'இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்' என்பது புத்தகத்தின் தலைப்பு. அதற்கு ஒரு உபதலைப்பும் உண்டு. (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) என்று. இது ஏதோ அந்தக் காலத்தில் சின்ன கடைகளில் காணும் சைக்கிள் ரிப்பேர் ஷாப், பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் விளம்பர பலகைகள் மாதிரி இருந்தாலும், இது தமிழகம் முழுதும் பரவசத்தில் ஆழ்ந்திருக்கும் சினிமா பற்றியது. தமிழ் சினிமாவை கலையென்றல்லவா ஏகோபித்த தமிழ் நாடே மொட்டையடித்து, மண்சோறு தின்று, பாலாபிஷேகம் செய்து முரசறைவித்துக் கூவும்?. ஏழாரைக் கோடிப் பேர் மதிமயங்கிக் கிடக்கும் ஒரு கலையைப் போய், ஏதோ ஈயம் பூசுகிற, சைக்கிள் ட்யூப் பங்க்சரை அடைக்கிற சமாசாரமாகக் கீழிறக்கலாமா? செய்திருக்கிறார் ஒரு தமிழர். பி.எம். மகாதேவன் என்பது அவர் பெயர். புத்தகத்தைப் படித்தால் அவர் ஒரு கலை நயம் படைத்த தமிழ்ப் படம் ஒன்றுக்கு இயக்குனர் ஆகும் தம் தகுதியையும் ஆசையையும் உலகுக்குச் சொல்வது போல இருக்கிறது. தவறில்லை. ஆனால் இது பலனளிக்குமா என்பது தெரியாது. இருந்தாலும் அவர் சொல்லும் விஷயங்கள் சொல்லப்பட வேண்டும். தமிழ்த் திரைத் துறையில் இருப்பவர்கள், உள்ளே நுழைய கதவு திறக்க வெளியே காத்திருப்பவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.
இப்புத்தகம் பொதுவான தமிழ் சினிமாவின் குற்றங்குறைகளைச் சொல்வதல்ல. தமிழ் சினிமாவின் வணிக வெற்றியும் வெகுஜன புகழும் கண்ட ராஜ பாட்டையை விட்டு விலகி, தமக்கென தனி வழி காண முயலும் ஒரு சிலரின் படைப்புக்களை ஆராய்வது.
இத்தகைய பாதை விலகிய முயற்சிகள் என தமிழ் சினிமாவில் காணும் சில படங்களின் பட்டியலிலிருந்து, எட்டு படங்களை மகாதேவன் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளார். நந்தலாலா, தெய்வத் திருமகன், அங்காடித் தெரு, ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், ஆடுகளம், அழகிரிசாமி குதிரை, நான் கடவுள், ஆக, எட்டுப் படங்கள். இன்னும் சில இந்த ரகத்தில் சொல்லப்படுபவை. வெயில், சுப்பிரமணியபுரம், முரண், தென்மேற்குப் பருவக்காற்று, போன்றவை. இவை என் தேர்வுகள் அல்ல. பொதுவில் இப்படியாகப் பேசப்படு[பவை. இருப்பினும் ஆசிரியரின் தேர்வு அவரது சுதந்திரம். மற்றவற்றை ஒதுக்கியதற்கு அவர் காரணங்கள் ஏதும் சொல்லவில்லை.
இவையெல்லாம் தமிழ் சினிமாவின் தயாரிப்பு கலாசாரத்திலிருந்து விலக முயற்சிப்பவை தான். பொதுவாக சினிமாத்துறைக்குள் புகுந்தால் தயக்கமேதுமின்றி தயாரிப்பு கலாச்சாரம் தான் நிலவுகிறது. வெளியே தான் கலை என்ற சொல் புழக்கத்திற்கு வரும். உரத்தும் கூவப்படும்.
