[ 'பதிவுகள்' இணைய இதழுக்கு கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் 18.10.2015 அன்று அனுப்பிய இறுதிக்கட்டுரையிது. இதன் முடிவில் தொடரும் என்றிருந்தாலும் திரு.வெ.சா.வின் மறைவு காரணமாக இக்கட்டுரை தொடராது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். - பதிவுகள்-]
- 1983 – ல் முல்லைத் தீவில் பிறந்த ஜெயபிரகாஷ் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் கல்வி கற்று, அந்த கல்லூரியிலேயே நாடகம் அரங்கியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கடந்த இரண்டு வருஷங்களாக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஒரு முதுநிலை பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.. நடிகர். பரதமும் கற்று பட்டம் பெற்றவர். இந்திரா பார்த்த சாரதியின் இராமானுஜர் நாடகத்தில் ராமானுஜராக நடித்தவர். பின் வரும் பேட்டி இரண்டு நிலைகளில் நிகழ்ந்தது. முதலில் பங்களூரில் நேரில் பேட்டி கண்டும் பின் பாண்டிச்சேரியிலிருந்து எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு எழுதித் தந்த பதில்களுமாக ஒன்றிணைந்தது. -
வெங்கட் சாமிநாதன்: எனக்கு இப்போது வயது 82. முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன் தான் 83- ம் வயதுக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இதில் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் மிகக் கொஞ்சம். பள்ளிப் படிப்பு முடிந்ததுமே, 16-ம் வயதில் தமிழ் நாட்டுக்கு வெளியே வந்துவிட்டேன். வேலை தேடி. பிழைக்க வேண்டும் மூத்த பிள்ளை, குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஆக, என்னை உருவாக்கியது தமிழ் நாட்டுக்கு வெளியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் தான். அவற்றை நான் உள்வாங்கியதும், எதிர்கொண்டதுமான உறவு தான். ஆக, பொது வாழ்க்கையில் காலடி வைத்து என் மனதுக்குப் பட்ட கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தது, ஒரு பெரியவர் தன் பத்திரிகையில் எனக்கு இடம் கொடுத்ததால் வந்த வினை, இது தொடங்கியது 1959 – லிருந்து. அன்றிலிருந்தே, கிட்டத்தட்ட ஐம்பது ஐம்பத்தைந்து வருட காலமாக, . நிறைய அடிபட்டிருக்கிறேன். எனக்கு சில விசயங்களில் ஈடுபாடும் ஒரு தெளிவும் இயல்பான அக்கறையும் இருந்தது – அந்த விழிப்பும் தெளிவும் தோன்றத் தொடங்கியது தில்லியில் வாழத் தொடங்கிய 1956 லிருந்து. என் இருபத்து மூன்றாவது வயதிலிருந்து. . சின்ன வயதிலேயே நான் தமிழ் நாட்டை விட்டு வெளியில் வந்து விட்டதினால், தமிழ் நாட்டில் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க இல்லை. ஏதோ தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால் அது கிடைத்திருக்கும் என்பது போல் இது தொனிக்கிறது. இல்லை. தமிழ் நாட்டில் தொடர்ந்திருந்தால், ஒரு வேளை நான் மாறியிருக்க மாட்டேன்.எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருந்திருப்பேன். அத்தோடு ஒரு உதாரணத்துக்கு, ரஜனிசாரின் காபாலி பட ரிலீஸ் அன்றைக்கு அவர் ஃப்ளெக்ஸ் போர்ட் விளம்பரத்துக்கு நடக்கும் பாலாபிஷேகம் பார்த்து மெய்சிலிர்த்து நின்றிருப்பேன். அல்லது, மேடையில் கொலு வீற்றிருக்கும் கலைஞரை நோக்கி, அவரது பராசக்தி படத்திலேயே, அன்றே தான் கண்ட சினிமா தொழில் நுட்பங்களைக் கண்டு வியந்ததையெல்லாம் உலக நாயகன் விவரிக்க மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த கலைஞரும் சபையில் நிறைந்திருக்கும் ரசிகப் பெருமக்களூம் அடைந்த புளகாங்கிதமும் பரவசமும் என்னையும் தொற்றி, மெய்மறக்கச் செய்திருக்கும். . அல்லது ஒரு வேளை வெறுப்புற்று தலை தெறிக்க எங்காவது ஓடியுமிருக்கலாம். தெரியாது. இப்படி எத்தனையோ விஷயங்கள். ஆக, இந்த இரண்டுவித கிறுக்குகளில் ஏதோ ஒன்றாக இருந்திருப்பேன். நிதான புத்தியோடு மாத்திரம் வளர்ந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.
