வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீடு தேடி வந்து அறிமுகமானது. அன்று என் இருப்பிடம் என்னவென்று அறிந்த யாரோ ஒரு அன்பரின் சிபாரிசில். முழுக்க முழுக்க கவிதைக்கெனவே வெளியாகும் இலவச இதழ் என்று சொல்லப்பட்டது. அதில் கவிதை எழுதி கவிஞர்களாக அறிமுகப்படுத்தப்பட்ட யாரையும் நான் அதற்கு முன் அறிந்தவன் இல்லை. அதன் வெளியீடும் அதில் தெரியவந்த கவிஞர்களும் தம்முள் தெரியப்படுத்திக் கொண்ட நமக்கும் உரத்த குரலில் அறியப்படுத்திய ஒரு முகம், மொழி இருந்தது. ஒர் உரத்த போர்க்குரல். பழக்கப்பட்ட இடது சாரி கோஷக் குரல். தாமரை, ஆராய்ச்சி, போன்ற இன்னம் சில் கம்யூனிஸ்ட் அல்லது முற்போக்கு இதழ்களில், காணும் முகம் மொழி அது. எனக்கு அந்த குரலும், அது கொண்ட வடிவமும் வேடிக்கையாகத் தான் இருந்தது. இடது சாரிகளின் இன்னொரு இலக்கிய முனை போலும் என்று முதல் இதழிலிருந்தே தோன்றிற்று. எவ்வளவு சுறுசுறுப்பாக முனைப்புடன் இவர்கள் எல்லா முனைகளிலும் செயல்படுகிறார்கள் என்று வியப்பாக இருந்தது. அதிலும் விடு தேடி இலவசமாக, துண்டு பிரசுரம் வினியோகிப்பது போல! ஆனால், ஒன்றிரண்டு கற்கள் அப்பளத்தில். வானம் பாடி கவிஞர்கள் எழுத்து பத்திரிகையின் புதுக் கவிதை இயக்கத்தால் பாதிக்கப்பட்டு அது தந்த சுதந்திரத்தில் வானில் தம் இஷ்டத்துக்கு பறக்க முனைந்து விட்டவர்களாகத் தோன்றினர். அப்படி ஒரு பிரகடனம், ஏதும் அவர்கள் பத்திரிகையில் இல்லை என்றாலும், அவர்கள் கவிதைகள் சொல்லாமலே அப்படித்தான் சாட்சியம் தந்தன. இவ்வளவுக்கும் அதன் கவிஞர்கள தமிழ் புலமை பெற்ற தமிழ் ஆசிரியர்கள். தமிழ் யாப்பு தெரியாததால் புதுக்கவிதை எழுதத் தொடங்கியவர்கள் புதுக்கவிதைக் காரர்களை கேலி செய்த காலத்தில் தமிழ்ப் புலவரகள், புதுக்கவிதை எழுதுவதா? அதிலும் தமது இடதுசாரி சிந்தனைக்கு குரல் கொடுக்க?. இடது சாரிகள் என்று இவர்கள் தம்மைச் சொல்லிக் கொள்ளவில்லைதான்.. ஆனாலும் இடது சாரிகளின் இலக்கிய முனை, கமிஸாரான, சிதம்பர ரகுநாதனும், நா.வானமாமலையும் இலங்கையிலிருந்து இன்னொரு கமிஸார் கலாநிதி க. கைலாசபதி போன்ற பெருந்தலைகள் புதுக்கவிதைக்கு எதிராக காரசாரமாக பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள். அப்படி இருக்க வானம்பாடிகள் இடது சாரி உரத்த குரலுக்கு புதுக்கவிதையை தேர்வதா? கட்டுப்பாடுகள் நிறைந்த இடது சாரிகள் கூடாரத்திலிருந்து இப்படி ஒரு எதிர் முனைப் புரட்சியா? ஆச்சரியமாக இருந்தது.
