டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது. அப்படித்தான் அவர் 1959-ல் யாமினியை இனம் கண்டதும். அப்பொழுதே, அந்த முதல் சந்திப்பிலேயே அவர் எழுதினார்: “மிகுந்த திறமையும், அழகும் மிக்கவர் யாமினி. தன் நடனத்தின் திறன் கொண்டே உலகையே வெற்றி கொள்ளும் உன்னத ஆற்றல் மிக்க வெகு சிலரில் யாமினியும் ஒருவர்”. டாக்டர் ஃபாப்ரி மிக தாராள மனம் கொண்டவர் என்பதும், எங்கு யார் புகழுக்குரியவரோ அங்கு தன் மனதார பாராட்டுக்களைச் குறைவின்றி தருபவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. எவ்வளவு தான் ஒருத்தர் தாராளமாகப் புகழ்பவர் என்றாலும், “தன் நடனத்தின் திறன் கொண்டே உலகையே வெற்றி கொள்ளும் உன்னத ஆற்றல் மிக்க வெகு சிலரில் ஒருவர்” என்றா அளவுக்கு மீறி ஒரு புதிய இளம் நடன மங்கையை ஒருவர் புகழ்வார்?. டாக்டர் சார்ல்ஸ் ஃபாப்ரி யாமினியை அப்படித் தான் பாராட்டினார். அது ஏதும் தன் குழந்தையின் அதிசய திறனைக்கண்டு அப்பா அம்மா முதுகில் தட்டிக்கொடுக்கும் விவகாரமாக இருக்கவில்லை. இப்போது ஒரு இளம் பெண்ணிடம் முகிழ்த்து வரும் கலைத் திறனைக் கண்டு மதிப்பிட்டு விட்ட தீர்க்க தரிசனம். அப்பெண்ணின் ஆளுமையில் பொதிந்திருக்கும் சாதனைத் திறன்களைத் தன் உள்ளுணர்வு கண்டு சொன்ன தீர்க்க தரிசனம்.
யாமினி சமரசம் என்பதே அரியாத செவ்வியல் மனம் படைத்தவர். செவ்வியல் துறந்த யாமினி யாமினியே இல்லை. இருப்பினும் அவர் ரசிகர்களிடையே பிராபல்யம் பெற்றவர். கலைப் பரிச்சயம் அற்றவர்களோடு கூட அவரது நடனம் பேசும். ஒரு உதாரணம். கதக் நடனத்தை ரசிக்க ஏதும் உயர்ந்த நடன ஞானம் தேவை இல்லை. கால்கள் போடும் தாளத்தையும் சக்கர்களையும் கொண்ட கதக் வெகு சுலபமாக பாமரர்களையும் வாய் பிளந்து வியக்க வைத்துவிடும். அதற்கு எவ்வித கலை பரிச்சயமோ அறிவோ தேவையில்லை. அத்தகைய கதக் ரசிகர்களிடையேயும் கூட, மிகப் புகழ் பெற்ற கதக் நடன கலைஞர்களை விட யாமினி அதிக பிராபல்யம் பெற்றவர். அந்த 1959 ஆரம்ப வருடங்களிலேயே ஒரு முறை லாஹுரில் யாமினியின் நடன நிகழ்ச்சி நடந்திருக்கிறது. நினைத்துப் பார்க்கலாம். லாஹூர் என்ன பரதம் கண்டது? முஸ்லீம் மக்களிடையே கதக் நடனமே கூட மறையத் தொடங்கி யுள்ளது. அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்வதில் தாமதமாகிவிட்டது. அதனால் பொறுமை இழந்த கூட்டத்தில் என்ன நடக்குமோ என்ற தவிப்பு. தாமதமாக வந்த யாமினி ஆடத் தொடங்கியது ஒரு ஸ்வரஜதி. மிகவும் சிக்கலான, நீண்ட ஹுஸேனி ராகத்தில் அமைக்கப் பட்டிருந்த ஸ்வரஜதி. ஹிந்து கலைவடிவங்களில் மத ரீதியான பகைமையை ஊட்டி வளர்த்துக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த கூட்டத்தின் தொடக்க பொறுமை யின்மையும் சலசலப்பும் மறைந்து, சூழ்ந்தது கனத்தை அமைதி. நிகழ்ச்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுந்ததாம். கஷ்மீர் கிராமங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் கஷ்மீரி பெண்கள் (முஸ்லீம்கள்) யாமினியைச் சுற்றி கிட்ட வட்டமாகக் கூடி உட்கார்ந்து கொண்டார்களாம். யாமினியை தொட்டுப் பார்ப்பார்களாம் ஆசையோடு. ஒரு வேளை இது அப்படி ஒன்றும் ஆச்சரியப்படுத்தும் சம்பவமோ விஷயமோ இல்லை. நாட்டியக் கலையே அழகைச் சிருஷ்டிக்கவும் ஜனங்களை சந்தோஷப்படுத்துவதுமே நோக்கமாக கொண்டு உருவானதது தான் என்கிறார் பரத முனிவர். நடனமாடுபவர் ஒரு கலைஞர் என்றால், அக்கலையின் இலக்கணம் எவ்வளவு நுணுக்கமானதும் சிக்கலான