ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின் மொழிபெயர்ப்பும். எனக்கு நினைவில் இருப்பது என்னவோ தேவியின் ஒரு பாடலின் வரிகள் மாத்திரமே. “வெயிலுக்கேற்ற நிழலுண்டு, கம்பன் கவியுண்டு” என்று நீளும் அது. பாரசீக வாசனையற்ற தமிழ்க் கவிதையாக. ஆனாலும் மிக இனிமையான கவிதைகள் அவை. தேவியின் ஆளுமையே அவர் கவிதையிலும், இனிமை, மென்மை, சாந்தம். வி. ஆர். எம் செட்டியார் என்ற பெயர் கூட எனக்கு ருபாய்யத் மொழிபெயர்ப்பு என்று பேசும்போது நினைவுக்கு வருகிறது. இந்த நினைப்பு பிரமையாகக் கூட இருக்கலாம். ஏனெனில், வி.ஆர். எம். செட்டியார் என்ற ஒரு கவிஞர் இருந்தார் என்ற பிரஸ்தாபம் கூட இப்போது இல்லை. இப்போது க்ரியா ராமகிருஷ்ணன் முனைப்பில் இன்னொரு மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. முன் வந்துள்ள மொழிபெயர்ப்புகளெல்லாம் ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழி பெயர்ப்பின் வழி வந்தவை. அதில் ஒன்றும் தவறு சொல்வதற்கில்லை. மிகப் பிரபலமாகத் தெரியவந்த நமக்குத் தெரிய வந்த ஒரே மொழிபெயர்ப்பு அது. ஆனால் கிடைக்கும் நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பீட்டர் அவெரி –ஜான் ஹென்ரி ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பை ஆதாரமாகக் கொண்டது ஆசை, தங்க ஜெயராமனின் துணையோடு மொழி பெயர்த்துள்ளது இது. இன்னொரு முக்கியமான விஷயம் நமக்கு ஃபிட்ஜெரால்டு மூலமும் இன்னும் பல தமிழ் மொழிபெயர்ப்புகள் மூலமும் கிடைத்த ருபாய்யத் பாடல்கள் முழுமையானவை அல்ல. அவெரி-ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பில் இருக்கும் 235 பாடல்களில் இப்போது 215 ஆசையின் மொழிபெயர்ப்பில் கிடைத்துள்ளன. ஃபிட்ஜெரால்ட் நமக்குத் தந்ததை விட இரண்டு மடங்குக்கும் மேல். ஆனால் ஐம்பதுகளில் இது படிக்கக் கிடைத்த போது பெரும் மயக்கத்தைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். தேவி அதை மிக நன்றாகவே தமிழ்ப் பாடல்களாக்கி யிருந்தார். எட்வின் அர்னால்டின் லைட் ஆஃப் ஏஷியா வையும் தான். ஆசிய ஜோதி என்று.
இந்த மொழிபெயர்ப்பின் விசேஷம் ஆசைதான் மொழி பெயர்த்தவர் என்ற போதிலும் அவரது மொழிபெயர்ப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப திருத்தம் பெறுவதற்கு தங்க ஜெயராமன், கிரியா ராமகிருஷ்ணன் ஆகியோரும் உதவி யுள்ளனர். இதை மொழிபெயர்க்க ஆசை பாரசீக மொழி கற்றுக்கொண்டார் என்றல்ல. ஆனால் பாரசீக மூலத்தின் எழுத்து வடிவைப் படிக்கக் கற்று, பின் அகராதியின் துணைகொண்டு மூலத்தில் உள்ள சொற்களின் அர்த்தத்தையும் தெரிந்து கொண்டு இம்மொழி பெயர்ப்பைச் செய்துள்ளார்.
மிகப் பிரபலமான ஒரு ருபாய்யத்தை தேவியும் ஃபிட்ஜெரால்டும் ஆசையும் எப்படிக் கையாண்டுள்ளார்கள் என்று பார்க்கலாம்.
வெய்யிற்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றற் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந்தருமிவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
(இது தேவி அவருக்குக் கிடைத்த ஃபிட்ஜெரால்டை ஒட்டியது.