ஆனால், சின்ன இதழாக இருந்தாலும், கவிதைகளையே கொண்ட இதழானாலும், தோற்றத்தில் இந்த வானம்பாடி ஒரு சிட்டுக்குருவி போலவே இருந்தாலும், இவர்கள் குரல் என்னவோ உரத்த குரலாக இருந்ததற்கேற்ப, ஒரு கூட்டு முயற்சியாக, வானம்பாடிகள் பலர் கவனத்தையும் ஈர்ப்பதில் வெற்றி கண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கடைசியில் தாமரை இதழே அதிக ஆரவாரம் இல்லாது தன் பக்கங்களில் வானம்பாடி கவிஞர்களுக்கு இடம் கொடுத்தது. அதற்கு எதிரே நின்ற சிதம்பர ரகுநாதன், வானமாமலை, கலாநிதி கைலாசபதி போன்றோர் பார்த்திருக்க. தாமரையின் பொறுப்பிலிருந்த தி.க. சி தனித்து எப்படி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார் என்பது ஒரு ஆச்சரியம். ரகுநாதனுக்கும் ரஷ்ய கவிஞர்கள் மாயகோவ்ஸ்கியோ, சிலியின் பாப்லோ நெருடாவோ இன்னும் அனேகர் நினைவுக்கு வராமல் போனார்கள் என்பதும் ஆச்சரியம் தான்.
ஆக, இந்த சமரசமோ, அங்கீகரிப்போ என்னவானாலும் அதிக காலம் நீடிக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, வானம்பாடி இதழும் அதிக காலம் நீடிக்கவில்லை. தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இந்த முரண்பாடான செயல்பாடுகள் வேடிக்கையாக, புரிபடாததாகத்தான் இருந்தன. மிகத் தீவிரமாக எதிர்த்த கலாநிதி கைலாசபதி அவர்களே, வானம்பாடிகளில் ஒருவரான தமிழன்பன் கவிதைத் தொகுப்புக்கு அதே தீவிர ஆரவாரத்தோடு ஆசீர்வாத முன்னுரையும் தந்தருளினார். தமிழன்பனின் “புதுக்கவிதை”க்கு தந்த ஆசீர்வாதங்களோடு, எழுத்து புதுக்கவிதைக்கு வழக்கமான சாபங்களைத் தர மறக்கவில்லை. ரகுநாதன் புதுமைப்பித்தனின் கவிதைகளுக்கான தன் ரசனையோடு கு.ப.ரா, பிச்சமூர்த்தி போன்றோரின் அன்றைய “வசன கவிதை”களை கண்டனம் செய்த மாதிரி. தாமரை சார்வாஹனின் புதுக் கவிதைகளைப் பிரசுரித்ததோடு நா.வானமாமலை புதுக்கவிதைகளை முதலாளித்வத்தோடும் ஏகாதிபத்தியத்தோடும் இணைத்து சாடிய கட்டுரைகளை வெளியிட்ட மாதிரி.
கட்சியின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி, இடதுசாரிகளின் தோற்றத்தில், இடது சாரிகளின் குரலில் வானம்பாடிகள் தம் தமிழ்ப் புலமைக் கட்டுக்களை உதறி, யாப்பறியா செல்லப்பா, க.நா.சு போன்றோரின் புதுக்கவிதையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியது எனக்கு வியப்பளித்தாலும், அவை கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. வெற்று ஆரவார கோஷங்களாகவே இருந்து விட்டன. யாப்பறியாதக் கூட்டத்தினரிடம் இருந்த கவித்வம், யாப்பறிந்த புலவர் கூட்டத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
வானம்பாடி இதழ் இரண்டு வருஷங்களோ அல்லது இன்னம் சில மாதங்களோ என்னவோ தான் வெளிவந்தது. பின்னர் வானம்பாடி இதழ்களில் வெளிவந்த கவிதைகளைத் தேர்ந்து ஒரு தொகுப்பு வெளிவந்தது. வானம்பாடிகளில் ஒருவராகவும் ஆசானாகவும் மூத்தவராகவும் அன்று எனக்குத் தோற்றமளித்த ஞானியின் முன்னுரையும் அதில் இருந்தது.
