நினைவுகளின் சுவட்டில் – (74)
ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் ரஜக் தாஸ் ஏதாவது சொல்வான். அது மற்றவர்களுக்கு தெரியாத, அவர்கள் பங்கு பெற்றிராத சம்பவமோ, பேச்சோ இப்படி ஏதோ ஒன்று இருக்கும். ரஜக் தாஸ் சொல்லிக்கொண்டிருப்பான். நடுவில் சற்று நிறுத்தி எல்லோரையும் பார்ப்பான். இனி நடக்கும் நாடகத்தை தமிழில் எப்படி சரிவரச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சாதாரண “ஹை” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் ரகளை அனுபவித்தால் தான் தெரியுமே ஒழிய சொல்லிப் புலப்பட வைக்கமுடியாது. ”ஹை” என்ற வார்த்தையின் பொருளும் அது வெவ்வேறு கட்டங்களில் சொல்லும் தொனி மாற்றத்தில் பெறும் பொருள் மாற்றத்தையும் தமிழில் எப்படி சொல்வது? சரி, ஏதோ முடிந்தவரை சொல்லிப் பார்க்கவேண்டியது தான்.
ஏதோ ஒன்றைப் பார்த்ததைக் கேட்டதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பான். பின் சட்டென நிறுத்தி செக்ஷன் முழுதிலும் சுற்றி ஒரு பார்வை செலுத்துவான். பிறகு கோபத்தில், ”என்ன இது, நான் சொல்லிக்கொண்டே போகிறேன். இப்படி எல்லோரும் பேசாமல் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?” என்பான்.
”கேட்டிண்டு இருக்கோம். நீ சொல்லு” என்று பதில் வரும்.
இதென்ன?, “கேட்டிண்டு இருக்கோம். நீ சொல்லு”. நான் என்ன மடையனா? நான் சொல்றதுக்கு ஏதாவது நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா?
பதில் என்ன சொல்றது?. நீ சொல்றதை, நம்ம ரஜக் தாஸ் சொல்றான்னு கேட்கறோம்.
என்ன இது, நான் இப்படி “இருக்கு”ன்னு விஷயத்தைச் சொன்னா, ”நான் சொல்றேன்”னு கேக்கறதா சொல்றீங்களே.. அப்படினனா என்ன அர்த்தம்? நான் “இருக்கு”ன்னு சொன்னது இல்லைங்கறீங்களா? ரஜக் தாஸ் சொல்றான்னு தலையாட்டறீங்களா?
அப்படி இல்லை. நீ பார்த்தே “இருக்கு”ன்னு சொல்றே,. நாங்க சரி, “இருக்காக்கும்” ன்னு கேட்டுக்கறோம். வேறே என்ன சொல்றது?
நான் பார்த்தேன் அப்படி “இருக்கு”ங்கறேன். நீங்க என்னடான்னா, “நான் சொல்றதுக்காக சரிங்கறேன்”னு சொல்றீங்களே”
அதான் ஒப்புக்கொண்டு விட்டோமே அப்படித்தான் அது ”இருக்கு”. மேலே சொல்லு.
அதென்ன எனக்கு சலுகையா “இருக்கு”ன்னு ஒப்புக்கறீங்களா? நான் சொல்றேன். பார்த்தேன். அப்படி “இருக்கு”ங்கறேன். ஏதோ கடனுக்குக் கேக்கறமாதிரி, “சரி மேலே சொல்லுங்கறீங்களே”
சரி, என்னதான் சொல்லணும்கறே, ரஜக் தாஸ்,. சண்டைக்கு வராதே. எப்படிச் சொல்லணும்கறே. அப்படிச் சொல்லிடறோம்.
நான் என்ன சண்டைக்காரனா, என் வாயடைக்கறதுக்காக, நான் எப்படி சொல்லச் சொல்றேனோ அப்படிச் சொல்றேன்னு சொல்றீங்களே. அப்ப நான் சொல்றதை நம்பலே நீங்க. மேலே என்னத்துக்கு வம்புன்னு, நான் சொல்றதைச் சொல்றேன்னு சொல்றீங்க. நான் என்ன பொய்யனா, சண்டைக்காரனா?
என்னதான் செய்யச் சொல்றே, ரஜக் தாஸ், என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்க மாட்டேங்கறே. சரி விடு. வேறே விஷயத்துக்கு போகலாம்.
