- வெங்கட் சாமிநாதன் -- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


 

நினைவுகளின் தடத்தில் - (8)

அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் தனக்கு இருந்த பிரேமையைப் பற்றியும் அவரது வயலின் வாசிப்பில் தான் உருகியது பற்றியும் சொல்வதைக் கேட்க ராத்திரி பத்து பதினோரு மணி வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது எனக்கு மிக அவசியமாகியிருந்திருக்கிறது. இது சரியில்லை என்று எனக்கு படவில்லை. "படிடா, நாளைக்கு பரிட்சை" என்று திட்ட அப்பாவோ, மாமாவோ, யாரும் இல்லை அங்கு எனக்கு. நான் எது சரி, எனக்கு எது பிடித்தது என்று நினைத்தேனோ அதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருந்தது, அதை அனுபவிப்பதில் சந்தோஷம் இருந்தது. பரிட்சையில் தோற்றிருந்தால் என்ன ஆயிருக்கும், என்ன நினைத்திருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை. அந்த மாதிரி தேர்வுகள் என் மனத்தில் ஓடியது என்றும் சொல்வதற்கில்லை.

நிலக்கோட்டையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமா கல்யாணத்திற்கு அழைத்து வந்திருந்த சங்கீத வித்வான்கள் தங்கியிருந்த கூடத்திற்குச் சென்று அவர்கள் பேச்சையும் அரட்டையையும் கேட்டுக்கொண்டும், சாயந்திரம் கல்யாண பந்தலுக்குச் சென்று அவர்கள் பாடுவதையோ வாசிப்பதையோ இரவு வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. அவர்கள் பேசியது புரிந்ததா, சங்கீதம் எனக்கு ஏதும் தெரியுமா ரசிக்க என்பதெல்லாம் விஷயமே இல்லை. அப்படிப் பொழுது போக்குவது, விசித்திரமாகவும், புதிதாகவும் சந்தோஷம் தருவதாகவும் இவையெல்லாம் இருந்தன, அன்றாட வண்டிச் சகடை உருளலிருந்து வேறு பட்ட ஒன்று கிடைத்ததில் சந்தோஷம்.

அந்தக் காலத்தில் இரவு நேரங்களில் எப்போதாவது அபூர்வமாக ராப்பிச்சைக்காரன் யாராவது வருவதுண்டு. ஒரு நாள் வந்த ஒருவனின் நினைவு இப்போது நினைத்துப் பார்க்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது. உண்மையில் அவன் பிச்சைக்காரனாக யார் வீட்டிலும் பிச்சை கேட்பதில்லை. பாடிக்கொண்டே வருவான். ஏதோ ஒரு வீட்டின் முன் நிற்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றும் போல. ஏதோ ஒரு உள்ளுணர்வில் தான் அவன் நிற்பதாகத் தோன்றும். உச்ச ஸ்தாயியில் அவன் பாடும்போது அந்த குரலின் கரகரப்பிற்கே ஒரு வசீகரம் இருப்பது போல் படும். அநாயாசமான கார்வைகள் வந்து விழும். விழும் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி இவ்வளவு நயமான குரல்! ஒரு இடத்தில் ஒரு பிசிறு விழுந்ததாகச் சொல்ல முடியாது. ஏதோ வீட்டிலிருப்பதைக் கொடுப்பார்கள். அவன் கத்திக் கூப்பிட்டுத்தான் பிச்சை கேட்க வேண்டுமென்பதில்லை. எப்படி இவனுக்கு மாத்திரம் இந்த சலுகை! அவன் கூடவே நாங்களும் செல்வோம். அம்பி வாத்தியாரும் ஏதோ கச்சேரியில் வித்வானுக்குச் சீட்டுக் கொடுப்பது போல, இந்தப் பாட்டு தெரியுமா, அந்தப்பாட்டு தெரியுமா? என்று ஒன்றொன்றாகச் சொல்லி வரும்போது அவன் ஒரு பாட்டைப் பாடுவான். அவரும் கூட கூட சற்று தூரம் வரை வருவார். அவன் அடிக்கடி ஏன் வருவதில்லை, மற்ற நாட்களில் என்ன செய்வானோ தெரியாது. ஆனால் அந்த நினைவுகள் மிக ரம்மியமானவை ஆண்டவன் யார் யாருக்கோ ஏதேதோ கொடைகளைத் தந்துவிட்டுப் போகிறான். அப்படியும் ஏன் அவன் பிச்சை எடுக்க வேண்டி வந்தது? இப்போதும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக என் மனத்தில் உறைந்திருந்த அந்த நினைவுகளை வெளிக்கொண்டு வந்து ரம்மியமான இரவுகளை எனக்குக் கொடுத்த அவனைக் குறிப்பிடும்போது பிச்சைக்காரன் என்று தானே சொல்கிறேன். ஏன், எப்படி இந்த அநியாயம் நேர்கிறது? இது தர்மமல்ல என்று கூட நாம் உணர்வதில்லை.

வீட்டில் மாமா குடும்ப வழியில் அங்கு யாருக்கும் அப்படி ஏதும் சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது. மாமா பெண் ஜானகிக்கு மாமி பாட்டுச் சொல்லிக்கொடுத்தது ஞாபகம் வருகிறது. ஒரு ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு தானும் பாடுவாள். ஜானகியையும் பாடச் சொல்வாள். நான் மாமாவின் பராமரிப்பில் இருந்த 12-13 வருடங்களில், மாமி ஹார்மோனியம் வாசித்ததும் ஜானகிக்கு பாட்டுச் சொல்லிக் கொடுத்ததும், ஏன் தினசரி நிகழ்வாக இருந்திருக்கவில்லை என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பதில் தெரியவில்லை. மாமியின் சின்ன தங்கை குஞ்சத்துக்கும் பெண் ஜானகிக்கும் ஒரே வயது தான். இருவரும் சேர்ந்து பாடிய காட்சி நினைவில் இருக்கிறது. மாமியும் அடிக்கடி தன் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவாள். முன்னால் கோவைக்கும் பின் வருடங்களில் மதுரைக்கும். எல்லா தமிழ்க் குடும்பங்களிலும் காண்பது போல, மாமியும் பாட்டியும் அவ்வளவாக ஒருவரை ஒருவர் விரும்பியவரில்லை. ஏன் ஒத்துப் போவதில்லை என்பதற்கெல்லாம் பதில் காணமுடியாது. சண்டை வந்துவிடும். மாமா பொறுத்துப் பார்ப்பார். பின் அவரும் சத்தம் போட ஆரம்பித்து விடுவார். மாமி 'நான் போகிறேன் அம்மாவிடம்" என்று மதுரைக்குப் போய்விடுவாள். ஆக மாமி அந்த குடும்பத்தில் வருடத்தில் பாதி நாள் தான் காட்சியளிக்கும் ஜீவன். எங்கள் எல்லோருக்கும் மாமியின் சமையல் ரொம்ப பிடிக்கும். பாட்டிக்கும் தான். மாமி இல்லாத சமயங்களில், தன் அண்டை அயல் சகாக்களிடம் "ஆனா லக்ஷ்மி ரொம்ப நன்னா சமைப்போ. அதையும் சொல்லணுமோல்யோ" என்பாள். "ஆனாலு'க்கு முன்னால் என்ன பேச்சு நடந்திருக்கும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.