அந்த தொகுப்புதான் வெளிச்சம். இதைப்பார்த்த பின் என் சில யூகங்கள் பலம் பெற்றன. அந்த தொகுப்பு இப்போது என்னிடம் இல்லை. ஆனால் சில அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் என் நினைவில் இருக்கின்றன. அதே வார்த்தைகளில் சொல்ல முடியாது. நினைவில் இருந்து எழுதுகிறேன். ஞானி தன் முன்னுரையில் வெளிச்சம் தொகுப்பில் வெளியான எந்த கவிஞனையுமோ, கவிதையையுமோ தன் பாராட்டுக்களைத் தவிர வேறு விமரிசன பூர்வமாக எழுதியவரில்லை. தேர்வு செய்த தொகுப்பில் வேறு என்ன இருக்கும் என்று கேட்கலாம். வாஸ்தவம். தன் முன்னுரையின் கடைசியில், இத்தொகுப்பில் உள்ள கவிஞர்களிடமிருந்து எதிர்காலத்தில் தான் பெரிய சாதனைகளையும், இவர்களில் பலர் மகா கவிஞர்களாக மலர்வதையும் பார்ப்போம் என்ற பொருளில், இதே வார்த்தைகளில் அல்ல, என்றும் ஆசீர்வதித்திருந்தார் என்பது நினைவில் இருக்கிறது.
எனக்கு அந்தத் தொகுப்பு உவப்பாக இல்லை என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.என்றைக்கு கோஷங்களும், அர்த்தமற்ற ஆவேச, அலங்கார வார்த்தை உதிர்ப்புகளும் கவிதையாயின. ஆனாலும் அவர்களில் பலர் தமிழ் முறையாகக் கற்றவர்கள். இன்னும் சிலருக்கு இயல்பாக ஒரு மொழி ரசனை, ஓசை நயம், இருக்கக் கூடும் அல்லவா. சில வரிகள் எனக்கு, மொழி நயம், அர்த்தச் செழுமை கொண்டனவாகத் தெரிந்தன. அர்த்தமற்ற அலங்காரங்களுக்கிடையே, சொல்லடுக்குகளுக்கு இடையே, உரத்த கோஷங்களுக்கிடையே
உதாரணமாக, சிற்பியின் பிரகடன கோஷம்
வானம்பாடிகள் நாங்கள்,
வசந்த மின்னல்கள். நாங்கள்
என்று அதுபாட்டில் நிறைய பிரகடனங்கள் வந்து கொட்டிச் செல்லும். இது வானம்பாடிகள் அனைவருக்குமான பொது பிரகடனம். இடையில் தொகுப்பில் இது மாதிரி கோஷங்கள் நிறைய வந்து கொட்டும். ஒரு இடத்தில் சிற்பி, ”தன்னை எந்த தத்துவார்த்த (அதாவது மார்க்ஸீய) கூடுக்குள் சிறை பிடிக்க முடியாது” என்று சொன்னதாக ஞானி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சொல்கிறார். தமிழன்பன் கவிதை ஒன்றில் நிறைய கோஷ பிரவாஹங்களுக்கு இடையில் இரண்டே இரண்டு வரிகள், அதுவும் ஒரு கோஷம் தான், ஆயினும் எனக்கு அது காட்சி பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் நம்மை சிறிது சிலிர்க்க வைக்கும் கவித்வமாக எனக்குப் பட்டது. வெளிச்சங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்து எழுதுகிறேன்.
“நமது சிறகசைப்பில்
ஞால நரம்பதிரும்”
என்ற இரு வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கவிதையின் பிற வரிகளை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஞானியின் இங்கு சர்ச்சிக்கப்படும் புத்தகத்தில் “ஞான நரம்பதிரும்” என்று தடித்த எழுத்துக்களில் அச்சாகியிருக்கிறது. கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் அச்சுப் பிழை சாத்தியமா? மேலும் ஞான நரம்பு என ஒன்று இருக்கிறதா? அதை வானம்பாடியின் சிறகசைப்போ, முற்போக்கு கோஷங்களோ எவ்வளவு உரத்த கூச்சலிலும் அசைத்துவிட முடியுமா? தெரியாது எனக்கு. ஆனால், ஒரு ஆகஸ்த் 9-ம் தேதி காந்தியின் மெல்லிய குரலில் வந்த “சோட்கே சலே ஜா” என்ற வார்த்தைகள், இந்திய தேசத்தின் பரப்பு முழ்தையும் அதிரச் செய்தது. ஞால நரம்பதிரும். ஞான நரம்பு பற்றி எனக்கு சந்தேகம்தான். என் நினைவையும் அனுபவ சாத்தியத்தையும் நம்பலாம் என்று நினைக்கிறேன்.
