நினைவுகளின் சுவட்டில் ... (96)
எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும் எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும். ஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே சொல்லி வருகிறேன். ஆனால் இன்றும் கூட அந்த கோஷங்களைக் கற்காத ஒடிஷாவில் பழ்ம் குடிகள் வசிக்கும் பிராந்தியத்தில் ஒரு முகாமில், பல பிராந்தியக் காரர்களும், பல மொழி பேசுபவர்களும் ஒரு சில வருட பிழைப்பிற்காகக் குழுமியுள்ள அந்த முகாமில், கலை என்றும், இலக்கியம் என்றும் சிந்தனை உலகம் என்றும் என்ன சாத்தியம்? ஆனால் ஆச்சரியப் படும் வகையில் கலை, இலக்கியம், சினிமா பற்றியெல்லாம் எனது ஆரம்பப் பாடங்களைக் கற்றதும், அவற்றில் அன்றைய சிகரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது, பின் என் வாழ்க்கை முழுதுமான தேடலின் பாதையை நிர்ணயித்ததும் அந்த முகாமில் கழித்த ஆறு வருடங்களில் தான்.
ஒரு பஞ்சாபி தன் பிழைப்புக்காக தாற்காலிகமாக எழுப்பிய தார்ப்பாலின் கொட்டகையில் தான் (நினைவில் மறுபடியும் பதித்துக் கொள்ளவும் நான் பேசுவது 1952 – 1956 காலத்தில்) அந்தப் பஞ்சாபிக்கு வரவு செலவு கணக்குப் பார்க்கத் தெரியும். அவன் சினிமா அந்தக் காலத்து வெகு ஜன ஹிந்தி சினிமாவை விட மோசம். அந்த முகாமின் கலவையான மக்கள் கூட்டத்தில் ஒரிய மக்கள் தான் அதிகம். பின் வங்காளிகள், பஞ்சாபிகள், தமிழர், மலையாளிகள் எல்லாம் சேர்த்தால் கொஞ்சம் முன் பின்னாக ஒரே அளவில் ஒரிய மக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பார்கள். ஆனால் சினிமா பார்ப்பது ஒரிய மக்கள் இல்லை. மற்ற மொழிக் காரர்கள் தான்
.
அங்கு தான் அந்தக் கொட்டகையில் தான் மார்லன் ப்ராண்டோ நடித்த On the Water Front பார்த்தேன். Paul Muni நடித்த Good Earth பார்த்தேன். ரஷ்ய இரண்டாம் உலக யுத்தத்தில் ஸ்டாலினின் சாகஸம் நிறைந்த தலைமையை பிரசாரம் செய்த Fall of Berlin பார்த்தேன். Judgement at Nuerenberg பார்த்தேன். நியூ தியேட்டர்ஸின் பி.ஸி. பருவா தேவதாஸாக நடித்த வங்க மொழி தேவதாஸ் படமும். கே.எல். சைகல் தேவதாஸாக நடித்த ஹிந்தி படமும் பார்த்தேன். ஒரு சிறைச்சாலையையே களனாகக்கொண்டு அதில் சிறையிருந்த ஆயுட் கைதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை யையும் சொல்லும் தபன் சின்ஹாவின் லோஹோ கொபொட் (இரும்புக் கிராதி) என்ற படமும் பார்த்தேன். கொலைக் குற்றவாளிகள் தான், ஆனால் அவர்கள் மனமும் அன்பு நிறைந்தது. அவர்கள் மனம் இளகும் தருணங்களும் இருந்தன அவர்கள் நேசித்த உயிர்களும் இருந்தன. அவர்களும் மனித ஜீவன்கள் தான் என்று சொல்லும் படம். அந்த காலத்துக்குச் சற்றுப் பிந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலோ அல்லது 19-ம் நூற்றாண்டின் பின் வருடங்களிலோ வங்காளாத்தில் பிரபலமாக இருந்த போவல் சன்யாசி கதையை தபன் சின்ஹா எடுத்திருந்த ரத்ன தீப் என்ற படமும் பார்த்தேன். அதுவே ரத்னதீபம் என்று தமிழிலும் வந்தது என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். ஜோகன் என்ற மிகச்சிறந்த ஹிந்தி படமும் அங்கு தான் பார்த்தேன். ஸ்ரீ ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸா என்ற வங்காளிப் படம் அவருடைய வாழ்க்கையை ஆதாரித்தது, விவேகானந்தர் அவருடைய சீடரானதும், அவர் காலத்திய கிரீஷ் சந்திர கோஷ் நடத்திய நாடக வாழ்க்கையும் அவர் நாடகத்தைப் பார்க்க பரமஹம்சர வந்ததும், அதில் பரம ஹம்சர் தன் நினைவிழ்ந்து பரவசமானதும் ஒரு பரம புருஷரின் வாழ்க்கையும் அவரது காலத்தையும் வெகு சிரத்தையுடன் சித்தரித்திருந்த படம் அது. கிரிஷ் சந்திர கோஷ் அவரை அழைத்துச் செல்வதும், பரம ஹம்சர் டிக்கட் வாங்கணுமே என்று சொல்வதும், நீங்கள் ஒன்றும் கொடுக்க வேண்டாம், வாருங்கள் போதும், எனபதும் பரமஹம்ஸர், “கீ ரே, கேனோ(ம்) திபோ நா, பூரோ ஏக் டகா திபோ”, என்று அவர் சொல்லும் அந்த வெகுளித்தனம் மிகுந்த, சாது பாவனையில் சொல்லும் அழகும் இன்றும் என் நினைவிலிருந்து அழியவில்லை. இந்த டார்ப்பாலின் கொட்டகையில் தான் சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலி பார்த்தேன். வருடம் அனேகமாக 1955.