ஆனால் (இது என்னுடைய 'ஆனால்') மாமி வீட்டில் நடத்திய பாட்டு க்ளாஸ் (தன் தங்கைக்கும் பெண்ணுக்கும்) மாலைகள் நன்கு நினைவிலிருக்கின்றன. அது ஒண்ணும் பாட்டு க்ளாஸ் என்று சொல்லக் கூடாது. ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு சொல்லிக்கொடுத்தாள் என்றாலே சரளி வரிசை ஜண்டை வரிசை என்று தான் உடனே நம் மனதில் பிம்பங்கள் எழும். அப்படி இல்லை. மாமி பாடுவாள். அவர்கள் திருப்பிப் பாடவேண்டும். அவ்வளவே. அந்தப் பாட்டுக்களில் சிலவும் என் நினைவில் இருக்கின்றன. 'ஜக ஜனனி, சுபவாணி கல்யாணி' என்று ஒரு பாட்டு. இப்போதெல்லாம் இந்தப் பாட்டுக்களை நான் அதிகம் கேட்பதில்லை. மாமியைத் தவிர வேறு யாரும் பாடியும் கேட்டதில்லை. கொஞசம் அபூர்வம் தான்.அந்த ராகமும், ரதி பதி பிரியா', அதிகம் பாட நான் கேட்டதில்லை. அது இன்ன ராகம் என்பதெல்லாம் அப்போது தெரியாது. அப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடவில்லை. பின்னர்தான் வெகு நாட்களுக்குப் பிறகு தான், தற்செயலாகவே ராகங்களின் பெயர்களும் தெரியவந்தன. அதுபோலத்தான் இன்னொரு பாட்டும். 'அம்பா நீ இரங்காயெனில் புகலேது" என்ற பாட்டு. பாப நாசம் சிவனது. அடானா ராகத்தில். இதுவும் யாரும் அதிகம் பாடக் கேட்டதில்லை. யார் பாடல், என்ன ராகம் என்றெல்லாம் மாமியும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லைதான். பின்னர் தான் தெரிந்து கொண்டேன். மாமியின் குடும்பத்தையும் நான் 1946-ல் ஒரு வருஷம் மதுரையில் இருந்த போது நெருங்கி அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் மாயியைத் தவிர வேறு யாரும் சங்கீதம் தெரிந்தவர்களாக இல்லை. மாமிக்கு மாத்திரம் பாட்டு பாடவேண்டும் என்று தோன்றியது எப்படி, எங்கு கற்றுக் கொண்டாள் என்பதெல்லாம் அப்போதும் தெரிந்ததில்லை. இப்போதும் அதைத் தெரிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. அஸ்தமித்ததும் முகத்தை அலம்பி குங்குமம் இட்டுக்கொண்டு சுவாமிக்கு விளக்கேற்றி நமஸ்கரித்து மாமி ஒன்றிரண்டு பாட்டு பாடுவாள். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் அழகாக, சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால் மாமிதான் அடிக்கடி மதுரை போய்விடுவாளே. நிலக்கோட்டை ஆறு மாதம். கோயம்புத்தூரோ, இல்லை பின்னர் மதுரையோ ஆறு மாதம். 1945-லேயே எனது நிலக் கோட்டை வாசம் முடிகிறது. இடையில் ஒரு வருஷம் மதுரையில் சேதுபதி ஹை ஸ்கூலில் படித்த்தேன். பின்னர் மேலே படிக்க என் கிராமம் உடையாளுருக்கு வந்து விட்டேன். உடையாளுரில் இருந்து படித்துக் கொண்டிருந்த போது, மாமி உடம்பு சரியில்லாமல் இருக்கிறாள் என்று கடிதம் வந்தது. பின்னர் ஒரு சில மாதங்களில் மாமி இறந்தும் விட்டாள். மாமிக்கு அவ்வளவு மோசமாக என்ன நோய் தாக்கியது, உடனே உயிரைப் பறிக்க? அதிர்ச்சியாகத் தான் இருந்தது. யாரும் இப்படி ஒன்று சம்பவிக்கும் என்று எதிர்பாராது வந்த சோகம் அது. அப்போது மாமாவுக்கு வயது 37. மாமி 8-10 வயது சிறியவளாக இருந்திருப்பாள். மாமி இறந்த பிறகு மாமா கல்யாணம் செய்து கொள்ள வில்லை. பெண் கொடுக்க சிலர் வந்தார்கள். ஆனால் மாமா மறுத்து விட்டார். பட்டது போதும் என்று தோன்றி விட்டது போலும். தன் நான்கு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்பதே அவருக்கு பெரிய கவலையாக இருந்தது. அந்த கவலையில் மற்றதையெல்லாம் அவர் மறந்தவர் தான்

எனக்குத் தான் வருத்தமாக இருந்தது. மாமி என்னிடம் வாத்ஸல்யத்துடனேயே இருந்தாள். ஒரு போதும், மாமி இருந்த வரை, என்னை, அந்த வீட்டில் இயல்பாக சேராதவனாக, வந்து சேர்ந்த ஒரு தூரத்து உறவினர் பிள்ளையாக, நினைத்தது இல்லை. என்னை எதற்கும் ஒதுக்கியதும் இல்லை. மாமிக்கு பாட்டியுடனும் மாமாவுடனும் தான் ஒட்டுதல் இல்லையே தவிர எங்களிடம் அவள் பாசமாகத்தான் இருந்தாள். சின்ன வயசில் இறந்து விட்டாள். 30 வயதில் இறப்பது ஒரு சோகம். 37 வயதிலேயே தாம்பத்ய உறவுகள் அறுந்து போன மாமாவை, என்றுமே மனம் விட்டுச் சிரித்து பார்த்தறியாத மாமாவை நினைக்க இப்போதும் கூட, மாமா இறந்து 45 வருடங்கள் ஆகி விட்டன, மனத்தில் சோகம் கவிந்து விடுகிறது. பாட்டியின் சந்தோஷமான நாட்களையும் நான் பார்த்ததில்லை.

எனக்கு என்னமோ இவ்வளவு சோகங்களின் இடையிலும் என்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள பல விஷயங்கள் ஒன்றில்லாவிட்டால் ஒன்று கிடைத்துக் கொண்டு தான் இருந்தன. எனக்கு எது வேண்டும் என்று சுற்றியுள்ளவற்றில் நான் கண்டுகொள்வேன். தேடிக்கிடைப்பதல்ல. தானே நிகழ்வனவற்றில் நான் சந்தோஷப்பட்டுக்கொள்வேன். அப்படி என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் வீட்டுக்குப் பின் இருந்த தோட்டம். பின்னால் கொல்லை இருக்கும் அடுத்த வீட்டுக்கு, அதில் இருந்த முத்துசாமி அய்யர் தன் மூன்று வீடு களையும் விற்றுச் சென்ற பின்னர், நாங்கள் குடிபுகுந்தோம். அடுத்து இருந்த அந்த வீட்டில், ஒரு மொட்டை மாடியும் இருந்தது. அதில் மூன்றில் ஒரு பகுதியில் கூரை வேய்ந்திருந்தது. அது எனக்குப் பிடித்த இடம். அதோடு கொல்லைப் புறமும். அங்கே மூன்று கொய்யா மரங்கள், ஒரு நார்த்தை மரம், பின் ஒரு பெரிய முருங்கை மரம். மிகுந்த இடத்தில் கீரை, போடுவோம். இரண்டு விதமான அவரை, புடல் என்று ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் விதை விதைத்து பயிரிட்டு வந்தோம். பந்தல் கட்டியிருக்கும் அவற்றின் கொடி படர. சில சமயங்களில் எங்களுக்கு முன்னர் தெரிந்திராத சில காய்களும் பயிரிட்டோம். ஒன்று மூக்குத்திக்காய். மற்றொன்று தட்டவரை என்று பெயர் சொன்னார்கள். மூக்குத்திக் காயை அதற்குப் பின் நான் பார்த்ததில்லை. ஆனால் தட்டவரை அபூர்வமாக எப்போதாவது பார்ப்பதுண்டு. ஒரு அங்குல அகலமும் ஒன்பது பத்து அங்குல நீளமும் உள்ளது அது. நாலடி உயரம் வளரும் கீரைச் செடியும் ஒரு முறை பயிரிட்டிருந்தோம். இவ்வளவு உயரம் வளரும் கீரைச் செடியை எத்தனை பேர் பார்த்திருப்பார்களோ தெரியாது. அபூர்வம் தான். அதன் தண்டு மிக ருசியாக இருக்கும்.

தோட்ட வேலையில் பொழுதைப் போக்குவது எனக்குப் பிடித்திருந்தது. மண்ணைக்கொத்தி, உரம் இட்டு விதை விதைத்துவிட்ட பிறகு அது முளை விடுவதைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சந்தோஷமளிக்கும். ஒரு ஜீவன் வளர்வது, மண்ணைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் முளையைப் பார்க்க எனக்கு அதிசயமாக இருக்கும். என்னைப் பார்த்து புன்னகைப்பது போல உணர்வேன். உ.வே.சாமிநாத ஐயர் தன் குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்ட ஆரம்ப நாட்களைப் பற்றி எழுதியிருப்பார். பிள்ளையவர்கள் தினம் காலையும் மாலையும் தோட்டத்தைச் சுற்றி வருவார். அப்போது சாமிநாதய்யரும் அவருடன் சுற்றி வருவாராம். ஏதும் புதிதாக முளை விட்டிருந்தாலோ, அல்லது மொட்டு விடத் தொடங்கியிருந்தாலோ, 'இதோ, இதோ' என்று பிள்ளையவர்களுக்கு முன்னே சென்று பிள்ளயவர்களுக்குச் சொல்லுவாராம். பிள்ளைவர்களுக்கும் சாமிநாதய்யர் காட்டும் இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து மகிழ்வாராம். 'இதே போல முன்னாலேயே வந்து பார்த்து வைத்து எனக்கு சொல்லும்" என்று பிள்ளைவர்கள் சொன்னாராம். சாமிநாதய்யருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தனக்கு சந்தோஷம் அளித்தது பிள்ளையவர்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது என்று. ரொம்ப அற்ப விஷயங்களாக இவை பலருக்குத் தோன்றக் கூடும். பிள்ளையவர்களை சாமிநாதய்யர் காக்கா பிடிக்கும் சமாச்சாரம் இது என்று தமிழ் நாட்டு இன்றைய தலைமுறைகள் எண்ணக்கூடும். சாதாரணமான, இயற்கையுமான இந்த அற்பம் என்று தோன்றும் விஷயங்களை, வியக்க வைக்கும் நிகழ்ச்சிகளாக உணர்ந்து அனுபவிக்கக் கூடியவர்களுக்குத் தான் இந்த மகிழ்ச்சியின்
அனுபவம் கிடைக்கும்.