அந்த உரத்துக் கூவப்படும் எவற்றுடனும் மகாதேவனுக்கு உடன்பாடில்லை. அதை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் சொல்லிச் செல்கிறார். வெற்றி என்பதும் மக்கள் ரசனை என்பதும் அவசரத்துக்கு கிடைத்ததைத் தின்னு பசியாறத் திரளும் நெடுஞ்சாலை உணவக சமாசாரம் என்கிறார்., அது ஒரு பக்க உண்மை. ஆனாலும் பாபா படம் வந்த சுவடு தெரியாது சுருண்டது ஏன்? பழக்கப்பட்டதற்கு மாறான ஒன்றைக் கொடுத்ததால தானே. ஆக பழக்கபடுத்துதல் என்று ஒன்று இருக்கிறது. இசை, எழுத்து, ஒப்பனை, நடிப்பு ஆகியவற்றில் தமிழ் சமுதாயத்தின் சாதனைகள் பற்றி மிகவாகப் புல்லரித்துப் போகிறார் ஆசிரியர். அப்படி ஒன்றும் இவை இன்றைய கடைத்தர மாக ஆக்கப்பட்டுள்ள மக்கள் ரசனைக்கு மீறியவை அல்ல. திரைக்கதை தான் ஒரு படத்திற்கு அடிப்படை என்கிறார். வாஸ்தவம். ஆனால் ஒப்பனை, இசை, நடிப்பு போன்ற வார்த்தைகள் தமிழ்த் திரையுலகில் பெறும் அர்த்தங்களின் அவலத்திற்கு குறைந்ததல்ல திரைக்கதை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளப்படும் அவலம். திரைக்கதை என்றால் ஒரு இயக்குனரின் மனதில் அது காட்சி ரூபமாக எப்படி விரிகிறது என்பதைப் பொறுத்தே படத்தின் தரம் கலையாக மலரும். அது இன்று வரை உணரப்படவில்லை. மேலும் நாம் வளர்த்துள்ள கலை உணர்வுகளின் குனத்தையும் பொறுத்தது அது. ஒரு கால கட்டத்தில் அகிலன், லக்ஷ்மி, கல்கி போன்றாரின் நாவல்கள் திரைப்படமாயின. அவையும் வழக்கமான தயாரிப்புகளாகத் தான் ஆயின. காட்சி ரூப மாற்றத்துக்கு அவற்றில் ஏதும் இருக்கவில்லை. மகாதேவனே தன் புத்தகத்தில் பல இடங்களில் காட்சி ரூபம், மௌனம் எல்லாம் மிஷ்கின் போன்ற புதிய சினிமாக் காரர்கள் கூட “இவ்வளவு கேணத்தனமாக யாரும் புரிந்துகொண்டிருக்கமுடியாது” என்று கடுமையான வார்த்தைகளில் சாடுகிறார். கடுமையான வார்த்தைகளானாலும் அவை உண்மை. இவ்வளவுக்கும் அவருக்கு தான் காப்பியடித்த கிகுஜிரோ என்னும் ஜப்பானிய படம் பாடம் சொல்லித்தர இருந்திருக்கிறது. இருப்பினும்…….?
கிகுஜிரோ படம் மிஷ்கின் கையாளலில் கூட தமிழ் மக்கள் ரசனைக்கு ஏற்ப - (மக்கள் மாத்திரம் அல்ல, மிஷ்கினின் ரசனைக்கும், புரிதலுக்கும் ஏற்ப என்றும் சொல்ல வேண்டும்) - எவ்வளவு அபத்தமாக்கப்பட்டுள்ளது என்றும் மகாதேவன் விவரிக்கிறார். முதலில், நந்தலாலா மாத்திரமல்ல, தெய்வத் திருமகளும் தான் இருவருமே இதன் காப்பி, அல்லது தழுவல் என்று சொல்லும் கலை நேர்மை அற்றவர்கள் என்றும் சாடுகிறார். இது நமக்கு இப்போ என்ன, என்றுமே இருந்ததில்லை. இவ்விரண்டு மட்டுமல்ல, நான் சொன்ன முரண், ஒரு காப்பி. எங்கேயும் எப்போதும், கூட எனக்கு சந்தேகம் தரும் ஒன்று தான். டைடானிக் தந்த, சரி இன்ஸ்பைரேஷன் என்று சொல்லிக் கொள்ளலாம். கார் விபத்து அன்றாடம் நடக்கும் ஒன்று. அதற்குக் கூட இன்ஸ்பைரேஷன் எங்கேயிருந்து தான் வரவேண்டியிருக்கிறது. இது என் யூகம் தான். இல்லை என்றால் ஒத்துக்கொள்ளவேண்டியது தான்.
