தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.. உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே அறிந்து கொள்ளும் ஆர்வமோ, துடிப்போ இல்லாது, தன்னுள் சுருங்கிக் கொள்ளும் சௌபாக்கிய மன நிலையை வரமாகப் பெற்றவர்கள். இந்த அன்னிய மண்ணின் மக்களின் வாழ்க்கை என்ன, அவர்கள் கொண்டுள்ள மதிப்புகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவுத் தாகம் வெளிநாட்டில் வாழும் தமிழ்ர்களிடையே கிடையாது. அவர்களது மனமும் ஈடுபாடும் தமிழ் நாட்டின் எல்லையோடேயே சுருங்கி வேலிகட்டி முடக்கப்பட்டவை. அன்னிய நாட்டில் சூழலில் வாழும் நிர்ப்பந்தங்கள் கூட அவர்கள் மனவெளியை பாதிப்பதில்லை விரிவு படுத்துவதில்லை. ஏனெனில், அவர்கள் நினைப்பில், தமிழ் நாடு, இலக்கியம்,, கலாச்சாரம், கலைகள், அறிவு விகாசம், என்று எதைத் தொட்டாலும் அதில் தமிழன் லிப்னிட்ஸின் Best of all possible-ஐச் சாதித்துவிட்டவன். Best of all possible – உலகில் வாழ்பவன். அதாவது தமிழன். தமிழ் நாட்டில் பிறந்தவனாயிற்றே அவன். அப்படியிருக்க இந்த அன்னிய நாட்டில் அன்னிய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள என்ன இருக்க சாத்தியம்? அவர்களும் இவன் சாதனையை மீறி எதுவும் செய்திருக்கப் போவதில்லை. செய்துவிடப்போவதில்லை. ஆக, வேறு எதுவும் தெரிந்து கொள்ளும் தேவையும் இல்லை.
உடன் பிறந்து வாழும் இத்தகைய தன்னைச் சுற்றியே உலகம் சுழல்வதான பிரமை தான், தமிழில் பிரயாண இலக்கியமே அரிதாகிக் கிடப்பதன் காரணமும். சமீப காலம் வரை, அ. கருப்பன் செட்டியாரின் பயண எழுத்துக்கள் தான் சொல்லக் கிடைத்த தனித்த ஒன்று. அதன் காரணமாகவே அவர் ‘உலகம் சுற்றும் தமிழன்” என்றே அறியப்பட்டார். அவரது குந்தர் மாதிரியான பிரயாண எழுத்துக்களில் ஒரு முன்னோடி என்றே சொல்ல வேண்டும். அதாவது, தமிழ் பின்னணியில் ஒரு முன்னோடியின் எழுத்துக்கள் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு முன்னோடி. ஒரு பத்திரிகையாளரின் பார்வையும் சுவாரஸ்யமான எழுத்தும் அவரது. எதாக இருந்தாலும் நாற்பதுக்களில் ஒரு பயண எழுத்து எவ்வளவு சாத்தியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உழப்படாத நிலம் அது.
