உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல் மூலம் காணும் காட்சிகள் தரும் அர்த்தங்கள் நமக்குச் சொல்லப்படுவதில்லை. காட்சிகளின் சித்திரத்தோடு நிற்பவை உமா மஹேஸ்வரியின் எழுத்துக்கள். அவை சொல்லாமல் சொல்லும் அர்த்தங்களை உணர்வது நம்மைப் பொறுத்தது.
நான் உமா மஹேஸ்வரியை முதலில் அறிந்தது யாரோ ஒரு மஹி என்னும் புதிய வருகையாகத் தான். 2000 ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிமாறிய புதிது. கதா பரிசுக்கான சிறுகதையைத் தேர்வு செய்ய பணிக்கப்பட்டு ஒரு வருடத்திய எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் என் முன் குவிக்க;ப்;பட்டன. மலையைக் கெல்லும் விவகாரம் தான். இதை ரொம்ப தூரம் நீட்ட வேண்டாம். அகப்பட்டது பழமொழி சொல்லும் எலி அல்ல. இப்போது உமா மஹேஸ்வரி என்னும் பொருட்படுத்த வேண்டிய பெண் எழுத்தாளராக வளர்ந்து முன்னிற்கும் அன்றைய மஹி. அன்று யாரோ ஒரு மஹி. கணையாழியில் வெளிவந்த ஒரு கதை என்று நினைவு. தலைப்பு மறந்துவிட்டது. கதை வீட்டின் மலக்கிடங்கை சுத்தப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் காரியத்தைக் காணும், அவர்கள் வாழ்க்கையின் அவலம். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தலித் மக்களை இந்த அவலத்துக்குத் தள்ளிய சமூகத்தின் கொடூரத்தை கன்ணாடி போல பிரதிபலித்து சமூகத்தின் முன்னிறுத்திய பணியைச் செய்த முற்போக்கு எழுத்தாளர் போராட்டமாக மஹியோ, இதை வெளியிட்ட பத்திரிகையோ (கணையாழி தானா?) அல்லது இதைக் கதா பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நானோ, பரிசு அளித்த கதா நிறுவனமோ முரசு கொட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை, மஹிக்கு இது ஒரு நாள் அனுபவம். நன்றாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது. எழுதவும் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு கதைப் பொருளா? என்று தயங்கி யோசிக்கவும் இல்லை. இதைக் கதையாக எழுதினால் முற்போக்கு அணியில், அல்லது தலித் அணியில் சேர தகுதிப் பத்திரமாகும் என்றும் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை. தனக்கு தெரிந்த ஒரு அனுபவம். இப்படியும் ஒரு பிழைப்பா, வாழ்க்கையா என்று அடி மனம் வருந்தியது. அவ்வளவே. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டிக்காரர் முல்க்ராஜ் ஆனந்த் முதன் முதலாக எழுதுவது Untouchable. என்ன பெருமை தேடி? முன்னணி கலா ரசிகர், தன் இயல்பில் தான் உணர்ந்ததை எழுதுகிற காரியம். இருவரும் குழந்தைகள் உலகையும் எழுதியிருக்கிறார்கள். மஹிக்கோ இதுவும் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தே பார்த்து அறிந்த உலகம் தான்.
மஹி அதற்குப் பிறகு நிறைய சிறுகதைகள் மட்டுமல்ல, கவிதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். எதுவும் தன்னை மீறியதல்ல, தான் அறியாத உலகமோ அனுபவமோ அல்ல. சின்ன உலகம் தான். ஆனால் அந்த அனுபவம் பெறும் அர்த்த விஸ்தாரம் பெரிது.
மேற்கத்திய தத்துவ ஞான சரித்திரத்தில் ஒரு பெரும் தலையான இம்மானுவேல் கான்ட்-ஐப்பற்றி ஒரு விவரம் சொல்வார்கள். அவர் வாழ்ந்த ஊரைவிட்டு 18 மைல் தள்ளி அவர் எங்கும் வெளியே கால் வைத்ததில்லை என்று. அவர் வாழ்க்கை முழுதும் அந்த சிறிய வட்டத்துக்குள் முடிந்தது. ஆனால் அவரை மேற்கத்திய தத்துவ விசார பங்களிப்பு வரலாற்றிலேயே நான்கைந்து பெரும் தலைகளில் ஒருவராக ஆக்கியுள்ளது.
