்காரன். ஆனால் ஷேக் ஒரு சௌதி. கொள்ளை பணக்காரன். பெட்ரோல் தரும் பணம். அதில்லாத ஒரு காலத்தில் சௌதிகள பழங்குடி இன மக்களைப் போல வாழ்ந்தவர்கள். அந்த பழங்குடி இனத்தின் வாழ்க்கைக் கூறுகள் இன்னமும் தொடர்ந்து வரும் விந்தையான நாகரீகம் அவர்களது எந்தத் தண்டனையும் சாட்டையடிகள் இத்தனை என்று தான் ஆரம்பிக்கும். கொள்ளையாகக் குவியும். பணம் இன்னும் கொடூரத்தை அதிகரிக்கவே செய்யும். டிரைவர் மலையாளத்தில் தன் கிழட்டு முதலாளியைப் பற்றிக் கேவலமாகவும் கேலியாகவும் காரில் வரும் போது அவ்வப்போது அஸ்வினிக்குச் சொல்லிக்கொண்டு வருவான். அவர்களது மாளிகை வந்ததும் இளைய ஷேக் அஸ்வினி உள்ளே நுழையும் முன் அவளிடமிருந்து பாஸ் போர்டை வாங்கி வைத்துக்கொள்வான். இனி அவன் அனுமதி இன்றி அவள் வீட்டுக்கு வெளியே காலெடுத்து வைக்க முடியாது. அவனுக்குத் தெரியாமல் ஓடிவிடமுடியாது. இனி அவள் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ள ஒரு அடிமை தான்.
அவள் அந்த வீட்டு வேலைகள் எல்லாம், துணி துவைப்பது, வீட்டை மெழுகி சுத்தம் செய்வது, சமையல் செய்து வைப்பது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது இத்யாதி. வீட்டுப் பெண்கள் ஊர் சுற்ற,ப் போய்விடுவார்கள். வீட்டில் இருக்கும் கிழவன் ஷேக்கின் விஷமங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் வேலைக்காரியாக இருக்கிறாள். இந்தோனேஷியாவைச் சேர்ந்தவள். ஒரு நாள் நடு இரவில் அவளைப் படுக்கையில் காணோம். முதலாளி ஷேக்கின் படுக்கை அறையிலிருந்து அவள் வெளிவருவாள். ஒரு நாள் அவளுடைய கதறலைக் கேட்டு விழித்தவள், ஷேக் அவளை பெரும் குரலில் திட்டிக்கொண்டே சாட்டையால் அடிப்பதும் ஷேக்கின் பெண்டாட்டி திட்டிக்கொண்டே தன் கணவனைத் தூண்டிவிடுவதையும் பார்த்து நடுங்கிப் போகிறாள். மறு நாள் ஷேக்கின் குடும்பம் எல்லாம் வெளியே போயிருக்கும் போது ட்ரைவர் அந்த இந்தோனேஷியப் பெண் வெளியே தப்பிப் போவதற்கு வழி சொல்லிக்கொடுக்கிறான். அவள் இனி இங்கிருந்தால் உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் எச்சரிக்கிறான். திரும்பி வந்த ஷேக் அஸ்வினியும் இதற்கு உடந்தையென அவளுக்கும் சாட்டையடி விழுகிறது. ஷேக்கின் வீட்டு ப் பிள்ளைகள் சிறுவர்களாக இல்லை. ராக்ஷஸப் பிறவிகள் தாம். தின்று கொழுத்துக்கிடக்கும் குட்டி பிசாசுகள். அதுகளுக்கும் கத்தியைக்காட்டி அஸ்வினியைச் சீண்டி பயமுறுத்தல் ஒரு சாதாரண விளையாட்டு.
அஸ்வினி ட்ரைவர் உஸ்மானிடம் தான் இனி இங்கிருந்தால் செத்துவிடுவேன், எனக்கு வீடு திரும்ப வேண்டும் என்கிறாள். அந்த உஸ்மான் தான் இந்தோனேஷியப் பெண் தப்ப வழி சொன்னவன். இவளுக்கும் பின்புற ஏணியில் ஏறி உயர காம்பவுண்டு சுவரை தாண்டி வெளியே குதித்து நேராகசென்று வலது புறம் போனால் ஒரு மலையாளி முஸ்லீம் கடையைத் தட்டினால் அவளுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்கிறான். வெளியில் யார் கண்ணிலும் படாமல் பார்த்துக்கொள் என்றும் எச்சரிக்கிறான். உஸ்மானுக்கு இந்தப் பெண்கள் இந்த ராக்ஷஸர்களிடம் அகப்பட்டு சித்ரவதைக்குள்ளாவது பொறுப்பதில்லை தான். ஆனால் அதே உஸ்மான், அஸ்வினிக்கான சம்பளம் 800 ரியாலில் 200 ரியாலைத் தன் கமிஷன் என்று எடுத்துக்கொள்ளவும் செய்வான். சௌதியில் வாழ்க்கை அப்படியான ஒரு இரட்டை நிலையில் தான் எவரையும் வைத்துள்ளது போலும். மனித அபிமானம் முற்றிலும் இழந்தவர்களும் இல்லை. தம் வாழ்க்கைச் சுயநலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு போலும்.
அஸ்வினி பின்புற ஏணியைக் கொண்டு அந்த 10-12 அடி உயர காம்பவுண்ட் சுவரை ஏறி வெளியே குதிக்கிறாள். அதுவே கை கால் எலும்பை அல்லது இடுப்பை முறித்திருக்கும். ஆனால் அவளுக்கு நேர்ந்தது வெளியே கிடந்த கண்ணாடிச் சில்லுகளால் பாதத்தில் காயம். ரத்தம் பெருகும் காயத்தோடு உஸ்மான் சொன்ன கடைக்குப் போனால அது கதவு பூட்டியிருக்கிறது. காயம் பட்டு ரத்தம் ஒழுகும் காலோடு அவள் ஊருக்கு வெளியே பாலை வன ,மணல் வெளியில் நடந்து செல்வதைத் தான் அடுத்து பார்க்கிறோம்.
நாக்கு வரண்டு கால்கள் தளர்ந்து செல்லும் அஸ்வினி பாலைவன ரோடில் செல்லும் வண்டிகளையெல்லாம் நிறுத்த கை நீட்டுகிறாள். நிற்கும் ஒரு ட்ரக் ட்ரைவரிடம் தண்ணீர் வேண்டுமென சைகை காட்ட அவர்கள் தண்ணீர் கொடுத்து பின்னர் ட்ரக்கின் பின்னால் ஏறிக்கொள்ளச் சொல்கிறார்கள்.. அந்த ட்ரக் நிறைய ஒரு மந்தை வெள்ளாடுகள். அந்த ஆட்டு மந்தையின் இடையே ஒரு பயங்கர தாடியும் மீசையுமான ஒரு ஆள்.