தமிழ் மக்கள் ரசனை என்பது மக்கள் அனுபவிக்கும் ரசனை வேறு. தம் பண்பாடு என்னவென்று சொல்லிக்கொள்வது வேறு தான். அதைச் சொல்வதில் மகாதேவனுக்கு தயக்கம் ஏதும் இருப்பதில்லை. நந்தலாலா படத்தில் ஒரு முத்தக் காட்சியைப் பற்றி, “நிஜத்தில் என்ன பஜாரித்தனம் வேணுமின்னாலும் பண்ணுவேன். ஆனால் ஸ்க்ரீன்லே தமிழ்ப் பண்பாடு என்று நான் நினைக்கும் பண்பாடு என்ற ஒன்றைக் காப்பாற்றியே தீருவேன்” என்ற சபதம் கொண்டவராக………..
இப்படி தமிழ்ப் பண்பாடும் தமிழ் ரசனையும் படுத்தும் பாட்டில் இந்தப் படத்தில் வரும் அபத்தங்களைச் சொல்லிச் செல்கிறார். ஒரு காட்சியில் “உன் அம்மா செத்துவிட்டாள் என்று ஒரு குழந்தையிடம் சொல்லப் படுகிறது. சொன்னவனை “மெண்டல்” என்று குழந்தை திட்டுவதல்லாமல், “இதை அப்பவே சொல்லியிருக்கலாமில்ல, அம்மா பச்சைப் புடவை கட்டிக்கிட்டு அங்கே உக்காந்திருக்கான்னு சொல்லியிருக்கலாம்ல.” என்று சொல்கிறதாம். தமிழ் சினிமாவில் தான் ஒரு குழந்தை இப்படி பேசும்.
மகாதேவன் சொல்லும் எல்லாவற்றோடும் அனேகமாக ஒத்துப் போகும் எனக்கு, ஒவ்வொரு படத்தைப் பற்றியும் குறைகளையும் அபத்தங்களையும் சொல்லி, பின் தானே அந்த திரைக்கதையை எப்படி அமைத்திருப்பேன், என்னென்ன மாற்றங்கள் செய்திருப்பேன் என்று ஒவ்வொரு படத்துக்கும் ஒரு புது திரைக்கதை ஒன்றை எழுதுகிறார். இதைத்தான் ரிப்பேர் வேலை என்று போர்டு எழுதித் தொங்கவிட்டிருக்கிறார். இது தான் மிகச் சங்கடமான வேலை
இதை மகாதேவன் முற்றாகத் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அபத்தமோ உன்னதமோ, நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ இல்லை வெறுப்பேற்றுகிறதோ, படைத்து வெளி உலகில் விடப்பட்ட ஒன்றை இப்படித் திருத்தி மாற்றி இருப்பேன் என்பது நரைத்த தலைக்கு டை போடுகிற சமாசாரம். ஜாக்ஸன் பளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட மாதிரி தான். ஒரு இலக்கியத்தை, நாடகத்தை இரு வேறு பார்வையில் படைப்பது வேறு. மகாதேவன் செய்திருப்பது வேறு. ஆனால் இது ஒன்றும் குற்றக்காரியம் அல்ல. சொல்லாது கொள்ளாது காபி அடித்து நந்தலாலாவும் தெய்வத் திருமகனும் .ஏதோ புதுசா பெரிய சாதனை செய்துவிட்டது போல மார்தட்டிக்கொள்ளும் காரியமல்ல. ஆனால் மகாதேவன் தரும் புது திரைக்கதையும் பல இடங்களில் நமக்கு ஏமாற்றமளிக்கிறது. அவருடைய நந்தலாலா எப்படி முடிகிறது என்று சொல்கிறார் மகாதேவன்.