இங்கு பங்களூரு வந்ததும் 2011 - லோ என்னவோ, சாஷ்வதி நஞ்சன் கூடு திருமலாம்பா பரிசுக்கு (இது பெண் எழுத்தாளர்களுக்கு மாத்திரமே ஆன, அதிலும் தென்னிந்திய மொழிகளுள், இந்த குறிப்பிட்ட வருடம் தமிழுக்கான முறை என்று சொல்லப்பட்டது) உரிய தமிழ் பெண் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் நானும் ஒருவனாக இருந்த போதுதான் மற்றோர் எழுத்துக்களுடன் உமா மஹேஸ்வரியின் அனேகமாக எல்லா எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது சிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலும் வியாபித்திருந்தது அந்த பெண்கள் உலகம் தான். சுவர்களுக்குள் அடைப்பட்ட உலகம் தான். அது நிதர்சன உலகம். ஆனால் அடைபட்ட பெண்ணின் மனமும் சிந்தனையும் பெறும் வியாபகம் மறுபடியும் தன் அனுபவம் மாத்திரமே பெறும் விஸ்தாரம் தான். அது மிகவும் விசேஷமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக, எனது மட்டுமல்ல, தேர்வுக்குழுவினதுமான முடிவாக இருந்தது. நஞ்சன்கூடு திருமலாம்பா பரிசு பெற்ற இன்னொரு எழுத்தாளர் நயனதாரா செஹ்கல். ஆங்கிலத்தில் எழுதுபவர். மற்றவர்கள் வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.
அஞ்சாங்கல் காலம் நம் முன் வைக்கும் உலகமும் அதே வீட்டுச் சுவர்களுக்குள் அடைபட்ட பெண்களின் உலகம் தான். அஞ்சாங்கல் என்ற தலைப்பே பெண்கள் உலகத்தைக் குறிக்கும். ஆனால் இன்றைய பெண்கள் அந்த விளையாட்டை அறிவார்களோ, இன்றும் விளையாடுகிறார்களோ தெரியாது. அது ஒரு கால கட்டத்தியது என்று சொல்லத்தான் போலும். இன்று தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி சீரியல் பார்க்கக் குழுமுவோர் காலம்.
நாவலின் முதல் காட்சி ரேணுகா என்னும் அழகான சிறு பெண் விதவையாகி தனித்து விடப்பட்டு தன் வீட்டுச் சாமானகளை லாரியில் ஏற்றி தன் அம்மாவுடன் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் காட்சி. அவள் குடிகாரக் கணவன் தடுமாறி பாறையில் மோதி இறந்துவிட்டான். கணவனின் தம்பி மகாதேவனுடன் அவளுக்கு இருந்த தொடர்பு தெரிந்து அவள் தனித்து விடப்படுகிறாள். பழிதாங்க முடியாது மகாதேவன் யாருக்கும் தெரியாது ஊரை விட்டு ஓடிப்போய்விடுகிறான். ரேணுகா கடைசி நிமிடத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு தான் தனியாகவே அந்த வீட்டில் இருக்கப் போவதாகத் தீர்மானிக்கிறாள். உறவினர் யாருக்கும் அவள் பேரில் இரக்கமோ ஒட்டுதலோ இல்லாது போய்விட்டது. சொத்தைப்பிரித்து தனித்து வாழநினைத்ததும், மகாதேவன் மீது பழியைப் போட்டு அவன் ஊரை விட்டு ஓட காரணமானதும் அவளுடன் ஒட்டுதல் இல்லாது ஆக்கிவிட்டது.
நிறைய உறவுகள் அண்ணன்கள், மதனிகள், தங்கைகள், ஓரகத்திகள் கூட்டுக் குடும்பம் என்றும் இல்லை, பிரிந்து எங்கோ தள்ளி வாழ்பவர்களாகவும் இல்லை என கூட்டுக் குடும்ப பிணைப்பையும் முற்றாக விடாது, அடுத்த வீட்டில் எதிர்த்த வீட்டில் பக்கத்துச் சந்தில் தனி வீட்டில் வாழும் ஒரு பெரிய குடும்பம் அது. ஒவ்வோரு வீட்டிலும் மூன்று நான்கு சின்ன சின்ன குழந்தைகள். அதுகளும் கூட எல்லாம் பெண் குழந்தைகள். நாவலில் ஒரு பெரும் பகுதி இந்த குழந்தைகள் உலகமாகவே விரிகிறது.