”மறுபடியும் அதே பேச்சு. நான் சொல்றதை நம்பலே. நான் பொய்யன்னு சொல்றீங்க எல்லாரும். நடந்த விஷயம் ஸ்வாரஸ்யமா இருக்கேன்னு எல்லாருக்கும் சொல்லலாம்னு வந்தேன். நீங்க என்னடானனா, அரை மணி நேரமா எல்லாரும் மூஞ்சிய உம்முனு வச்சிட்டிருக்கீங்க. கேட்டா, என்னை பொய்யன், சண்டைக்காரன்னு சொல்றீங்க.
அதான் ரஜக் சொல்லிட்டோமே, ‘நீ சொன்னது இருக்கு. இல்லாட்டி நீ ஏன் சொல்லப் போறே. அதான் ஒப்புத்துக்கொண்டோமே.
இவ்வளவு நேரம் என்னோடே சண்டை போட்டு, பொய்யன் சொல்லி, என்னை சமாதானப் படுத்தறதுக்காக சரி அப்படித்தான் “இருக்கு”’ன்னு சொல்றீங்க. ஆனா உங்க மனசிலே அப்படி இல்லை.
இப்படியே போகும். அந்த விவகாரம். iஇங்கு நான் கோடிகாட்டி விட்டு நிறுத்தி விட்டேன். ஆனால் ரஜக் தாஸ் சுலபத்தில் முடிக்க மாட்டான். இருக்கு என்று பொருள் கொள்ளும் சாதாரண அடிக்கடி புழங்கும் ஹிந்திச் சொல் “ஹை” யை அவன் எத்தனை விதவிதமான தொனியில், ஒவ்வொரு தடவையும் வேறே வேறே அழுத்தம் தந்து, அதற்கேற்ப முதுகை முன் குனிந்து வளைத்தும், , உதட்டை வித விதமாக பிதுக்கிக் கொண்டும். அவன் செய்யும் சேஷ்டைகள் தாங்கமுடியாது
இது எல்லாவற்றையும் தூக்கி அடிப்பது, அவன் வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்தில் அவன் செய்த அட்டஹாஸம். அவன் நடத்திய நாடகம் இரண்டு பெங்காளி வார்த்தைகளை வைத்து. (சூல், பால்). அவன் பேசிக்கொண்டு வந்தபோது இதன் வித்தியாசத்தை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. செக்ஷனில் இருந்த பாண்டே என்ற ஒரியாக்காரர் தான் திகைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு விளக்கினார். அப்போ, அவன் வேலைக்குச் சேர்ந்த புதிது. அதற்குள் அவன் சுபாவம் எங்களுக்கு கொஞ்சம் பரிச்சயமாகியிருந்ததால், இதில் ஏதோ விஷமம் இருக்கிறது என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்ததே தவிர விஷயம் உண்மையில் என்ன என்று புரிய வைத்தது பாண்டே தான்
ஒரு நாள் காலை வந்ததும் “ஒரே பாபா, ஆமி எக்கானே காஜ் கொர்த்த பார்போனா, எககானே லோக்டா சபாயி கூப் கராப்” (நான் இங்கே இனிமே வேலை செய்ய முடியாது. போலெ இருக்கு. இங்கே இருக்கறவன்கள் எல்லாம் ரொம்ப மோசம்} என்று சத்தமாகக் கத்திக்கொண்டே வந்தான்.
யாருக்காவது ஏதாவது புரிந்தால் தானே. ஏதோ விஷயம், ரஜக் தாஸை ரொம்பவும் சங்கடப்படுத்தியிருக்கிறது என்று தெரிந்தது. க்யா ஹுவா தாதா, பஹூத் குஸ்ஸே மேம் ஹோ (என்ன ஆச்சு, ரொம்ப கோவமா இருக்கே” என்று எல்லோரும் அவனைப் பார்த்து திகைப்புடன் கேட்க,
அவன் மிருணால் பக்கம் திரும்பி, “மிருணால் தா, ஆமி புஜ்த பாஸ்சி நா, எக்கானே கி கேஓ சூல் காட்பே நா கி?” (மிருணால், இந்த ஊர்லே யாருமே தலைக்கு க்ராப் வெட்ட மாட்டாங்களா என்ன? என்று கேட்டான்.