ட்ரக் பாதையை விட்டு விலகி பாலைவன மணல்வெளியில் திருப்பப் படுகிறது. அஸ்வினி பயந்து வண்டியை நி9றுத்தச் சொல்லி கூச்சலிடுகிறாள். ட்ரக் ஒரு பாலை வெளியில் தனித்துக் காட்சி தரும் ஒரு பெரிய ஆட்டுக்கிடாய் போன்ற ஒரு கொட்டகை முன் நிற்கிறது. அங்கு ஒரு தோலுரிக்கப்பட்ட ஆடு அணலில் சுடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அஸ்வினிக்கு ஏதோ சாப்பிடக்கொடுத்து மற்றவர்களும் சாப்பிடுகிறார்கள். அவர்களது நடத்தையும் சிரிப்பும் அடுத்து அஸ்வினி அவர்களுக்கிரையாகப் போகிறாள் என்பதை உணர்த்தும். ட்ரக்கிலிருந்து ஆடுகளை இறக்கி கிடையில் கட்டித் திரும்பிய அந்த ஒல்லி தாடிக்காரன் மற்றவர்கள் நமாஸ் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அஸ்வினியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாலை வெளியில் ஓடுகிறான். மற்றவர்களின் கண்மறையும் தூரம் வந்ததும் மலையாளத்தில், “இங்கே இருகாதே ஒடிப்போ, நேரா எங்கேயாவது ஓடி தப்பிப்போ என்று எச்சரித்துவிட்டு திரும்பி தன் இடத்துக்கு வந்தால், அஸ்,”வினியைத் தப்ப விட்டதற்கு அவனுக்கு சாட்டையடி விழுகிறது. அவனைக் கையைக் காலைக் கட்டி வாயில் துணி அடைத்து அவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு அஸ்வினியைத் தேடப் போகிறார்கள்.
இடையில் ஆடுகளுக்கு தீவனம் சப்ளை செய்யும் ஆள் வருகிறான். அவனும் ஒரு மலையாளி முஸ்லீம். ”“ஏய் பஷீர்” என்று சத்தம் போட்டுக்கொண்டு வருகிறவன் வாயடைத்துக் கட்டப்பட்டுக் கிடக்கும் பஷீரை விடுவிக்கிறான். பஷீர் தான் தப்புவித்த பெண்ணைத் தேடிக் காப்பாற்ற வேண்டும் எனறு வந்தவனி வேண்ட அவர்கள் வண்டியெடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். கடைசியில் அவள் எங்கோ மயங்கிக் கிடப்பதைக் கண்டு வண்டியில் அவளை ஏற்றி அனுப்பிவிட்டு பஷீர் தன் கிடைக்குத் திரும் புகிறான். அவனை நாம் படத்தின் கடைசியில் பார்ப்பது ஒரு சவக்கிடங்கில் அடையாளம் தெரியாத இந்திய பிணமாக
இங்கு இன்னுமொரு முக்கியமான நபரைக் குறிப்பிட மறந்து போயிற்று. அந்த நபரும் ஒரு மலயாளை முஸ்லீம் தான். ரஸாக் என்ற பெயர் கொண்ட SOCIAL ACTIVIST. அயல் நாட்டில் திக்கற்றுத் தவிப்பவர்களுக்கு தானே முனைந்து தன்னால் ஆன உதவிகள் செய்பவர். கட்டிட வேலைக்குச்சேர்ந்த தகுந்த ஆவனங்கள் இல்லாத ஒருவர் கட்டிட உச்சியிலிருந்த் விழுந்த செய்தி கேட்டு ரசாக் அங்கு வருகிறார். அங்கு விழுந்த நிலையிலேயே கிடப்பவரை கட்டிடவேலை செய்யும் குத்தகைக்காரர் எந்த உதவியும் செய்ய மறுக்கிறார். ஆவணம் இல்லாதவரை வேலைக்குச் சேர்த்தது தெரியவந்தால் தனக்கும் ஆபத்து என்று. மலையாளியே ஆனாலும் நாட்டுக்காரனுக்கு ஒரு அளவுக்கு மேல் உதவி இக்கட்டிலகப்பட்டுக் கொள்ள தயார் இல்லை. இது அங்கு எல்லோரிடமும் காணும் குணம். உஸ்மான் ஷேக்கின் வீட்டில் அவதிப்படும் பெண்களுக்கு உதவத் தயார். ஆனால் அவர்கள் அகப்பட்டுக்கொண்டால், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கைவிரிப்பது போல. ரஸாக்குக்கு அஸ்வின் என்று ஒரு மலையாளிப் பெண் எங்கோ வேலைக்குச் சேர்ந்து இப்போது இருப்பிடம் தெரியாது அலைந்து கொண்டிருக்கிறாள் என்ற் செய்தி வருகிறது. ரசாக் உஸ்மானிடம் விசாரிக்கும் போது உஸ்மான் தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்லி விடுகிறான். அஸ்வினி வேலை செய்த ஷேக்கிடம் விசாரிக்கச்சென்ற ரஸாக்குக்கு அங்கு மிரட்டலும் வசையுமே கிடைக்கிறது. ரஸாக்குக்கும் குடும்பம் உண்டு அங்கு., குடும்பத்தைக் கவனிக்காது ஊரார் அவதியையெல்லாம் தன் தலையில் சுமத்திக்கொள்வதாக அவனுக்கு வீட்டிலும் எதிர்ப்பு.
அஸ்வினை பஷீர் கேட்டுக்கொண்டதன் பேரில் தன்னுடன் காரில் ஏற்றிய காசிமுக்கு - (இது நான் இப்போது என் சௌகரியத்துக்குக் கொடுத்துள்ள பெயர். படத்தில் என்ன பெயர் என்பது மறந்து விட்டது) - அஸ்வின் ஒரு வேண்டாத வில்லங்கம். போலீசுக்குத் தெரிந்தால் தனக்கும் ஆபத்து என்று உணர அவளை பாதி வழியில் இறக்கி “எங்கேயாவது போய்க்கோ” என்று மிரட்டி இறக்கி விட்டாலும் பின் இரக்கம் தோன்றி, அவளை மீண்டும் காரில் ஏற்றித் தன் அறைக்கு இட்டுச் சென்று அவளுக்கு அங்கு பாது காப்பு தருகிறான். அவளுக்கு சாப்பாடும் புதிதாக துணிகளும் வாங்கித் தருகிறான் . இரவு வந்ததும் அவள அவன் அறியிலிருக்க அவன் வெளியில் தன் காரில் உறங்கிக் கழிக்கிறான். ஆனால் மறுநாள் அஸ்வினியும் காஸிமும் கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையிலும் அவளுக்கு சாட்டையடிகள் விழுகின்றன. பெண் காவலர்களும் அவளிடம் கொடூரமாகத் தான் நடந்து கொள்கிறார்கள்.
ரஸாக் கடைசியில் அவர்களைக் கண்டு பிடித்து சிறைக்குச்சென்று தண்டனை காலம் வரை எப்படியாவது பல்லைக் கடித்துக்கொண்டு கழித்து விட்டால் தான் வந்து காப்பாற்றுவதாகச் சொல்கிறான்.