“அன்றிலிருந்து இரவும் பகலும், “என் குழந்தை, என் குழந்தை” என்று அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார். அம்மாவின் முகத்தில் காறி உமிழவேண்டும் என்ற கோபத்துடன் வந்த குழந்தை தன் தாயின் பரிசுத்த அன்பையும் பரிதாபமான நிலையையும் பார்த்ததும் ஸ்தம்பித்துப் போகிறது. தாயைக் கட்டி அணைத்துக் கொள்கிறது.. அம்மாவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறது.
மணிக்கூண்டிலிருந்து தேவ வசனம் ஒலிக்கிறது:
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்துக்கு என் கண்கள் திறந்தைவைகளும் என் செவிகள் கவனிக்கிறவைகளாயு மிருக்கும்..
.இது தான் என் நந்தலாலா ”
என்று முடிக்கிறார் மகாதேவன். இது நம் பெண் பார்வை யாளர்களை தாரைதாரையாகக் கண்ணீர் உகுக்கவைக்கும் கண்ணாம்பா, விஜயகுமாரி மாதிரி படங்களை இன்னும் ஒரு ரௌண்டுக்கு திரும்ப திரையிட்டு மகிழ்வதாகத் தான் படுகிறது.
இப்படிப் பல விஷயங்கள், அவர் ஒவ்வொரு படத்தைப் பற்றிப் பேசும் போதும் மாறிய கோணங்களும், மாறிய அர்த்தங்களும் தெரிவதோடு புதிதாகவும் பலவற்றைச் சேர்க்கிறார். உதாரணமாக அங்காடித்தெரு படத்தில், அதிகம் படிப்பறிவற்ற, சமூகம் ஒதுக்கிய நாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சென்னை வந்து தன்னை தன் உழைப்பாலும் புத்திசாதுர்யத்தாலும் உயர்த்திக் கொண்டதும், இது போன்று தன் நாடார் வகுப்பினருக்கே வாழ்வளிப்பதும், வேலைக்காரர்களும் நம்ம அண்ணாச்சி என்று அவர் எப்படி கேவலமாக நடத்தினாலும் நன்றி உணர்வோடு ஒன்று படுவதும் சாதி அபிமானம் இருபக்கமும் செயல்படுவதை ஒரு படத்தில் சொல்லியும் சொல்லாமலும் சொல்லமுடிகிறது.
அதே சமயம் இது ஒரு காலகட்டத்திய தேயிலைத் தோட்டத்திற்கும் தென் ஆப்பிரிக்கவுக்கும் கூலிகளாகச் சென்ற நம் பழைய அவல அத்தியாயத்தின் தொடர்ச்சியே இந்த அவலமும் என்பதையும், அந்த வேதனை இதில் சொல்லப்படவில்லை என்னும் போது மகாதேவனின் பார்வைக் கூர்மையை பாராட்டவேண்டும். அதே சமயம் அண்ணாச்சி கடையே அங்காடித் தெருவல்ல. அண்ணாச்சி கடையும் படத்தில் வரும் வில்லன்களும் காதல் விளையாட்டுக்களும் நிறைந்ததல்ல என்பதும் உண்மை. அங்காடித் தெருவின் யதார்த்தமும் இதில் இல்லை. அண்ணாச்சி கடையின் யதார்த்தமும் இதில் இல்லை. அண்ணாச்சி கடை வாழ்வும் இதில் இல்லை. இதுவும் ஒரு ஸ்டுடியோ செட் தான். செட்டில் சொல்லிக்கொடுக்கப்பட்ட நடிப்பு தான். சினிமா வுக்குத் தேவையான மசாலாக் காதல் தான். என்பதையும் மகாதேவன் சொல்கிறார். – அங்கு சினேகா மாடலிங் படப்பிடிப்பும் நடப்பது போனஸ்.