இதற்கு முன் என் நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தி கல்கத்தாவுக்கு விடுமுறையில் சென்ற போது பாதேர் பஞ்சலி பார்த்துவிட்டு வந்து ஒருபெரிய கூத்தடித்தான். இந்த மாதிரி ஒரு படம் இந்தியாவில் எந்த மொழியிலும் வந்ததே கிடையாது. இந்த சிகரத்தைத் தொடுவது இனி எந்த மொழியிலும் சாத்தியமில்லை. வங்காளியில் வேண்டுமானால் இந்த சிகரத்தைத் தொட எல்லாரும் முயல்வார்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஆபீஸில் மற்ற நண்பர்கள் எல்லாம், “ஏய் பங்காளி பாபூ, பஸ் கர், பஹூத் ஹோகயா, ஜ்யாதா பக் பக் ந கர்” “போதும் ரொம்பவும் துள்ளாதே,” என்று அவன் வாயடைப்பார்கள். “ நீ பெங்காளி படமே அத்தனையும் பார்த்தது கிடையாது. இனி இருக்கு, பஞ்சாபி, தமிழ், ஹிந்தி எல்லாம். அதுவும் பார்த்தது கிடையாது. பின்னே எப்படி இது வரைக்கும் இந்தியாவிலே இந்த மாதிரி படமே வந்தது கிடையாதுன்னு சொல்றே. இது வரைக்கும் நீ எத்தனை படம் பாத்திருக்கே” ஒரு பங்காளி படம் சரி பாத்துட்டே நல்லாருக்கு. உனக்குப் பிடிச்சுப் போச்சு. அதோட நிறுத்து” என்று சொல்வேன்.
ஆனால் அது புர்லாவில் அந்த தார்ப்பாலின் கொட்டைகைக்கு வந்து பாதேர் பஞ்சலி பார்த்ததும், மிருணாலின் உற்சாகம் எனக்குப் புரிந்தது. அது ஒரு அனுபவம். இதுகாறும் கிட்டியிராத அனுபவம். இது போன்று ஒரு படம் வந்ததில்லை தான். பின் நான் மிருணாலிடம் அவன் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டேன். பின் அவனோடு அங்கு வரும் எல்லா வங்காளிப் படங்களுக்கும், செல்வது வழ்க்கமாயிற்று. அந்த தார்ப்பாலின் கொட்டகை தான் எனக்கு ஒரு பயிற்சித்தளமாக, என் ரசனையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டிய என்னைப் பண்படுத்திய ஒன்றாக இருந்தது.