படத்தின் கடைசிக் காட்சியே அது தான். ரஸாக்கும் அவன் தோழர்களும் இரண்டு கார்களில் வந்திறங்குகிறார்கள் சிறைச் சாலையின் வாசலுக்கு எதிரில். சிறைசாலையின் வெளிக்கதவு திறக்க வெளிப்படுவது அஸ்வினி. அவள் கிட்டத்தில்வந்ததும் ரஸாக் அவளீடம் அவள் கொடுப்பது கேரளாவுக்குத் திரும்ப விமான டிக்கட்டும் பணமும். அத்தோடு கட்டாயம் பாஸ்போர்ட்டும் இருக்க வேண்டும். அது எப்படிக் கிடைத்திருக்கக் கூடும் எனப்து தெரியவில்லை. சொல்லப்படவும் இல்லை. அஸ்வினியின் உயிர் நாடியே, ஷேக் அவள் அங்கு கால் வைத்த தினமே பிடுங்கி தன்னிடம் வைத்துக்கொண்ட அந்த பாஸ்போர்ட் தான். அவளுக்கு அது உயிர் நாடி. ஷேக்குக்கு அது ப்ளாக்மெயில் சாதனம். இதுஅரபு நாடுகளில் வேலைக்குச் செல்லும் எல்லோருக்கும் நேர்வது தான்..
பின்னால் வண்டியில் இருப்பது அவளுக்கு கடைசியாக தஞ்சம் அளித்த காஸிம் என்னும் ட்ரைவர்.அவனுக்கும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது.
இன்னும் ஒரு காட்சி பாக்கி இருக்கிறது. ரஸாக்குக்கு டெலிபோன் வருகிறது. ஒரு அனாதிப் பிணத்தை அடையாளம் காணவேண்டும் என்று. அந்தப் பிணம் ஆடடுக்கிடையின் பொறுப்பிலிருந்த, அஸ்வினியைத் தப்பி ஒடச் சொல்லி இழுத்துச் சென்ற பஷீர். ஆனால் ரஸாக்குக்கு அவனைத் தெரியாது. பஷீர் அனாதைப் பிணமாக சௌதி சவக்கிடங்கில் ஒரு பெட்டியில் அடைபட்டுக் கிடக்கிறான்.
\
இது தான் கடமமா வின் கதை. கதையைச் சொன்னேனே ஒழிய நம் முன் விரியும் திரைப்படத்தின் குணத்தைச் சொல்லவில்லை. இது தான் திரைப்படத்தை எழுத்தில் சொல்லும் போது எழும் போதாமைகள். நிறைய.
இந்தப் போதாமை காட்சியில் காணும் அற்புதக் கலைப் படைப்பை அபத்தமாக உருமாற்றிக் காட்டும் பலம் கொண்டது. சொறகள். காட்சியில் காணும் அபத்தத்தை வேறு ஏதோவாகத் தான் உருமாற்றிக் காட்டும் சாத்தியம் கொண்டவை .ஆனால் ஒரு போதும் அபத்தத்தை கலையாக்கிக் காட்டி விடமுடியாது தான். அந்த அளவு நிம்மதி கொள்ளலாம்.
முதலில் நான் இதில் காணும் குறைகளைச் சொல்லிவிடுகிறேன். அஸ்வினிக்கு அவள் பிறந்த கேரள கிராமத்து வீட்டிலிருந்து. நேர்வதெல்லாம் கடைசி வரை ஒரே சோகக் கதை தான். அவளைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவனுக்கே அவள் மனைவியாக வாய்க்கிறாள். அவனும் செத்துத் தொலைக்கிறான். அவள் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் ஒரு ஏஜெண்ட் மூலம் சௌதி போகிறாள். அங்கு கால் வைத்த நிமிடத்திலிருந்து அவளுக்கு உலகத்தில் உள்ள கொடுமைகள் எல்லாம் நேர்கிறது. எப்படியோ எத்தனை முறை எத்தனை வெவ்வேறு இடங்களில் கொடூர ஆண்களிடம் அகப்பட்டுக்கொண்ட போதிலும் அவளை யாரும் தொடுவதில்லை. அவளோடு அதே அறையில் தங்கியிருக்கும் இந்தோனேஷியப் பெண் தினம் கற்பழிக்கப் படுகிறாள். சாட்டையடி விழுகிறது. ஆனால் அஸ்வினி தமிழ்ப்படக் கதாநாயகி போல இலங்கைச் சிறையில் அனுமன் கண்ட கற்பெனும் பெயரதொன்றாகத் தான் தப்பி விடுகிறாள். கதாநாயகிக்கு தமிழ்த் திரைப்பட மரபு கொடுக்கும் கௌரவத்தை மலையாளத் திரைப்படமும் கொடுத்துள்ளாது போல். இதைத் தவிர சௌதி அரேபியாவில் ஒரு அயல் நாட்டு இளம்பெண்ணுக்கு விதிக்கப்படும் அவதிகள அத்தனையும் அவளுக்கு நேர்கிறது. எந்த அவதியும் கொடுமையும் யாருக்கும் நேராத கற்பனை அல்ல. அவை அங்குள்ள யதார்த்தங்கள். ஆனால் அவை எல்லாம் ஒரு சேர அஸ்வினிக்கு நேர்வது தான் அவளை இந்தப் படத்தை நவீன நல்லதங்காள் கதையாக்கி விடுகிறது. சென்னையிலும் தமிழ் நாட்டிலெங்கிலும் குப்பையும் சாக்கடைத் தண்ணீரும் தெருவில் கொட்டிக்கிடப்பது உண்மைதான். ஆனால் எல்லாவற்றையும் ஒரு இடத்தில் திரட்டிக் குவித்தால் அது உண்மையல்லவே. பலரால் பல இடங்களிலும் அனுபவிக்கப் படும் கொடுமைகளையெல்லாம் ஒரே பெண்ணின் மீது சுமத்தினால் அது கொஞ்சம் அனுபவ யதார்த்தத்தை .கற்பனையாக்கி விடுகிறது.
குழந்தைகள் குழந்தைகள் தான். உலகில் எங்கிலும். அது வயது ஆக ஆகத் தான் சுற்றுச் சூழலிருந்து கற்று என்னவோ ஆகிப் போகின்றன. எவ்வளவு தான் தீய சக்திக்கு உருக்கொடுத்த மாதிரி நம் அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் குழந்தைப் பருவத்தில் கட்டாயம் நம் கொஞ்சுதலுக்கு உரியவர்களாகத் தான் இருந்திருப்பார்கள். இன்று நம் நிலத்தை அபகரித்தவர்களுக்கு அன்று “மிட்டாய் சாப்பிறயாடா கண்ணு” என்று பிரியம் காட்டியிருப்போம். தவழும்போதே அசுரர்களாகவா இருந்திருப்பார்கள்?. அஸ்வினி வேலைக்குச் சேரும் ஷேக் வீட்டின் சிறுவன் கூட ராக்ஷஸப் பிறவியாக கத்தியை எடுத்துக்கொண்டு மிரட்டுகிறான். அரபு நாட்டுக் குழந்தைகளும் சிறு பிராயத்தினரும் எந்த நாட்டினரும் போல மிக அழகாக ஒரு தெரியாத்தனத்துடன் தான் இருப்பார்கள். அவர்களையும் ராக்ஷஸர்களாக்குவானேன்? இதுவும் தமிழ் சினிமாத்தனம் கேரளாவிலும் பரவியிருப்பதைத் தான் சொல்கிறதோ என்னவோ.