ஆனால் இந்த மகிழ்ச்சிகள் எனக்கு நிலக்கோட்டையை விட்டு நீங்கிய பிறகு, எனக்குத் திருபக் கிடைக்க வெகு ஆண்டுகள் ஆயின. 1981-ல் கிடைத்த அரசாங்க வீட்டின் முன்னும் பின்னும் தோட்டம் வைக்க சிறிய பூ மரங்கள் வளர்க்க வசதி கிடைத்தது. அது, நான் அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றதும் 1992-ல் அறுபட்டு பின்னர் நான் சென்னைக்கு வந்த பிறகு 2000-லிருந்து இப்போது தான் மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளையும் மரங்களையும் வீட்டின் sit out-ல் உட்கார்ந்தால் மனதுக்கு சந்தோஷம் தரும் காலைகளும் மாலைகளும்
கிடைத்துள்ளன.

நினைவுகளின் தடத்தில் - (9)

- வெங்கட் சாமிநாதன் -நான் அதிக நேரம் கொல்லைப்புறத்தில் தான் செலவழித்தேன் என்று சொல்ல வேண்டும். எனக்கு அது பிடித்திருந்தது. கொல்லையில் ஒரு போரிங் பம்ப் இருந்தது. அதிலிருந்து தான் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த வேலையும் தோட்ட வேலையில் அடங்கிவிட்டதால், பெரும்பாலும் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலையாகவே இருந்தது. நான் அதை ஒரு வேலையாகவே எண்ணவில்லை. அதுவும் விளையாட்டாகப் போயிற்று.

அங்கு மூன்று கொய்யா மரங்கள் இருந்ததென்று சொன்னேன். ஒரு வருடம் அது அமோகமாகக் காய்த்தது. பழங்கள் சாப்பிட்டு மாளாது. பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்தோம். நானும் என் பாட்டுக்கு தின்று கொண்டிருந்தேன். கொய்யாப் பழம் பறித்து தின்பது என்பது ஏதோ மாலையில் செய்யும் காரியம் என்றில்லை. பழமாயிற்றே. தோட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கொய்யாப் பழம் தின்பேன். மூச்சு விடுவது மாதிரி. அதற்கு என ஒரு நேரம் காலம் உண்டா என்ன? யாரும் கண்டு கொள்ளவில்லை. "பையன் தோட்டத்தைப் பாத்துக்கறான் நன்னா" என்ற ஒரு எண்ணத்தை அவர்கள் மனத்தில் வைத்தாயிற்று. பின் யார் தடை சொல்வார்கள்?

காலையில் பழையது சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனால், மத்தியானம் சாப்பாட்டுக்கு வீடு வந்துவிடுவேன். பசங்களும் வாத்தியார்களும் சரி, அப்படித்தான். அனேகமாக எல்லோருக்கும் மத்தியானம் வீடு போய்த் தான் சாப்பாடு. அன்று எப்போ மத்தியான மணி அடிப்பார்கள், வீட்டுக்குப் போகப் போறோம் என்பதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று பாட்டி வெங்காய சாம்பார் பண்ணியிருப்பாள். எனக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டியிடம் கேட்டு நச்சரித்திருந்தேன். "சரிடா இன்னிக்கு பண்ணிவைக்கறேன் ஸ்கூலுக்குப் போ," என்று பாட்டி அலுத்துக் கொண்டே சொல்லியிருக்கிறாள்.

பாட்டிக்கு கிழங்குகள், வெங்காயம் எல்லாம் ஒதுக்கப்பட்டவை. சாப்பிடமாட்டாள். இங்கிலீஷ் காய் கறிகள் இல்லையா! வைதீக குடும்பத்தில் ஒரு விதவை இதையெல்லாம் சாப்பிடமாட்டாள். கிழங்குகளோ இல்லை வெங்காயமோ சமையலில் சேர்ந்தால், பாட்டி அதில் எதையும் தொடமாட்டாள். ரசமும் மோரும் மாத்திரம் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவாள். ஒரு வேளை சாப்பிடுவாள். காலையில் கா·பி. பின் மத்தியானம் சாப்பாடு. பின் ராத்திரிக்கு தோசையோ ஏதோ சாப்பிடுவாள். அவ்வளவு தான். இப்போது தான் நினைத்துக் கொள்வேன். ஏன் அப்படி யெல்லாம் பிடிவாதம் பிடித்தோம் என்று. இப்போது நினைத்து என்ன பயன்? அப்போது என் ருசியும் நாக்கும் தான் எனக்குப் பெரிதாக தெரிந்தது. எனக்கு மாத்திரம் இல்லை. மாமா ஒன்றும் கேட்க மாட்டார். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் வெங்காய சாம்பாரோ மற்றதோ சமைத்தால் குஷி தான். சிறிசுகள் இவ்வளவு பேருக்கு பிடிக்கிறதே, குழந்தைகள் தான் நாங்கள் மூன்று பேர், எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது பெரிய சின்ன மாமாவையும் சேர்த்தால் ஐந்து பேர்கள் சிறிசுகள் ஆசைப்பட்டு சாப்பிடறதை, தான் சாப்பிடக்கூடாது என்பதற்காக சமைக்காமல் இருப்பதா என்று பாட்டிக்கு ஒரு ஆதங்கம் வருத்தும்.

எப்போடா மணி அடிக்கும் என்று காத்திருந்தேனே ஒழிய, எனக்கு சுரம் வந்து விட்டது. எப்படியோ வீட்டுக்கு வந்ததும் படுத்துக் கொண்டு விட்டேன். பாட்டி என்னை, எங்களைத் தொடமாட்டாள். தொட்டால் குளிக்க வேண்டும். என்னடா பண்றாது? என்று கேட்டு படுத்திருக்கும் என் முனகலையும், பார்த்து சுரம் என்று தெரிந்து கொண்டு விட்டாள். அடுத்த சில நிமிஷங்களில் வந்த மாமாவிடம், "சுரம் போலே இருக்குடா சுப்புணி, பாரு" என்றாள். மாமா தொட்டுப் பார்த்துவிட்டு 'சுரம் தான், உடம்பு கொதிக்கிறது" என்றார். அன்று பூராவும் பாட்டி அரற்றிக்கொண்டே இருந்தாள். "ஆசையா வெங்காயம் போட்டு சாம்பார் வையின்னு சொன்னான். பாரு, சாப்பிடக் கொடுத்து வக்கலை." என்று. "அவன் என்னமோ கொள்ளை போறாப்பல மரத்திலே இருக்கற கொய்யாப் பழத்தை, கொஞ்ச நஞ்சமாவது விட்டு வச்சாத்தானே, எப்போ பாரு வாயிலே கொய்யப்பழம். உடம்பு என்னத்துக்காகும்? சுரம் வராம என்ன செய்யும்?." என்று சத்தம் போட்டார். "சரி போறது போ. சுரத்திலே அவனை ஒண்ணும் சொல்லாதே" என்று பாட்டி சமாதானப் படுத்தினாள்.

தனக்கு மறுக்கப்பட்டது எதுவும் குழந்தைகளுக்கும் ஏதோ காரணத்தால் கிடைக்காமல் போவதை பாட்டியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அந்த நாள், இப்படி பல சம்பவங்கள், எனக்கு திரும்பத் திரும்ப மனதில் அலையோடு. அத்தோடு உடனே இன்னும் பல காட்சிகள் நிழலாடும். மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காலையில் சாப்பிட்டுவிட்டுப் போனபிறகு மத்தியானம் சாப்பாட்டுக்கு வடக்கு வெளி வீதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருவேன். "படிக்கிற பையன், சின்ன வயசு, மத்தியானம் வந்து கொஞ்சம் மோரைப் போட்டு சாப்பிட்டுப் போகட்டும். அதுக்கு நீங்க ஒண்ணும் கொடுக்க வேண்டாம்" என்று ஹோட்டல் மானேஜர் தானே, மாமா கேட்காமலே சொல்லியிருந்தார். அந்த ஹோட்டல் சிம்மக்கல் வருவதற்கு கொஞ்சம் முன்னாலே இருந்தது. ஆக, நடை கொஞ்ச நீள நடை தான். பாதி வழியில் ஒரு வீட்டின் முன்னே லாரி ஒன்று நின்றிருந்தது. அதைச் சுற்றிக் கூட்டம். வீட்டு வாசலில் ஒரு விதவைப் பாட்டி கதறிக் கொண்டிருந்தாள். " குழந்தை சாப்பிட வரணுமே இன்னம் காணலியே காத்திண்டிருந்தேன். இப்படி குழந்தைய பிணமாக் கொண்டு சேத்திருக்கேளே" என்ற அவள் கதறல் எனக்கு இன்னும் மறக்கவில்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் ஒன்றையொன்று சங்கிலி போல் தொடர்ந்து மனதில் நிழலாடிச் செல்லும்.