தர்ம ராஜா, செல்வமணி, சந்திரவேல் என்று சகோதரர்கள் அருகிலேயே வேறு வேறு வீடுகளில் இருப்பவர்கள். இதோ வந்துட்டேன் என்று எதிர்வீட்டுக்குப் போனால் அங்கு விஜி ஒரகத்தி தன் குழந்தைகளுடன். எல்லாருக்கும் மூத்த பெரியய்யா கொஞ்சம் தள்ளி ஒரு ஊரில் எப்போதாவது வந்து போகிறவர், இந்தக் குடும்பங்களுக்கு அவ்வப்போது கடன் உடன் கொடுத்து, உதவியாக இருக்கும் கிருஷ்ணசாமி வேறு சாதிக்காரர். ஆனால் இவர்கள் மதிக்கும், மரியாதை செய்யும் வியாபாரி. பெருஞ்செல்வர். ரேணுகாவுக்கு புத்தி சொல்ல கிருஷ்ணசாமியை அழைத்து வருவது சந்திரவேல். ரேணுகா பிடிவாதக் காரி. தான் நினைத்ததைச் சாதிப்பவள். தனக்கு புத்தி சொல்ல வந்த கிருஷ்ணசாமியை ரேனுகா மதிக்கவில்லை. கிருஷ்ணசாமி பெரிய மனுஷ தோரணையில், அவள் இஷ்டத்துக்கு விடுங்க என்று ஒதுங்கி விடுகிறார். கிருஷ்ணசாமி பெரிய மனுஷ தோரணையில் அன்பைப் பொழியும் தருணங்களும் உண்டு. இரக்கமற்ற, முரட்டுத்தனத்தைக் காட்டும் தருணங்களும் அவ்வப்போது வெளிப்படும். தன் இளம் மனைவி பாவை குழந்தைப் பேரற்று இருப்பதற்கு காரணம் தானென்று தெரிந்தும் அவளை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் செல்வார். மருத்துவ சோதனையில் தன் குறை அவளுக்குத் தெரிந்து விடக்கூடாது என்று கவலைப் படுபவர். அவளுக்கு இரக்கப்பட்டாலும் அவளைத் துன்பப்படுத்துகிறவர். பாவையே தன் குறைதான் என்று எண்ணி அவரை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். அவருக்கு ரேணுகாமீது ஒரு கண் இருந்தது தான். தன்னிடம் கடன் பட்டிருந்த ரேணுகாவின் அண்ணன்களில் ஒருவனான ஷண்முகத்திடம் தன் விருப்பத்தைச் சொல்கிறான். கிருஷ்ணசாமிக்கு ரேணுகாவை முடித்துக் கொடுத்தால் தான் கடனிலிருந்து விடுபடலாம் என்றும் ஒரு எண்ணம். அவனுக்கு, அம்மா சொர்ணத்திடம் சொல்கிறான், இவளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். சின்ன வயசு இப்படியேவா இருக்க விடுவது? என்று தங்கை மீது பாசம் காட்டுகிறான். அம்மா சொர்ணத்துக்கு தயக்கம். சாதி வேறு தடையாக இருக்கிறது. ஆனால் ரேணுகாவைக் கேட்டால், அவளுக்கு “நீ என்ன வேணாலும் செய்துக்கோ” என்று விட்டேற்றியாக பதில் சொல்கிறாள். கடைசியில் கல்யாணம் நடக்கிறது. கிருஷ்ணசாமி அவளுக்குத் தனி வீடு ஒன்று ஏற்பாடு செய்கிறார் மதுரையில். அவ்வப்போது வந்து போக. பரமு என்று ஒரு வேலைக்காரி. ரேணுகாவிடம் அந்த வீட்டை உன் பேரில் எழுதி வாங்கிக்கோ என்று உபதேசம் செய்கிறாள். ரேனுகாவுக்கு, அவர் என் கிட்ட அன்பாகத்தானே இருக்கிறார், என்று தயக்கம். நாளைக்கு என்ன ஆகும் என்று யார் என்ன சொல்ல முடியும்? நீ இப்படி அறியாப்பிள்ளையா இருக்கியே” என்று சொல்ல, ரேணுகா என்ன ஆகுமோ என்று பயந்து பயந்து கிருஷ்ணசாமியிடம் வீடு யார் பெயரில் இருக்கு? என்று கேட்க, கிருஷ்ணசாமி கல்யாணத்தன்றே அவள் பெயரில் எல்லாம் மாற்றியாச்சு என்று சொல்லி பத்திரங்களைக் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்கிறார் இப்படியே அடுத்தடுத்து நகைகள் அது இது என்று பரமுவின் உபதேசம் கேட்டு, சேகரிக்கப் படுகிறது.