கடைசிக் காட்சியில் ரஸாக் சிறைச் சாலை வாசலுக்கு எதிரே இரண்டு கார்களில் வந்து அஸ்வினி வெளியே வந்ததும் தன் கைகளில் தயாராக வைத்திருக்கும் பணம் பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாம் அஸ்வினிக்குக் கொடுத்து அபய வசனம் பேசுவது டிபிகல் தமிழ் சினிமா அபத்தம். பெண் ரசிகர்கள் கண்ணீர் சிந்தலாம். அழக்கூட அழலாம் முடிந்தால்.
இனி இதையெல்லாம் மீறி இங்கு இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு எழுத நேர்ந்த நியாயம் பற்றிச் சொல்ல வேண்டும்.
நேராகக் கதை காட்சிப் படுத்தப் படுகிறது. அஸ்வினி ஒரு இடத்தில் கூட நம்ம சௌகார் ஜானகி போல, கன்ணாம்பா போல அல்லது இன்னும் சமீபத்திய விஜயகுமாரி போல அழுது புலம்பவில்லை. ஒப்பாரியோ வைக்கவில்லை .நீண்ட வசனம் பேசுவதில்லை. அஸ்வினி முழுப் படத்திலும் பேசுவது மொத்தம் ஒரு பத்து பதினைந்து வரிகளுக்கு மேல் போகாது.. அதிகம் அவள் நா தழுதழுக்கிறது அவ்வளவே.. படம் முழுதிலும் கூச்சலே இல்லை. அமைதியாகவே தன் துன்பத்தை எதிர்கொள்கிறாள். எந்த இடத்திலும் யாரும் அனுபவத்தை யதார்த்தத்தை மீறிய வசனம் பேசுவதில்லை. ஒரு கொடூர வாழ்க்கையும் அக்கிரம அதிகாரமும் நிலவும் சூழலில் ஒரு சண்டை ஸ்டண்ட் காட்சிகள் கிடையாது. டான்ஸ் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. நேரான கதை சொல்லலில். வாழ்க்கையின் அனுபவம் நம் முன் விரிகிறது. எல்லாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள். நம் சினிமா மரபின் அத்தியாவசிய ஏதும் ஹீரோக்கள் ஹீரோயின்கள் கிடையாது. நேரான, சின்சியரான கதை நம் முன் காட்சிகளாக விரிகிறது.
சௌதி அரேபியாவில் இதன் ஷூட்டிங் நடந்திருக்க சாத்தியமா? தெரியாது. ஆனால் பாலைவனக் காட்சிகள், வண்டிகளின் நெரிசல் நி9றைந்த தெருக்காட்சிகள் எல்லாம் சௌதி அரேபியாவைத் தான் நம் முன் நிறுத்துகின்றன. இவை வேறு எங்கு சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை.
அராபியர்கள் அரபி பேசுகிறார்கள். மலையாளிகள் மலையாளம் தான் பேசுகிறார்கள். இந்தோனேஷியப் பெண் அவள் மொழியில் பாஷாவில் தான் தனக்குள் ஒரு பாட்டை முணுமுணுக்கிறாள்.
கட்ட பொம்மனில் வரும் மொழிக் கொடுமை இங்கு நடப்பதில்லை. அரபியில் பேசும் பொழுது மலையாளாத்தில் கீழே அதன் மொழிபெயர்ப்பு ஓடும்
கடைசியாக மிக மிக முக்கியமாக இந்தப் படத்தில் சொல்லப்படும் வாழ்க்கையின் உண்மையும் அதைச் சொல்லும் நேர்மையும்.
கேரளாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்தையும் விட மிக அதிகம். அவர்கள் கேரளாவுக்கு அனுப்பும் பணம் எத்தனை பில்லியனில் எனபதை நாடு அறியும். அவர்கள் அனைவரும் அங்கு வேலை செய்ய மட்டுமே உரிமை பெற்றவர்கள் . வாழும் உரிமையோ குடி உரிமையோ பெற்றவர்கள் அல்ல. அன்னியர்கள் தான், எந்த நேரத்திலும் பலவந்தமாக திருப்பி அனுப்ப்ப்படும் நிலையில் உள்ளவர்கள் தான். இங்கு பங்களா தேஷிலிருந்து குடியேறி ராஷன் கார்டும் வேலையும் பெற்று ஓட்டுரிமைக்கு வாதமிடும் கோடிக்கணக்கான பங்களா தேசி முஸ்லீம்கள் போல அல்ல. அவர்களை எதுவும் சொல்ல இந்த எதிர்கால வல்லரசு பயந்து நடுங்குகிறது. அதன் கால் உதறல் உலகம் அறிந்தது,.
இப்படத்தில் வெளிப்படும் சௌதி அரேபியர்களின் சித்திரம் எள்ளளவிலும் அவர்களுக்கு உவப்பானதல்ல.. இங்கிருந்து தம் ஏழ்மையிலிருந்து விடுதலை பெற அங்கு உழைக்கச் செல்லும் நம் மக்கள் அங்கு சந்திப்பது இனவெறியின் கொடுமை. பணத்திமிரின் அரக்கத் தனம், அதிகாரத்தின் கொடூரம். அங்கு செல்பவர்கள் முஸ்லீமகளானாலும் அவர்கள் மதவெறியிலிருந்து தப்பலாமே ஒழிய மற்ற கொடுரங்களுக்கு இரையாகிறவர்கள்தான்.
அவர்கள் அனுப்பும் பல்லாயிரங்கோடிகளின், அல்லது லக்ஷங்கோடிகளின் பின்னிருப்பது அவர்க்ள் எதிர்கொண்ட கொடூரங்கள். இதை இழக்க கேரள அரசும் விரும்பாது. இந்திய அரசும் விரும்பாது. போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் ஒரு பொருட்டல்ல. அதை மூடி மறைக்கும், இந்திய அரசின் கவலை இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீடு பாதிக்கப் படக்கூடாது என்பது தான். 2—ஜி கொள்ளையிலும் இது கொள்ளை என்று தெரிந்தும் அதை மறைக்கச் செய்யும் பிரயத்தனங்கள், இது பூதாகாரமாக வெடித்துவிடக்கூடாதே என்ற கவலை இந்திய அரசுக்கு . காரணம் கொள்ளையடித்த கம்பெனிகள் கடைமூடப்பட்டால் மறுபடியும் அந்நிய முதலீடு வருவது பாதிக்கப்படுமே என்ற கவலை தான். அந்நிய முதலீடுகளுக்காக இந்திய அரசு எந்த இழப்புக்கும் தயார் என்ற கொடுமை. சக மனிதர்களை சக மனிதர்களாகவே கருத விரும்பாத நிலையைக் கண்டும் வாய் மூடிக்கிடக்கும் இந்திய அரசு.