மிருணாலுக்கு முதலில் திகைப்பாக இருந்தாலும், ரஜக் ஏதோ காமெடி பண்ண ஆரம்பிக்கிறான் என்று தெரிந்தது.
ஆஷ்சி தோ. தோ துகான் ஆச்சே. ஆப்னி தேக்கி நா கி? (இருக்கே ரண்டு சலூன் இருக்கு. உங்களுக்கு தெரியலையா?) பின் செக்ஷனில் மற்றவர்களிடம் திரும்பி,” ரஜக் பாபுக்கு, ஹேர் கட்
பண்ணிக்கணும், அவருக்கு சலூன் எங்கே இருக்குன்னு தெரியலை. அதான் விஷயம்”. என்று ஹிந்தியில் சொன்னான்
எங்களில் ஒன்றிரண்டு பேர் அவருக்கு சலூன் எங்கே இருக்கு என்று வழி சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் ரஜக் பாபுவுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.
அரே பாபா, ஆமி ஜானி, (எனக்கு அதெல்லாம் தெரியும்) மைம் தோ கயா தா. வோ தோ பால் காட்தா ஹை. தூஸ்ரா துகான் பி கயா தா. வஹ் பி பால் காட்தா ஹை. பகூத் முஷ்கில் ஹோ கயா. வாபஸ் ஆ கயா. (நான் போனேன். அடுத்த கடைக்கும் போனேன். எல்லாரும் என்னவோ பண்றானுங்க. எனக்கு தலை மயிர் வெட்டிக்கணும். “ என்றான்.
அதைத்தான் சொல்றோம். உனக்கென்ன கஷ்டம் உனக்கு வேறென்ன வேணும்.> என்று கேட்டார்கள்.
மிருணால் சிரித்துக் கொண்டே இருந்தான்.
ஒரே பாபா தும் சமஜ்தா நஹி. ஆமார் சூல் காட்தே சாய். பால் கேனோ(ம்) காட்போ. துமி புஜ்த பாஸ்சி நா. ஹம்கோ சூல் காட்னா ஹை. பால் நஹி. ( உங்களுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது. எனக்கு சூல் வெட்டிக்கணும். பால் இல்லை. பால் என்னத்துக்கு வெட்டணும் )என்றான். ரஜக் தாஸ்.
யே க்யா போல்தா ஹை யார். சக்கரவர்த்தி. ஹமே சம்ஜாவ் யா இஸ் பங்காளிகோ சம்ஜாவ் ( இவன் என்ன சொல்றான்?. சக்கரவர்த்தி எங்களுக்கு புரியும்படியா சொல்லு. இல்லை, இந்த வங்காளிக்கு புரியவை) என்று சில குரல்கள் எழுந்தன.
சக்கரவர்த்தி சிரித்துக்கொண்டிருந்தான். “து க்யோ ஹஸ்தா ஹை ரே? (நீ ஏண்டா சிரிக்கறே?} என்று மறுபடியும் குரல் எழுந்தது.
பின் மிருணால் சொன்னான். வங்காளியில் தலை மயிருக்கு சூல் என்றுதான் சொல்லவேண்டும். பால் என்றால் அது வேறே இடத்தில் இருக்கறதைச் சொல்றதுக்கு.” என்றான்.
செகஷனில் ஒரே ரகளை. சிரி[ப்பொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று என்பது மட்டுமல்ல. இதை ரொம்ப நாளைக்கு எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதில் ரொம்ப பாதிக்கப்பட்டது ரஜக் தாஸ் தான்.
”ரஜக் பாபு, ஃபிர் கப் ஜானா ஹை பால் காட்னே? (அடுத்து என்னிக்கு பால் வெட்டிக்கப் போகப் போறே)” என்ற விசாரிப்புகள் ரொம்ப நாளைக்கு கேட்டுக்கொண்டிருந்தது. ரஜக் தாஸும் சிரித்துக் கொள்வான். அன்று அவன் ரகளை செய்தது தெரியாமல் இல்லை. வேண்டுமென்றேதான் அவன் செய்தான். அவன் ரகளையெல்லாம் கோமாளித்தனத்துக்காகத் தான்.