இனி ஃபிட்ஜெரால்ட்
Here with a loaf of bread beneath the bough
A flask of wine, a book of verse and thou
Beside me singing in the wilderness
Wilderness is paradise enow
ஜாடி மதுவும் கவிதை நூலும்
ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,
பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்
சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.
.(இது ஆசை. அவெரி – ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பை ஒட்டியது)
இதை நான் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் ஆளுமையும் மொழிபெயர்ப்பில் கசிவதைக் காட்டத்தான் தந்தேன்.
ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. உமர் பாரசீகத்தில் ஆஃப்கனிஸ்தானை ஒட்டிய குராசான் பகுதியில் பிறந்தவர். 1048- லிருந்து 1131 வரை வாழ்ந்தவர். நமக்குத் தெரிந்த கஜனியின் காலம். பல படையெடுப்புகள் ஆக்கிரமிப்புகளிடையே வாழ்ந்தவர். எது எப்படியானால் என்ன மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன மற்றவற்றைப் பற்றிக் கவலையில்லை என்ற ஒருவாறான களிப்பாட்டத்தில் வாழ்க்கையைக் கடத்த விரும்பியவர் என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர், அவர் காலத்தில் ஆட்சி செய்திருக்கக் கூடிய மதக் கட்டுப்பாடுகளை, நம்பிக்கைகளை கேலியுடன் மீறி வாழ்ந்தவர், ஒரு சூஃபி போல என்று தெரிகிறது. இஸ்லாம் மிகுந்த வீரியத்துடன் பரவி வந்த காலத்தில், படையெடுப்புகளின் மத்தியில் வாழும் நிச்சயமின்மையையும் ஆபத்துக்களையும் மீறி தனக்கென ஒரு வாழ்நெறியைக்கொண்டு அதை ருபாய்யத்துக்களாக வெளிப்படுத்தியதும் பெரிய விஷயங்கள் தான். அவர் காலத்தில் அவர் பலரது எதிர்ப்பையும் எதிர்கொண்டு தான் வாழ்ந்தார் என்பதும் ருபாய்யத் அவ்வளவும் உமருடையது அல்ல என்று சொல்லப்படுவதும் புதிய செய்திகள். எதுவானாலும் இத்தொகுப்பில்காணும் 215 பாடல்களும் ஒரே ஒரு உமரைத் தான் நம் முன் வைக்கின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.
தீவிர முஸ்லீம்களுக்கு சொல்லப்படுவது அவர்களுக்காக ஜன்னத்தில் (சொர்க்கத்தில்) 72 தேவகன்னிகைகள் மெல்லிய மஸ்லின் உடையணிந்து மதுக்குடங்களும் புன்னைகை பூத்த முகங்களுடன் நமக்குச் சுகமளிக்கக் காத்திருப்பார்கள் என. தம் மதத்திற்க்காக உயிரிழக்கும் முஸ்லீமுக்கும் அவர்கள் தியாகத்திற்கு ஜன்னத்தில் கிடைக்கவிருக்கும் பரிசு இது. நமக்கென்னவோ ஆண்டவனின் திருவடிகள் மாத்திரம் தான் உறுதியாகச் சொல்லப்படுகிறது. நிச்சயமாகத் தெரியாது நமக்கு.
உமருக்கும் அவர் மதகுருக்கள் சொல்வதில் நம்பிக்கையில்லை.
உமர் சொல்கிறார்:
தெளிந்த மதுவும் தேனும் ஓடும் சொர்க்கம் உண்டென்றும்
அதில் தேவகன்னியர் இருப்பார்கள் என்றும் உறுதியளிக்கிறார்கள்
மாறாக, மதுவையும் காதலரையும் தேர்ந்துகொள்வோமெனில்
தீங்கென அதில்,?
இறுதியில் கிடைப்பது இவைதானே?