இந்த பின்னணியில் அராபிய நாடுகளுக்கு வேலை செய்யச் செல்லும் நம் மக்கள் எத்தகைய கொடுமைகளை சந்திக்கிறார்கள், எத்தகைய சமூகத்தின் கொடூரங்களை அனுபவித்து இந்தியாவுக்கு பணம் அனுப்புகிறார்கள் என்பதைச் சொல்வதில், இந்தப் படம் எத்தகைய தயக்கத்தையும் காட்டவில்லை
இந்தப் படம் நமக்கும் அரபிய நாடுகளுக்குமிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என்று சொல்லக் கூடும் இந்திய அரசும், மாநில அரசும். அவர்களுக்கு வேண்டியது இவர்கள் அனுப்பும் லக்ஷம் கோடிகள். அல்லது பல ஆயிரம் கோடிகள்.
இது போன்ற ஒரு கதையும் படமும் தமிழிலும் சாத்தியமில்லை. ஒரு சாதியை இனம் காட்டி ஒரு பாத்திரம் உலவ முடியாது. சுஜாதா கதையில் ஒரு கவுண்டரோ நாடாரோ வந்து விட்டால் குமுதம் அலுவலகத்துக்கு எதிரில் கலவரம் வெடிக்கும். அந்தத் தொடர் உடன் நிறுத்தப் படும். ஒதுக்கிடு பற்றி ஒரு படம் வந்தால் அதுக்கு தடை உடனே வரும். பம்பாய் படம் எத்தனை தான் உண்மையோடு உறவற்று கற்பனையே யானாலும் பால் தாக்கரேயிடம் சென்று அனுமதி பெற்றேயாக வேண்டும். இருவர் கதை எத்தனை உண்மைக்கு மாறான திருகல்கள் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த எழுபது எண்பது வருட கால தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்துள்ள பல்லாயிரக் கணக்கான படங்களில் எதாவது ஒன்று ஒன்றே ஒன்று வாழ்க்கையை நேராக எதிர்கொண்டது என்று சொல்ல முடிவதில்லை. பாரதியார்கூட ரயில் பிச்சைக்கரரன் மாதிரி ஓடுகிற ரயில் பாடுபவராகக் காண்பது தான் நமக்கு பிடிக்கிறது. ஒரே அபத்தமான கற்பனை உலகில்தான் நாம் சஞசரித்து வருகிறோம். அதற்குப் பழக்கமாகியுள்ளோம்.
கடம்மா நமக்கு முற்றிலும் மாறான ஒரு சிந்தனை கொண்ட சமூகத்திலிருந்து பிறந்துள்ளது. இதை எதிர்க்கொள்ளக்கூடிய தைரியம் கூட நமக்கு இல்லை என்பது தான் உண்மை.
கடைசியில் ஒரு வார்த்தை. கடம்மாவை ஒரு கலைப் படைப்பு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதில் உண்மை உண்டு. நேர்மை உண்டு. அதைச் சொல்லும் தைரியம் உண்டு. இம்மாதிரியான படங்கள் மலையாளத்தில் அபூர்வம் அல்ல. நிறைய உண்டு. வணிக அபத்தங்களிடையே இவையும் கணிசமான என்ணிக்கையில் உண்டு. இவற்றின் பெருக்கத்தில் தான் கலைப் படைப்புகள் வரும் சூழல் உருவாகும்.
நாம் கடம்மாவுக்கு வெகு தூரம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறோம். கடம்மாவைத் தொடும் நிலைக்கு நாம் தயாராகவே இல்லை..
அத்தியாயம் 34
இப்போது ஒரு ஒடியா மொழிப் படம் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய மூத்த குடிகளைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு ஒடிஸ்ஸா ஈடு சொல்ல முடியாது. நாமதான் எங்கிய்ய்யோயோ….. போய்ட்டோமே. எங்கிய்ய்யோயிருந்து எங்கிய்யோ போய்ட்டோம். என்றோ கடல் விழுங்கிவிட்ட லெமூரியாக் கண்டமும் கூட கல்தோன்றா இத்யாதி தமிழர்கள் வாழ்ந்த நாடு தானாமே. தமிழில் இருந்து தானே உலகத்தின் மற்ற மொழிகள்லாம் பொறந்ததாமே.. தேவநேயப் பாவானரே சொல்லிட்டுப் போயிருக் கார். சரி இவ்வளவு பெருமைகள் தாங்கமுடியாத நம் தமிழ் சினிமாவுக்கு கிட்டத்தட்ட ஆயுசு எண்பதுக்கு மேலே ஆயிடுத்து. நம் ஊர் தொழில் நுட்பத்துக்கு பம்பாய் சினிமா என்ன, ஹாலிவுட் சினிமாவே தலை வணங்குதாமே. கமலஹாஸனுக்கு மேக்கப் போடறதுக்கு மாத்திரம் தான் ஹாலிவுட்டிலேர்ந்து ஆள் வரவேண்டியிருக்கு. (ஏன்னா கமலஹாஸனுக்கு ’வேஷம்’ போடத் தெரியாது. தமிழனுக்கே ’வேஷம்’ போடத் தெரியாது. ஆகையினாலே தான் ஹாலிவுட்லேர்ந்து ஆள் வரவேண்டி யிருக்கு. நம்மூர் சூப்பர் ஸ்டார், கலைஞர் நாமகரணம் சூட்டிய சுப்ரீம் ஸ்டார் முத்தமிழ் வித்தகருக்கு ஆங்கிலத்திலே தான் விருதுக்கு பேர் தோணுது பாருங்க ), லக்ஷிய நடிகர், நடிப்பிசைப் புலவர், காதல் மன்னன், நடிகர் திலகம் இயக்குனர் சிகரம், இசைஞானி, இப்படி நம்ம கிட்ட நூத்துக்கணக்கிலே…. சொல்லி மாளலே நம்ம பெருமைய. 25 கோடி ருபா சமபளம் வாங்கற, ஒரே சமயத்திலே பத்து வேஷம் போடற,. குண்டுப் பொம்பளை வேஷத்திலே யிருந்து குள்ளன் வேஷம் வரைக்கும் போடற 58 வயசிலேயும் தனக்கு ஜோடியா 18 வயசு ஹீரோயினைத் தேடி ஹாலந்துக்கும் தாய்லாந்துக்கும் போயி வலைவீசுற ஹீரோக்கள் நம்மகிட்டே தானே இருக்காங்க. அப்படி இருக்கச் சொல்ல, போயும் போயும் ஒரு ஒடியா படத்தைப் பற்றித் தமிழனுக்குச் சொல்ல வரலாமா?