அண்ணாச்சியின் கொடுமையைப் பேசும் இந்தத் திரைத் துறை. இதை விட நூறுமடங்கு அதிகக் கொடூமை நிறைந்த , தன் கூடாரத்தைப் பற்றிப் பேசாது
“மாரைப் பிடித்துக் கசக்கினான் என்று ஒரு வசனம் வருகிறது. சினிமாவில் எதையெல்லாம் பிடித்துக் கசக்குவான் என்று சொல்லவே முடியாது. துணை நடிகைகள், க்ரூப் டான்ஸர்களின் வேதனையை வெளியில் சொல்லமுடியாது. கதாநாயகிகள் படும் பாடு கூட பரிதாபத்துக்கு உரியது தான் அந்த தேவதைகளின் கண்ணீரும் யாருக்கும் தெரிவதில்லை. அதைவைத்து நூறு படங்கள் எடுக்கலாம்” (பக்கம்- 44)
என்று சொல்லும் மகாதேவனுக்கா கோடம்பாக்கம் கதவு திறக்கும். அவர் சொல்வது உண்மையேயானாலும்.?
இதிலும் “என் திரைக்கதையை வேறு விதமாகவே எழுதுவேன்” என்று சொல்லித் தன் அங்காடிதெருவை நம் முன் வைக்கிறார். இதிலும் வில்லன்கள் உண்டு, காதல் உண்டு, தற்கொலைகள் உண்டு. அதிக வில்லத்தனம் கிடையாது. அடிக்கடி சில்லரை தொந்திரவுகள். ஒரு கட்டத்தில் கால் நொண்டியாகி மனம் திருந்துவார். கடைசியில் கண்ணீர் மல்கி கண்களைத் துடைத்தவாறே கோடவுனுக்குள் செல்வார்”.
இந்தத் திரைக்கதையும் கஷ்டமாகத் தான் இருக்கிறது.
மகாதேவன் எடுத்துக்கொண்டுள்ள படங்களிலேயே அதிக மாற்றங்களைக் கொண்ட ஆடுகளம் பற்றி எழுதும்போது அப்படத்தின் மையமான சேவல் சண்டை பற்றி மிக விரிவாக அதன் விதிமுறைகள், தர்மங்கள் பற்றி எழுதுகிறார். இவை எனக்கு புதிய செய்தி என்பதோடு, இவையும் படத்தின் பின்புலமாக இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. இதில் வரும் பேட்டைக்காரன் சினிமாக் கதைக்கான பேட்டைக்காரன், பாரம்பரிய சேவல்சண்டைக் கான பேட்டைக்காரன் அல்ல என்கிறார். இருக்கலாம். கதை தரும் பேட்டைக்காரன் எப்படியானாலும் அந்த பேட்டைக்காரனாக நடிக்கும் ஈழத் தமிழ் கவிஞர் ஜெயபாலன் இது வரை நான் எந்த தமிழ் ஸ்டாரிடமும் காணாத ஒரு நடிப்புத் திறனை, ஒரு இயல்பான பேட்டைக் காரனை முன் நிறுத்திவிடுகிறார். எனக்கு ஜெயபாலனைப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் “முதல் மரியாதை படத்தில் நடித்தும் சிவாஜி கணேசனுக்குத் தரப்படாத விருது என ஆடுகளம் பெற்ற விருதைப் பற்றி மகாதேவன் ஒரு குறிப்பை எழுதுகிறார். “அதை சிவாஜி கணேசனே மதிக்கவில்லை. “இந்த பாரதி ராஜாவுக்கு என்னிடம் வேலை வாங்கவே தெரியலை” என்று சிவாஜி கணேசன் வருத்தப்பட்டதாகச் சொல்வார்கள். அவர் பெருமைப் படுவது “களை எடுத்தாயா, நாற்று நட்டாயா, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா” வசனம் எதும் இல்லாத குறையாக இருக்கலாம். ஆனால் ஒரு புதிய திரைப்பட அத்தியாயம் தொடங்க கனவு காணும் மகாதேவன்…..?