கிருஷ்ணசாமியின் மயக்கம் கலையும் நாளும் வருகிறது. அவரது ஆத்ம நண்பர், ரேனுகா தன் மச்சினனுடன் தொடர்பு கொண்டவள். பெரிய குடும்பம் பங்கு பிரிக்க காரணமானவள், ஊரே தெரிந்த விஷயம் உனக்கெப்படி தெரியாமல் போச்சு? என்று சொல்ல, கிருஷ்ணசாமிக்கு சந்தேகம் வந்து விடுகிறது. தன் நண்பனையே தூண்டில் இரையாக வைத்து சோதிக்கிறார். நண்பருக்கு இது சங்கடமாக இருந்தாலும் நண்பருக்காக சம்மதிக்கிறார். ரேணுகா அந்த வலையில் விழுவதில்லை. இருந்தாலும் கிருஷ்ண்சாமியின் சந்தேகம் தீருவதில்லை. மறுபடியும் நண்பனை வீட்டில் தனியாக விட்டு சோதிக்கிறார். மறுபடியும் அவமானப்படுவது நண்பர் தான். தான் சரக்கெடுக்க வெளியூர் போவதாகவும் வர பத்து நாளாகும் என்று சொல்லி, தான் இல்லாத போது யாராவது வராங்களா என்று பார்க்க நாள் பூராவும் வீட்டை சுத்தி இருக்கும் கருவேலம் புதரில் ஒளிந்திருந்து வேவு பார்க்க, வீட்டு தோட்ட வேலைக்காரன் பார்க்க, அவனுக்கு சைகை காட்டி சும்மா இருக்கச் சொல்லி, இரவு பூராவும் வேவு பார்த்தும் ஒரு பயனுமில்லாது, கோபம் தான் அதிகமாகிறது. தான் கேவலப்பட்டுப் போவது தெரிவதில்லை. தனியாக இருக்கும் போது பாசம் பொழிவதும் திடீரென்று, மகாதேவன் எங்கிருக்கிறான், அவனோடு எத்தனை தடவை இருந்திருக்கிறாய் என்றெல்லாம் விசாரணை நடக்கிறது வன்முறையோடு தான். எத்தனை தடவை என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை என்று ரேணுகாவின் பதில் வருகிறது. கட்டுக்கடங்காத கோபத்தில் அடி விழுகிறது. சற்று நேரம் கழித்து அது ஒரே பாசமாக மாறி பொழிகிறது. என்னை ஏன் கோபப் படுத்தினாய்? ,நீ என் கண்ணல்லவா? என்று டயலாக் இத்யாதி இத்யாதி. பின் ஒரு நாள் “ஏன் இங்கேயே கிடந்து உழல்கிறாய்?, வண்டியை எடுத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்துவிட்டு வாயேன்? என்று அன்பு பொழியும் யோசனை ஒன்று. ட்ரைவருடன் அனுப்பிய பிறகு, அவளை இன்னொரு வண்டியில் தொடர்கிறார். ரேணுகா நிறைய ஆவலுடன் ராஜி, பொன்னு, பொன்னி, விஜி, சுதா லதா, சுமித்ரா எத்தனை இல்லை, தன் தங்கை பட்டாளங்கள். அவர்களுடன் அஞ்சாங்காலம் விளையாட்டு. திரும்பி வரும்போது ட்ரைவரிடம் சொல்லி வழியில் ஒரு மரத்தின் பின்புறம் ஒதுங்க, முன்னர், பின் தொடர்ந்த கார் சற்று தூரத்தில் நிற்பதையும் ஒரு ஆள் மறைவாக ஒதுங்குவதையும் பார்க்கிறாள். வீடு வந்ததும், மரத்தின் பின்னால் ஒதுங்கினாயே யார் அங்கு இருந்தது? என்று மறுபடியும் விசாரணை. அடி. மறுபடியும் காலைப் பிடித்து கெஞ்சல். காதல் வார்த்தைகள். பரமு இதைப் பார்த்துச் சட்டென மறைந்து கொள்கிறாள்.