பொருளாதாரத்தில், கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலம். இலக்கியத்திலும் அப்படி சொல்லும்படியாக ஏதும் இல்லை. ஜெயதேவரை ஒரிஸ்ஸாவில் பிறந்தவர் என்பார்கள். ஆமாம் சுபாஷ் சந்திரபோஸ் கூட கட்டக்கில் பிறந்தவர் தான். ஆகையினால் என்ன?. சிற்பம் ஓவியம், நடனம் (ஒடிஸ்ஸி) என்று பேசுவதாக இருந்தால் அவையெல்லாம் பழைய சமாசாரங்கள் அல்லவா? இன்றைய காலகட்டத்தில் படைப்பு என்று சொல்ல என்ன இருக்கிறது?.. நாம் பேசுவது சினிமா பற்றி. அல்லவா? அதற்கான தொழில் நுடபம், கட்டமைப்பு வசதிகள் பற்றி. அல்லவா? தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை, ஒரிஸ்ஸாவில் ஆதியிலிருந்து இன்று வரை எடுத்த படங்களின் தொகையை விட அதிகம். ஒரிஸ்ஸாவில் ஸ்டுடியோ என்று ஒன்று கூட கிடையாது. படம் எடுக்க கல்கத்தா தான் போயாக வேண்டும். ஒரிஸ்ஸாவின் திரையரங்குகளில் ஒடியாப் படம் திரையிடப்படுவதில்லை. ஏன்? அடுத்த நாள் திரையரங்கின் கதவை மூடிக்கொண்டு எங்காவது போகவேண்டித்தான் நேரும். ஒரிஸ்ஸா திரையரங்குகளில் சல்மான் கான், ஷா ருக் கான், அபிஷேக் பச்சன் படங்கள் ஓடும். இல்லையானால் வங்காளி மொழிப் படங்கள் ஓடும்.
இப்படியாப்பட்ட வரண்ட மண்ணிலிருந்து வரும் படம் ஒன்றையா 70 வருடகாலம் நீண்ட மகத்தான சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தில் பேசுவது? என்று ரஜனி காந் நலம் பெற மொட்டையடித்துக் கொள்பவர்களும் கட்/அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்பவர்களும் கொண்ட பக்த ஜனங்கள் கேட்கலாம். ஆமாம். அதுவே தான் காரணம். நம்மிடம் குவிந்து கிடப்பது 70 – 80 வருடகாலமாக ஒவ்வொரு வருடமும் மேலும் மேலும் சேர்த்து மலையெனக் குவிந்துள்ள குப்பை கூளம் இல்லை ஒரிஸ்ஸாவில். அவர்களது மண் என்னமும் செய்ய சுதந்திரம் தரும் வெற்றிடமாகும்.. நமக்கு அந்த சுதந்திரம் மறுப்பது மலையாகச் சேர்ந்துள்ள குப்பை கூளம். அதை அகற்றாதவரை, அதைப் போற்றிப் புகழ்ந்து அதிலேயே மாய்ந்து கிடக்கும் வரை, நாம் ஏதும் புதிதாகச் சிந்திக்கவோ செய்லாற்றவோ முடியாத நிலை. இந்தச் சுமை ஒரிஸ்ஸாவில் சினிமாத் துறையில் செயல்படுபவர்களுக்கு இல்லை. iஇது மிகச் சாதாரண பொது அறிவு சார்ந்த சமாசாரம். முதலில் நிலத்தைச் சீரபடுத்தாமல் அங்கு ஏதும் பயிரிடமுடியாது. நாம் தலைமுறை தலைமுறையாகக் குப்பை கொட்டிக் குவித்து வந்துள்ள இடத்தில் அந்தக் குப்பையை முதலில் அகற்றிச் சுத்தப் படுத்தாமல் அங்கு வீடு கட்டமுடியாது.
முன்னாலேயே சொல்லியிருக்கிறேன். நாற்பதுகளில் திருவள்ளுவரைப் பற்றியேயான படமானாலும் அதில் சிவபெருமானோ, திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் விஷ்ணுவோ, இந்திர சபையோ நாரதரோ இல்லாது திருவள்ளுவர் கதை சொல்வது சாத்தியமில்லாது இருந்த காலம் உண்டு. ”எவண்டி ஒன்னைப் பெத்தான், பெத்தான்,…….அவன் செத்தான், செத்தான், “ என்று காக்காவலிப்பு வந்தாடும் ஆட்டமோ இல்லை, இன்னமும் அந்த ரக ஏதோ ஒன்றோ இல்லாது நமக்கு எதுவும் சாத்தியமாவதில்லை. காலத்துக்குக் காலம் சம்பந்தமில்லாத குப்பைதான் எது என்பது மாறுகிறதே தவிர குப்பைகள் குவிந்து கொண்டு தான் வருகின்றன. எச்சில் இலையும் காய்ந்த சருகுகளும் நறுக்கிய காய்கறிகளின் தோலும் ஒரு காலத்தில் குப்பையாக இருந்தன. இப்போது ப்ளாஸ்டிக் பைகளும் சானிடரி நாப்கின்களும், “சென்று வருக, வென்று வருக” ”தளபதியே, தந்தையே” சுவரொட்டிகளின் கிழிசல்களும் குப்பைகளாவது முன்னேற்றமாகாது.
ஓடியாவில் படம் எடுக்க வருபவனுக்கு இந்த பிரசினைகள் ஏதும் முன்னிற்பதில்லை. அவன் ஏதோ சொல்ல வருகிறான். அதை மாத்திரம் நேர்மையாக எந்த மசாலாக் கலப்பும் இல்லாமல் சொல்லி விட முடிகிறது. அவன் சொல்ல வருவதும் அவன் மன்ணைச் சார்ந்தது. அவன் இன்று வாழும் வாழ்க்கையை அல்லது நேற்று வாழ்ந்த வாழ்க்கையைச் சார்ந்தது
இந்தத் தொடரை எழதச் சொல்லி அருண் கேட்டபோது, அதாவது கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள் தொலைபேசியில் அழைப்பு வந்த போது அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முந்தி தான் லோக் சபா சானலில் ஒரு சனிக்கிழமை இரவுக் காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்தேன். அதற்கு முந்திய சனிக்கிழமையோ என்னவோ ஒரு மலயாளப் படமும் பார்த்தேன். அதற்குப் பெயர் ”ஓரோரிடத்து பகல்வான் “.என்று நினைப்பு. இந்த இரண்டு படங்களைப் பற்றியும் எழுதலாம், நம் தமிழ்ச் சூழலில் இந்த மாதிரி சாதாரண முயற்சிகள் கூட நினைத்தும் பார்க்க இயலாத பகீரத பிரயத்தனங்களாக ஏன் ஆகிவிட்டன என்று நினத்து எழுத ஆரம்பித்தேன். தமிழ்ச் சூழலின் வரட்சியைச் சொல்ல ஆரம்பித்தது இவ்வளவு நீண்டு விட்டது. குப்பை நிறையத் தான் சேர்ந்து விட்டது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் என்ன வேண்டும்?
iஇரண்டு படங்களையும் பற்றி என் நினைவில் பதிந்துள்ள அளவு தான் சொல்ல முடியும். காட்சிக்குக் காட்சி விரிவாக எழுத வேண்டிய அவசியமும் இல்லை, இப்போதைய என் தேவைக்கு. மலையாளப் படத்தின் பெயராவது நினைவில் இருக்கிறது. ஒடியா படத்தின் பெயர் கூடத் தெரியாது. ஏனெனில் பத்து நிமிடம் தாமதமாகத் தான் பார்க்க ஆரம்பித்தேன். ஒருவாறாக கதை நினைவில் இருக்கிறது. சில காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.