அவர்கள் துக்கம் சிறு வயதில் நமக்கென்ன தெரியும். பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அது எனக்கு வயதான பிறகு தான் தெரிகிறது. அப்போது பாட்டியை சில சமயம் வருத்தியுமிருக்கிறேன். "ஏண்டா இப்படி படுத்தறே" என்று திட்டுவாள். சில சமயம் "நீ நாசம த்துத் தான் போவே" என்பாள். அப்போது அது வசவாகத்தான் என் காதில் விழும். இப்போது அந்த "நாசமத்து" என்ற வசவை அவர்கள் எப்படிக் கற்றார்கள்? எப்படி அசாத்திய கோபத்தில் கூட "நாசமத்து" என்று வார்த்தைகள் விழுகின்றன என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.

பாட்டிக்கு கா·பி இல்லாமல் ஆகாது. காலையிலும் சாயந்திரமும் கா·பி சாப்பிடவில்லையென்றால் பாட்டிக்கு தலைவலி வந்துவிடும். கா·பிக்கு மாத்திரம் விதி விலக்கு எப்படி வந்தது? என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இப்போது ஒரு வயதான விதவையிடம் அந்தமாதிரி யெல்லாம் கேட்க மாட்டோம். அவர்கள் தமக்கு மறுத்துக்கொண்டுள்ளது எத்தனையோ. சின்ன வயதில் கேட்டிருப்பேன் அப்போது ஆனால் அந்த மாதிரி சிந்தனையெல்லாம் செல்லவில்லை. பாட்டி ஏன் வெங்காயம் சாப்பிடமாட்டாள்? என்றெல்லாம் அப்போது ஆராயத் தோன்றவில்லை. என்னமோ அவளுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவே விஷயம்.

இப்போது நினைத்துப் பார்க்கும் போது பாட்டிக்கு கா·பி பழக்கம் எப்போது எப்படி ஏற்பட்டது என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. மாமா கும்பகோணம் காலேஜில் எ·ப் ஏ பரி¨க்ஷ எழுதிக்கொண்டிருக்கும் போது, தாத்தா இறந்துவிட்டார் என்று சொல்லி ஒரு ஆள் போய் அவரை சுவாமி மலைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மாமா எ·ப் ஏ பரி¨க்ஷ எழுதினார் என்றால் அது அவரது 18 வது வயதில் இருக்கும். மாமா 1910-ல் பிறந்தவர். ஆக பாட்டி விதவையான வருடம் 1928 என்று ஒரு உத்தேசக் கணக்கு போடலாம். ஆக 1928-க்கு முன்னாலேயே கா·பிக்கு தமிழ் நாட்டுக் குடும்பங்கள் அடிமையாகி விட்டன போலும். 1921- மறைந்த பாரதி கா·பி பற்றிப் பேசவில்லை. உ.வே.சா பேசவில்லை. அவர்கள் கா·பி சாப்பிட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை.

1950-ல் நான் ஹிராகுட் போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது அனேகமாக ஒரு பழங்குடி இனத்தவர் கணிசமாக வாழும் பகுதி. பஞ்சாபிகள் தான் அணைக்கட்டு வேலைக்கு வந்து சேர்ந்தனர் அதிக அளவில். அவர்களுக்கும் அப்போது டீயோ கா·பியோ என்னவென்று தெரியாது. அவர்கள் வீட்டுக்குப் போனால், பால் சூடாக கொடுப்பார்கள் அல்லது தயிரைக் கெட்டியாகக் கரைத்த லஸ்ஸி கொடுப்பார்கள். "பாலா, லஸ்ஸியா என்ன சாப்பிடுவீர்கள்?" என்று தான் அப்போதெல்லாம் உபசரிப்பார்கள். அப்போதுதான் எங்கள் காலனியில் ஒரு வானில் டீ போர்டு ஆட்கள் வந்து ஆங்காங்கே வண்டியை நிறுத்தி எல்லோருக்கும் சூடாக டீ போட்டுக் கொடுப்பார்கள். இலவச மாகத் தான். அது ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்தது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கப் படுத்தி விட்டால், பின்னால் தானே வாங்க வருவார்கள் என்று அந்த ப்ரமோஷன் காம்ப்பெய்ன் நடந்தது. இப்போது யார் வீட்டிலும் டீ தான் சாப்பிடக் கொடுப்பார்கள். லஸ்ஸி, பால் உபசாரம் செய்யும் காலம் போய்விட்டது.

அப்படி ஏதும் பிரசாரம் கா·பிக்கு நடந்ததாகத் தெரியவில்லை. அதிலும் கா·பிக்கு தென்னிந்தியர்கள் எப்படி பழக்கமானார்கள், வட இந்தியர்கள் டீ பிரியர்களானார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். இதிலும் வடக்கு தெற்கு வித்தியாசங்கள் இருக்குமோ என்னவோ 1967-க்கு முன்னால் திராவிட கழகத் தலைவர்களைக் கேட்டிருக்கவேண்டும். இப்போது அவர்கள் வடக்கு தெற்கு என்று பேசுவதில்லை.

நினைவுகளின் தடங்கள் -(10)

- வெங்கட் சாமிநாதன் -முத்துசாமி ஐயர் என்ற முதியவரிடமிருந்து அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகளை அனந்தய்யர் குடும்பத்தவர் வாங்கியது பற்றிச் சொன்னேன். அதன் பிறகு தான் அந்த வீடுகளில் ஒன்றிற்கு நாங்கள் முன்பு பேட்டைக்கு எதிரிலிருந்த வீட்டிலிருந்து மாறி இந்த புதிய வீட்டுக்குக் குடிபுகுந்தோம். ஒரு பெரிய வீடு வடக்கே பார்த்து இருக்கும். அதை அடுத்து ட வடிவிலான அந்தத் தெருவில் இரு கோடுகள் இணையும் புள்ளியில் நாங்கள் புதிதாகக் குடிவந்த வீடு இருந்தது. அதற்கு அடுத்த வீட்டில் முத்து சாமி அய்யர் கொஞ்ச நாளைக்கு இருந்தார். அவர் தனிக்கட்டை. அவர் குடும்பத்தையோ அவர் மனைவியையோ பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. வயதானவர். அப்போது அவருக்கு வயது 60-65 இருக்கும். சட்டையோ பனியனோ போடாத பஞ்சகச்சம் கட்டிய சர்தார் படேலை மனத்தில் கற்பித்துக் கொள்ள முடியுமானால் அவர்தான் முத்துசாமி ஐயர். அவர் என்ன செய்தார், வீட்டை விற்று எங்கே போனார், அந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தார்? என்பதெல்லாம் வெட்டிப் பொழுதில் குருட்டு யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது தோன்ற வேண்டிய கேள்விகள். அப்போது நடந்த பல விஷயங்கள் இப்போது நினைத்துப் பார்க்கும் போது புதிர்களாக உருமாறி சிரிக்கின்றன.