தியாகம் செய்து அங்கே போய் கிடைக்கவிருப்பது இங்கேயே கிடைக்குமானால், மதகுருக்கள் ஏன் தடுக்கவேண்டும்?. என்கிறார் மதகுருக்கள் வேண்டுமானால் இங்கே மறுத்துக்கொண்டு அங்கே போய் பெற்றுக்கொள்ளட்டுமே. உமர். இன்னொரு இடத்தில் மதகுருவைப் பற்றி அவர் சொல்கிறார்:
மதகுருவுக்கு பதில் சொல்கிறாள் வேசி ஒருத்தி,
“ஆமாம் மதகுருவே நீங்கள் சொல்வது போல்தான் நான்,
தோற்றத்தில் தெரிவது போலத்தானா உண்மையில் நீங்கள்?
இன்னொமொரு ருபாய்யத், சாதாரண மக்கள் கேட்பது.
மதத்தின் நீதிமான்களே, உங்களைவிட நன்றாக
உழைக்கிறோம் நாங்கள்,
இவ்வளவு குடிபோதையிலும் மிகவும் நிதானமானவர்கள்
நாங்கள்,
நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது
திராட்சையின் ரத்தத்தை,
உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக
ரத்த வெறி பிடித்தவர்கள்?
இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?
எவ்வளவு காலம் தான் பேசிக்கொண்டிருப்பாய் மசூதியின்
விளக்கையும் அக்னிக்கோயிலின் புகையையும் பற்றி?
எவ்வளவு காலம் தான் பேசிக்கொண்டிருப்பாய் நரகத்தின்
நஷ்டத்தையும் சொர்க்கத்தின் லாபத்தையும் பற்றி?
அக்னிக்கோயில் என்றது இஸ்லாமிய மாக்கப்படுவதன் முன் பாரசீகத்தில் இருந்த பார்ஸிகளின் கோயில் பற்றி. அவர்கள் சூரியனை வழிபடுபவர்கள். இரண்டிலுமே அவருக்கு நம்பிக்கையில்லை.
நான்கு பூதங்களின் ஏழு கோள்களின் உருவாக்கம் நீ,
அந்த நான்கினாலும், இந்த ஏழினாலும் ஓயாத தடுமாற்றத்தில்
இருக்கும் நீ,
மதுவை அருந்து; ஆயிரம் தடவைகளுக்கு மேல
சொல்லிவிட்டென் உன்னிடம்
மீண்டும் வரப்போவதில்லை நீ, ஒருமுறை போனால்
போனது தான்.
நம் வாழ்க்கை விதி கோள்கலாலும் பூதங்களாலும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்ற நம்பிக்கையுடன் வாழ்வின் நிலையாமை பற்றியும் அடிக்கடி பேசுகிறார் உமர். அவர் கவிஞர் என்று அறியப்படுவதற்கு மேலாக, வானவியல், கணிதம், போன்றவற்றில் புகழ்பெற்றவராக இருந்திருக்கிறார்
எல்லா ஜீவன்களும் நான்கு பூதங்களால் ஆனது என்றும் (நமக்கு பூதங்கள் ஐந்து) இவற்றின் சுழற்சியிலும் வாழ்க்கையின் நிலையாமை பற்றியுமான நம்பிக்கைகள் மிக அழகாகவும் வேடிக்கையாகவும், அனேக ருபாய்யத்துகளில் உமர் சொல்லிச் செல்கிறார். அவர் வேடிக்கையில் அடிபடுவது பெரும் சக்கரவர்த்திகளும் கூடத் தான். எல்லோரும் கடைசியில் மண்ணாகிப் போகிறார்கள். அம்மண்ணிலிருந்து தான் செடிகளும் புஷ்பங்களும் துளிர்க்கின்றன. அவை முன்னர் என்னவாக இருந்திருக்கும்?
உனக்கு ஏதாவது அறிவிருந்தால் குயவா, நிறுத்து
எவ்வளவு காலம் தான் அவமதிப்பாய் மனிதர்களின்
களிமண்ணை?
ஃ[பெரிதுவின் விரலையும் கைகோஸ்ரோவின் கையையும்
சக்கரத்தின் மேல் வைத்திருக்கிறாய் –
நீ என்ன செய்துகொண்டிருப்பதாய் நினைப்பு?