தில்லி - இந்தியாவின் பல வேறுபட்ட பிராந்தியங்களிலிருந்து, பல வேறுபட்ட மொழிகள் பேசுகின்ற மக்கள் எல்லாம் பிழைப்புக்காக வந்து சேர்ந்து கூடி வாழ்கின்ற இடம். அது மட்டுமல்ல இந்திய நாட்டின் பல கலாசாரங்கள் வந்து சேர்கின்ற இடமும் கூட. இன்னும் சொல்லப் போனால், உலகின் பல தேசங்களில் இருந்து வரக்கூடிய கலாசாரக் குழுக்களும் கூட அவ்வப்போது தில்லிக்கு வந்து தம்மை அறிமுகம் செய்து கொள்ளக் கூடிய இடமும் கூட. ஆக, இந்தியாவின் பல மொழிகள் பேசும் மக்கள், உலகின் பல வேறுபட்ட கலாசாரம் பேணும் மக்கள்,- கலைக் குழுக்கள், ஓவியர்கள், சிற்பிகள், தத்துவாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் சினிமா கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், நடன கலைஞர்கள் எல்லாரும் வரக்கூடிய அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புத் தரும் இடமும் அதுதான்.
தில்லி நகரத்தின் மையம் என்று சொல்லக் கூடிய இடம் மண்டி ஹவுஸ் என்னும் பல சாலைகள் கூடும் அல்லது பிரியும் இடம். புது தில்லிக்கும் பழைய தில்லிக்கும் இணைப்பாகச் சொல்லக் கூடிய இடம் அது. ஒரு காலத்தில் மண்டி சமஸ்தானத்தின் ராஜா வைஸ்ராயைப் பார்க்க வந்தால் தில்லியில் தங்கும் அரண்மணை இருக்கும் இடம். இப்படி தில்லியில் அனேக சமஸ்தான ராஜாக்களின் அரண்மனைகள் உண்டு. அந்த சந்திப்பு அரண்மனையின் பெயர் பெற்றது. மண்டி ஹவுஸ். அனேகமாக ஆறு சாலைகள் ஒன்று கூடும்,அல்லது பிரியும் புள்ளி அது. ஒவ்வொரு சாலையிலும் ஒன்றிரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அரங்கங்கள், ஒவிய கண்காட்சியோ, நாடகமோ, இலக்கிய கூட்டங்களோ திரைப்படங்களோ பல அந்த அரங்கங்களில் நடைபெறும். அப்படி ஒரு இடம் வேறு எந்த நகரத்திலாவது அமைந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத் நாடக் அகாடமி, நேஷனல் ஸ்கூல் ஒஃப் ட்ராமா, ஸ்ரீதராணி காலரி, கமானி ஆடிட்டோரியம், பாரத் கலா கேந்திரா, ஸ்ரீராம் செண்டர், இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம். கேட்க, சொல்ல, அலுப்பாக இருக்கும். இன்னம் கொஞ்சம் நடை தூரத்தில் இன்னும் பல அரங்கங்களை எல்லா சாலைகளிலும் காணலாம்.
ஆக, நான் தில்லியில் இருந்தவரை, எந்த முக்கிய கலை, இலக்கிய நிகழ்ச்சியும், இந்தியாவின் மற்ற மொழி, பிராந்தியங்களி லிருந்தோ, அல்லது உலகின் அன்னிய நாடுகளிலிருந்தோ வரும் எந்த கலை நிகழ்ச்சியையும் காண அங்கு தான் செல்ல வேண்டும். என் எல்லா மாலை நேரங்களும் அங்கு தான் கழியும். ஒரு நிகழ்ச்சி அங்கு காணச் சென்றால், தெரியாத ஒரு நிகழ்ச்சியும் அங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். எதிர்பாரா நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்புகளும் அங்கு நிகழும். எனக்கு மட்டுமல்ல, நான் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் யாரும் கூடும், சந்திக்கும் இடங்களில் மண்டி ஹவுஸ் முதலாவதும் முக்கியமானதும் அது தான்.