அதே தார்ப்பாலின் கொட்டகையில் தான் நான் சிவாஜி கணேசனின், அவருக்கும் கதைவசனம் எழுதிய மு.கருணாநிதிக்கும் பெரும் புகழையும் சம்பாத்தியத்தின் உச்சத்தையும் அடையும் பாக்கியத்தைத் தந்த பராசக்தி ஆபாச இரைசலை அங்கேதான் பார்த்தேன். அந்த பஞ்சாபி பிழைப்புக்குத் தான் அந்த சினிமா கொட்டகை நடத்தினான். கலைச் சேவைக்கு அல்ல. ஆனாலும் அங்கு சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலியும் பார்க்க முடிந்தது மார்லன் ப்ராண்டோவின் On the Water Front – ம் பார்க்க முடிந்தது. ஒரு சகாப்த புருஷனாக, நடிப்பின் உச்சமாக, நாம் கொண்டாடும், தமிழ் சினிமாவின் புரட்சி கர திருப்பமாக நாம் கொண்டாடும் பராசக்தியையும் அங்கு நான் பார்த்தேன். 1953 என்று நான் நினைக்கிறேன். வங்காளம் அந்த சமயத்தில் ஒரு சத்யஜித் ரேயைத் தந்து ஒரு புதிய நாம் எண்ணிப் பாராத திருப்பத்தைத் தந்தது. நாமும், “கலை முதலாக தொழில் முறையாவும் காத்து வளர்ப்பது தமிழ் நாடாச்சே. கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாயிற்றே. அங்கே ஒரு சத்யஜி ரே என்றால், இங்கு நாமும், கண்களைப் பிதிக்கிக்கொண்டு, மூஞ்சியைச் சுளுக்கி, அடுக்கு மொழியில் இரைச்சலிடும் ஒரு நடிகர் திலகத்தைத் தரவேண்டாமா? தந்தோம். எது எது சினிமா அல்லவோ, அது அத்தனையையும் அங்கே தெரிந்துகொண்டேன். அதைக்கண்டு வெகுதூரம் ஒதுங்கவும் அந்த தார்ப்பாலின் கொட்டகையும், சிவாஜி கணேசனும், மு. கருணாநிதியும் தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள். ஒரு படம், என்ன வென்று நினைவில் இல்லை, ஜெமினி கணேசனும், சிவாஜி கணேசனும் ஒருத்தருக்கொருத்தர் உரக்க இரைச்சலிட்டுக்கொண்டு வசனம் பேசி சண்டை யிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையில் ஒரு துப்பாக்கி எதிராளியைக் குறி வைத்திருக்கும். ஆனால் இவர்கள் நீண்ட வசனங்கள் பேசி ஒருத்தரை ஒருத்தர் வசை மாறி பொழிந்து கொள்வாரகள். என்ன செய்ய? வசனம் பேச, மூஞ்சியை எத்தனை விதமாக கோணலாக்கிக் கொள்ள முடியுமோ அத்தனை விகாரமாகக் கோணலாக்கிக் கொண்டு… அடக்க வயிற்றுப் போக்கு இருந்தால் தான் மூஞ்சி அத்தனை கோணலாகும். விழிகள் பிதுங்கும். ஜெமினி கணேசனும் உச்சத்தில் இருக்கும் மூன்று நடிகர்களில அவரும் ஒருத்தராயிற்றே,. சிவாஜி கணேசனுக்கு ஈடு கொடுக்க வேண்டாமா? அவரும் துப்பாக்கியைக் குறி வைத்து வீர வசனம் பேசவேண்டாமா? கருணாநிதி காட்டியவழியில் வசனம் அரை மணிநேரம் மூச்சு விடாமல் கத்தினால் தானே அது கலைப் படமாகும். வெற்றிப் படமாகும். அந்தக் கொட்டகை தான் எனக்கு எங்கு ஆபாசமும் இரைச்சலும் நிறைந்திருக்கும் என்றும், எதை ஒதுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தது.