செல்வமணி இன்னொரு மைத்துனன் வீடு. அதே சேலாபுரத்தில். கடை வியாபாரத்தின் இடையில் பணம் எடுக்க வீடு வந்தால், குழந்தைகள் பள்ளியில். பெண்டாட்டி தனராணி வீட்டில் இல்லை. வேலைக்காரி சுவனம்மாள் குளியலறையிலிருந்து வெளியே வருகிறாள். அவளுடைய கட்டுடம்பு மயக்க, சுவனம்மாளுக்கும் மறுப்பில்லாது போக, இடையில் தனராணி வீட்டுக்குள் நுழைய ஊர் அறியும் கலவரம் வெடிக்கிறது. இனி இவருக்கும் எனக்கும் ஒரு உறவும் இல்லை. மூன்று பெண் குழந்தைகளுக்கும் பராமரிப்புக்கு தினம் இவ்வளவு பணம் மூன்று உண்டியல்களில் போட்டு விடவேண்டும். எனக்கு இவ்வளவு, பெண்கள் கல்யாணத்துக்கு இவ்வளவு பணம் என்று பேரம் பேசி முடிவாகிறது. பெரியவர்கள் அண்ணன்மார்கள் சமாதானப் பேச்சு நடக்கிறது. அவளாவது மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றவள், வீட்டுக்குள் தகராறை அடக்காது உலகம் அறிய கலவரம் செய்வாளா? இல்லை இவன் தான் இதையெல்லாம் சாடை மாடையாக வைத்துக்கொள்ளாமல்… விவரங்கெட்ட பயலாக இருக்கிறானே, அவளும் ஆம்பிளைகள் எல்லாம் இப்படியும் அப்படியும் இருக்கிறது சகஜம் தானே, ஊர் உலகத்தில் நடக்காத காரியமா? சமாளித்துப் போகத் தெரிய வேணாமா ஒரு பொம்பிளைக்கு, என்று தான் அவர்களுக்குள்ளான எண்ண ஓட்டம். சமாதானம் செய்தாகிறது, தனராணி சொன்னபடி. செல்வமணியோடு பேச்சு கிடையாது. வேளாவெளைக்கு சோறு கிடைக்கும். ஒப்பந்தப் படி பணம் கொடுத்தாகணும். இத்யாதி இத்யாதி. செல்வமணி சுவனம்மாளையும் நிர்க்கதியாக்கி விடவில்லை. அவளுக்கு என தூர ஒரு தோட்டத்து நடுவில் வீடு தயாராக்கப் படுகிறது. அவர் அவளை அவ்வப்போது பார்த்து கவனித்துக்கொள்வார். சாப்பாடும் அனுப்பப்படும். ஒரு நாளைக்கு தன்ராணிக்கு வீடு சென்று கடைவேலைக்காரன் ஒரு பை கொடுக்க, இன்னொரு பை எதுக்கு? என்று தனராணி கேட்க, அது சுவனம்மாவுக்கு ஐயா கொடுக்கச் சொன்னாரு” என்று சொல்ல……. மயில் ராசு, சுவனம்மாவின் கணவன், “ஐயா வீட்டு வேலையை ஏன் விட்டாய், குடும்பம் எப்படி நடத்தறது? என்று சத்தம் போட அதற்குப் பின் நடந்த சமாசாரம் அவனுக்கும் தெரிய வர, அவன் வீராங்காளி கோயிலுக்குச் செல்லும் தனராணியின் பெண் ஜக்கியை மிரட்டி, “ஏன் பெரியவங்க வீட்டு வேலைக்காரின்னாத்தான் இளப்பமா, போய்ச்சொல் உன் வீட்டிலே நான் தான் சுவனம்மா புருஷன் மயில்ராசுன்னு சொல்லு” என்று தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்கிறான்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வளர்கின்றன. இரண்டாவது பெண் பொன்னியை இன்னொரு பையன் தொடர்கிறான். அவனுக்கு அவள்மேல் காதலாம். அந்தப் பையன் தூண்டுதலில் அவன் அப்பா சந்திரவேலுவிடம் சொல்ல, அவன் தனராணியிடம் அவளுக்கு சம்மதமா என்ன? என்று விசாரிக்க, அவளோ, தன் பெண்ணுக்கு என்ன இப்பவே எல்லாம் கேட்குதா? என்று சீற, சந்திரவேலு, “நான் விஷயத்தைச் சொன்னேன், இப்படி இருக்கு, பையனுக்கு ஏதோ நோவு, மார் அடைச்சுக்குதாம்: அது வேற,” என்று நழுவ, மறுபடியும் பெரியவர்கள், அண்ணன் மார்கள், தனராணி எல்லோரும் வழக்கம் போல் கூடி பேச, போயும் போயும் ஒரு சீக்காளிப் பையனுக்கா கொடுக்கறது என்று கேள்வி எழுகிறது. இப்படி எல்லா விஷ்யங்களும் பிரிந்து வாழும் உறவினர்கள் கூடிப் பேசி தான் முடிவாகிறது. அக்கா, ராஜியும் அதான் சொல்கிறாள், எல்லாரும் பிரிஞ்சு இருந்தாலும், ஏதும் ஒண்ணு நல்லது கெட்டதுன்னா, குடும்பத்து விஷயம்னா எல்லாரும் நாங்க பெண்டுகள்ளாம் ஒண்ணு சேந்துக்குவோம், என்று சொல்கிறாள்.