நான் தில்லியில் பார்த்த முதல் நிகழ்ச்சி, என்று யோசித்துப் பார்க்கும் போது, எது முதல் என்று சொல்லத் தெரியவில்லை. தில்லி சென்ற முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் என்று உத்தேசமாகச் சொல்லமுடியும். 1957 – ன் ஆரம்ப மாதங்கள், மண்டி ஹவுஸுக்கு அதிக தூரமில்லாத ஷங்கர்லால் மார்க்கெட்டின் ஒரு மேல் தள ஓவியக் கண்காட்சியில் சதீஷ் குஜ்ராலின் - (நமது பழைய பிரதம மந்திரிகளில் ஒருவரான், ஐ.கே. குஜராலின் தம்பி,பிறவியிலேயே காது கேளாது) - ஆரம்ப ஓவியங்கள். அப்போது தான் அவர் மெக்ஸிகோவிலிருந்து திரும்பியிருந்தார். Orozco வரைந்ததோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் மாதிரியே சதீஷ் குஜ்ராலும் அந்த பாணியைக் கைக்கொண்டிருந்தார். The colours were loud and the brush was thick and bold. அவர் வரைந்த பல நேரு, கிருஷ்ண மேனன் ஆகியோரின் portrait studies. அதேசமயம் முகம் தெரியாத சாதாரணர்கள் சித்திரங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களின் வேதனை முகங்கள். அந்த சித்திரத்திற்கு அவர் வரையும் பாணி பொருத்தமாக இருந்தது
அதை ஒட்டி சில நாட்கள் முன்போ பின்போ நிராத்.சி. சௌதுரி இந்திய ஒவியங்களின் ஆரம்பங்கள் பற்றி பேசினார். அவர் தீவிர வங்காள பற்றாளரானாலும் வங்க பாணி ஒவியங்களை அவர் முற்றாக நிராகரித்தார். அவரது Autobiography of an Unknown Indian பற்றி ஓரிரண்டு வருஷங்கள் முன்பாக புர்லாவில் இருந்த போது படித்தது நினைவில் பசுமையாக இருந்தது. நீராத் சௌதுரியை நேரில் பார்க்கும் போது, எவ்வளவு பெரிய intellectual giant, எவ்வளவு சிறிய ஒடிந்து விழும் தேகத்துள் pack செய்திருக்கிறார் ஆண்டவன், என்று நினைத்துப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
சத்யஜித் ரேயின் இரண்டாவது படம், அபராஜிதோ, ஸ்டேடியம் சினிமா தியேட்டரில் பார்க்க அடித்துப் பிடித்துக்கொண்டு, ஜனவரி குளிரில் ஓடியது நினைவுக்கு வருகிறது. அவரது முதல் படம் பாதேர் பஞ்சலியை ஒரிஸ்ஸாவில் வேலை பார்த்த புர்லாவில் ஒரு பஞ்சாபி நடத்திய டூரிங் டாக்கீஸில் ஒரு வருஷம் முன்பே பார்த்திருந்தேன். எல்லாம் தில்லி வந்த முதல் சில மாதங்களிலேயே. தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும் இதில் எதுவும் எனக்குக் கிடைத்திராது. எங்கோ வானத்தில் மிதந்துகொண்டிருப்பதாகத் தான் நினைப்பு எனக்கு.
இது அதிக நாள் நீடிக்கவில்லை. 1959 என்று நினைவு. ஏப்ரல் மாதம் நான் தில்லியிலிருந்து ஜம்முவுக்கு மாற்றப் பட்டேன். ஜம்மு கஷ்மீர் அரசு பழைய வழக்கப்படி ஆறு மாதம் கோடையில் ஸ்ரீநகரிலும் பனிக்காலத்தில் ஜம்முவிலும் இருக்கும். அங்கு இருந்தது சுமார் இரண்டு வருஷங்கள். அங்கு இருந்தபோது தில்லியில் எனக்கு பிடித்தமான விஷயங்கள், தில்லியில் இல்லாமல் போய்விட்டமே என்று வருந்தும் விஷயங்கள் நடந்தன. இப்போது நினைவுக்கு வருவன, யாமினி கிருஷ்ணமூர்த்தியின், நடனம் தில்லி பத்திரிகைகளில் அமோகமாகப் பேசப்பட்டு வந்தது. தில்லிக்கு புதிய வருகை .கலாக்ஷேத்திராவின் மாணவி. வந்த உடனே அட்டகாசமான வரவேற்பு. அடுத்து இப்ராஹீம் அல்காஷி என்பவரின் வருகை பற்றியது. தில்லியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நாடகப் பள்ளிக்கு தலைமை ஏற்று ஒரு புதிய சரித்திரமே உருவாவதாகப் பேச்சு. எனக்கு இதெல்லாம் உற்சாகம் தருவதாக இருந்தது. எவ்வளவு நாள் இங்கு இருக்கப் போகிறோம் சீக்கிரம் தில்லிக்கு மாற்றல் வாங்கிப் போகவேண்டும். என்ற தோன்றியது. 1961 என்று நினைவு.அல்லது 1962 ஆகவும் இருக்கலாம். ஒரு ஏப்ரல் மாதம் தில்லி திரும்பி விட்டேன். அதன் பிறகு நான் வேறு எங்கும் போகவில்லை. உத்தியோக உயர்வில் சந்திகர் மாற்றலையும் தவிர்த்து விட்டேன். உத்தியோக உயர்வு வேண்டாம் என்று சொல்லி. கிட்டத் தட்ட முப்பது வருஷத்துக்கு மேலாக இருந்த தில்லியை விட்டுப் போக மனமில்லை.