இதற்கு எதிராக புரட்சி செய்கிறேன் என்று மூக்கின் மேல் ஒரு விரலை வைத்து சிந்தனைச் சிற்பி போஸ் கொடுக்கத் தொடங்கிய, அந்த போஸுக்கு உரியவரான ஸ்ரீதருக்கு தமிழ் நாட்டில் தகுதிப் பத்திரம் வழங்கக் காரணமான “கல்யாண பரிசு” படத்தையும் அந்த கொட்டகையில் தான் பார்த்தேன். இதற்குப் பிறகு ஸ்ரீதர் இன்னொரு வகை கலைஞர் ஆகிவிட்டார். தமிழ் நாட்டில் கலை என்றால் கோமாளித்தனமும் உடன் வரவேண்டுமே. ஒரு பத்திரிகையில் ஒரு கேள்வி ஸ்ரீதரிடம். “நீங்கள் சத்யஜித் ரே மாதிரி படமெடுப்பீர்களா?” அதற்கு, மூக்கின் மேல் ஒரு விரல் வைத்த சிந்தனை போஸ் கொண்ட புகைப்படத்தின் பக்கத்தில் அவர் பதில் “ ஏன் முடியாது? ஏன் முடியாது? ஏன் முடியாது?” எதையும் மூன்று முறை சொல்வது தான் தமிழ் சினிமா மரபு. தமிழ் பஜனை சம்பிரதாயம். அப்போது தானே மக்கள் மனதில் பதியும்? இதே மரபில் தான் பாலசந்தர் என்ற ஏதோ ஒரு இமையம், படங்களில் இங்கிலீஷ் தமிழ் இரண்டிலும் வசனம் பேசுவார்கள். “ What I mean is, என்று சொல்லி உடனே, நான் என்ன சொல்றேனா…” என்று இழுக்க வேண்டும். தமிழ் தெரிந்தவர்களுக்க் இங்கிலீஷ் வசனம் புரியாமல் போய் விடக்கூடாது. இங்கிலீஷ் படம் பார்த்து அங்கங்கே சிரித்துவிட்டு வருபவர்களுக்கு தமிழ் புரியாமல் போய்விடக்கூடாது என்று இங்கிஷ் வசன்ம். இதுவும் ஒரு புரட்சி தான். இப்படிக் கழிந்தது என் புர்லா வாசம்
தமிழ் நாட்டில், புர்லா மாதிரி ஏதோ ஒரு தாற்காலிக குடியிருப்பு வேண்டாம். 1950- 1956 என்று அரை நூற்றாண்டு பின்னால் தள்ளிப் போகவும் வேண்டாம். ஒரு பஞ்சாபி தன் தார்ப்பாலின் கொட்டகையில் காட்டிய மாதிரி ஒரு புறநகர் பார்வையாளருக்கு மார்லன் ப்ராண்டோ, பால் முனி, சத்யஜித் ரே, தபன் சின்ஹா, ஸ்ரீதர், சிவாஜிகணேசன் என்று அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும் என்று ஒரு கலவை கிடைக்க இன்றாவது தமிழ் நாட்டில் சாத்தியமா? இந்தக் கேள்வியை நான் நியாயமாக 1950-களின் தமிழ் நாட்டில் என்று கேட்டிருக்க வேண்டும். 1961-.ல் நான் சென்னைக்கு விடுமுறையில் வந்திருந்த போது அதாவது புர்லாவில் பார்த்த 7/8 வருடங்கள் கழித்து, ப்ராட்வேயில் ஒரு சின்ன தியேட்டரில் சத்யஜித் ரே படம் ஓடுவதாக பத்திரிகையில் படித்து போனேன் எனக்கு சென்னை பரிச்சயமில்லை. தி.நகரிலிருந்து ப்ராட்வேக்கு தேடிப் போனேன். மாடியில் ஒரு சின்ன ஹாலில் தான் அந்த தியேட்டர் இருந்தது. அதிகம் போனால் 100 பேர் உட்காரலாம். சுமார் இருபது பேர் படம் பார்க்க வந்திருப்போம். மேலே நான் எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. எது எது நம்மைப் பாதிக்கும், எதில் நம் ரசனை இருக்கிறது என்று ஒரு சமாசாரம் இல்லையா.? 1946=ல் ரத்தன் என்ற ஒரு ஹிந்தி சினிமா வந்தது. மதுரை சித்ரகலா ஸ்டுடியோவில் பார்த்தேன். அதன் பிறகு தமிழ் படங்கள் ஹிந்தி சினிமா மெட்டுக்களை போட்டி போட்டுக்கொண்டு காப்பி அடித்தன. அவாரா என்ற ஹிந்தி படத்தில் ராஜ் கபூர் போட்டிருந்த பிர்ம்மாண்ட செட்டைப் பார்த்த பிறகு, தமிழ் படங்களும் செட் போட ஆரம்பித்தன. இதெல்லாம் உடனே பற்றிக் கொள்ளும். ரசனை என்கிற வஸ்து இருக்கிறதே அது தான் நமக்கு ஒத்துக் கொள்ளாது. ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் ஒரு கலாசார முகம், ரசனை வாசனை இருக்குமே தனித்து. நமக்கு என்று இருக்கும் கலாசாரம் என்னதான் முக்கி முக்கி எடுத்தாலும், அது தனக்கு வேண்டியதைத் தான் எடுத்துக்கொள்ளும்.