இப்படி இதில் தொகுப்பு முழுதிலும் படித்து வரும்போது எனக்கு ஒரு காட்சி பூர்வ, அனுபவ பூர்வமான அர்த்தத்தையும் கவித்வ அனுபவத்தையும் கொடுத்த வரிகளை எடுத்துக் காட்டியிருந்தேன். கற்றாழைப் புதரேயானாலும் அதன் பூக்கள் வெகு அழகாக இருந்தால் சொல்லக் கூடாதா? சொல்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிமைச் சேவகம் செய்வதாகி விடுமா என்ன?
ஆனால் ஞானி, வானம்பாடிகள் கவிதைப் பிரவாஹம் ஒரு இயக்கமாகவே வெடித்துள்ளது பற்றியும், அவர்களின் கவித்வம் பற்றியும், வெகுவாக பாராட்டியே எழுதியிருந்தார். எங்கும் ஏதும் குறை சொல்லி ஏதும் அவர் முன்னுரையில் படித்ததாக எனக்கு நினைவில்லை.
எனக்குத் தெரிந்து வானம்பாடிகளின் கவிதைகள் வெற்றுக் கோஷங்களாகவே உரத்து செவியைத்தாக்குவதை, ஞானக் கூத்தன், தருமு சிவராமூ என சிலர் பலரும் அறிந்த கவிஞர்கள் தாக்கியிருந்தனர். எல்லாம் வானம்பாடிகளுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள் தான். அவர்களது முற்போக்கு சகபாடிகளும் ஆதரவாக இல்லை. கட்சியின் பத்திரிகைகள், கட்சியின் அதிகார பூர்வ கமிஸார்கள் வானம்பாடிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.
வானம்பாடிகள் இரண்டு வருடங்களோ என்னவோ சிறகடித்துப் பறந்தார்கள்.
அவர்களுக்கு ஆதரவான கட்சிக் குரல்கள், தாமரையிலும் கலாநிதி கைலாச பதி அவர்கள் (தமிழன்பனுக்கு மட்டும் சிறப்பு சலுகையாகவும்) வந்த ஆதரவு பின்னர் நிகழ்ந்தது.
இருப்பினும் வெளிச்சங்கள் தொகுப்பிற்கு நான் எழுதிய நீண்ட மறுப்பை, மற்ற வானம்பாடிகளும், மற்ற இடது சாரிகளும் அலட்சியம் செய்தார்கள். என்று தான் எனக்குத் தோன்றியது. ஆனால் ஞானி அப்படி அல்ல. அந்த சமயம் ஞானி வானம்பாடிகளிடமிருந்தும் ஒதுங்கினாரோ அல்லது ஒதுக்கப் பட்டாரோ தெரியாது, வேள்வி என்று ஒரு பத்திரிகை தொடங்கி அதில் என்னை எழுதச் சொன்னார். அச்சமயம் அவர் எனக்கு எழுதிய நீண்ட கடிதம் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் என்னை மதிப்பதான குரலாகத் தான் அந்த கடிதம் இருந்தது. என் மறுப்புக் கட்டுரை வெளிவந்த தெறிகள் இதழுக்கு ஒரு நீண்ட கட்டுரை என் எதிர்வினை ஒவ்வொன்றையும் மறுத்து எழுதியதாகவும் ஆனால் அதை தெறிகள் பிரசுரிக்கவில்லை யென்றும் இப்போது நான் சர்ச்சிக்கும் ஞானியின் புத்தகத்திலிருந்து இப்போது தான் எனக்குத் தெரிய வருகிறது. தெறிகள் ஞானியின் பதிலைப் பிரசுரிக்காதது பெரிய தவறு தான்.