(75) – நினைவுகளின் சுவட்டில்
ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனத்தில் திரையோடுகின்றன. சின்ன உத்யோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் அப்பாவும், தங்கை தம்பிகளும் நினைக்கலாம் தான். ஆனால் அந்த நாட்கள் எனக்கு சந்தோஷமாகவே கழிந்தன. புதிய இடம், நண்பர்களாக புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை எல்லாம் நன்றாகத் தான் இருந்தன. இப்போது நினைத்துப் பார்க்கும் போது கூட அந்த நாட்களின் சந்தோஷமும், அந்த நட்புகளும் கழிந்து மறைந்துவிட்டது தான் ஒரு சோக உணர்வை மனதில் நிரப்புகின்றனவே தவிர, அவை என்றைக்குமாக இழந்தவையாகி விட்டன, திரும்ப அந்த ரஜக் தாஸையும் மிருணாலின் ஆழமான அத்யந்த நட்பும், மனோஹர்லால் சோப்ராவின் தங்கை கொடுத்த ருசியான சாப்பாடும் இழக்கப் பட்டவை தான். இனித் திரும்ப வாழமுடியாதவை, கிடைக்கக் கூடிய சாத்தியம் என்பது அந்த நினைவுகள் தான் என்பது மாற்றமுடியாத வாழ்க்கையின் நியதிகள். இப்படி ஒரு சோகம் கப்பும் போது, யாராவது ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் அனுபவித்து கடந்து வந்து விட்ட சந்தோஷங்களைப் பற்றி நினைத்து துக்கிப்பார்களா?, இது என்னை மாத்திரம் பாதிக்கும் மனப் பிறழ்வாகவும் இருக்கக் கூடும்.
என்னவாக இருந்தால் என்ன? நான் எப்படியோ அப்படித்தான் என் நினைவுகளும் இருக்கும். இப்போது இன்று நான் எப்படியோ அப்படிக்கூட இல்லை. அன்று எப்படி இருந்தேனோ அப்படியான நினைவுகள் தான் இதில் பதிவாதல் வேண்டும். அது தான் நேர்மையானதும் உண்மையானதும் ஆகும்.
அந்த வருடங்களில் என்னிடம் மிக அன்பு காட்டியவன், ஒரு பார்வையில் படிப்படியான என் வளர்ச்சிக்கும் காரண மானவர்களில் ஒருவன் என்று மிருணால் காந்தி சக்கரவர்த்தியைச் சொல்ல வேண்டும். என்னிலும் மூன்று வயது மூத்தவன். அப்போது எனக்கு வயது இருபது. அவன் கல்லூரிப் படிப்பு படித்து வந்தவன். வித்வத் நிறைந்த தந்தையால் வளர்க்கப் பட்டவன். அப்போது அவன் தந்தையார், சுரேஷ் சந்திர சக்கரவர்த்தி, டாக்காவில் ஒரு ஹைஸ்கூலில் ஹெட் மாஸ்டர். ஹெட்மாஸ்டர் என்றால், இப்போதோ அல்லது நாம் வழக்கமாகப் பார்த்துத் தெரிந்திருக்கும் எந்த ஹெட்மாஸ்டரின் வடிவமும் குணவிசேஷங்களை நினைத்துக்கொள்ளக் கூடாது. அவர் ஒரு விசித்திரமான ஆனால் மிகவும் மரியாதையோடு நினைவு கொள்ள வேண்டியவர். அவரைப் பற்றி மிருணால் எனக்கு நிறையச் சொல்லியிருக்கிறான்.
ஒரு நாள் தேஷ் என்னும் வாரப்பத்திரிகையை என்னிடம் கொண்டுவந்து காட்டினான். அதில் அவன் தந்தையார் பேசிய பேச்சு அச்சாகியிருந்தது. தேஷ் மிகவும் இலக்கியத் தரமான, கலைத் தரமான பத்திரிகை. கல்கத்தாவிலிருந்து பிரசுரமாகும் ஒன்று. மிகுந்த பழம் பாரம்பரியமும் புகழும் வாய்ந்தது. அதே சமயம் அது கிட்டத் தட்ட நல்ல வாசகர் எண்ணிக்கை கொண்ட பிரபல பத்திரிகையும் கூட. என் நினைவு சரியெனில் ஜுகாந்தர் என்ற தினசரிப் பத்திரிகை நிறுவனத்தின் வெளியீடு அது. தரமான பத்திரிகை என்றால் அது பிரபலமாகவும் வாசக எண்ணிக்கைப் பெருக்கமும் கொண்டிருப்பது நமக்கு அதிசயமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் வங்காளத்தில் அப்படி இல்லை. தேஷ் பத்திரிகை மிருணாலுக்கு அவனுக்கு நாங்கள் இருந்த புர்லா காம்ப்பில் தினசரிப் பத்திரிகை போடுபவனிடமிருந்தே கிடைத்தது.