பின்னலாகவுமாக இருந்தாலும் அவற்றை தன் உணர்வுகளை வெளிப்படுத்த வல்ல மொழியாக அந்த கலைஞரால் தரமுடியும். ஒரு பார்வையில், ஒரு படி நிலையில் சொல்லப் போனால்,, பரதத்தின் புரிபடாத முத்திரைகளும், எண்ணற்ற ஜதிகளும், அடவுகளும், மேடை முழுதையும் தனதாக்கிக் கொள்ளும் சலனங்களும், சொல்லப்படும் தனக்கு விளங்காத, தனக்கு பரிச்சயமற்ற கதையும், தனக்குப் பழக்கமில்லாத சங்கீதமும், எல்லாம் அர்த்தமற்றதாக தனக்கு பயனற்றதாகத் தான் தோன்றும். ஆனால், என்னவென்று சொல்ல முடியாத, மிக அழகான ,தன்னைக் கவர்ந்து உட்கார்ந்த இடத்தில் தன்னை ஈரித்து அசைவிலாது அமர்த்திவிடும் தன்னை மறக்கச் செய்துவிடும் ஒன்று, சபையில் பரந்து நிறைந்து விடுகிறது. உண்மையான கலையின் மாயம் அது தான். இலக்கணம் தெரிவை, கற்றலை வேண்டுகிறது. உத்திகளும் தெரிவை, பரிச்சயத்தை வேண்டும். ஆனால் கலையோ உணர்ந்து அறிய அனுபவிக்க இவற்றில் எதுவும் வேண்டுவதில்லை.
இதோ ஒருவர், பரத நாட்டியம் சொல்லும் கதையையோ, அது எழுந்த கலாச்சார சூழலையோ, அபிநயம் முத்திரைகள் போன்றவை குறிக்கும் அர்த்தத்தையோ முற்றிலும் அறியாதவர், யாமினியின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு எழுதுகிறார்:
We may not have grasped the meaning of all the thoughts in her monumental vocabulary of movement, but we sensed beyond doubt the emotional fabric of, as she wove her way across the wide range of feelings. She was a spectrum of emotions and sentiments enormous.´(Maureen Peterson, Music and Dance critic, Ottawa Journal).
லண்டனில் இருந்து இன்னொருவர், “Dance and Dancers” – ல் எழுதுகிறார். யாமினியின் நடன நிகழ்ச்சிக்கு வருகிறார், “with a pinch of salt seeing all the publicity claiming, as usual, the present is the most gifted than any other…….. India”s foremost classical dancer…….. etc. etc. என்று எல்லாம் ஒரு நீண்ட பீடிகையுடன் தன் சந்தேகங்களையும், எச்சரிக்கை உணர்வையும் சொல்லித் தீர்ந்ததும், எழுதுகிறார்: “How far this is an inherent virtue of the style and how far the result of the dancer”s own exceptional gifts obviously, I have no way of knowing. But the frank, ingenuous and entirely disarming quality of the emotions together with the sensitive variety of expressions made an experience joyfully memorable.”
இந்த அபிப்ராயங்கள் நிச்சயமாக கலை உணர்வுகள் கொண்ட ஒரு ரசிகனிடமிருந்து தான் வருகின்றன, அவன் ஏதும் தான் படித்தறிந்ததன் விவர ஞானத்தின் துணைகொண்டு சொன்னதல்ல என்பது யாமினியின் இன்னொரு நடனத்தைப் பற்றி அந்த நடன விமர்சகன் எழுதியதைப் பார்த்தால் தெரியும். அது யாமினிக்கு மிகவும் விருப்பமான குச்சிப்புடியின் தரங்கிணி. யாமினி ஆந்திர தேசத்தவர் என்பதை நினைவு கொண்டால், குச்சிப்புடியும் அதன் தரங்கிணியும் அவருக்கு பிரியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. யாமினி தரங்கிணி ஆடியதைப் பார்த்து அந்த விமர்சகர் எழுதுகிறார்:
”In fact, that remarkably clever dance with a dish which was given as an encore seemed almost irrelevant. As a display of skill, it was very clever indeed and not without grace, but after the subtlety of artistry of the preceding piece, it was perhaps misplaced.”