பின்னர் ஐம்பதுகளின் பின் பாதியிலும் அறுபதுகளின் முன் பாதியிலும் இன்னும் சிலர் அ.கருப்பன் செட்டியாரின் தடத்தைத் தொடர்ந்தாலும் அவர்கள் அ .கருப்பன் செட்டியார் சென்ற தூரம் கூடச் செல்லவில்லை என்று தான் சொல்லவேண்டும். சோமு என்று பிரபலமாக அறியப்பட்ட மீ. ப .சோமு தன் அக்கரைச் சீமையில் என்ற புத்தகத்தில் தன் லண்டன் வாசத்தையும் இங்கிலாந்து அனுபவங்களையும் பற்றி எழுதும் போது லண்டனில் மசால் தோசை கிடைக்கும் மகாத்மியத்தை நினைத்து பரவசம் மேலிட்டு மாய்ந்து போகிறார்.. லண்டனில் ஜி. யு. போப்பின் சமாதியைக் காணச் சென்றவருக்கு ஆள, அதிகாரம் செய்ய வந்தவரையும் தன் அடிமையாக்கிவிட்ட தமிழின் தமிழ் இலக்கியத்தின் மகோன்னத சிறப்பையும் சாதனைகளையும் புகழ்ந்து போற்ற அது இன்னம் ஒரு வாய்ப்பாகிப் விடுகிறது. மீ.ப. சோமசுந்தரம், ஒரு கவிஞர், தமிழ் அறிஞர், நாவலாசிரியர், விமர்சகர், பத்திரிகையாசிரியர் ஆக இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட பன்முக கலை ஆளுமை படைத்தவரின் கலை உணர்வை இங்கிலாந்து எவ்வகையாலும் பாதித்ததா என்பதற்கான சான்று ஏதும் இந்தப் புத்தகத்தில் கிடையாது இத்தகைய ஒரு புத்தகத்திற்கு தான் ஆண்டு தோறும் வழங்கும் பரிசை சாஹித்ய அகாடமி வழங்காமல் இருக்க முடியுமா? வழங்கியது. தன் மரபை மீண்டும் ஸ்தாபித்துக்கொண்டது.
இத்தகைய ஒரு வரலாறு பின்னிருக்க, புக் வெஞ்சர் என்னும் புதிதாகத் தொடங்கிய நிறுவனம் பயணக் கட்டுரைகளையே கொண்ட ஒரு தொகுப்பை வெளியிட முன் வந்தது மிகுந்த தைரியம் வேண்டும் செயல் தான். வெளி நாடுகளில் எப்போதாவது கொஞ்ச காலம் வசித்தவர்களை யெல்லாம் அணுகி அவர்களது அனுபவங்களைப் பற்றி எழதச் சொல்லி உருவானது தான் .பிரயாண இலக்கியம் என்னும் அவர்களது இந்த வெளியீடு. பத்திரிகைகளும் சரி, புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் சரி கதைகள், தொடர்கதைகளில் தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பயண எழுத்துக்களில் அல்ல என்ற காரணத்தால் புக் வெஞ்சர் நிறுவனம் தொகுத்து வெளியிட தயாராக ஏதும் பய்ண கட்டுரைகள் எழுதப்பட்டிருக்க வில்லை. இதற்கு விதி விலக்காக ஒன்று உள்ளது. அது ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்த மணியன் தன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிய இதயம் பேசுகிறது.
புக் வெஞ்சர் இது காறும் ஒரு புத்தக வெளியீட்டு ஸ்தாபனம் கால் பதிக்காத தடங்களில் எல்லாம் புதிய தடம் பதிக்க வேண்டும் என்ற ஒரு சீரிய நோக்கத்துடன் செயல்பட முனைந்துள்ளது எவ்வித தயக்கமும் இன்றி பாராட்டப்பட வேண்டிய செயல். புத்தகத்தில் உள்ள பயண அனுபவ பதிவுகள் எல்லாம் ஒரு தரத்தில் அமையாது போனது ஒன்றும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை. இதில் மிகச் சிறப்பாக எழுதியுள்ளவர்கள் எல்லாம் புதியவர்கள். எழுத்தாளர்களாக பிரபலமோ புகழோ பெறாதவர்கள். உதாரணமாக, ஜெர்மனியின் தன் அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ள