தில்லி வந்தவுடன் செய்த முதல் காரியம் அப்போது நாடகப் பள்ளியிலிருந்து வெளியே வந்து மேடையேறிய முதல் நாடகம் என்று தான் நினைக்கிறேன். அந்தா யுக் என்று ஒரு ஹிந்தி நாடகம். அல்காஷி யின் இயக்கத்தில். அல்காஷி அனேகமாக முப்பதுகளில் இருந்த இளைஞர். அவரது தாய் தந்தையர் அராபியர்கள். பம்பாயிலிருந்து வந்திருக்கிறார். பின்னர் தெரிந்தது தியேட்டரைத் தவிர அவருக்கு ஓவியத்திலும் நல்ல திறமையும் பாண்டித்யமும் உண்டு, அவர் பிறந்தது படித்தது எல்லாம் இங்கு தான். பம்பாயில் அப்போது ப்ரொக்ரெச்சிவ் க்ரூப் ஒன்று இருந்தது. ஓவியத்திலும் நாடகத் துறையிலும் முற்போக்கு சிந்தனைகள் கொண்டதும் (பின் வரும் காலங்களில் இந்தியமுன்னணி ஒவியர்கள், கவிஞர்கள், நடிகர்கள், நாடகக் கலைஞர்களை இந்தியாவுக்குத் தந்ததுமான குழு அது. வேறு இடங்களில் (தமிழ் நாட்டையும் சேர்த்து_ காணப்பட்ட முற்போக்குகளைப் போன்று கலை ஞானம் அற்ற அரசியல் பட்டாளம் அல்ல அது). அதிலும் அல்காஷி ஈடுபாடு கொண்டிருந்தார் என்றெல்லாம் பின்னர் தெரியவந்தது. ஆனால் அந்தா யுக் அவரது இயக்கத்தில் அது மகத்தானதும், ஒரு புதிய வரலாற்றையே படைத்ததுமான ஒரு படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
பத்திரிகையில் படித்தேன்.ஃபிரோஷ் ஷா கோட்லா என்னும் இடிந்த கோட்டைச் சுவர்கள் சுற்றி இருக்க நடுவில் இருந்த தளமே மேடையாக அந்த நாடகம் நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. நாடகம் மூலத்தில் ஒரு கவிதை, தர்ம் வீர் பாரதியினது. அதை . நாடகமாக்கியிருந்தார்கள். மகாபாரதப் போர் முடிந்து எங்கும் அழிவும் மரண ஓலமும் நிறைந்த காட்சி. காந்தாரி கண்ணனைக் குற்றம் சாட்டுகிறாள். கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவை நிறுத்தியிருக்கமுடியும். ஆனால் அவன் தள்ளி யிருந்து வேடிக்கை பார்த்திருந்து விட்டான். அஸ்வத்தாமனுக்கும் பழி வாங்கும் குரோதம் இருந்தது.
(இது பின் வருடங்களில் தில்லியின் புராணா கிலாவில் மேடையேற்றியதன் புகைப்படப் பதிவு. ஃபிரோஸ் ஷா கிலாவினது கிடைக்கவில்லை) இந்த நாடகமும் அதன் மேடையேற்றமும், மேடையேறிய இடமும், எல்லாமே எனக்கு ஒரு புது உலகை என் முன் நிறுத்திய உணர்வைத் தந்தது. நான் என்ன, தில்லியின் நாடக சூழலே மாறும் முதல் அடி வைப்பாக அது இருந்தது. தில்லி என்ன, இந்திய நாடக சரித்திரமே ஒரு முற்றிலும் புதிய வரலாறாக ஆயிற்று. அந்த நாடக மேடையேற்றத்தில் ஃபிரோஷ் ஷா கோட்டை மேடையில் ஒரு சேனை வீரராக ராமானுஜம் இருந்தார். அவரோடு அவரது சகாவான குமார வர்மாவா அவர் பெயர்?, அவரும் இருந்தார். அவர்களை நான் பின்னர் தான் தெரிய, பரிச்சயம் கொள்ள இருந்தேன். அன்று அவர்கள் அந்த நாடகத்தில் நடித்திருந்தது எனக்குத் தெரியாது. அவர்கள் அப்போது தான் பள்ளியில் சேர்ந்தவர்களாக இருக்கும். ஹிந்தி தெரியாத காரணமும் இருக்கும். அவர்கள் அந்த நாடகத்தில் படை வீரர்களாகத்தான் இருந்ததாக ராமானுஜம் சொல்லி பின்னர் தெரிந்தது. பின் வருடங்களில் அவர் தனக்கு சிறப்புப் பயிற்சியாகத் தேர்ந்து கொண்டது குழந்தைகள் நாடகம் என்று அவர் சொல்லித்தெரிந்தது.