முத்துசாமி ஐயர் அந்த வீட்டை விற்றுவிட்டு நிலக்கோட்டையை விட்டுப் போனதும் நாங்கள் அடுத்து இருந்த அவர் காலி செய்த வீட்டுக்கு மாறினோம். அதில் சில சௌகரியங்கள் இருந்தன. பின்னால் பெரிய தோட்டம். மேலே பெரிய மொட்டை மாடி. அதில் மூன்றில் ஒரு பங்கு கூரை வேய்ந்திருக்கும். முன்னிருந்த வீட்டில் திண்ணைக்கு மேலே தகரம் வேய்ந்திருந்தது. இந்த வீட்டிம் கூரைக்கு மங்களூர் ஓடு. அது சூட்டைக் கொஞ்சம் தணிக்கும் கடைசியாக பெரிய லாபம், அங்கு பின்னால் போரிங் பம்ப் இருந்தது. கோடை காலங்களில் அங்கு தண்ணீருக்கு பஞ்சம். குளம் வற்றி விடும். எங்கள் வீட்டுக்கும் குளத்துக்கும் இடையே இருந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தது. அந்தத் தெரு வாசிகளுக்கு பொதுவான கிணறு அது. குளத்தில் நீர் வற்றி விட்டால், கிணற்றிலும் தண்ணீர் வற்றி விடும். போரிங் பம்பிலும் தண்ணீர் வராது தான். அதுவும் வற்றி விடும். ஆனால் மற்ற நாட்களில் குடிக்கவும் சமையலுக்கும் மாத்திரம் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து வந்தால் போதும். அதையும் பாட்டி தான் செய்வாள். அவளால் முடியாது. இருப்பினும் தன் ஆசாரத்தை விட்டுக் கொடுக்க இஷ்டம் இல்லை அவளுக்கு. கடும் கோடை காலங்களில் கிணற்றில் நீர் வெகு ஆழத்தில் ஒரு சிறு குட்டையாக சிறுத்து விடும். குடத்தை இறக்கி நீர் மொள்ள முடியாது. ஒரு செம்பைத் தான் தாம்பு கயிற்றில் இறக்கி நீர் மொள்ள வேண்டியிருக்கும். சில நாட்கள் காலை நாலு மணிக்கு எல்லோருக்கும் முன் எழுந்து கிணற்றில் ஊறியிருக்கும் நீரை எடுத்து வந்துவிடுவோம். ஒரு குடம் நிரம்பும். வீட்டில் இருக்கும் செம்பு, டபரா, டம்ளர் எல்லாத்திலேயும் நீர் நிரப்புவோம். நாங்கள் குளிக்க பேட்டைக் கிணறுக்கோ அல்லது சத்திரத்துக் கிணறு ஒன்று ஒரு ·பர்லாங்கு தூரத்தில் இருக்கும். அதற்கோ போவோம். நாங்கள் காலை நாலு மணிக்கே எழுந்து கிணற்றில் ஊறியிருந்த தண்ணீரை எடுத்து வந்துவிட்டோம் என்று பார்த்த மற்றவர்கள், மறு நாள் காலை மூன்றரை மணிக்கு எங்களுக்கு முன் எழுந்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கப் போய்விடுவார்கள். எங்களுக்குத் தண்ணீர் இராது. மாமா, நான், சின்ன மாமா எல்லோரும் ஆளுக்கு ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு சத்திரத்துக் கிணற்றுக்கு ஓடுவோம். அந்தக் கஷ்டத்தில் எல்லாம் பாட்டி ஒரு தடவை கூட தன் சுவாமிமலை நாட்களைச் சொல்லி இப்போதைய வாழ்க்கையைப் பழித்தது கிடையாது. தஞ்சை ஜில்லாவில் ஆற்றில் நீர் வந்து விட்டால், எந்த வீட்டுக் கிணற்றிலும் தண்ணீர் மட்டம் மேலெழுந்து விடும். ஐந்தடி அல்லது ஆறடி ஆழத்துக்கு மேல் தாம்புக் கயிறு கிணற்றுக்குள் இறங்க வேண்டியிராது. 'கைக்கு எட்டறாப்பலேன்னா இருக்கு" என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் இப்போது முற்றாக மாறிவிட்டது. தஞ்சை ஜில்லா உடையாளூரும் நிலக்கோட்டை ஆகிவிட்டது.

புதிதாகக் குடி மாறிய வீட்டில் மேலே இருந்த மொட்டை மாடி எங்களுக்குப் பிரியமான இடம்.(அது ஒன்றும் தனியாகக் கட்டப்பட்ட வீடு இல்லை. ஒரே வீட்டின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு இரண்டு வீடுகளாக ஆக்கப்பட்டிருந்தது). அந்த மொட்டை மாடி இப்போது எங்களுக்கே யானது. அந்த மொட்டை மாடியின் கூரை வேய்ந்திருந்த பாதி எங்களுக்கு அவ்வப்போது விளையாட்டிடமாகியது. அதில் என்னென்னவோ பழைய சாமான்கள் எல்லாம் ஒர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அது எங்களது இல்லை. முத்துசாமி ஐயர் காலி செய்யும் போது 'இதெல்லாம் என்னத்துக்கு" என்று விட்டு விட்டுச் சென்றவை. திறந்து கிடக்கும் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் நாலா பக்கமும் விரிந்திருந்த நிலக்கோட்டையின் அந்தப் பகுதியைக் காணலாம். நிலக்கோட்டைக்கு பெயர் தந்த இடிந்த சுற்றுச் சுவர் கொண்ட கோட்டை அதன் நடுவில் தெரியும் உயர்ந்த ஜமீந்தார் மாளிகை. இன்னொரு பக்கம் பிள்ளையார் கோவில். அதை ஒட்டிய பேட்டை அதன் சுற்றுச் சுவர். இன்னொரு பக்கம் குளம். பெரியகுளம்- மதுரை ரோடு. அணைப்பட்டி ரோடில் இருக்கும் சனிக்கிழமைச் சந்தை. பின் பஸ் ஸ்டாண்ட். டிவிஎஸ் பஸ் நிறுத்தப்பட்டிருக்கும் கொட்டகையை மறைத்து நிற்கும் கொடைக்கானல் மோட்டர் யூனியன் பஸ் ஒன்றின் முன் நின்று ஒரு கம்பியை நுழைத்து அதை பலமாகச் சுற்றினால்தான் என்சின் ஸ்டார்ட் ஆகும். கரி வண்டி தான் அந்நாட்களில். பெட்ரோல் கிடைப்பது அரிது. இதெல்லாம் மாடியிலிருந்து காணும் காட்சிகள். மாடியிலிருந்து கீழே இறங்கினால், மாமி கேட்பாள்: "மதுரை வண்டி கிளம்பிடுத்தாடா," என்று. மாடியிலிருந்தே பெரிய குளம், மதுரை போகும் எந்த வண்டி தயாராக இருக்கிறது, எது போய் விட்டது, மதுரை வண்டியானால், அது சோழவந்தான் போய் போகும் வண்டியா?, இல்லை, கொடைரோடு போய் போகும் வண்டியா? போன்ற உபரி தகவல்கள் எல்லாம் மாமிக்கு வேணும். மாமி மதுரை போகிறாள் என்றால், வண்டி வந்துவிட்டதா, கிளம்பப் போகிறா என்ற விஷயங்களை மாமி எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள் என்றால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்.

அந்த மாடி கீற்றுக் கொட்டகையடியில் எனக்கு இன்னும் சில அதிசயங்கள் காத்திருந்தன. அது பின்னர், முத்துசாமி ஐயர் நிலக்கோட்டை விட்டுப் போய் ஓரிரண்டு வருஷங்கள் ஆனபிறகு தான் தெரிந்தது. ஒரு நாள் யதேச்சையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றைக் குடைந்த போது சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றைப் புரட்டியதில் அவற்றை நானும் படிக்கலாம் போலவும் தோன்றியது. எனக்கேற்ப எளிமையாக, சுவாரஸ்யமாக இருந்த புத்தகங்கள் அவை. அப்போது எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். ஒன்று வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். இரண்டாவது ஆர். கே.நாராயணனின் சுவாமியும் சினேகிதர்களும். அப்போது அவை எனக்கு சுவாரஸ்யமான, வேடிக்கையான கதைகள். பின்னால் தான் இவை பெரிய தலைகள் எழுதியவை என்று தெரிந்து கொண்டேன். பிரதாப முதலியார் சரித்திரத்தில் சிரிப்பூட்டும் நிறைய உப கதைகள் இருந்தன. ஒன்று, "ஏண்டா பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்படி அடிக்கிறாய்,? என்று வழியில் போகிறவர் கேட்க, "அது என் மாடோ, கழுதையோ என்னது, நான் என்னவெல்லாம் செய்வேன். நீ யார் கேட்பதற்கு?" என்று பதில் வரும். கேட்டவருக்கு கோபம் வரும். மாட்டை அடித்தவனை இவர் ஒரு கழியால் நாலு சாத்து சாத்துவார். '"இது என் கழி. என் கை. இதை நான் என்ன வேணுமானாலும் செய்வேன். நீ யார் கேட்பதற்கு?" என்று சொல்வார். சுவாமியும் சினேகிதர்களும் புத்தகத்தில், சுவாமிநாதன் தன் சினேகிதனை விளையாடக் கூப்பிடுவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போய் கூப்பிடுவான். இன்ஸ்பெக்டர் பையனுக்கு உடனே ஓடி சுவாமிநாதனோடு விளையாடப் போகணும் என்று ஆசை தான். ஆனாலும் தன் அப்பா தன் வீட்டுக்கு வருகிறவர்களைக் காக்க வைப்பது போல, தானும் செய்து பெரிய மனுஷனாக வேண்டும் என்று ஒரு ஆசை. கதவுக்கு பின்னால் நின்றுகொண்டுகொள்வான். அப்படிக் காக்கவைக்க அவனுக்கே பொறுமை யிராது. நகத்தைக் கடித்துக் கொண்டு நிற்பான். அப்பா மாதிரி செய்யவேண்டுமே.