கதை பைராகி பிக்குகளைப் பற்றியது. இவர்கள் சன்னியாசிகள். ஆண்கள். மாத்திரமே. பெண்களுக்கு இதில் இடமில்லை. பிரம்மசாரிகள். ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பார்கள். தெய்வத்திற்கு தங்கள் ஜீவனை அர்ப்பணம் செய்துகொண்டவர்கள். குருவின் ஆணைப்படி எங்கு தேவையோ அங்கு யாகம் செய்வார்கள். மக்கள் சுபிட்க்ஷமாக வாழவேண்டும். மழை பெய்யவேண்டும், பயிர்கள் செழித்து நன்கு விளையவேண்டும் என்னும் ஊர் மக்களுக்கான பிரார்த்தனை யோடு யாகம் செய்வார்கள். பாடுவார்கள். ஊர் ஊராகச் செல்பவர்கள் கிராமத்து ஒரு வீட்டின் முன் நின்று “அலேக் மஹிமா” என்று குரல் கொடுப்பார்கள். சற்று நேரம் நிற்பார்கள். வீட்டிலிருந்து ஏதும் உணவு வருமானால் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையெனில் அடுத்த வீடு. இப்படித் தான் அவர்கள் வாழ்க்கை தினமும் கழிகிறது. வழியில் யாருக்கும் உபதேசம் செய்வது. குருவினால் தடை செய்யப் பட்டுள்ளது. யாரும் தம் விருப்பத்தின் பேரிலேயே பைராகியாகச் சேர்கிறார்கள். விருப்பத்தின் பேரிலேயே தொடர்ந்தும் பைராகியாக இருப்பார்கள். யாரையும் உபதேசித்தோ, வாதம் செய்தோ சன்னியாசி யாக்குவதோ சேர்ந்த பிறகு விருப்பமில்லாமல் போனால் தொடர்ந்து இருக்க வற்புத்துவதோ கூடாது, குருவின் ஆணை அது. . குருவின் ஆணைப்படி இன்னுமொரு கட்டளை. யாரும் பயணம் செய்யும் போது தன் சொந்த ஊர்ப்பக்கம் போகக்கூடாது. விட்டு வந்த பாசம் திரும்ப ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்ற காரணத்தால். ஆனால் திரும்ப விருப்பமிருந்தால் அவர் போய்க்கொள்ளலாம். யாரும் கட்டாயப் படுத்தப் படக் கூடாது. இவையெல்லாம் பைராகி பிக்குகளின் பயணத்தின் போது அவ்வப்போது ஒருவர் மற்றவருடன் வெளிப் படும் பேச்சில் தெரியவருகிறது.
இதில் ஒரு பைராகி எதுவும் பேசுவதில்லை. ஆனால் இக்குழுவோடு சகஜமாக ஒட்டாமல் ஏதோ மனம் அழுந்தி வேதனைப் படுவது அவன் அவ்வப்போது தனித்திருந்து ஏதோ நினைப்பில் ஆழ்ந்து அமைதியாக இருந்து விடுவதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் மூத்தவனாகத் தோன்றும் ஒரு பைராகி தன் சகாக்களிடம் “அவன் தனக்குள் ஏதோ மனம் பேதலித்துத் தவிப்பவனாகத் தோன்றுகிறது. அவனை யாரும் ஏதும் சொல்லவும் வேண்டாம். வற்புறுத்தவும் வேண்டாம். தானாக மனம் தெளிந்தால் நம்மோடு வந்து சேர்ந்து கொள்வான். அவன் பிரசினையை அவனே தான் தீர்த்துக்கொள்ள்வேண்டு. வாருங்கள் நாம் போகலாம்” என்று தன் சகாக்களை அழைத்துக்கொண்டு பயணத்தை மேற்கொள்வான். தனித்து விடப்பட்டவன் பிறகு ஏதோ தனக்குள் நிச்சயித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்வான். மனம் முற்றும் தெளிந்தல்ல. ஆனால் முடிவாக செய்வதறியாது இப்பொதைக்கு என்று செய்து கொண்ட முடிவு. அவர்கள் பயணம் தொடரும். போகும் இடமெல்லாம் பாடிக்கொண்டும் தேவ நாமத்தை ஸ்மரித்துக்கொண்டும் செல்வார்கள்.
யாருடைய சொந்த ஊருக்கும் செல்லக் கூடாது என்று குருவின் ஆக்கினை இருந்த போதும் ஒரு சமயம் அவரகள் எந்த வீட்டின் முன் நின்று “அலேக் மஹிமா” என்று சொல்கிறார்களோ அது மனத் தத்தளிப்பில் தவிப்பவனின் வீடு. அந்த வீட்டிலிருந்து அவன் தாய் பிச்சையிட வருகிறாள். கூட அவளுக்கு உதவியாக அவளைத் தாங்கி வருவது ஒரு இளம் பெண். உணவுப் பாத்திரத்தோடு வந்தவள் வாசலில் நிற்கும் பைராகி
களைப்பார்த்ததும் அவர்களைக் கூர்ந்து பார்க்கத் தோன்றுகிறது. அவள் தன் மகனை அடையாளம் கண்டு கொள்கிறாள். ”அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. “ஏண்டா மகனே என்னை விட்டுப் போய்விட்டாய்?. என்னால் இந்த வயதில் நீ இல்லாமல் இருக்கமுடியலையடா. என்னை இந்த தள்ளாத வயதில். காப்பாற்ற நீ ஒருத்தன் தானேடா இருக்கிறாய்.? என்னை இப்படி நிர்க்கதியாக விட்டுச் செல்ல எப்படிடா மனம் வந்தது?. இப்படி செய்யலாமா? இப்படி கிழத் தாயைத் தவிக்கவிட்டு சன்னியாசம் வாங்கிக்கொள் என்றாடா தாகூர் (கடவுள்) உனக்கு உபதேசித்தார். நான் எப்படி இருக்கிறேன் பார். நீ வந்து விடுடா. நீ இல்லாமல் என்னைக் காப்பாற்றுவார் யாருடா? வந்து விடுடா? என்று கதறுகிறாள்.