அல்காஷி வந்த பிறகு தான் அந்த ஸ்தாபனம் தேசீய நாடக பள்ளி (National School of Drama) வாக ஆயிற்று என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் அது Asian theatre Institute என்றோ என்னவோ பெயரில் இருந்தது என்று நினைக்கிறேன். பெயரை நான் சரியாக நினைவு வைத்திருக்காமல் இருக்கலாம். ஏசியன் என்று தான் தொடங்கும். ஆனால் அது அவ்வளவு ஒன்றும் விசேஷமாக பெயர் சொல்லும் ஸ்தாபனமாக இல்லை .நம்மூரிலிருந்து நாராயணசாமி என்று ஒருவர் படித்து தமிழ் நாடு திரும்பியுமிருக்கிறார். அதற்கு மேல் சொல்வதற்கு ஏதும் இல்லை. அந்நாட்களில் கொஞ்சம் அதிகம் அலட்டிக்கொள்கிற மனுஷனாக இருந்தார் அவர். (ENACT) என்று நினைவு, அப்படி ஒரு பெயரில் நாடகத்திற்கான ஒரு ஆங்கில ;பத்திரிகையை நாடக ரசிகர் ஒருவர் நடத்திவந்தார். அதில் நானும் நாராயண சாமியும் சண்டை போட்டுக்கொள்வோம். என்னை பயமுறுத்த கொஞ்சம் வாள் சுழற்றுவார். வாய்ச்சொல் வீரமும் உண்டு. முதல் முதலாக, நடை பத்திரிகையில் வெளியான ந.முத்துசாமியின் காலம் காலமாக நாடகத்தை ENACT பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அது எனாக்ட்டில் பிரசுரமாயிற்று.
அல்காஷி காலடி எடுத்து வைத்த சமயம் இதே மண்டி ஹவுஸ் பக்கத்தில் எதிர்த்தாற்போல் இருந்த சாப்ரூ ஹவுஸில் ஒரு ஹால் இருந்தது. அதுவும் ஒரு முக்கியமான இடம். School of International Studies அங்கு இருந்தது. அது போக, தில்லியில் அதிகம் பஞ்சாபிகள் வாழும் நகரம். சாப்ரு ஹவுஸ் ஹாலில் பஞ்சாபிகள் நாடகம் போடுவார்கள். நல்ல கூட்டம் வரும். கூட்டம் நெறியும் என்று சொல்ல வேண்டும். பஞ்சாபிகள் மிகவும் விரும்பி மிகுந்த ஆரவாரத்தோடு அந்த நாடகங்களைப் பார்ப்பார்கள். அந்த நாடகங்கள் பஞ்சாபிகள் விரும்பும் வசனங்கள், அந்த வசனங்களுக்காகவே எழுதப் பட்ட கதை கொண்டதாக இருக்கும். நாம் அதை ஆபாசம் என்போம். ஆனால் அத்தகைய வசனங்கள் வெகு சாதாரண புழக்கத்தில் பஞ்சாபிகள் பேசுபவை தான். கோடிக் காட்டவேண்டுமென்றால், என் நினைவுக்கு வரும் ஒரு நாடகத்தின் பெயரைச் சொல்கிறேன். சடி ஜவானி புட்டேனு. இதற்கு அர்த்தம் கிழவனின் மன்மத லீலை என்றோ, வாலிப முறுக்கேறிய கிழவன் என்றோ சொல்லலாம். பஞ்சாபி தலைப்பில் உள்ள கிக் இந்த தமிழ்த் தலைப்புகளில் இல்லை தான். நான் இந்த நாடகங்கள் எதுவும் பார்த்ததில்லை. கலை என்று சொல்லி என்னைக் கவர இதில் ஏதும் இல்லை. இதன் நாடக வசனங்களைச் சொல்லிப் பயிற்சியில் ஈடு பட்டிருக்கும் நாடக நடிகர்களை எதிர்த்தால் போல் இருக்கும் ரவீந்திர பவனின் புல் வெளியில் பார்த்திருக்கிறேன். கூச்சம் எதுவும் இல்லாது வெகு சகஜமாக ஆனால் ரொம்ப சீரியஸாக வசனம் சொல்லி பயில்வார்கள். இன்னொரு வகை பஞ்சாபி நாடகமும் நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. இந்தர் சபா என்று.