1956 – களின் கடைசியில் நான் தில்லி வந்ததும், எனக்கான தேர்வுகளைச் செய்துகொள்ள தில்லி நிறைய வாய்ப்புக்களை அள்ளிக் கொடுத்தது. தில்லியில் சினிமா தியேட்டருக்கு நான் போவது என்பது வெகு அபூர்வமாகவே ஆயிற்று. வந்ததும் இரண்டு பில்ம் சொசைட்டியில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன். மாதம் எட்டு ஒன்பது உலகத்து எல்லா நாடுகளிலிருந்தும் வரும் சிறந்த படங்களை மிகக் குறைந்த செலவில் நான் பார்க்கமுடிந்தது. ஒரு பெர்க்மன் படம் பார்க்க ஐந்தாறு மைல் பின் இரவில் நடந்து போய் பின் நடு இரவில் திரும்ப வேண்டுமென்றால் நடக்கத் தயங்கியதில்லை. பாகவத மேளா பார்க்க வேண்டுமென்றால், மழையில் நனைந்து கொண்டே வயல்களினூடே ஆறுமைல் நடந்து அங்கேயே இரவு ஒரு திண்ணையில் படுத்து பின் காலை எழுந்து நடக்கவும் தயங்கியதில்லை. சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்த நாட்கள் அவை
நினைவுகளின் சுவட்டில் ... (97)
இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாகப் பின்னடைந்திருந்த பிரதேசத்தின் தாற்காலிக முகாமில், சினிமா, இலக்கியம் ஓவியம் போன்ற கலை உலக விகாசங்களின் பரிச்சயத்தை அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து திறந்த ஒரு ஜன்னல் வழியே பெற்று வரும் பாக்கியத்தைப் போல், எனக்கோ நான் வேலை பார்த்து வந்த எலெக்ட்ரிகல் செக்ஷனில் இருந்த மற்ற எவருக்குமோ தோன்றாத சிந்தனைகளை, ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த ஒரு இன்னொரு எங்கள் சகாவுக்கு தோன்றியதை நினைத்தால் இன்றும் கூட வியப்பாகத் தான் இருக்கிறது. எப்படி இந்த மாதிரியெல்லாம் ஒரு கிராமத்தானுக்கு சிந்திக்கத் தோன்றுகிறது!, தோன்றியது மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்தி தன்னையும் மகிழ்வித்துக் கொண்டு எங்களையும் மகிழ்விக்க முடிந்திருக்கிறது! என்றும் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி சிந்திக்கவும் முடியும், அதைச் செயல்படுத்தவும் முடியும் என்பதை அந்த கிராமத்து வளமான கற்பனை கொண்ட மூளை எங்களுக்குக் காட்டிய பிறகும், கல்கத்தாவிலிருந்தும் தில்லியிலிருந்தும் இன்னும் இது போன்ற பெரிய நகர வாழ்க்கையிலிருந்து வந்துள்ள எங்கள் மற்ற சகாக்கள் எவருக்கும் அந்த வழியில் செயல்படத் துணிவில்லை. துணிவில்லை என்று சொல்ல முடியாது. செயல்படத் தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். “அட நீ 12 அடி லாங் ஜம்ப் தாண்டினாயா? எங்களால் முடியாத பெரிய காரியம் தான். வீரச் செயல்தான். சரி. கைதட்டுகிறோம். ஆர்ப்பரிப்போம்”. அவ்வளவே. அது போல் தான்.
கிராமத்திலிருந்து வந்துள்ள அந்த எங்கள் அலுவலக சகாவின் பெயர் மறந்துவிட்டது. அவனுக்கு கல்கத்தாவிலும், தில்லியிலும் உள்ள வெளிநாட்டு தூதரகங்களிலிருந்து நிறையத் தபால்கள் வரும். அந்தந்த நாட்டு விசேஷ தினங்களை ஒட்டி இவன் வாழ்த்து அனுப்புவான். நம் குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போல, அவன் ஒவ்வொரு நாட்டு விசேஷ தினங்களையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டு அந்த தூதரகங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவான். இப்படி எத்தனை இந்தியர்கள், தனி மனிதர்கள் அனுப்புவார்கள்?. ஒரிஸ்ஸாவில் ஏதோ ஒரு புர்லா என்ற இடத்திலிருந்து ஒருவரிடமிருந்து வாழ்த்து வருகிறது என்றால், இந்த மனிதன் முக்கிய புள்ளியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்து அவர்களும் நன்றி தெரிவித்து பதில் தருவார்கள். சாதரண மக்கள் யாரும் இந்த மாதிரி சிரமமெடுத்து வாழ்த்துக்கள் அனுப்ப மாட்டார்கள் என்பது அவர்களது நினைப்பு. இதில் என்ன புண்யமா, புருஷார்த்தமா? ஒரு தம்படி வரும்படியும் கிடையாது. செலவு தான். ஆகவே அதுவும் சரிதான். மேலும், எல்லாம் அவன் வீட்டுக்குத் தான் வரும். அலுவலக முகவரியைத் தந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.
“பார், இன்னிக்கு வந்துள்ள கடிதத்தை” என்று காண்பிப்பான். அது ரஷ்யாவோ, ஹங்கரியோ இல்லை அமெரிக்காவோ ஏதோ ஒரு நாட்டு கல்கத்தாவிலிருக்கும் கன்ஸல் ஜென்ரல் எழுதியிருப்பார்.