அவன் அப்பா அது பற்றி தேஷில் அவர் பேச்சு பிரசுரமானது பற்றி எழுதியிருந்தாராம். மிருணாலின் தங்கைகள் இரண்டு பேர், ஒரு குட்டித் தங்கை, அம்மா எல்லோரும் அப்போது டாக்காவில் இருந்தனர். ஒரு நாள் மாலை மிருணாலின் குட்டித் தங்கையைக் காணோமே என்று தேடிச் சென்றாராம். அந்த சமயத்தில் அவர் தேடிச்சென்ற வழியில் ஒரு கூட்டமும் நடந்து கொண்டிருந்தது. இவரை வெளியில் பார்த்தவர்கள் இவரை வலுக்கட்டாயமாக அழைத்துப்பேசச் சொன்னார்களாம். அந்தப் பேச்சு தான் தேஷில் வெளி வந்திருந்தது. வீட்டிலிருந்து சின்னப் பெண்ணைத் தேடிச் சென்றவர் சரியான உடை கூட உடுத்திக்கொண்டிருக்கவில்லை. கைலியும் பனியனும் ரப்பர் செப்பலுமாக ரோடில் அலைந்து கொண்டிருந்தேன். அப்படியே கூட்டத்துக்கு இழுத்துச் சென்று விட்டனர் என்று அப்பா, சுரேஷ் சந்திர சக்கரவர்த்தி எழுதி யிருந்தார் மிருணாலுக்கு. தயார் செய்து சென்று பேசிய பேச்சும் அல்ல அது.
பின் அவன் அப்பாவைப் பற்றி அவ்வப்போது சொல்வான். அவருக்கு உலகத்தில் எத்துறை பற்றியும் போன மாதக் கடைசி வரை நிகழ்ந்துள்ள வளர்ச்சி, மாற்றங்கள் பற்றிக் கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியும் என்றான். சின்ன வயசிலிருந்து எங்களையும் அப்படியே வளர்த்தார். சிறு வகுப்புகளில் படிக்கும் போது அப்பாவிடம் மிருணால் எல்லாச் சிறுவர்களும் கேட்கும் கேள்விகள் கேட்டால் அவர் அதற்கு பதிலளிக்கும் விதமே வேறு.
அந்தக் கதையெல்லாம் மிருணால் சொல்லக் கேட்பது வேடிக்கையாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் தவளைக்கு ஏன் கால்கள் முன்னால் சின்னதாகவும் பின்னால் நீளமாகவும் இருக்கிறது என்று கேட்டானாம். அதற்கு அவன் அப்பா, “இதை நீ, நான் சொல்வதை விட ஜூலியன் ஹக்ஸ்லி என்னும் விஞ்ஞானி சொல்லக் கேட்க வேண்டும்.” என்று சொல்லி ஜூலியன் ஹக்ஸ்லியின் விலாசத்தைத் தந்து எழுதிக் கேட்கச் சொன்னாராம். ஜூலியன் ஹக்ஸ்லியிடமிருந்து அவனுக்கு பதிலலும் வந்ததாம்.
இன்னொரு கதை எனக்கு நினைவிலிருப்பது, இந்த மாதிரி வங்காள மொழியில் ஏதோ சந்தேகம். உடனே அப்பா அவனுக்கு டாக்டர் சுனிதி குமார் சட்டர்ஜியின் விலாசத்தைத் தந்து அவரைக் கேள். அவர்தான் இதற்கு அதாரிட்டி என்றாராம். அவனும் டாக்டர் சுனிதி குமார் சட்டர்ஜிக்கு எழுதி அவரும் அவனுக்கு அவன் சந்தேகத்தைத் தீர்த்து பதில் எழுதினாராம். சுனிதி குமார் சட்டர்ஜி பல பாகங்கள் கொண்ட அதிகார பூர்வமான, (History of Bengali Language) வங்க மொழியின் வரலாறு என்ற நூல் எழுதியிருக்கிறார். உலகம் அறிந்த மொழியியலாளர். மொழி வல்லுனர்.