ஒரு தடவை இப்படிக் கூடியிருக்கும் போது தான் பெரியய்யா சொல்கிறார். ஊரிலே யாரும் நமக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க. ஊருக்கு வெளியே ஒரு கிணறு வெட்டி அதிலேதான் தண்ணி எடுத்துக்கணும். நம்ம பொம்பிளைங்க மேலுக்கு மறைக்க துணி போட விட மாட்டாங்க, பனை மரம் ஏறி கள்ளும் கருப்பட்டியும் வெளியூருக்கு கொண்டு போய் வித்து நமக்கு வேண்டியதை வாங்கிக்குவோம். ஊருக்குள்ளேயே விடமாட்டாங்க, நாமெல்லாம் பிற்பட்ட சாதி. ஸ்கூல்லே கூட மோஸ்ட் பாக்வார்ட்டுன்னு தான் சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்க. ”பனையேறிங்க”ன்னு தான் நம்மை இளப்பமா சொல்வாங்க. அப்படித்தான் ஒரு காலத்திலே இருந்தோம். நாமா உழைச்சுத் தான் இப்போ இந்த நிலைக்கு வளர்ந்திருக்கோம்” என்று பழங்கதையைச் சொல்கிறார். “இதென்னத்துக்கு இப்போ அதையெல்லாம் பேசிக்கிட்டு. இவங்களுக்கெல்லாம் தெரியணுமா? என்று தனம்மா வோ யாரோ இப்படி பழங்கதையைக் கிளப்புவதை விரும்பவில்லை. இவங்களுக்கும் தெரியட்டுமே, எப்படி இருந்தோம், எப்படி உழைச்சுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கொம்னு தெரியணும்லே என்ற ரீதியில் அவரும் பதில் சொல்கிறார்.
தனத்தின் மகள் சுமியின் மாமியார் ரத்தினம்மாதான் கணவன் துணை இல்லாது தானே கஷ்டப்பட்டுத் தன் மகன் ராஜாயை வளர்த்தவள். அந்த அதீத பாசம், சுமியிடம் தன் மகன் ராஜாவை இழந்துவிடுவோமோ என்ற பயம். ராஜாவோ அம்மாவுக்கு பயந்தவன். சுமியிடம் உள்ள தன் பாசத்தைக் காட்ட பயந்தவன். ஒரு நாள் இளம் தம்பதியர் உல்லாசமாக வெளியே கிளம்பினால் அவளுக்கு ஆகாது. உடனே உடல் சுகமில்லையென நாடகமாடுகிறாள். ராஜாவும் அவளை டாக்டரிடம் இட்டுச் செல்கிறான். சுமி கர்ப்பமானதும், அவளை ராஜாவிடமிருந்து பிரிக்க இப்போ குழந்தையும் சேர்ந்துவிடும் என்ற பயம். தன் மகனிடம் அதைக் கலைக்கச் சொல்கிறாள். சுமியும் இவர்களை நம்பி இது வழக்கமான சோதனை தானே என்று மருத்துவ மனைக்குப் போகிறாள். மருத்துவ மனையில் கருவைக் கலைக்க மறுக்கிறார்கள். அம்மா வேறொரு மருத்துவ மனைக்குப் போய் கலைக்கச் சொல்லி சுமியின் கரு கலைந்து அவள் ஏதும் அறியாது வீடு திரும்புகிறாள்.. இது சுமியின் அம்மாவுக்குத் தெரிந்து அவளுக்கு சந்தேகம். அடுத்த வாட்டி யாரிடமும் சொல்லாது எனக்கு தகவல் சொல்லு, நான் அழைத்துவந்து விடுகிறேன் என்று எச்சரிக்கை செய்ய, அப்படியே நடக்கிறது. மாமியாருக்கு வரும் சீற்றம், என்னிடம் சொல்லாது