இம்மாதிரியான சமரசமற்ற, சம்பிரதாய மரியாதை காட்டாத அபிப்ராயங்களை, நம்ம ஊர், நம்ம நாட்டு விமர்சகர்கள் ஏதும் ஒர் நடன நிகழ்ச்சியில் தரங்கிணி போன்று தாம்பாளத்தின் மேல் நின்று ஆடும் சாமர்த்திய பயிற்சிகளை, அது வெறும் பயிற்சியே என்று சொல்ல மாட்டார்கள். அதே போல் வெளி நாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் சரி, வெளிநாட்டவர்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அழைப்புடன் வந்து பார்க்கும் போது, வெளி நாட்டு உறவு, மரியாதை, சமாசாரங்கள் எல்லாம் இடறும். ஆக, சொல்ல மாட்டார்கள்.
அன்றைய அந்த யாமினி இளம் வயதினள். ஆனால் அவர் பாப்பவர்களை மயக்கும் கவர்ச்சி கொண்டவர் அல்லர். வசீகரிக்கும் அழகு என்றும் சொல்ல முடியாது. அந்த ஒல்லியான தேகம் இளமைத் துடிப்பும், ஜீவனும் கொண்டது. சாதாரணத்தை மீறிய பெரிய கண்கள், மானைப் போல துடிப்பும் ஆர்வமும் தெரிய சட்டெனத் திசை மாறி தாவி அலையும். மனித மனத்தின் அத்தனை உணர்ச்சி பாவங்களையும் சட்டெனெ ஒரு நொடியில் ஒரு பாவத்தில் நிலை கொள்ளாது இமைகள் படபடக்கும் இமைகள் மூடும் திறக்கும். ஏதோ தந்தி அடிப்பது போல் தான் ஏதோ சமிக்ஞைகளை அனுப்பும். சட்டென அடுத்த நொடியில் ஒரு மானின் வேகத்தில், ஆனால் வேகமும் படபடப்பும் தோற்றாது, தன் இயல்பு போல அழகுடன் அத்தனை பாவங்களையும் கடந்து செல்லும். ஜதிகளின் கதி என்னவாக இருந்தால் என்ன, எத்தனை சிக்கலான தாளங்களில் இருந்தால் என்ன, எந்தவித சிரமமும் இல்லாது அதேசமயம் அவற்றோடு பிணைந்த அபிநயங்கள், முத்திரைகள். எல்லாமே ஒரு சிக்கலான வலைப் பின்னல் தான். அந்தப்பின்னல் இழைகள் தரும் வண்ணங்களும் கோலங்களும் நிறைந்த, பல பரிமாணங்கள் கொண்ட என்ன சொல்வது? Tapestry தான். இதற்கு முன்னால் யாருடைய எந்த பரத நாட்டிய வெளிப்பாட்டில் இதையெல்லாம் இவ்வளவு வேகத்தில், இவ்வளவு சிக்கலான பின்னலாக பார்த்திருக்கிறோம்? சித்தாந்தமாக, கட்டமைப்பாக, கருத்துருவமாக எல்லாம் பரதத்தில் இருந்தவை தான். இருப்பவை தான். ஆனால் யாமினி அதன் சாத்திய எல்லை வட்டத்தை விரிவாக்கியிருக்கிறார். அந்த எல்லை வட்டக் கோடு சாத்தியங்கள் அதிகமாக ஆக, பெரிதாகிக்கொண்டே போகிறது. ஆனால் எல்லாம் சித்தாந்த ரூபமாக, கருத்துருவமாக, கட்டமைப்பில் இருக்கும் சாத்தியங்கள் தான். இந்த எல்லை வட்ட விரிவை, சாத்தியங்களை மற்றவர்கள் ஆட்டத்தில் நாம் பார்த்திருக்கவில்லை. மற்ற நாட்டிய வடிவங்களிலும் நாம் பார்த்திருக்கவில்லை. அதற்கான காரணங்கள் இந்த சாத்தியங்களில் ஒன்றல்ல, மற்றது, மற்ற வடிவங்களின் கட்டமைப்பில், சித்தாந்த கருத்துருவத்தில் இருந்திருக்கவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.