என் சின்ன மாமா, அவர் பெயரும் சுவாமிநாதன் தான். எங்கிருந்தோ கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் கொண்டு வருவார். வீட்டில் அதுவெல்லாம் வாங்குவது கிடையாது. கட்டி வராது. படிப்பது நானும் சின்ன மாமாவும் தான். இடையில் அம்பி வாத்தியார் வந்து சின்ன மாமாவிடம் என்ன பத்திரிகை இருக்கு? என்று கேட்டு அவரும் வாங்கிப் போவார். அவரும் தான் வாங்கி வந்ததை சின்ன மாமாவுக்குக் கொடுப்பார். நான் இப்படி வருவதையெல்லாம் படித்து விடுவேன். அப்போது கல்கியில் பார்த்திபன் கனவு தொடராக வந்து கொண்டிருந்தது. சின்ன மாமாவும் அம்பி வாத்தியாரும் ரொம்ப சுவாரஸ்யமாக கல்கி கதையைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். நான் அவர்களோடு சேரமுடியாது. சின்ன பையன். ஆனந்த விகடனில் எஸ்.வி.வி. எழுதிக்கொண்டிருந்தார். 'குருவிக்காரிச்சி' என்றோ என்னவோ
ஒரு கதை இருந்தது. தலைப்பு தான் நினைவில் இருக்கிறது. கதை நினைவில் இருப்பது ஒரு வயதான தம்பதிகள் சென்னை கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். இருவருக்கிடையே ஒரு ஒட்டுதல். அந்த வயதில் ஒட்டுதலுக்கு என்ன காரணம் என்று கேட்டுக்கொண்டு இரண்டு பேரும் இவ்வளவு வருஷமாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்களே, பழகியிருக்கிறார்களே, அது போதாதா? என்றோ என்னவோ எஸ்.வி.வி இடையில் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி நினைவுகள். இதெல்லாம் சரிதானா என்று சரிபார்க்கவோ திரும்ப படிக்கவோ நேர்ந்ததில்லை.

ஆனந்த விகடன் தீபாவளி மலர் ஒன்றில் மாலியின் கேலிச்சித்திரம் பக்கம் முழுதையும் அடைத்துக்கொண்டு பெரிதாக இருந்தது நினைவில் இருக்கிறது. ஒரு பெஞ்சில் பெரியவர் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டு இருப்பார். பக்கத்தில் அவர் மனைவி நின்றுகொண்டிருப்பாள். ஒரு பிச்சைக்காரன் அவர் முன்னால் பாடுவான்: "ஈசனை சிவகாமி நேசனை, நினைந்து கொல்லுவாய் மனமே" என்று பாடுவான் என்று நினைக்கிறேன். அதற்கு பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர் அட்டகாசமாகச் சிரிப்பார். "அப்பா நீ நல்லாச் சொன்னே. முதல்லே அவனை கொன்னு போட்டியானா, அப்புறம் ஒரு வம்பிருக்காது பாத்துக்க" என்று சொல்லிக் கடகடவென்று சிரிப்பதாக இருக்கும் அந்த சித்திரம்.

நிலக்கோட்டையில் ஓடையைத் தாண்டினால் ஒரு பார்க் இருக்கும். அதில் ஒரு ரேடியோவும் ஒலிபெருக்கியும் இருந்தது. சாயந்திரம் அங்கு போனால் திருச்சி வானொலியிருந்து வருவதையெல்லாம் கேட்கலாம். மாலை நேரம் மாத்திரம் தான். அத்தோடு அடுத்து அதை ஒட்டியிருந்த ஒரு வட்ட அறையில் பத்திரிகைகள் ஒரு மேஜையில் பரப்பியிருக்கும். என்ன பத்திரிகைகள் வரும் என்று எனக்கு நினைவில் இல்லை. அப்போதெல்லாம் தினசரி செய்திப் பத்திரிகைகள் படிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றியதில்லை, ஆனால் வேறு என்னென்னவோ பத்திரிகைகள் எல்லாம் இருக்கும் அவற்றில் நிறைய படங்கள் இருக்கும். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலம். அந்த பத்திரிகைகளில் ஒரே போட்டோக்களாக இருக்கும். சிப்பாய்கள், டாங்கிகள், ஏரோப்ளேன்கள் என்று. படங்களைப் பார்ப்பேன். வேறு ஒன்றும் படிக்க எனக்கு சுவாரஸ்யமாக எதுவும் இராது. ரேடியோவில் பாட்டு கேட்கலாம். ஒரு சமயம் தியாக ராஜ பாகவதரின் ரேடியோ நாடகம் ஒன்று ஒலிபரப்பாகியது. சில சமயங்களில் ஒரு குள்ள ஜப்பானியனின் சித்திரம் வரைந்திருந்த போஸ்டர் ஒட்டியிருக்கும். "இவன் நம் எதிரி. இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றோ என்னவோ தமிழில் எழுதியிருக்கும். அவன் நிலக்கோட்டைக்கு வருவானா என்று யோசனை தோன்றும் எனக்கு. "எங்கேடா சுத்திட்டு வரே" என்று பாட்டி சில சமயம் கோவித்துக்கொள்வாள். "பார்க்குக்கு போய் ரேடியோ கேட்டுட்டு படிச்சுட்டு வரேன்" என்பேன். பாட்டி சமாதானம் அடைந்து விடுவாள்.

பாட்டிக்கு நாங்கள் எல்லாம் நன்றாகப் படிக்கவேண்டும். பெரிய சர்க்கார் வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசை. ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வாத்தியாராகப் போய்விடக்கூடாது என்பதில் அவள் வெகு தீர்மானமாக இருந்தாள். அதை அடிக்கடி சொல்லுவாள். பாட்டி படித்ததில்லை. பள்ளிக்குப் போனதே இல்லை. தமிழ் கூடப் படிக்கத் தெரியாது. பாட்டி ஆசைப் பட்டாளே தவிர அது என்னவோ நடப்பதாக இல்லை. சின்ன மாமா வத்தலக்குண்டு போய் அங்கு தான் ஒரு ஹைஸ்கூலில் படித்து வந்தார். நிலக்கோட்டையில் எட்டாவது வரை தான் படிக்கமுடியும். மேலே படிக்க கிட்ட இருந்த ஹைஸ்கூல் ஆறு மைல் தூரத்திலிருந்த வத்தலக்குண்டு தான். ஆனால் மாமா ஸ்கூல் ·பைனலில் பாஸாகவில்லை. மறு படியும் படித்து பரிட்சை எழுத வேண்டும். எல்லாரும் சின்ன பையன்களாக இருக்கிறார்கள். நான் வேறு எங்காவது தான் படிப்பேன். வத்தலக்குண்டு க்குப் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். வீட்டில் ஒரே ரகளை. மாமாவால் அம்மாதிரியெல்லாம் செலவு செய்ய முடியாது. இருந்தாலும், கடைசியில் மதுரையில் சின்ன மாமாவையும் என்னையும் சேதுபதி ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். நான் ஒன்பதாவது வகுப்பில். சின்ன மாமா பதினொன்றாவது வகுப்பில். சிம்மக்கல்லில் வைகை ஆற்றுக்குப் போகும் வழியில் ஒரு சின்ன அறை வாடகைக்கு எடுத்து எங்களுக்குப் பாட்டி சமைத்துப் போட நாங்கள் ஒரு வருஷம் மதுரையில் படித்தோம்.

இடையில் ஓரிரு மாதங்கள் தான். கோடை விடுமுறையில் என்று நினைக்கிறேன். சின்ன மாமாவுக்கு ஒரு சர்க்கார் உத்தியோகம் கிடைத்தது. நிலக்கோட்டையில் இருந்த ஒரு அக்ரிகல்சர் இன்ஸ்பெக்டர் ஆபீஸில் அட்டெண்டர் வேலை. அது என்ன வேலை என்று இன்னமும் எனக்குப் புரிந்ததில்லை. சின்ன மாமாவுக்கு சர்க்கார் வேலை கிடைத்ததில் பாட்டிக்கு பரம சந்தோஷம். வேலைக்குச் சேர்ந்த அன்றோ அல்லது மறுநாளோ, தன் பிள்ளை சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதைப் பார்க்க வேண்டும் என்று பாட்டிக்கு ஆசை. ஆனால் அப்படியெல்லாம் பாட்டி ஆபீஸ¤க்கெல்லாம் போக முடியுமா என்ன? அதற்கு அடுத்த உபாயம், என்னைக் கூப்பிட்டு, "உனக்கு ஆபீஸ் தெரியுமோல்யோடா. போய் சாமா என்ன பண்றான்னு பாத்துட்டு வாடா," என்று சொன்னாள் பாட்டி. நானும் போனேன். ஆபீசுக்குள் எல்லாம் நுழைய முடியுமா என்ன? ரோடில் நின்று கொண்டே பார்த்தேன். வாசலைப் பார்த்த முன் அறையில் ஜன்னல் வழியாக சின்ன மாமா உட்கார்ந்திருந்தது தெரிந்தது. ஓடிப் போய் பாட்டியிடம் சொன்னேன். 'சரிடா என்னடா பண்றான்னு பாக்கலையா? என்று கேட்டாள் பாட்டி. "அதெப்படிம்மா தெரியும்? வாசல்லே பாத்தேன். வேலை பண்ணீண்டு இருக்கா மாமா? என்றேன். பாட்டிக்கு திருப்தியாயில்லை. "போடா, ஒரு காரியத்துக்கு துப்பில்லை உனக்கு?" என்று சலித்துக் கொண்டாள்.