அம்மாக்காரிக்கு ரகசியமா சொல்லியாகிறது என்று வெடிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. ரத்தினம்மாளை கெஞ்சி கூத்தாடி குழந்தையை பார்க்கவும் சீர்கள் செய்யவும் அழைக்கிறார்கள். வந்தவர்களை அவமானப் படுத்தும் ரத்தினம்மாவை சமாதானப் படுத்தி அனுப்புவது, ரத்தினம்மாவின் மூத்த சகோதரர். குழந்தையைப் பார்க்க மாப்பிள்ளை கூட வரவில்லையே என்று இங்கு இவர்கள் தவித்துக் கொண்டிருக்க அம்மாவுக்கு பயந்து இருக்கும் ராசா குழந்தையைப் பார்க்கும் ஆசையில் அம்மாவுக்குத் தேரியாமல் கடையிலிருந்து காரை எடுத்துக்கொண்டு ரகசியாகப் போய் பார்த்து விட்டு அன்றே வீடு திரும்புகிறான்.
கடைசியாக, கிருஷ்ணசாமி தன் சந்தேகம் தீராது கொதித்துப் போகிறான். ரேணுகாவிடம் அவன் கொள்ளும் சந்தேகம் தான் அவனை அவ்வப்போது மிருகமாக்கி விடுகிறது. அவன் தன் மனைவியைச் சோதிக்க அனுப்பும் நண்பர் கூட அவள் ஒன்றும் அறியாதவள், உன்னிடம் மிகுந்த பாசத்துடன் இருக்கிறாள் என்னை ஏன் இப்படியெல்லாம் செய்யச் சொல்கிறாய்? என்று பல தடவைகள் சொல்லியும் அவன் சந்தேகம் தீர்வதில்லை. தன் முதல் மனைவியிடம் ஒரு நாள் போகிறான். அவளும் ரேணுகாவைச் சந்தித்து தன் பரிசாக ஏதோ நகைகள், புடவைகள் கொடுத்து வருகிறாள். தன்னிடம் ஒரு முறை வந்த கிருஷ்ணசாமி அவளைப் பற்றி தூஷணையாகப் பேச, அவள் அவரைக் கண்டிக்கிறாள். அவள் ரொம்ப நல்ல பெண் மிகுந்த பாசமாக இருப்பவள், அவ்ள் உங்களை நம்பி வந்தவள் என்றெல்லாம் நல்ல வார்த்தை சொல்கிறாள். கடைசி வரை அவளிடம் உள்ள குறையால் தான் குழந்தை இல்லை, என்றே நம்பியிருக்கிறாள்.
கிருஷ்ணசாமி ரேணுகாவிடம் திரும்பிச் சென்று மறுபடியும் மகா தேவன் தொடர்பைக் கிளறுகிறார். கோபம் கட்டுக்கடங்காது, அவள் தலையை பிடித்து சுவற்றில் பலமாக மோத அவள் மூர்ச்சையற்று தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். மறுபடியும் அழுகை, கதறல். “என்னை மோசம் செய்துவிட்டாளே, தூக்கில் தொங்குகிறாளே என்று கதறல். அவசர அவசரமாக, அவள் தூக்கில் தொங்கும் புடவை அவிழ்க்கப்பட்டு போலீஸ் கேஸ் ஆவதற்கு முன்னால் சவ அடக்கம் செய்யப் படுகிறது. கிருஷ்ணசாமி நல்ல விலை உயர்ந்த பட்டுப் புடவை ஒன்று வாங்கி அவளுக்கு அணிவிக்கப்படுகிறது. அந்தப் பொண்ணு சவமாக் கிடக்கறவளுக்கு இத்தனை காசு போட்டு புடவை வாங்கி வராறு. அவருக்குத் தான் எத்தனை ஆசை அவ கிட்ட. அவளுக்குத் தான் கொடுத்து வைக்கலை” என்று அந்தக் கூட்டத்தில் சிலர் ஆதங்கப் படுகிறார்கள்.