அதுவும் ஒரு பஞ்சாபி மாது மேடையேற்றிக்கொண்டிருந்தது தான். அது மூலத்தில் உருதுவில் எழுதப்பட்ட நிறைய பாட்டும் ஆடலும் நிறைந்த இசை நாடகம். மிகப் பழங்காலத்து நாடகம் அது இந்தர் சபா என்றால் இந்திரனின் சபா. அதை தில்லியில் நடத்திய பஞ்சாபி பெண் ஷன்னோ குரானா, பாடுகிறவர் . அக்காலத்தில் அவர் மிகப் பெயர் பெற்ற choreographer. அது வேறு இடத்தில், AIFACS (All india Fine Arts and Crafts Society) யின் ஹாலில் நடக்கும். பார்ஸி நாடக பாணியில் நடக்கும் என்று கேள்வி. நான் போனதில்லை. பார்த்ததில்லை. அறுபதுக்களுக்குப் பின் அதைப் பற்றி யாரும் பேசி, அல்லது மேடையேற்றி நான் கேள்விப் பட்டது கிடையாது. ரொம்ப அபூர்வமாக ஷன்னோ குரானா பாடுவதை பாரதி என்னும் சானலில் பார்த்திருக்கிறேன். இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். இப்போது என்னால் நிச்சயமாக எப்போ என்று சரியாக நினைவு படுத்திச் சொல்ல முடியவில்லை. ஹபீப் தன்வீர் என்பவரின் உருது நாடகம் ஒன்று இதுவும் அந்த காலத்து எக்ஸிபிஷன் க்ரௌண்ட்ஸில் தான் ஆக்ரா ;பஜார். இது அவரே எழுதியது. ஆக்ரா நகரம் ஒரு காலத்தில் முகாலாயரின் தலைநகரமாக இருந்ததில்லையா? எல்லா பிரதேசத்து மக்களும், மராத்தியர், உட்பட படைவீர்ர்கள், வணிகர்கள், சாதாரண தெரு வியாபாரிகள் கிராமிய பாடகர்கள் என எல்லாரும் நிறைந்து ஆக்ரா பஜார் காட்சிகளை, சாதாரண தன் கிராமத்து (சத்தீஷ்கர் – ஹபீப் தன்வீரின் பிறந்த இடம்) மக்களைக்கொண்டே நிகழ்த்திய நாடகம், ஏதும் வலுவான கதையே இல்லாதது, என்னை மிகவும் பாதித்தது. வெகு வருஷங்களுக்குப் பிறகு தில்லி திரிவேணி கலா சங்கமில் இருக்கும் ஒரு சின்ன அழகான திறந்த வெளி அரங்கில் சரண் தாஸ் சோர் என்ற ஒரு நாடகம்,
அது ஒரு நாட்டுப்புற கதை வேடிக்கையானது. அதையும் தன் கிராம மக்களையே ஒரு நாடகக் குழுவாக்கி, நயா தியேட்டர் என்று பெயரையும் கொடுத்து, அவர்களை தில்லியில் வைத்துக் காப்பாற்றியும் வந்தார். அவர்களை வைத்துக்கொண்டே அவர் தன் எல்லா நாடகங்களையும் மேடையேற்றினார். இப்படி ஒரு அதிசயம் இங்கு நிகழ்ந்தது. அவரது இந்த இரண்டு நாடகங்களைத் தவிர வேறு எதுவும் எனக்குப் ;பிடித்ததில்லை என்பது வேறு விஷயம். கடைசியாக நான் பார்த்த ஹபீப் தன்வீரின் நாடகம்,காஸர் கோட் ஷேக்ஸ்பியர் விழாவுக்கு கொண்டுவந்திருந்த Midsummer Night”s Dream. இதுவும் அவரது எல்லா நாடகங்களும் போல சத்தீஷ்கர் கிராமவாசிகளின் இன்றைய ;தலைமுறை நயா தியேட்டர் குழுவினர் தான். காஸர்கோடு விழாவில் ஹபீப் தன்வீர் சிறப்பு அழைப்பினராக கௌரவிக்கப்பட்டர். ஆனால் அவரது நாடகம் தான் எனக்குப் பிடிக்கவில்லை. எதையும், ஒன்று வெற்றியடைந்தால் அளவுக்கு மீற் அதிலேயே செயல்படுவது சரியில்லை எனத் தோன்றுகிறது. சத்தீஷ்கர் கிராமீய ஃபார்முலா முதல் இரண்டு நாடகங்களுக்கு, ஆக்ரா பஜார், சோர் சரண்தாஸ் – இரண்டுக்கும் சரி
இந்த காஸர்கோடு ஷேக்ஸ்பியர் விழாவில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள் இந்திரா பார்த்த சாரதியின் இறுதி ஆட்டம் நாடகத்தில் மு.ராமசாமி கிங் லியரை ஒரு கோமாளியாக்கியிருந்தது.) பின் சிவபிரகாஷின் மாரநாயகன். இது ஷேக்ஸ்பியர்ன் மாக்பெத் நாடகத்தைத் தழுவியது. இதன் இயக்குனர் ஹூலிகப்பா கட்டிமணி. கட்டிமணி பெல்லாரி சிறைக் கைதிகளுக்கு பயிற்சி கொடுத்து முழுக்க முழுக்க அவர்களைக் கொண்டே இயக்கிய நாடகம். இவர்கள் சிறைகைதிகள்.