ராதா ஸ்ரீனிவாசன். அடுத்து தென்முகி விஸ்வநாதன் தான் வாழ்ந்த கனடா பற்றியும் கனடிய மக்கள் பற்றியும் எழுதியுள்ள அனுபவங்கள் மிக நுட்பமும் ஆழமுமான பார்வை. கொண்டது. உண்மையில் சொல்லப் போனால் இந்த தொகுப்பிலேயே சிறந்த கட்டுரை யென்று தென்முகி விஸ்வநாதன் எழுதியதைத் தான் சொல்ல வேண்டும். ஜப்பான் அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ள தி. ஜானகிராமனோடு சேர்த்துப் பேசவேண்டும் இவரை.. இதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படிக்க வேண்டும். காரணம், பயணக் குறிப்புகள் என்பதை மீறி இலக்கிய பரிமாணங்களும் பெறும் எழுத்து இது. தன் இதாலி அனுபவங்களைப் பற்றி, எஸ். ஒய்,. கிருஷ்ணஸாமி, எளிதாகவும் தகவல்கள் நிறைய உள்ளடக்கியும் எழுதியுள்ளார். கு. அழகிரிசாமி மலேசியாவில் தான் ருசித்த வித விதமான பழங்களைப் பற்றியும் இன்றும் அவற்றை நினைத்து தான் ஏங்குவதையும் பற்றி எழுதியிருப்பது தான் மலேசியா சம்பந்தப்பட்டது. மற்றபடி அங்கு வாழும் தமிழர்களைப் பற்றித் தான் அதிகம் எழுதியிருக்கிறார். அங்கு வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் அக்கறை இல்லாதிருப்பதும் அவருக்கு வருத்தமளிக்கிறது. எஸ். நல்ல பெருமாள் தான் ரியோ டி ஜெனிரோ விலும், ப்ராஸிலியாவிலும் ப்யூரோஸ் ஐரஸிலும் தங்கியிருந்த அனுபவங்களை தென் அமெரிக்க அனுபவங்களாக எழுதியிருக்கிறார்.
அடுத்து சோம. லெ. யிடமும் கே. ஸ்ரீனிவாசனிடமும் வரும்போது தான் இன்றைய புகழ் பெற்ற தமிழர்களின் குண விசேஷத்தையும் பிரதாபங்களையும் எதிர் கொள்கிறோம். சோம. லெ. ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். இங்கு அவர தன் பர்மா அனுபவங்கள் என எழுதியிருப்பதை இடை நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் பூகோளப் புத்தகத்தில் பர்மா பற்றி இருக்கும் பாடங்களின் பக்கங்கள் என்று சொல்லலாம். அல்லது இங்கு இருக்கும் பர்மா தூதரகத்தில் கிடைக்கும் பர்மா பற்றிய கையடக்க தகவல் புத்தகம் போல என்றும் சொல்லலாம். பர்மா வாசம் அவருக்கு எந்த வித ஆழ்ந்த பாதிப்பையும் தந்துவிடவில்லை என்று தான் தோன்றுகிறது. அவர் இங்கு தந்துள்ளதை, என்னவென்று சொல்ல!, எந்த கடைக்காரரும் தன்னிடம் இருக்கும் சரக்குகளை அவ்வப்போது கணக்கெடுப்பது போல, இங்கு சோம. லெ கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் கடை பர்மா. அதிலும் அவர் எழுத்தில் காணும், பாமரத்தனம், கடைத் தரமான ரசனை, கொச்சையான, பண்பற்ற எழுத்தை நகைச் சுவை என அவர் கருதிக் கொண்டிருக்கும் அவலம், எல்லாம் நம்மைத் திகைக்க வைக்கும். ஒரு உதாரணம் சொல்லலாமா?: ”
“தங்கள் மார்பகங்களை வெளித் தெரிய காட்டிக்கொள்ளும் பழக்கம் இன்னும் பர்மிய பெண்களிடம் பரவவில்லை. அப்படிச் செய்ய அவர்கள் வெட்கப் படுவார்கள். இங்கு தாய்ப் பால் இழந்த குழந்தைகளுக்கு தாதியர்களாக பர்மிய பெண்களை நாம் இந்தியாவுக்கு வரவழைக்கலாம்”.