எனக்கு துப்பில்லை என்று பாட்டி சலித்துக் கொண்ட இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. மாமாவுக்கு ஒரு தபால் கார்டு வந்தது ஒரு நாள். மாமா வீட்டில் இல்லை. பாட்டிக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென்று பல விஷயங்கள் இருந்தன. "கார்டிலே என்ன எழுதியிருக்கு?" என்று கேட்டாள். படித்துச் சொன்னேன். "இங்கிலீஷ்லே எழுதியிருந்தா படிக்கத் தெரியுமாடா? என்று கேட்டாள். "'ஊம் படிப்பேனே, இதிலேயே அட்ரஸ் இங்கிலீஷிலே தானே எழுதியிருக்கு," என்றேன். 'அப்படியா', என்று பாட்டிக்கு சந்தோஷம். "அப்போ படிடா. பாக்கலாம்" என்றாள் நான் படித்தேன். "எஸ். ஆர். சுப்பிரமணிய அய்யர், ஹெட் மாஸ்டர், சௌராஷ்டிரா ஹையர் எலிமெண்டரி ஸ்கூல், நிலக்கோட்டை" இங்கிலீஷ்லே படிடான்ன, தமிழ்லேன்னாடா படிக்கறே" என்று பாட்டி கோபித்துக் கொண்டாள். பாட்டி ஹெட் மாஸ்டர், ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்" என்றெல்லாம் தான் எல்லோரும் சொல்லக் கேட்டு வந்ததால் அதெல்லாம் தமிழ் தான் என்று நினைத்துக் கொண்டாள். வேறு எவ்விதமாகவும் யாரும் சொல்லி அவள் கேட்டதில்லை.

நினைவுகளின் தடத்தில் - 11

- வெங்கட் சாமிநாதன் -பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தப் பிரியத்தின் காரணமாகத்தான் என்னை நிலக்கோட்டைக்கு தன்னுடன் அழைத்து வந்துவிட்டாள். மிகச் சிறிய வயதிலேயே. என் நினைப்பு, எனக்கு இரண்டு வயது சிறியவளான என் தங்கை பிறந்த பிறகு, என்னைப் பாட்டி தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்திருப்பாள் என்று. இல்லையெனில் பாட்டிக்கும் என்னைப் பிரித்து அழைத்துக்கொண்டுவர மனம் இருந்திராது. என் அம்மாவும் அப்பாவும் அதற்குச் சம்மதித்திருக்கமாட்டார்கள். இதெல்லாம் என் யூகம் தான். இப்போது இதை எழுதும் போது எழும் யூகங்கள். நான் இதுபற்றியெல்லாம் அப்போதும் சரி, பின்னரும் சரி சிந்தித்ததும் இல்லை. யாரிடமும் கேட்டதும் இல்லை. உடையாளுரில் படிக்க வசதி ஏதும் இல்லையாதலால், ஒன்றாம் வகுப்பு படிக்கக் கூட பள்ளிக்கூடம் இருந்ததில்லை, அதற்கு மூன்று மைல் கப்பி ரோடில் மாட்டு வண்டியில் சென்றடையக்கூடிய வலங்கிமான் போகவேண்டும். கும்பகோணத்திற்குப் போக முடியாது. வயல் வரப்புகளின் மீது நடந்து மூன்று ஆறுகளைக்கடந்து தான் கும்பகோணம் போக முடியும்.

மாமாவுக்கு என் படிப்பில் மாத்திரம் இல்லை, பள்ளிப் பையன்கள் எல்லோரும் நல்லபடியாக படித்து பரிட்சையில் பாஸ் செய்யவேண்டுமே என்கிற கவலை அதிகம். அதில் தான் தனக்கும் நல்ல பெயர். தான் தலைமை ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கூடத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும். நான் அப்படி ஒன்றும் பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரப் பையன் இல்லை. ஒண்ணாங்கிளாஸில் கடைசி வரிசையில் வாத்தியாருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டு வகுப்புக்கு வெளியே இருந்த வேப்ப மரத்தின் காக்கைகளையும் குருவிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாரிமுத்து வாத்தியார் கை என் பின் மண்டையைத் தாக்கியது. வகுப்பு பூராவும் சிரித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. மாரிமுத்து வாத்தியாரும் சிரித்தார். அன்று எனக்கு மிகுந்த கோபம். வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் என் சின்ன மாமாவும் நானும் சேர்ந்து வரும்போது சின்ன மாமாவுடன் எனக்குச் சண்டை. சின்ன மாமாவிடமிருந்த ஏதோ ஒரு படத்தை எனக்கு வேண்டுமென்று நான் அடம் பிடிக்க சண்டை, அழுகை, அடி எல்லாம் வரிசையாகக் கிடைத்தன. அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் போது மாரிமுத்து வாத்தியார், "இந்தா இது உனக்குத் தான் மாமாகிட்டே கொடுத்துராதே" என்று சொல்லி ஒரு படத்தை எனக்குக் கொடுத்தார். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அது ராமர் வனவாசத்தின் போது லட்சுமணனும் வானரங்களும் புடைசூழ்ந்திருக்க அனுமனிடமோ அல்லது சுக்ரீவனுடனோ ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அல்லது அவர்கள்தான் ராமனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ.

நான் ஒன்றும் மோசமில்லை. அந்த சின்ன வகுப்புகளை ·பெயிலாகாது கடந்து தான் வந்திருக்கிறேன். அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த வாத்தியார்களில், நிறைய கட்டுக்குடுமியோடு இருந்த மூக்கையா வாத்தியாரை எனக்குப் பிடிக்கும். ஐந்தாம் வகுப்பில் ரங்க சுப்பிரமணியம் என்ற வாத்தியாரையும் எனக்குப் பிடிக்கும். அவர் நன்றாகப் பாடுவார். எங்கள் தெருவின் கோடி வீட்டில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த கடைசி வீட்டில் இருந்தார். அவரிடம் பாட்டுச் சொல்லிக் கொள்ள பெருமாள் கோவில் பக்கத்திலிருந்து இரண்டு சிறுமிகள் வருவார்கள். ஒரு சமயம், " கடைக்குப் போய் மூக்குப் பொடி வாங்கி வரயா, வாங்கி வந்தால், உனக்கு பரிட்சைக்கு வரும் கேள்விகளில் மூன்று சொல்லித் தருவேன். உனக்கே உனக்கு மாத்திரம்" என்றார். அந்த லஞ்சம் இல்லாமலேயே அவருக்கு வாங்கிக் கொண்டு வந்திருப்பேன். வகுப்பில் யாரும் செய்வார்கள். இரண்டாம் வகுப்பு வாத்தியாராக வெங்கட் ராமய்யர் என்பவர் இருந்தார். நீண்ட குடுமி. பஞ்சகச்சம் வைத்துத்தான் வேட்டி கட்டியிருப்பார். பெரிய குடும்பம். சத்திரத்தை ஒட்டிய ஒரு வீட்டில் இருந்தார். நாங்கள் பள்ளிக்கூடம் போகும் வழியில் அவர் வீடு. அவர் ஏதோ வேலையில் இருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டே போவோம். பள்ளிக்கூடத்துக்கு தாமதமாகத் தான் வருவார். எல்லோருடனும் சண்டை போடுவார். அடிக்கடி அவர் மாமாவையும் மற்ற வாத்தியார்களையும் ஏதோ சொல்லிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பார். அவருடைய பிரச்சினைகள் அவருக்கு என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.

மூன்றாம் வகுப்பு வாத்தியார் என்று நினைக்கிறேன். ஜெயராஜ். நல்ல ஆகிருதியான தேகம். தேகப் பயிற்சி செய்து பெற்ற உடல் வளம். எங்கள் பள்ளிக்கே டிரில் வாத்தியாராக இருந்தார். சிரித்த முகத்தோடு தான் எப்போது காணப்படுவார். இடையில் அவர் வாத்தியார் உத்யோகத்தை விட்டு விட்டார். வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும் பாதி வழியில் ஓடையைத் தாண்டிய பிறகு வரும் கடைத்தெருவில் நாடார் ஸ்கூலுக்குக் கொஞ்சம் தள்ளிய ஒரு இடத்தில் ஒரு கோவாப்பரேட்டிவ் பாங்கு ஒன்று துவங்கப்பட்டிருந்தது. அதில் அவரைப் பார்த்தேன் ஸ்கூலுக்குப் போகும் வழியில். பிறகு சில மாதங்கள் கழித்து அந்தக் பாங்கு வாசலில் சில போலீஸ்காரர்களுடன் அவரைப் பார்த்தேன். அவர்களுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அன்று காலையில் அவர் பாங்கைத் திறக்க வந்தபோது பாங்கின் பலகைகள் இரண்டு திறந்திருந்ததாகவும் உள்ளே இருந்த பணப்பெட்டி உடைந்து கிடக்க பணம் திருட்டுப் போய்விட்டது. அதைப் பார்த்த அவர் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டதாகவும் சொன்னார்கள். அந்த சிரித்த முகத்தை நான் பின்னர் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து அவரை நிலக்கோட்டை சப்-ஜெயிலின் முன்னிருந்த புல் வெளியில் மற்ற கைதிகளோடு போலீஸ் காரர்கள் ஏதோ சொல்ல அதன் படி ஏதோ செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிவிட்டால் நான் வரும் குறுக்கு வழியில் தான் தாலுக்கா ஆபீஸ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆபீஸ், மாஜிஸ்ட்டிரேட் கோர்ட், ஜெயில் எல்லாம் இருந்தன. ஒரு சின்ன காம்பவுண்ட் சுவரைத் தாண்டிச் சென்றால் பள்ளிக்கூடத்திற்குச் சீக்கிரம் போய்விடலாம்.