வேள்வி இரண்டு இதழ்கள் தான் வெளிவந்தது என்பதும், அதில் நான் ஏதும் எழுதினேனா, (எழுதியதாக எனக்கு நினைவில்லை) என்பதும் தெரியாது. எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஞானியே ஒரு வித்தியாசமான மனிதர் தான். தொண்ணூறுகளின் இடை வருடங்கள் ஒன்றில் நான் முதன் முறையாக கோவை சென்றிருந்தேன். அப்போது பலரை முதன் முறையாகச் சந்தித்தேன். ஞானியுடனும் அவர் அண்பர்களுடனும் ஞானியின் அழைப்பின் பேரில் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன். மனம் திறந்த தயக்கங்கள் ஏதும் இல்லாத சந்திப்புகள்,. அப்போது தான் ஞானி ஒரு விஷயம் சொன்னார். சிகரம் என்ற இதழில், அதன் ஆசிரியர் செந்தில் நாதன் என்பவர் (ஒரு வக்கீலும் கூட என்று சொல்லப்பட்டது) வழக்கம் போல என்மீது பொய்க் குற்றச் சாட்டை வீசியிருந்தார். ஏது ஆதாரம் கிடையாது. கற்பனை தான். இது இடது சாரிகளுக்கே வழக்கமான ஒன்று. நான் அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்றும் இன்னம் என்னென்னவோ எல்லாம், எனக்கு மறந்து விட்டவை, அதில் இருந்தன. தற்செயலாக ஞானி அவரைச் சந்தித்த போது,செந்தில் நாதனிடம் “ ஏன்யா இப்படியெல்லாம் கண்டபடி இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகிறீர்கள்? எந்த ஆதாரமும் இல்லாமல்” என்று கேட்டாராம். அதற்கு செந்தில் நாதன் அளித்த பதில், “ வெங்கட் சாமிநாதன் அமெரிக்க சி.இ.ஏ ஏஜெண்ட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்ப்டி ஒரு குற்றச் சாட்டை பரப்பி வைத்தால், இனி எதிர்காலத்திலாவது அவர் அமெரிக்க ஏஜெண்ட் ஆவதிலிருந்தும் அமெரிக்க பணம் அவருக்கு போவதிலிருந்தும் தடுக்கலாமல்லவா? என்று சொன்னாராம். ஞானி சொல்லிச் சிரித்தார்.
வயிற்று வலி காய்ச்சலுக்குக் கூட மாஸ்கோவுக்கு சிகித்சைக்கு விரையும் கட்சியினரிடம் வேறு என்ன எதிர் பார்க்க இயலும். இப்போது அவர்களது மாஸ்கோ புனித யாத்திரை நின்று ஒரு தலைமுறைக்காலம் கடந்து விட்டது.
ஞானி மாத்திரமல்ல. ஞானியின் முழு பண்பும் மனித நேயமும் சினேக பாவமும் கொண்டது தான். மார்க்ஸிஸத்தை ஏதோ மத விசுவாசத்தோடு அவர் கொண்டாலும். மார்க்ஸின் பெயரை உச்சாடனம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகெங்கும் அஸ்தமனம் ஆகிவிட்டாலும்.
இப்படி இன்னும் ஒரு சில அபூர்வ ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடந்ததுண்டு. ஞானியிடம் காட்டாத கருணைப்பார்வை சிற்பிக்கு வானம்பாடிகளை மிகக் கடுமையாகச் சாடிய தருமு சிவராமூவின் கவிதை ஒன்றை சிறந்த கவிதையாக ஒரு முறை சிற்பி தேர்ந்து எடுத்து அதைச் சிலாகித்து எழுதவும் செயதார். தாமரை அந்த துரோகச்செயலுக்கு உரிய காட்டமான கண்டனத்தையும் எழுதியது.
(தொடரும்)
வானமாடிகளின் கவிதை இயக்கம்: வரலாறும் படிப்பினைகளும்: ஞானி; காவ்யா வெளியீடு: பக்கம் 238 விலை ரூ 200
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.