இதிலும் வரும் காதல் தமிழ் சினிமாக் காதல் தான். கருப்புக்கு ஒரு வெளுப்பைத் தேடியிருக்கிறார்கள். சம்பிரதாய சிகப்பை மறந்து விட்டு. இதிலும் பாட்டு உண்டு. இரவு நேர தனிமையில், அமைதியில் உல்லாச காதல் நடைபழகுதல் உண்டு. வெள்ளைக்காக சட்டைக்காரியைத் தேடினோம் என்றால், சட்டைக் காரி பால் வெள்ளையாகத் தான் இருக்கிறாள் இங்கு?
கடைசியில் மகாதேவன் சொல்வது “கதாநாயக வழிபாட்டைப் பின்னுக்குத் தள்ளி கதை மாந்தருக்கு முக்கியத்வம் தந்து இந்தப் படத்தை எடுத்திருந்தால்……”என்று தன் ஏக்கத்தைச் சொல்லும் மகாதேவன், தனுஷையும் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள தமிழ்சினிமா துணிந்துள்ளதை நினைத்துப் பார்த்திருக்கலாம்
பாஸ்கர் சக்தி கதை மாற்றாங்கள் பெற்று அழகர் சாமி குதிரை யாகியிருக்கிறது. யதார்த்தத்துக்கும், கிராமீய மண் வாசனைக்கும் திரும்புவதாகச் சொல்லும் போது, அந்த மண் வாசனையில் மந்திரவாதங்களில் நம்பிக்கையும் உண்டென்றாலும், காணாமல் போன குதிரை வாகனம் தான் முயல் வேட்டைக்குப் போன போது தென்பட்ட மேய்ந்து கொண்டிருக்கும் அழகிய வெள்ளைக் குதிரை என்று கிராமத்து ஜனங்கள் நம்புவார்களா என்ன? கோவிலில் இருந்த குதிரை வாகனம் ஊராருக்குத் தெரியாமல் ஆசாரி திருடி தன் வீட்டில் வைத்துக்கொண்டார் என்று கதை மாற்றம் செய்பவருக்கு இன்னம் தமிழ் சினிமா வாசனை போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து ஆசாரிக்கு எவ்வளவு [பெரிய வீடு இருக்கும்?. அதன் வாசல் கதவோ கொல்லைக் கதவோ என்ன மதுரைக் கோபுர வாசல் மாதிரியா இருக்கும்? இதில் அப்புவாக வருபவருக்கு டிபிகல் அழகிய கதாநாயகி ஒருத்தியைக் கொண்டாந்து விடுகிறார் தயாரிப்பாளர். இது யதார்த்தம். கிராம வாழ்க்கை. சரி. அதற்கு நேர் எதிராக அப்புவையும் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். முக்கோணக் காதலுக்கு.
இது கட்டாயம் ரிப்பேர் செய்யப்பட வேண்டிய திரைக்கதை தான். மகாதேவன் பழுது பார்த்த திரைக்கதையின் கடைசிக் காட்சி இப்படி விரிகிறது.
“காதலி உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ஓடி வருகிறாள் அப்படி ஓடி வரும்போது மறக்காமல் தாலியைப் பறித்துக்கொண்டு ஓடி வருகிறாள். அப்புக்குட்டி மேலிருந்தபடியே அவளைத் தூக்கி குதிரை மேலே ஏற்றுகிறான். அங்கு வைத்தே தாலி கட்டுகிறான். குதிரை இருவரையும் சுமந்து கொண்டு மலை உச்சிக்குப் போய் உலகமே கேட்கும் வகையில் கனைக்கிறது. அதைக் கேட்டு வானம் இருண்டு இடி இடித்து மின்னல் வெட்டி மழை பொழிய ஆரம்பிக்கிறது.. மலையில் பெய்யும் மழை மல்லையபுரம் கிராமத்திலும் கொட்டித் தீர்க்கிரது. அது அழகர் ஆற்றில் இறங்கும் நேரமாக இருப்பதால், அழகர் சாமியின் மகிமையே மகிமை என்று ஊர் போற்றுகிறது.? (பக்கம் 90).