அம்பி வாத்தியாரிடம் எனக்கு பயம் தான் உண்டு. அவர் எனக்கு என்றுமே வகுப்பு வாத்தியாராக இருந்ததில்லை. நாங்கள் இருந்த தெருவிலேயே மிக அருகிலேயே இருந்ததும், மாமாவுக்கு அநேக சமயங்களில் ஒத்தாசையாக இருந்தது, அவருக்கு தான் நினைத்த சமயத்தில் என்னை அதட்டும் அதிகாரம் கிடைத்திருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவர் ஒன்றும் அப்படி முரடர் இல்லை. என் தவறுகள் அவர் கண்களில் அதிகம் படும். அவர் கண்டிப்பார். அவ்வளவே. அப்படிப்பட்டவர் எனக்குப் பிரியமாக எப்படி இருக்கமுடியும். எனக்கு ரொம்பவும் பிரியாக இருந்தவர் புதிதாக வந்து சேர்ந்த, எனக்கு ஏழாம் வகுப்பில் வாத்தியாராக இருந்த டேவிட் ஜெயராஜ் டேனியல் என்பவர். மிக இனிமையானவர். சிரிக்கச் சிரிக்க பேசிக்கொண்டே யிருப்பார். நன்றாகவும் பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். பையன்கள் அவரோடு விளையாடவும் செய்யலாம்.

மாமா கண்டிப்பானவர். வகுப்புப் பாடங்களும் நடத்த வேண்டும். வாத்தியார்களையும் கட்டி மேய்க்கவேண்டும். மானேஜருக்கும் பதில் சொல்லியாக வேண்டும். வீடும் அவருக்கு நிம்மதி அளித்ததில்லை. அவர் தலைமை ஆசிரியரான பிறகு எட்டாம் வகுப்பை அவர்தான் நடத்துவார். நான் எட்டாம் வகுப்புக்கு வந்ததற்கு முன் வருடத்திலிருந்து என்று நினைப்பு, அல்லது அந்த வருடத்திலிருந்து தானோ என்னவோ, எலிமெண்டரி ஸ்கூலின் எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு அரசே பரிட்சை நடத்தும் என்று அரசு ஆணை வந்திருந்தது. எஸ்.எஸ்.எல்.ஸி மாதிரி இது இ,.எஸ்.எல்.ஸி பரிட்சை. ஆக மாணவர்கள் தேர்வது அந்தந்த பள்ளி வாத்தியார்களின் கையில் இல்லை. நிறைய பேர் பாஸ் செய்ய வேண்டும். பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேர் கிடைக்கவேண்டும்.

பரிட்சைக்கு மூன்று நான்கு மாதங்கள் முன்பே மாமா வீட்டிலேயே டியூஷன் நடத்த ஆரம்பித்தார். எப்போதும் உண்டு, எல்லா வகுப்புகளுக்கும் வேண்டியவர்களுக்கு ட்யூஷன் உண்டு என்ற போதிலும் இதில் அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால் ஜபர்தஸ்தும் கெடுபிடியும் அதிகம். ட்யூஷன் படிக்க வரும் பையன்கள் இரவு ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். இரவு பத்து மணி வரை பாடங்கள் நடக்கும். சிலர் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்து எங்கள் வீட்டுத் திண்னையிலேயே படுத்துக் கொள்வார்கள். அவர்களை (என்னையும் சேர்த்து) காலை ஐந்து மணிக்கு அவர்களை எழுப்பி மாமா பாடம் கேட்பார்.

ட்யூஷன் படிக்க வந்தவர்களில் பிச்சை என்பவன் எங்களில் எல்லாம் மூன்று வயதோ என்னவோ மூத்தவன். எங்களை விட உயரமானவன். நல்ல வாளிப்பான உடம்பு அவனுக்கு. ஒழுங்காகப் படிக்கத் தான் மாட்டான். அதைத் தவிர மற்ற உலக விவகாரங்களில் மிக கெட்டிக்காரன். தைரியசாலி. நாங்கள் படித்துக்கொண்டிருப்போம். அவன் திடீரென எழுந்து போய்விடுவான். பின் அரை மணி முக்கால் மணி கழித்துத் தான் வருவான். கேட்டால் ஒண்ணுக்குப் போகப் போனேன் என்பான். இல்லை வேறு ஏதோ சொல்வான். ஒரு நாள் அவனால் தன் பிரதாபங்களைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. 'ட' வடிவிலான எங்கள் தெருவின் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் முனையில், குளத்துக்கு எதிராக ஒரு தாசி வீடு இருந்தது அதை அடுத்து இரண்டு வீடுகள் அதில் வாடகைக்கு வருவார் போவார் உண்டு என்று சொல்லிருந்தேனே அதில் ஒரு வீட்டில் ரெவென்யு இன்ஸ்பெக்டர் ஒருவர் வாடகைக்கு அப்போது குடி வந்திருந்தார். அவருடைய பெண், சுந்தரி என்று பெயர் என்று ஞாபகம், அவள் வாசற்படியில் உட்கார்ந்திருப்பாள். நாங்கள் மாலையில் பள்ளியிலிருந்து வரும் போது அவளைக் காணலாம். அந்த சுந்தரிக்கு பிச்சையைப் பிடித்து விட்டதாம். அவளைத் தாண்டா பாக்கப் போனேன் என்று ஒரு நாள் பிச்சை சொன்னான். அவள் நல்ல சிகப்பு. பிச்சை நல்ல கருப்பு. வாட்ட சாட்டமாக வளர்ந்திருப்பான். எங்களிலேயே அவன் தான் பலசாலி. சும்மா அளக்கறானோ பிச்சை என்று தோன்றும். ஒரு வேளை நிஜமாகவும் இருக்கலாம் என்றும் நினைப்போம். ஒரு நாள் நானும் இன்னும் இரண்டு பேரும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது, தூரத்திலேயே வாசற்படியில் சுந்தரி உட்கார்ந்து இருந்தது தெரிந்தது. எங்களுக்குள் ஒரு சதியாலோசனை நடந்தது. ரோடிலிருந்து ஒடைப் பாலத்தைத் தாண்டி தெரு முனைக்கு வந்ததும், எங்களுக்கு கொச்சம் சத்தமாக எங்களுக்குள் பேசிக்கொண்டோம். "பாவம்டா பிச்சை. ·புட் பால் விளையாடற போது கல் தடுக்கி விழுந்துட்டானே. நல்லா சிராச்சிட்டதுடா. ஒரே ரத்தமாக் கொட்டிடுத்து. இன்னிக்கு ட்யூஷனுக்கு ஒரு வேளை வருவானோ என்னமோ தெரியலே டா" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அந்தக் கதை சுந்தரி வீடு வரும் முன் ஆரம்பித்து வீட்டைக் கடந்த பின் முடிந்தும் விட்டது. பிச்சைக்கு என்ன கேடு. அவன் ட்யூஷனுக்கு வந்திருந்தான். இடையில் மாமா தலை மறைந்ததும், (அவர் 'படிங்கடா நான் இதோ வந்துட்டேன்" என்று வீட்டு வேலை எதற்காவது அரை மணி போய்விடுவார்) பிச்சை வழக்கம் போல கிளம்பினான். அரை மணி கழித்து திரும்பிய போது, அவன் என்னிடம் கேட்டான்" ஏண்டா டேய், எனக்கு கால்லே அடிபட்டு ரத்தமா கொட்டித்துன்னு பேசிக்கிடே வந்தீங்களாடா?" என்று கோபமாகக் கேட்டான். அதற்குள் மாமா திரும்பி வந்துவிடவே நான் தப்பினேன் என்று சொல்ல
வேண்டும்.

இந்த அழகில் தான் நாங்கள் அரசாங்க பொதுப் பரிட்சைக்குப் படித்தோம் என்றில்லை. எங்கள் படிப்பு எப்போதும் போல் தான் இருந்தது. ரொம்ப மோசமுமில்லை. ஏதும் பிரமாதமாகவும் இல்லை. ஆனால் அந்த காலத்து சினிமாப் படங்களில் வரும் 'என் எஸ் கிருஷ்ணன், புளிமூட்டை ராமசாமி காமிக்'குகள் போல இந்த மாதிரியும் சில இடையில் சுவாரஸ்யமூட்டின.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'பதிவுகள்' ஜூன் 2008 இதழ் 102

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here