என்னிடம் ஜூலியன் ஹக்ஸ்லி, சுனிதி குமார் சட்டர்ஜி இன்னும் அனேகர் எனக்கு என் சந்தேகங்களைத் தீர்த்து எழுதிய கடிதங்கள் இருக்கு என்றான்.
டாக்டர் சுனிதி குமார் சட்டர்ஜி நான் தில்லியிலிருந்த போது, அவர சாஹித்ய அகாடமியின் தலைவராக இருந்தார். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு அவர் தலைவரானார். அவர் தலைவராக இருந்த போது தான் அகிலனுக்கு சாகித்ய அகாடமி தரும் தமிழ் பரிசு கிடைத்தது. அப்போது நான் அதைக் கண்டித்து Thought என்னும் ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.(இக்கட்டுரையை விவாதங்கள் சர்ச்சைகள் என்னும் தொகுப்பில் காணலாம்} அதை அவருக்கு அனுப்பினேன். சாதாரணமாக இதற்கெல்லாம் பதில் வராது. ஆனால் சுனிதி குமார் சட்டர்ஜி, மிருணால் என்னும் பள்ளிச் சிறுவனின் கடிதத்தை மதித்து பதில் தருகிறவர் எனக்குத் தரமாட்டார என்ன? எழுதினார். “சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பரிசுக்கான புத்தகத்தை சிபாரிசு செய்வது ஒரு தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழு. அகாடமிக்கு இதில் சம்பந்தமில்லை. அவர்கள் சிபாரிசு செய்து தான் அகிலனுக்கு பரிசு தரப்பட்டது” என்று எனக்கு பதில் எழுதினார். அந்தக் கடிதம் இப்போது எங்கு தொலைந்ததோ தெரியவில்லை. மிருணால் பெருமைப் பட்டுக்கொண்ட மாதிரி நான் பெருமைப் பட்டுக்கொள்ள சாட்சியமாக அந்தக் கடிதம் இல்லை. என் வார்த்தையை நம்பினால் தான் உண்டு.
இன்னம் கூட ஒரு சுவாரஸ்யமான் விஷயம் மிருணால் தன் அப்பாவைப் பற்றிச் சொன்னது. அந்த ஐம்பதுக்களில் அர்னால்ட் ஜே டாயின்பீ என்னும் வரலாற்று ஆசிரியர் உலகப் புகழ் பெற்றிருந்தார். அவருடைய Study in History என்னும் ஒரு பிரம்மாண்ட புத்தகம் உலக வரலாற்றை நாகரீகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியுமாக பார்த்து ஆராய்ந்து பல பாகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அதன் கடைசி பாகம் அப்போது தான் வெளிவந்திருந்தது. அந்த பத்து பாகங்களையும் D.C.Somerwell இரண்டு பாகங்களுக்கு சுருக்கி வெளியிட்டிருந்தார். ஒரு பள்ளி தலைமை ஆசிரியரான சுரேஷ் ச்ந்திர சக்கரவர்த்தி அதை வாங்கும் சக்தி அற்றவர். ஆனால், அவரது ஈடுபாட்டை நன்கு அறிந்து அதை மதித்தவர்களான அவரது சக ஆசிரியர்கள் எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக பணம் போட்டு அந்த பத்து பாகங்களையும் அவை வெளிவர வெளிவர ஒவ்வொன்றாக வாங்கித் தந்தார்களாம்.
இதையெல்லாம் சொன்ன மிருணால் இன்னொரு விஷயத்தையும் சொன்னான். அவன் அப்பா நெடுங்காலமாக மலச் சிக்கலால் அவதிப் படுபவராம். அவர் கழிப்பரைக்குச் சென்றால் சுலபத்தில் வருபவர் இல்லையாதலால், கையோடு டாயின்பீயின் புத்தகத்தின் பாகம் ஒன்றையும் உடன் எடுத்துச் சென்று அங்கு படித்துகொண்டிருப்பாராம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.