தெய்வத் திருமகள் படம் ஒரு காப்பியடித்த விவகாரம் என்பதற்கும் மேலாக அதில் காணும் தமிழ் சினிமாவின் கதாநாயக மோகம், அபத்தமான திருப்பங்கள், கண்ணீர் கொட்டச் செய்தால் அது வெற்றிப் படம் கலைத்தரம் கொண்டது போன்ற சம்பிரதாய தேவைகள் செய்த மாற்றங்களையெல்லாம் மிக விரிவாகவும் மிகச் சரியாகவும் சொல்கிறார் மகாதேவன். அதே போல் வழக்கம் போல், அவர் திரைக்கதையில் வக்கீல் குழந்தையின் கையில் பிரமாணப் புத்தகம் கொடுத்து “நான் சொல்வதெல்லாம் சத்தியம்…. வகையறா பிரமாணம் வாங்க, முயலும் போது அந்தக் குழந்தை, ”முதல்ல வக்கீல் கிட்டயும் நீதிபதி கிட்டயும் வாங்குங்க” என்று சொல்கிறது. அத்தோடு வக்கிலையும் குறுக்கு விசாரணை செய்கிறது. டிபிகல் தமிழ் சினிமா குழந்தை தான்.
வக்கீல் குழந்தையைக் கேட்கிறார் கோர்ட்டில். இது உன் அப்பா\ங்கிறதுக்கு என்ன ஆதாரம்.?
குழந்தை குறுக்கு விசாரணையில் கேள்வி மாற்றி கேள்விகள் பல கேட்கிறது, - ”நீங்கள் அப்பா என்று நம்பியவர் தான் உங்கள் அப்பா என்பதற்கு என்ன ஆதாரம் என்ற பிரச்சினைக்கு அந்தக் கேள்விகள் இட்டுச் செல்கின்றன. ஒரு குழந்தையின் குறுக்கு விசாரணை. வக்கீல் கேட்கும் கேள்வியும் அதே ரகம்.
தமிழ்ப் பற்று என்னும் மதுக்கொப்பரையில் எவவளவு ஆழம் தமிழ் சினிமா ரசிகனை முக்கி முக்கி எடுக்க முடியுமோ அவ்வளவு முக்கி எடுக்கிறது. தமிழனுக்கு வேறென்ன வேண்டும். “ரூம் போட்டு யோசித்துச் செய்த மசாலாக் கலவை. அதுவும் இந்த புத்தகத்துக்கும் மகாதேவனின் விசாரனைக்கும் ரிபேர் வேலைக்கும் உரியதாகிவிட்டது. அவரது விசாரண வழக்கம் போல் .வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தமிழ் சினிமா உலகம் இவரிடம் சினேகம் கொண்டு இயக்குனராகவோ கதை யாசிரியராகவோ அழைக்கும் எனத் தோன்றவில்லை.
நான் கடவுள் கதைப் பின்னலும் அபத்தங்களைக் கொண்டது தான். இன்றைய தமிழ் எழுத்தின் சிகரத் திறமையேயான ஜெயமோகன் இதில் சம்பந்தப்பட்டிருப்பது எங்கே என்றே தெரியவில்லை. அங்காடித் தெரு மாதிரி தான். திரைக் கதை தான் ஒரு தரமான படத்துக்கு ஆதாரம் என்று மகாதேவன் சொன்னதை காட்சி பூர்வமான விரிவு என்று அர்த்தப் படுத்திக்கொண்டால் அதை ஒப்புக்கொண்டால், கடைசியில் தமிழ் மக்கள் ரசனையை வைத்து செய்யும் வியாபாரத்தில் தயாரிப்பாளரும் இயக்குனரும் தான் திரைக்கதையின் லட்சணத்தைத் தீர்மானிப்பவர்கள். அவர்களிடம் ஏழாம் உலகைக் கொடுத்தாலும் சந்தைக்கு வருவது என்னவோவாகத் தான் இருக்கும். மகாதேவன் என்ன ரிப்பேர் செய்து என்ன செய்ய?
