வி.சந்திரகுமாரின் (தம்பா) சிறுவர் நவீனம் 'கொரில்லா அரக்கன்' - வ.ந.கிரிதரன் -
குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியமென்பது குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்துக்கு முக்கியமானதொரு படிக்கட்டு. வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியத்துக்குப் பக்கங்கள் ஒதுக்கும் பத்திரிகை, சஞ்சிகைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.
சுதந்திரன், தினகரன், வீரகேசரி , ஈழநாடு (பழைய) ஆகியவற்றில் வெளியான சிறுவர் பக்கங்கள் முக்கியமானவை. எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பக்கங்கள் அவை. சிரித்திர்ன கண்மணி என்னும் சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டது. அழகான ஓவியங்களுடன், குழந்தைகளைக் கவரும் ஆக்கங்களுடன் வெளியான அச்சஞ்சிகை சில இதழ்களே வெளிவந்தது. கண்மணி நின்ற பின்னர் கண்மணி என்னும் பெயரில் சிரித்திரனில் சிறுவர் பக்கங்கள் வெளிவந்தன. இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அவ்வப்போது சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அவை நிலைத்து நிற்பதில்லை என்பது துரதிருஷ்ட்டமானது. எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவும் அண்மையில் அறிந்திரன் என்னும் நல்லதொரு சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டார்.அதுவும் நிலைத்து நிற்கவில்லை. மீண்டும் அதனைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றார். இம்முறை அவர் வெற்றியடைய அனைவரும் உதவ வேண்டும்.