பெல்லாரி சிறைக் கைதிகள் சிவப்ரகாஷின் மாரநாயகன் (மாக்பெத்) நாடகத்தில் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் என்று யாராலும் யூகிக்கக் கூட முடியாது. இரண்டுமே எதிர்பாராது கிடைத்த வியப்புகள். திரும்ப விஷயத்துக்கு வரலாம். ஹபீபின் சமீபத்திய தோல்விகள் என்னவானாலும், ஹபீப் ஒரு phenomenon. அவரைப் போல, அல்காஷியின் வருகைக்கு முன்னரே அவர் சம காலத்திய ஜாம்பவான்கள் என்று வங்காளத்திலிருந்து உத்பல் தத், சொம்பு மித்ரா, பின் பாதல் சர்க்கார் மூவரும் அல்காஷி காலத்திலேயே, வளமான நாடக ;பாரம்பரியத்தை வங்கத்தில் காத்து ;பாதுகாத்து வருபவர்கள். மூவரும் மூன்று வித்தியாசமான நாடக வடிவங்களைக் கொண்டவர்கள். சம்பு மித்ரா classical வகையினர். உத்பல் தத் இடது சாரி சித்தாந்த வாதி, நகைச்சுவை உணர்வு மிக்கவர், வேடிக்கையாக, ஒன்று சேராத இந்த இரண்டு குணங்களும் இவரிடம் கலந்து இருக்கும். உத்பல் தத் இவரது நாடகங்கள் ;பிரம்மாண்ட ரூபம் கொள்பவை. ஒரு கப்பலையே நாடக அரங்கமாக்குபவர். பாதல் சர்க்கார், நம்மூர் வீதி நாடகக் காரர்.
ஒரு நாளும் அவர் காமராஜ் அரங்கத்துக்கோ கமானிக்கோ வந்து நாடகம் போடமாட்டார். அது போக இவர்கள் எவரும் எதிலும் அரை குறையல்ல. தாம் வரித்துக்கொண்ட நாடக சித்தாந்தத்தில் முழுபரிணாமம் பெற்றவர்கள். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வளமான வாழும் நாடகத்தின் வழித்தோன்றல்கள். நான் 1955 - லோ என்னவோ கல்கத்தா போயிருந்த போது அங்கு மூன்று நாடக மன்றங்கள் நாள் தோறும் நிகழ்ச்சிகள் கொண்டிருந்தன. வங்காள மொழி நாடகங்கள் மட்டுமா? கல்கத்தாவிலேயே ஹிந்தியில் மாத்திரம் தொடர்ந்து நாடகங்கள் போடும் இரண்டு நாடகக் குழுக்கள் இருக்கிறது தெரியுமா? ஒன்று ஒரு மார்வாரி என்று நினைக்கிறேன். தவறாக இருக்கலாம். அவர் பெயர் ஷ்யாமானந்த் ஜலான். தொடர்ந்து ஹிந்தியில் நாடகங்கள் போட்டு வருகிறார். எனக்குத் தெரிந்து 25/30 வருடங்களாக. இன்னொருவர் உஷா கங்கூலி என்னும் வங்காளிப் பெண். அவரும் ஹிந்தியில் மாத்திரமே நாடகங்கள் போடுகிறார்,
கல்கத்தாவில். என்றால் அது எத்தகைய நாடகக் கலாசாரம் கொண்ட சமூகமாக இருக்கவேண்டும். இது தவிர ஜாத்ரா என்னும் கிராமிய நாடகம் வேறு. நம்மூர் தெருக்கூத்து மாதிரி ஆனால் ஒரு முக்கியமான விஷயம், எனக்குத் தெரிந்து சுமார் 60 ஆண்டுகாலமாக எந்த சமகால நாடகக் கலைஞரும் ஜாத்ரா மாதிரி கூத்தாடி அதுக்கு; நவீன நாடகம் என்று நாமகரணம் செய்யவில்லை. இரண்டுக்கும் நல்ல வரவேற்பும் ஆதரவும் உள்ள தனித் தனி வாழ்க்கை.
ஆக, வங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம். இருந்தும் உருப்படாமல், மாறாமல் போனது தமிழ் நாடு மட்டும் தான் என்று நினைக்கிறேன். அதைப் பின்னால் ராமானுஜம் பற்றி விரிவாகப் பேசும்போது. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது?
ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார். அல்காஷியின் வரவிற்குப் பிறகு, சுமார் இருபது வருட காலம் இருக்குமோ என்னவோ அவர் தேசிய நாடகப் பள்ளியுடன் உறவு கொண்டிருந்த காலம். இந்த பஞ்சாபி நாடகங்கள் போன இடம் தெரியவில்லை. அல்காஷி இருந்த காலம் ஒரு பொற்காலம். தில்லியில் மாத்திரமில்லை. ஹிந்தி, கன்னடம், குஜராத்தி, போன்ற மொழிகளிலிருந்து நாடகாசிரியர்கள் தோன்றினார்கள்,
அவர்கள் நாடகங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப் பட்டன. தில்லியில் மேடையேறின .உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு நாடக மரபுகளின் கலைஞர்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு நாடகப்பள்ளியில் நாடகப்பயிற்சி தந்தனர்.
நான் அடிக்கடி, அனேகமாக வாரத்துக்கு ஐந்து நாட்கள் போகும் இடம் அது. என்னோடு இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்கும் அப்படித்தான் எங்கெங்கோ வேலை பார்க்கும் நாங்கள் மாலையில் சந்தித்துக் கொள்ளும் இடமும் அதுதான். குறிப்பாக டாக்டர் செ. ரவீந்திரன் ஒரு உதாரணத்துக்கு. திட்டமிட்டு அங்கு சந்திக்கும் நண்பர்களோடு, எதிர்பாராது சந்தித்துக்கொள்ளும் நண்பர்களும் நட்புக்களும் கூட உண்டு. எத்தனையோ நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த கட்டிடங்களில் நிகழும்போது அவர்கள் வேறு நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களாக இருக்கும். நாடகம் மட்டுமில்லையே, நடனம், இலக்கிய கூட்டங்கள், எத்தனையோ பல நாடகங்கள், ஒவிய கண்காட்சிகள், இப்படி. அப்படித் தான் எதிர்பாரா சந்திப்பாக செ.ராமானுஜத்துடனும் ஒரு நாள் முன் இரவில், மண்டி ஹவுஸ் பஸ் ஸ்டாப்பில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
இருவரும் நான் பஸ்ஸுக்குக் காத்திருக்க, அவர் என்னைப் பார்த்ததும் ஏதோபார்த்த முகமாக, தமிழ் முகமாக இருக்கிறதே என்று நினைத்திருப்பார்.. எப்படி எங்கள் அறிமுகமும் உரையாடலும் தொடங்கிற்று என்று இவ்வளவு வருடங்களுக்குப் பின் சொல்வது இயலாது தான். தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான் தேசீய நாடகப் பள்ளியின் நாற்பது வருட வாழ்வில். ஹிந்தியில் அல்லவா படிப்பு சொல்லிக்கொடுக்கிறார்கள். தமிழர்களுக்கு அது இழுக்காயிற்றே. ஆகவே நாடகம் படிக்க வேண்டாம். தமிழ்த் தாய்க்காக இந்தத் தியாகம் செய்யக் கூடாதா என்ன? ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஹிந்தி தெரியாவிட்டாலும் இங்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டவரகள் இருக்கிறார்கள். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தால் ஹிந்தியும் வரும் நாடகமும் வரும் அந்த ஒரு சிலரில் ராமானுஜமும் ஒருவர். (செ.ராமானுஜம், பாண்டிச்சேரியில் நிகழ்ந்த தலைக்கோல் விருது விழாவில்செ. ராமானுஜத்துக்கு தமிழ் நாடு தந்த ஒரே கௌரவம், கருஞ்சுழி ஆறுமுகம் வழங்கிய விருது))
எப்படியோ எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டது. ராமானுஜமே எழுதியிருக்கிறார், நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவுக்கு வரும் ஒரே தமிழன் என்ற அதிசயத்தைக் கண்டு தான் பஸ் ஸ்டாப்பில் என்னைக் கண்டு பேச ஆரம்பித்தாக. அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது. இது பற்றி நான் பல இடங்களில் எழுதியுமிருக்கிறேன். ராமானுஜத்தின் நாடகங்கள் தொகுப்பின் முன்னுரை எழுதும்போது, தொடக்கத் திலேயே, என் வாழ்க்கையின் மிக சுகமான கணங்கள், வளமையூட்டிய சந்திப்புகள் தாக்கம் மிகுந்த நிகழ்ச்சிகள் தில்லியின் மண்டி ஹவுஸ் சுற்றிய இடத்தில் நிகழ்ந்தவை” என்று எழுதியிருக்கிறேன். அததகைய வளமையூட்டிய சந்திப்புகளில் ஒன்று தான் செ.ராமானுஜத்துடனான சந்திப்பும்