:(ஒரு சிறு குறிப்பு: இது சோம.லெயின் தமிழ் மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழிபெயர்த்திருந்ததை திரும்ப நான் தமிழில் எழுதியது. வார்த்தைகள் வேறாக இருக்கலாம். சோம. லெ சொல்ல வந்த கருத்தை நான் சேதப்படுத்தவில்லை என்று தான் நினைக்கிறேன்.)
ஸ்ரீனிவாசன் இதிலிருந்து வித்தியாசப்பட்டவர். அவர் அரசியல் விமர்சகர். அவர் இங்கு எழுதியிருப்பதை ப்ளிட்ஸ் பத்திரிகைக்கு அனுப்ப நினைத்தவர் தவறுதலாக புக் வெஞ்சர் நிறுவனத்துக்கு அனுப்பி விட்டார் என்று தோன்றுகிறது. அவர் எழுத்து பாணியும் (ஆர்.கே.கரஞ்சியா ரகம்) சொல்லும் விஷயமும் ( கெமால் அப்தெல் நாஸரின் அரசியலுக்கு ஆதரவான ஒரு மொண்ணத் தர வாதம்) ப்ளிட்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பயங்கர கூச்சல் போட்டிருக்கும்.. இது அரபு நாடுகளில் சென்ற பயண அனுபவம் என்று சொல்லப் படுகிறது. ஆனால் இதைப் படிப்பவர் யாரும் ஸ்ரீனிவாசன் அரபு நாடுகளில் கால் பதித்ததற்கான சான்று எதையும் காணமுடியாது.
ஆனால் தமிழில் அதற்குப் பழக்கமில்லாத புதிய தடத்தில் செல்ல விரும்பும் எந்த முயற்சியும் இப்படிதான் இருக்கும் என்றாலும் புக் வெஞ்சர் இத்தகைய முயற்சிகளில் கவனம் கொண்டுள்ளதைப் பாராட்டத்தான் வேண்டும். இதில் ஆறு கட்டுரைகளாவது படிப்பதற்கு புதிய பார்வைகளையும் அனுபவங்களையும் தருவதாக இருக்கின்றனவே அதற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். மிஞ்சியவற்றைப் பற்றி என்ன சொல்ல. எழுதித்தரக் கேட்டாயிற்று. போட்டுத்தானே ஆக வேண்டும். எழுதியவர்களின் புகழையும் பிராபல்யத்தையும் பார்க்கும் போது திருப்பி அனுப்புவது நன்றாக இருக்காதே.
இரண்டாவது புத்தகமான, உதய சூர்யனில் தி.ஜானகிராமன் தான் சில மாதங்கள் ஜப்பான் நாட்டில் கழித்த அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்திய வானொலி நிலையம் ஜப்பானின் வானொலி ஒலிபரப்பு முறைகளைப் பார்த்து ஆராய அவரை அனுப்பியிருந்தது. இப் புத்தகம், தமிழ் எழுத்தாளர்களின் கூட்டுறவுப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
iஇது வரை தமிழில் எந்த புத்தகமாவது ஏ.கே கருப்பன் செட்டியார் சென்ற தடத்தில் பயணித்து புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறதென்றால் அது தி.ஜானகிராமனின் உதய சூரியனாகத் தான் இருக்கும். இதன் ஒவ்வொரு பக்கமும், தி. ஜானகிராமன் எழுத்தின் உயர் தரத்திற்கும், கூரிய பார்வைக்கும். விமர்சன நோக்கிற்கும். எப்போதும் தன்னை உள்நோக்கி சுய விமர்சனம் செய்து கொள்ளும் மனத்திற்கும் சான்று பகரும். இந்த எழுத்தில் தான், எழுதியவர் அதன் உயர்ந்த பொருளில் ஒரு ஹிந்து தர்மங்களில் ஆழ்ந்த மனம் கொண்டவர் என்றும் கலை உணர்வு கொண்டவர் என்றும் தெரிகிறது. சென்ற இடங்களையும், அங்கு கண்ட வானை முட்டும் உயர்ந்த