இந்த நாவலில் நமக்கு இதம் அளிக்கும் பக்கங்கள் பிரிந்து வாழும் அந்தக் குடும்பத்தில் வெவ்வேறு அடுத்தடுத்த வீடுகளில் காணும் குழந்தைகளின் உலகம் தான். இக்குழந்தைகளின் உலகம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியை நிறப்பியுள்ளது. அவர்களின் பேச்சும், துடுக்கும், விளையாட்டும் (வடையை எண்ணெய் சட்டியிலிருந்து எடுக்கும் போதே நாலை வாயில் போட்டுக்கொண்டு கையை புடவையில் துடைத்துக்கொள்ளும் சுவனம்மாளைப் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ளும் குழந்தைகள், “நீங்க வடையைத் தின்னு துடைத்துக்கொண்டப்புறம், தான் நாங்க வந்தோம்” என்று தைரியம் சொல்கின்றன) ஒரு சுகமான அனுபவம். அதென்னவோ எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் மூன்று நான்கு என்று பெண் குழந்தைகளாகத் தான் காணமுடிகிறது. தப்பித் தவறி ஒரு சின்னப் பொடியனைக் கூட காண முடிவதில்லை.
இன்னொரு விஷயமும் கூட இது முழுக்க முழுக்க வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் உலகம் அவர்கள் தான் அஞ்சாங்கால உலகை நிறைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் உலகில் துணை நடிகர்கள் தான். அவர்கள் ஆதிக்கமே மேலோங்கியிருந்தாலும். அந்த மேலாண்மை கொஞ்சம் கூட பரிவு காட்டாத உலகம். சமாதானம் செய்ய வரும் ஒரு நல்ல மனிதர் பெரிய மனிதர் கூட, ஆண்கள் அப்படியும் இப்படியும் தான் இருப்பார்கள். அதில் கொஞ்சம் சாடை மாடையாக இருந்திருக்கலாம். பெண்களும் அதை வீட்டுக்குள் தம் சண்டையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். ஊரைக் கூட்டி கலகம் செய்வார்களா என்ன? என்று தான் அவர் தீர்ப்பு சொல்கிறார். இவர்களும் சரி, கொஞ்சம் அதிகாரம் காட்டும், கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்க முயலும் பெண்களும், அம்மாவுக்கு பயந்து மனைவியிடம் அன்பு காட்டத் தயங்கும் ஆண்களும் நாம் சகஜமாகப் பார்க்கும் மனிதர்கள் தான். ஆனால் கிருஷ்ணசாமி அவ்வப்போது காட்டும் அரக்கத் தனமும், திடீரென்று பெண்டாட்டி காலில் விழுந்து அழும் விசித்திரம் சுஜாதாவின் அந்நியன் மாடல் தான். இந்த மனிதன் இன்ன மன நிலை காரணமாக இப்படி என்று விஞ்ஞான விளக்கம் ஒன்று தரவேண்டிய நிர்ப்பந்ததுக்கு சுஜாதாவைத் தள்ளும் விசித்திர குணம்.
இது பெண்களின் உலகம். வீட்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்களின் உலகம் அது குரல் எழுப்பாமல் கோஷங்கள் இடாமல், மிகை உணர்ச்சி எழுப்ப தடித்த வண்ணங்களில் தீட்டாமல், பெண்களின் அடக்கப்பட்ட வாழ்வை ,அதை மீறவேண்டும் ஒன்றாக எண்ணாது இயல்பாக ஏற்று வாழ்வேண்டியதே தர்மம், வளமுறை என்று ஒரு மரபு, ஆணாதிக்கம் எவ்வளவு இயல்பு மீறி வெளிப்பட்டாலும், சகஜமாக இது தனக்கு விதிக்கப்பட்டதாக ஏற்று வாழும் ஒரு மரபு நிலவிய நிலை. அதுவே பிரகடனம் செய்யாமல், கோஷங்கள் எழுப்பாமல், மிகைப்படுத்தி ஒரு கோர சித்திரம் தீட்டாமல், சொல்லாமல் சொல்லும் உணர்த்தும் இயல்பான எழுத்து உமா மகேஸ்வரியினது.
அஞ்சாங்கல் காலம்: உமா மஹேஸ்வரி: (நாவல்) வம்சி புக்ஸ், 19, டி.எம் சாரோன், திருவண்ணாமலை, 606601 பக்கங்கள் – 448 விலை ரூ 350
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 13.11.2014