(கைகோஸ்ரோவும் ஃபெரிதுவும் புராணீக மன்னர்கள்)
குயவனொருவனைக் கவனித்தேன் அவனது கூடத்தில்
பார்த்தேன் அந்த வித்தகனை, சக்கரத்தின் மிதிகட்டையில்
கால் வைத்து,
மன்னனொருவனின் தலையிலிருந்தும் பிச்சைக்காரனின்
கையிலிருந்தும்
குடுவைக்கு மூடியும் பிடியும் செய்துகொண்டிருந்தான்,
சங்கடம் ஏதுவுமின்றி.
அந்த ஓடையருகில் வளரும் செடிகளெல்லாம்
தேவதைகளின் அதரங்களிலிருந்து அரும்பின நிச்சயமாக;
முரட்டுத்தனமாக மிதித்து விடாதே எந்தச் செடியையும்
அது த்யூலிப் – கன்னத்தவள் மண்ணிலிருந்து துளிர்த்ததுதான்
இரு நூற்று பதினைந்து ருபாயத்துக்கள் முதன் முறையாக தமிழில் நமக்குப் படிக்கக் கிடைத்துள்ளன. படித்ததும் மனதில் எழும் காட்சிகளே ஒரு சௌந்தர்ய உணர்வைத்தைத் தருகின்றன. மூல பார்சீகமொழியில் இவற்றின் சபத ரூபம் எவ்வளவு இனிமையைத் தரும் என்று கற்பனை செல்கிறது. அதுவே மனதுக்கும் இனிமை தருகிறது.
உமர் கய்யாம் ஒரு வித்தியாசமான முஸ்லீம். வித்தியாசமான கவிஞர்.
அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் ருயாய்யத் ஒன்று உண்டு:
விலக்கப்பட்ட மதுவருந்தி போதை கொண்டேனா,
ஆம், அப்படித்தான்!
நான் அசுவிசுவாசியா, புறவினத்தானா அல்லது
உருவ வழிபாட்டானா, ஆம் அப்படித்தான்!
மதத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு,
என்னைப் பற்றி;
நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்.
அவர் வாழ்ந்தது பார்சிகளைத் துரத்திக்கொண்டிருந்த இஸ்லாமாகிக்கொண்டிருந்த பாரசீகத்தில்.. இருப்பினும் அங்கு ஒரு உமர் பிறந்தார். ருபாய்யத்துகளை எழுதி வாழ முடிந்திருக்கிறது. அன்னிய படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும், மாறும் மத நம்பிக்கைகளுக்கும் இரையாகிக்கொண்டிருந்த பாரசீகம் அது.
ஆசையின் இம்மொழிபெயர்ப்பில் ருபாய்யத்துக்கள் மாத்திரம் இல்லை. உமர் கய்யாம் பற்றி, மூல நூல பற்றி, அவர் காலம் நம்பிக்கைகள், பல்துறைத் திறன் பற்றி மாத்திரம் அல்ல, தன்மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள், தனக்கு உதவியவர்கள் எல்லாம் பற்றியும் கூட விரிவாக ஆசை எழுதியுள்ளார்.
கடைசியாக, ருபாய்யத்தின் இனிமை அனுபவம் ஒரு புறம் இருக்க அது புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அழகும் நேர்த்தியும் கூட, முன்னர் வந்த கொண்டலாத்தியைப் போல இப்புத்தகத்தைக் கையில் கொள்ளும் ஒரு அழகும் இன்பமுமான அனுபவம் பற்றிக்கூடச் சொல்ல வேண்டும். அதற்கு நாம் க்ரியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். கணிணி யுகத்தில் இது அபூர்வமாகிக்கொண்டு வரும் அனுபவம். இனி எதை எதையெல்லாம் இழக்கப் போகிறோமோ!
ஓமர் கய்யாம் ருபாய்யத்: (தமிழில் தங்க ஜெயராமன் – ஆசை); க்ரியா வெளியீடு H-18, Flat No. 3 சௌத் அவென்யு, திருவான்மியூர், சென்னை – 17. விலை ரூ 125.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.