“தங்கள் குமாரனுடைய பிறந்த நாள் விழாவுக்கு கருணை கூர்ந்து எங்களை அழைத்ததற்கு நன்றி. தங்கள் அழைப்பு, நம் இரு நாடுகளின் அரசு மட்டுமல்ல, மக்கள் கூட கொண்டுள்ள நட்புணர்வின் அடையாளம் என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் உங்கள் குமாரனின் பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் பிரதிநிதியாக ஒருவரை அனுப்ப பெரிதும் விரும்பினாலும், எதிர்பாரா அவசர வேலைகளின் நிமித்தம் அவ்வாறு செய்ய வியாலாது போவதற்கு மிகவும் வருந்துகிறோம்.
தங்கள் குமாரனின் பிறந்த நாள் சிறப்புற நடைபெற எங்கள் வாழ்த்துக்கள்.
எதிர்காலத்தில் எப்போதும் எங்கள் ஒத்துழைப்பை உறுதி செய்து
தங்கள் உண்மையுள்ள,
………..
என்று ஏதோ சம்பிரதாயமாக வாழ்த்துச் சொல்லி இருக்கும் அந்த கடிதத்தில்.
எதுவாக இருந்தாலும், நம்ம அலுவலக நண்பனுக்கு எல்லா நாட்டு கன்சலேட்களிலிருந்தும் கடிதங்கள் வருகின்றன, அவனை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்பதில் அவனுக்கும் ஒரு சந்தோஷம் எங்களுக்கும் உற்சாகம்.
சாதாரணமாக அன்றாட அலுவலும் தொடர்பும் கொண்டுள்ள குத்தகைக்காரர்கள், கீழ்மட்ட ஊழியர்கள், தில்லியிலிருந்து வரும் கடிதங்கள், பலவற்றுக்கு நாங்கள் பதிலே தருவதில்லை. அந்தந்தக் கோப்பில் அவை சமாதியாகும். அதனால் எந்த உத்பாதமும் நேர்ந்ததில்லை. எங்கள் வேலைக்கோ, அலுவலகத்துக்கோ. அப்படியிருக்க நம்ம பக்கத்து நாற்காலி தாசுக்கு மாத்திரம் யார் யாரெல்லாமோ கடிதம் எழுதுகிறார்கள். இவன் வீட்டு விழாவுக்கு வாழ்த்து அனுப்புகிறார்கள்!
”ஏன்டா தாஸ், அவன் எவனாவது வந்து தொலைஞ்சான்னா என்னடா செய்வே? என்று கேட்டால், அவன் சிரிப்பான். இரண்டு மூன்று வருஷமா இதைச் செய்துகொண்டிருக்கிறேன். இது வரைக்கும் அது நடந்ததில்லை”. ஒரு பதில் கடிதம் போட்டால், அவர்களுக்கு நினைப்பு, பார், இவர்கள் எவ்வளவு அக்கரை கொண்டிருக்கிறார்கள், நம்ம அரசாங்கம் இப்படி நம்மை மதித்து பதில் தருகிறதா?” என்ற எண்ணத்தை பரப்புவதை விட்டு, இங்கு வருகிறார்களாக்கும்” அவர்கள் அளவுக்கு, ஒரு பயிற்றுவிக்கப்பட்ட ராஜ தந்திரி மாதிரி இவனும் இவ்வளவு தந்திர புத்தியோடு வேலை செய்கிறானே, என்று நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போவோம். இதோடு மட்டுமல்லாமல் அந்தந்த நாட்டு பிரசார புத்தகங்கள், துண்டுபிரசுரங்கள் எல்லாம் அவனுக்கு வந்து குவியும்.
எப்படித்தான் இங்கு புர்லாவில் உட்கார்ந்து கொண்டு, கல்கத்தாவில் இருக்கும் அத்தனை ஹைகமிஷன்களுக்கும் கன்சுலேட்டுக்களுக்கும் அவற்றின் முகவரி தெரிந்து எப்படி எழுதுகிறான்? இந்த சாதாரண முதல் அடி எடுத்து வைக்கவே எங்களுக்கு தெரியாது விழித்தோம். கேட்டால் ஒரு நமட்டுச் சிரிப்புத் தான் அவனிடமிருந்து வரும்.
• ஒவ்வொத்தருக்கு எப்படியெல்லாம் மூளை வேலை செய்கிறது, என்னென்னவெல்லாம் யோசித்து தம் நேரத்தை ஒரு உல்லாசத்துடன் கழிக்கிறார்கள் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். தாஸ் (இது அவன் பெயரில்லை. இங்கு ஏதாவது பெயர் கொடுக்க வேண்டுமே) எங்கள் எல்லாரிலும் வித்தியாசமான மனிதன் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கவில்லை.