எங்கேயும் எப்போதும் நாம் கவனிக்கத் தவறும் ஒரு பிரசினையின் அவலத்தை அதன் பிரம்மாண்டத்தை நம் முன் நிறுத்துவதாகப் பட்டது. ஒரு சிறு தவறு, கவனக் குறைவு எத்தனை மனித ஜீவன்களின் வாழ்க்கையைப் ஒரு நிமிடத்தில் முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. அவர்கள ஜீவனை, ஆசைகளை, கனவுகளை எல்லாம்! பெரிய விஷயம் தான். ஆனால் நம் சினிமாக் காரர் கண்களுக்கு எங்கேயும் பிரயாணம் செய்பவர்கள் எல்லாமே காதல் பயணம் செய்பவர்கள் தான். அவர்களுக்கு வேறு பிரசினை ஏதும் இல்லை. இது நம் சினிமா ஃபார்முலா .டைடானிக் படத்தைப் பார்த்து இந்த படத்தின் ஐடியா தோன்றியதோ என்று கூட நினைத்தேன். நமக்குத் தான் நம் பிரசினைகள் கூட அயல் நாட்டுப் படங்களைக் காப்பி அடிக்கும் போது தானே நினைப்பில் வரும். ஆயினும் இந்தக் காதல் வியாதியை மறந்து விட்டால், நிகழ்ந்த விபத்தைக் கையாண்ட திறனின்மையும் மறந்து விட்டால், மற்ற காட்சிகள், தெருவில் பஸ் நிலையத்தில் அச்சூழலின் இயல்பைப் படம் பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இதற்கெல்லாம் மேற்சென்று, மகாதேவன் விபத்துக்கள் ஏற்படக் காரனம் என்ன? உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல், மெய்ண்டெனன்ஸில் ஊழல், என்று ஆரம்பித்து இதில் பஸ் நிர்வாகம், அரசியல் வாதிகள் என்று அதன் பின்னிருக்கும் ஊழல்களின் ஆதியோடந்த சரித்திரத்தின் நாயகர்கள் அத்தனை பேரையும் கூண்டில் அடைத்து கதைக்குள் நுழைக்க விரும்புகிறார். உண்மைதான் என்றாலும், கதையின் மையம் ஊழல் இல்லை. ஒரு விபத்து எத்தனை ஜீவன்களின் வாழ்க்கையைப் புரட்டி எடுத்து விடுகிறது என்பது தானே. மகாதேவன் சொல்வது வாழ்க்கை உண்மை என்றாலும் கதை அதை மையமாகக் கொண்டதல்ல. டைடானிக் எந்த அரசியல் ஊழலால், உதிரிபாக பேரத்தால் விளைந்தது.?
இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும். இதற்குக் கொடுக்கும் ரூ 120க்கு கோச்சடையான் முதல் ஆட்டம் பார்க்கலாமே என்று அவன் நினைக்கலாம். அவன் உலகைத் திருத்த முடியாது. மகாதேவனே சொல்வது போல, தமிழ் சினிமாத் துறை சார்ந்தவர்கள் அத்தனை பேரும் இந்த ரசிகனின் பலவீனத்தைத் தான் நம்பி வாழ்கிறார்கள்.
மகாதேவன் மணிரத்னம், தலைகீழ் ரசவாதி, பாரதி ராஜா: போலி மீட்பர் என்று இன்னம் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். எல்லாம் சம்பிரதாயம் மீறிய ;போலத் தான் தோன்றுகின்றன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.
இங்கேக் திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்:
(ஆர்டர் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) - B,.R. மகாதேவன்
நிழல் வெளியீடு, 31/48, ராணி அண்ணா நகர், சென்னை 600 078
விலை ரூ 120
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.