கட்டிடங்களைப் பட்டியலிட்டு தன் வியப்பை பதிக்கும் எழுத்தல்ல. தான் முன்னரே தீர்மானித்துக்கொண்ட தமிழ் இனத்தின், சரித்திரத்தின், கலாச்சாரத்தின் உன்னதங்களைத் திரும்பச் சொல்லும் சந்தர்ப்பங்களை அடுக்கிச் சொல்வதும் அல்ல. ஒரு சிந்திக்கும் மனது தன் பார்வையில் பட்டதையெல்லாம் பற்றி தீவிரமாக சிந்திக்கிறது. வெளித்தோற்றத்தில் முரண்பட்ட மேற்கத்திய கலாச்சார அம்சங்களும் கீழைத் தேய கலாச்சார பண்புகளும் உடன் வாழ்வதன் அடியில் என்ன தான் இருக்கிறது இந்த அந்நிய மண்ணின் சமூக, கலாச்சார சூழலில். என்று ஒரு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது. இந்தப் பயண வரலாறு முழுதுமே தி. ஜானகிராமனின் மனதில் நிகழும் ஒரு மௌன சமாஷணை. வாதமும் எதிர்வாதமும் கொண்ட உரையாடல். இரண்டு முரண்பட்ட கலாசாரங்கள் எதிர்ப்படும்போது ஒன்று மற்றதைத் தேக்கமடைந்தது என்றும் வெளியிலிருந்து வரும் எந்த ஆரோக்கியமான, புதுமையான பாதிப்புக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்வதில்லை என்று குற்றம் சாட்ட மற்றதோ வெளியிலிருந்து வரும் எந்த அன்னிய கலாச்சாரத் தாக்குதலுக்கும் வெகு சுலபமாக இரையாவதாகவும் இரண்டு முரண்பட்ட கலாச்சாரங்களையும் அவற்றின் உள்ளார்ந்த முரண்களைக்கு ஒரு ஒன்றிணைக்கும் சமரசமோ, சமாதானமோ காணத் தவறியதாகவும், இன்னும் மற்ற சமயங்களி,ல் ஜப்பான் நாட்டின் நிலப்பரப்பிலும், தோட்டங்களிலும் காணும் அமைதியும் நிச்சலன அழகும் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறது. அது மாத்திரமல்ல, மக்கள் கூட்டம் நெரியும் சாலைகளில், நகரங்களில் பொது இடங்களில், பின் நெரிந்து விரையும் மக்களின் முகங்களில்
அடியில் காணும் முடிவற்ற வேகம், ஒய்வற்ற ஓட்டம், இவற்றையும் கண்டு ஜானகிராமன் திகைத்துப் போகிறார். அமைதியும் அழகும் கட்டுப் பாடும் ஒழுங்கும்,கலங்காத நிச்சலனமும் காணுமிடமெல்லாம், சென்றவிடமெல்லாம் கொண்ட ஜப்பானை, தன்னை மோகம் கொள்ள வைத்தை ஜப்பானை விட்டுக் கடைசியில் போக வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம் மனதைக் கவ்விக்கொள்கிறது.
தனதேயான, பார்வையையும் தன் உணர்வுகளையுமே தன் அனுபவங்களாக, தனக்கு முத்திரையேயாகிப் போன தெளிந்த, எளிய அழகு நடையில் தி. ஜானகி ராமன் எழுதியுள்ள இந்தப் பயண அனுபவங்கள் இதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தைத் தந்து விடுகின்றன.
(ஆகஸ்ட் 5, 1969 THOUGHT (New Delh) இதழில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)
பிரயாண இலக்கியம் (பயணக் கட்டுரைத் தொகுப்பு) புக் வெஞ்சர், தி.நகர் சென்னை ப.246 ரூ. 5
உதய சூரியன் (பயண நூல்) தி.ஜானகிராமன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம், சென்னை. ப. 173. ரூ. 3.60
Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>