•
கோவை மாவட்டத்திலோ என்னவோ ஒரு கிராமத்து விவசாயி, பள்ளிக்கூடமே கண்டிராத விவசாயி, வித விதமான சவுக்கு மரங்களை, வித விதமான மற்ற தாவர வகைகளை, பயிர்செய்து இருக்கிறார். எல்லாம் தன் முயற்சியில், யாரிடமும் கேட்டு பயின்று என்றில்லை. அவர் செய்துள்ள காரியங்களை வேளாண்மை முதுகலை பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் கூட செய்திருப்பார்களா சந்தேகம் தான். அவருக்கு ராஷ்டிரபதியின் ஏதோ கிருஷி அவார்டு கூட ஏதோ கிடைத்துள்ளது.
ஐம்பதுகளில் நான் தில்லி போனதும் எனக்குக் கிடைத்த ஒரு நண்பனைப் பற்றிச் சொல்ல வேண்டும். என்னை விட மூன்று நான்கு வயது மூத்தவன், வேலூர்க்காரன். ஏ. ஆர். ராஜாமணி என்று பெயர். இந்த வருஷம் தான் (2012-ல்) சில மாதங்கள் முன், தில்லியில் அவனது 82 அல்லது 83வது வயதில் காலமானான். அதிகம் படிப்பு கிடையாது. யாரோ ஒரு தெரிந்தவர் அழைத்து தில்லி வந்தவன், 1956-ல் எனக்கு அவன் பரிச்சயம் முதலில் ஏற்பட்ட போது பாலம் விமான தளம் கட்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இருந்த கரோல் பாகிலிருந்து ரொம்ப தூரம். ஏதோ பணம் கிடைக்கும். என்ன வேலை என்று கேட்டது கிடையாது. மனம் வருந்தும். வேலை செய்பவர்களை கணக்கு வைத்துக்கொள்வது போன்று ஏதோ. அதிகம் அவனுக்குச் செலவு டீக்கும் சிகரெட்டுக்கும். இதிலேயே ஒருத்தன் வாழ்முடியுமா? அவனால் முடிந்தது. இது எல்லாத்தையும் விட ஆச்சரியம் ஒரு தமிழ் எழுத்தாளனாகத் தான் எங்களுக்கு அவன் முதலில் அறிமுகம் ஆனான். என்ன எழுதினான் என்பதெல்லாம் இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அமுதசுரபி இதழோடும் விக்கிரமன் என்னும் பழம்பெரும் எழுத்தாளரோடும் அவனுக்கு நெருங்கிய பழக்கம். மன்னிக்கவும். விக்கிரமன் ஆசிரியராக இருந்தது அமுதசுரபி தானே? இல்லையென்றால் வேறு எதுவோ அது. 1958லோ என்னவோ அகில இந்திய தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னையில் நடந்தது. அது இரண்டாவது மாநாடு என்று நினைப்பு. அந்த மாநாட்டுக்கு தில்லி எழுத்தாளர் பிரதிநிதியாக சென்றது எங்கள் ஏ.ஆர். ராஜாமணி தான். அந்த சமயத்தில் நானும் என் பழைய தில்லி நண்பர், ஹோட்டலில் அறைத் தோழன், துரைராஜும் விடுமுறையில் சென்னையில் இருந்தோம். தேனாம்பேட்டை மைதானத்தில் நடந்த அந்த மாநாட்டைப் பார்க்கப் போனோம். ஒரு அமர்வு முடிந்திருந்தது. எல்லோரும் வெளியே சிறு சிறு குழுக்களாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். க.நா.சு. தி.ஜானகிராமன் முதலிய பெருந்தலைகளோடு ஏ.ஆர். ராஜாமணியையும் பார்த்தோம். எங்களைப் பார்த்ததும் ஏ. ஆர். ராஜாமணி எங்கள் பக்கம் ஓடி வந்து “இப்போ நான் ரொம்ப பிஸி, சாயந்திரம் சாவகாசமாகப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுப் போனான். மாநாட்டுப் பிரதிநிதி என்று அடையாளம் காட்ட பாட்ஜ் ஒன்று அவன் சட்டையில் குத்தியிருந்தது. ஒரு கட்சி மாநாட்டில் பெரிய தலைவர்களை தூர இருந்து தரிசனம் செய்த திருப்தி கொள்ளும் கட்சித் தொண்டர்கள் போல, நாங்கள் அங்கிருந்து நகர்ந்து ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.
