சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன. இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.
தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார். நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும் அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.
சைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கின. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.
இந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம்! ”சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு” என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து. ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம் – ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.
இந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள்ளான வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கேலிக்கிடமாகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே. இவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிருக்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று. சரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா. சுவின் ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்க முடியும்? அதுவும் தமிழ் நாட்டிலா? சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராய்ச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போகாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடிச் சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும், சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது. வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை சரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக அது இருந்தது.
சமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம். ஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்வம் பெறுகிறது.
அது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி. காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.
நான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரைதான் அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம் அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறிஞருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,
காரணங்கள் என்று நான் கருதுவது, ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா?” என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன?” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் முழு குத்தகை நம் தமிழரின் பிறப்புரிமை
இந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .
மிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது. கற்றாழை, நெருஞ்சி மாதிரி
இதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இத்தகைய கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம் என்று இது பற்றி எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தியும் இல்லை. கண்டனமும் இல்லை. இது இன்று ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாது
என் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும்? எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, அதில் மறைந்து உள்ளிருப்பது ஒரு அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்
இத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம். ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும். அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும்? பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல்லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு ஏற்ப மறு உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.
சமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டை யாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற” யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர். இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணாவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.
ஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.
சமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:
கேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா?
பதில்: வரப் போகிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.
கேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்?
பதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.
- முரசொலி 19.8.61
எப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, பராசக்தி, மந்திரிகுமாரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.
அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.
காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.
iஇந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்கள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும். சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார்? திராவிட நாடு எது? என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது. இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி? பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார்? அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா? அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறான். கடைசியில் இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு!) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.
இப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின் சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”
“இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.” (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்.
பிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது? பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார்” “”அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை.”
இதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில். அச்சாகியிருக்கும் பொன்மொழி.. ஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணாமல் போயின. ஏன்? பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்கள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்னம் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.
இந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து? என்று.
திமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து. இந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா? வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு? இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.
ஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள். அது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள்? யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள்.? பார்ப்பன சதி என்று ஒதுக்கி விடுவது மிக சுலபமாக கைவரும் உத்தி.
பகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா?’’ என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான்?. திருமாவலவன் கேட்பாரா? அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம். “ஆச்சாரியார் என் நண்பர்தான். ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா? என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் அந்த ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன்? யாரும் கேட்டார்களா? அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள்? என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள்? என்று தான் கேட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா? திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி? சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே? நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது? ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா?” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா? கேட்க வில்லை. இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது? என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை? இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்?இந்தப் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வழிகாட்ட வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.
திமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன்? அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா? இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார்? அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.
இதை யார் அக்காலங்களில் கேட்டார்கள்? கேட்பதில்லை. ஏன்? 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள்? கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
மகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ் காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள்” என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, தங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தைல் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ் காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும்? கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக் காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய? மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது! கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகி விட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா? யாராவது கவலைப் படுகிறார்களா?) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, சி.பி.ஐ தலைவர் உடன் வர, சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது. காமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ், ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ் காரர், வேண்டிக்கொள்ள, கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார் இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.
மிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுக வின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீகமொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில் கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனையை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.
இப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும்?. நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிறேன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.
இன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன. ஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, ”பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்?” என்று சொல்லப்படும். சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபால புரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது! தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை சமரன் தொகுப்பு நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.
எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.
பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.
இல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும்? எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… ? ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள்? முரசொலியில் வசைபாட வேறு யாருக்கு தைரியம் உண்டு? இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள். சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும்?. விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.
வ.விஜய பாஸ்கரனின் சமரன் களஞ்சியம்: (பதிப்பாசிரியர்: வ. மோகன கிருஷ்ணன்) தியாக தீபங்கள் வெளியீடு, 63. எச். பார்க்துகார், ராமாபுரம், சென்னை- 600 089
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.