மகன் சிலையாக நிற்கிறான். எதுவும் அவனால் பேசமுடிவதில்லை. அவளை விட்டுப் போகவும் முடிவதில்லை. தாயோடு சேரவும் மனம் துணியவில்லை” அப்போது அந்த பைராகிகளில் மூத்தவன் முன் வந்து “தாயே, சன்னியாசம் ஏற்றுக்கொண்டவனை மறுபடியும் கிரஹஸ்தாசிரமத்துக்கு இப்படி அழைப்பது சரியில்லை தாயே. உங்கள் கஷ்டம் தெரிகிறது. யார் தான் உலகில் கஷ்டப்படாதவர்கள். அவன் உங்களிடம் திரும்ப வந்தால் அவன் மனம் இங்கு தரித்திருககாது. அவன் என்ன செய்வதென்று தெரியாது தத்தளித்துக்கொண்டிருக்கிறான், தாயே. அவன் மனம் தெளிந்து ஒரு முடிவு எடுக்கட்டும். திரும்புவதாக முடிவு எடுத்துவிட்டால் அவன் தானே கட்டாயம் உங்களிடம் திரும்பி வருவான். இப்பொது அவனை எதுவும் சொல்லி வற்புறுத்தாதீர்கள்” என்று மிகக் கனிவுடனும் பரிவுடனும், அந்தத் தாயின் துயரம் அறிந்து சமாதானமாகச் சொல்கிறான். அவர்கள் பயணம் தொடர்கிறது
அந்த முதிய வயதுத் தாயும் அவளுக்கு உதவும் பெண்ணும் திரும்ப தனித்து விடப்படுகிறார்கள். அந்தப் பெண் அந்தத் தெருவிலேயே பக்கத்து வீடு ஒன்றில் இருக்கும் பெண். மகனும் கைவிட்டதால் வயது முதிர்ந்த அந்த விதவைக்கு உதவ வந்தவள் அந்தப் பெண். அனேக நேரம் அவள் அந்த வீட்டில் தான் இருப்பாள். அவளுக்கு அந்த வீட்டில் ஏற்பட்டுள்ள பற்றுதல் திக்கற்ற முதியவளுக்கு உதவுவது மட்டுமல்ல. இப்போது பைராகியாகிவிட்ட அந்த வீட்டு இளைஞன் அங்கிருந்த போது அவனிடம் ஏற்பட்ட ஈர்ப்பும் தான் அவளை அந்த வீட்டில் நாளின் பெரும்பகுதியைக் கழிக்கச் செய்தது. ஆனால் பைராகியாவதற்கு முன் இந்தப் பெண் வளைய வளைய வந்த போதிலும், அவன் மனம் அவளிடம் சென்றதில்லை. எதிரே ஏங்கி நிற்பவளை அவன் காணாது போலத்தான் இருந்து வந்திருக்கிறான். அவன் மனம் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் அற்று விட்ட காரணத்தால் தான் அவன் அவளிடம் பாராமுகமாக இருந்ததும் தாயை, வீட்டைத் துறந்து பைராகியான காரணமும்.
பயணத்தின் ஒரு கட்டத்தில் குரு இருக்குமிடம் போய்ச் சேர்கிறார்கள். அங்கு ஒரு பெரும் யாகம் நடக்கிறது. லோக க்ஷேமத்திற்காகவும், கிராமத்து விவசாயிகளின் நன்மைக்காகவும். எப்போதும் போல். ஆனால் இந்த இளம் பைராகியின் விரக்தி தொடர்கிறது.
விதவைத் தாய் மறுபடியும் மகனைப் பிரிந்த சோகத்தை அதிக நாள் தாங்காமல் இறந்து விடுகிறாள். மறுபடியும் அந்த பைராகி வீடு நோக்கி வருகிறான். தாய் இறந்துவிட்டது வீடு வந்ததும் தெரிகிறது. இன்னமும் அவன் மனம் முன்னை விட அதிகம் அலைக்கழிக்கிறது. முன்னரோ தாயைப் பிரிந்த சோகம் அவள் உயிரோடு இருந்த பொழுதை விட அவளை முற்றுமாக இழந்து விட்ட இப்போதைய நிலையில் அதிகம் வாட்டுகிறது. வெறிச்சிட்ட வீட்டிலேயே தாயின் நினைப்பில் உழல்கிறான். அந்தப் பெண் அவனிடம் வாய்விட்டுச் சொல்கிறாள். இனியாவது திரும்பப் போகும் நினைப்பை விட்டு விடவேண்டும். என்று. அவன் காதில் எதுவும் விழுவதில்லை. அவன் அங்கு இருக்கும்போதும் அவன் அங்கு இல்லாதது போல அவன் மனம் எங்கோ சலித்துக் கொண்டிருக்கிறது. அவனுக்காக ஏங்கித் தவம் கிடக்கும் அந்தப் பெண் அருகில் இருக்கும் பிரக்ஞை கூட அவனுக்கு இல்லை. அவனுக்கு இல்லை என்பது அவளுக்கும் தெரிவது தான் பெரும் சோகம்.
இதெல்லாம் தான் எனக்கு நினைவில் இருக்கிறது. அந்தப் பெண் தெருவில் மயக்கம் போட்டுக் கிடக்கும் காட்சி ஒன்று என் நினைவில் பதிந்திருக்கிறது. அவன் தன் வழியில் அது பற்றிய சிந்தனை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாகவும் ஒரு காட்சி மனதில் நிழலாடுகிறது.
இவ்வளவு தான் என் நினைவில் பதிந்திருப்பது,. நான் இதை மிகவும் குறிப்பிடக்கூடிய படமாக மதிக்கிறேன். நான் இதில் சொல்லியிருக்கும் கதை தான் மிக நேராக எளிமையாக காட்சிப்படுத்தப் பட்டுள்ள ஒன்று. இதில் யாரும் அழகாகாக்கப்பட்டவர்கள் கவர்ச்சித் தோற்றம் தரப்பட்டவர்கள். ஸ்டுடியோ செட்டுகள். மேக்கப் கலைஞர்கள், சிறிதளவும் இல்லாத ஒன்று. எல்லாரும் அன்றாடம் ஒரு ஏழ்மைப் பட்ட கிரமத்தில் நடமாடும் சாதாரண மனிதர்கள்.தாம்.
இதை ஒரு ஒடியா தான், ஹிந்தி,ஹாலிவுட், ஸ்டுடியோ, ஸ்டார்கள் என்ற பாதிப்பில்லாத மண்ணைச் சார்ந்த ஒருவர் தான் இப்படி ஒரு கதையை நேராக வேறு எவ்வித வேண்டாத கரைசலும் இல்லாது தன்க்கும் தன் சிந்தனைக்கும், தன் மனதில் ஓடும் காட்சிக்கும் நேர்மையாக, உண்மையாக படமாக்க வேண்டும் என்று முனைந்திருக்க முடியும். தமிழின் கல் தோன்றாக் காலத்து சிகரங்களுக்கும் திலகங்களுக்கும் நாயகர்களுக்கும் கிட்டாத ஒரு உண்மையும் நேர்மையும் இத்தகைய களங்கமடையா மண்ணைச் சார்ந்தவர்களால் தான் சாத்தியம். அது ஒரிஸ்ஸாவில் இருப்பதைப் பார்க்கிறேன். அஸ்ஸாமில், மணிப்பூரில் இருப்பதைப் பார்க்கிறேன். அஸ்ஸாமின் ஜொஹான்ன பருவா என்று ஒரு கலைஞர் நினைவுக்கு வருகிறார். ஒரிஸ்ஸாவின் மஹாப்பாத்திரா என்றும் ஒருவர் நினைவுக்கு வருகிறார்,. இவர்கள் நம்மூர் நாயகர்களுக்கும் சிகரங்களுக்கும், திலகங்களுக்கும் எட்டாத உயரத்தில் இருப்பவர்கள். இங்கு இத்தகைய நேர்மையும் உண்மையுமான கலைஞர்கள் பிற[ப்பதில்லை. 70-80 வருட காலமாக தொடர்ந்து தொத்து நோயும் பெருவியாதியும் பீடித்துள்ள மண்ணில் ஆரோக்கியம் எங்கிருந்து வரும்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.