நான் 1956 கடைசியில் தில்லி வாசியானபோது, ராஜாமணி
தில்லித் தமிழரிடையே ஒரு பிரமுகர். தில்லி வந்து
வருஷங்கள் பலவான அந்தஸ்து. அனுபவம். நிரந்தர வேலை ஏதும் கிடையாது. முதலில் வேலை கிடைத்த பாலம் விமான தளத்தைத் தவிர வேறு எங்கும் வேலை செய்ததாக செய்தி இல்லை. எப்போதாவது ஆல் இந்தியா ரேடியோவில் எதையாவது மொழிபெயர்க்கச் சொல்லி அழைப்பு வரும். நிரந்தர வருமானம் இல்லாததால் நிலையான இருப்பிடமும் கிடையாது. நிலையான சாப்பாடும் கிடையாது. அவ்வப்போது நண்பர்கள் கொடுக்கும் காசு டீக்கும் சிகரெட்டுக்குமே பத்தாது.
ஆனால், விக்கிரமனுக்கு வேண்டிய ஆள். தில்லியில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களையும், தமிழ்ப் பிரமுகர்களையும் தெரியும். அனேகமாக எழுத்தாளர் சந்திப்புகளில், கூட்டங்களில் ஏ.ஆர். ராஜாமணியைப் பார்க்கலாம். க.நா.சு தில்லிக்கு முதலில் வந்திறங்கியதும் அவர் சந்தித்த முதல் தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி தான். என்னை க.நா.சு இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியதும் ராஜாமணி தான்.
ராஜாமணிக்கு இருக்க இடம் இல்லாத போது, நானும் கரோல் பாகில் இருந்த போது என் அறைக்கு ராஜாமணியை அழைத்து வந்தேன். ஒரு வருடமோ என்னவோ இருந்திருப்பான், எங்கள் மூன்று பேரோடு நாலாவதாக. நான் இரண்டரை வருடம் ஜம்மு கஷ்மீருக்கு மாற்றலாகி திரும்பி வந்த போது எல்லோரும் இடம் மாறியிருந்தனர். ராஜாமணி அந்த அறையை (அது பர்சாதி எனச் சொல்லப்படும் மொட்டை மாடியின் அறை) ஒட்டிய மாடிப்படியின் அருகில் வாசம். அந்த வீட்டுச் சொந்தக் காரர் அருள் கூர்ந்து வாடகையின்றி இருக்க அனுமதித்த இடம். நாலடி அகல நீளம் கொண்ட சதுரம். அதில் தான் சுருட்டி வைக்கப் பட்டிருந்த படுக்கை, அடுக்கிய புத்தகங்கள் எல்லாம். நான் இருந்த அறையில் இப்போது பெண்கள் கூட்டம் ஒன்று காணப்பட்டது.
ஆச்சரியாமன விஷயம் அந்த இடத்தில் ராஜாமணிக்கு இரானிய தூதரகத்திலிருந்து கட்டுக்கட்டான புத்தகங்கள், ஆர்ட் பேப்பரில் நிறைய புகைப்படங்கள் ஓவியங்கள், வரலாற்று பதிவுகள் அடங்கிய நிறைய புத்தகங்கள். இராணிய அரசர் ரேஸா பஹ்லவியின் புகைப்படம் கொண்ட ஒரு மிக ஆடம்பரமாக அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ். இராணிய தூதரகத்திலிருந்து. அப்போது இரானிய ஷா, ரேஸா பஹ்லவி தன் மூதாதையர் என்று உரிமை கொண்டாடும், சைரஸின் 2500 வது நினைவு விழாவோ என்னவோ அது மிக ஆரம்பரமாக, பெரும் பொருட் செலவில் கொண்டாடினார். அதற்கான அழைப்பிதழ், புத்தகங்கள், எல்லாம் அங்கு சில அடுக்கப் பட்டும் சில அங்குமிங்கும் சிதறிக்கிடந்தும் இருந்தன. சைரஸ், இரானிய சரித்திரத்தில் மிகப் பெரும் சக்கரவர்த்தி. இரான் நாட்டையே உருவாக்கியவர் கி.மு ஆறாம் நூற்றாண்டில் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். தன் மூதாதையராயிற்றே. மிகப் பெரும் அளவில் பிருமாண்ட விழாவாக ஷா கொண்டாடினார் அப்போது.
என்ன ராஜாமணி, ஷா வே கூப்பிட்டிருக்கார். தெஹ்ரன் பயணம் எப்போது என்று கேட்டேன். ராஜாமணியின் உதடுகளில் ஒரு வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.