பேரரசும் பெருந்தத்துவமும்! - கலாநிதி க.கைலாசபதி -
-
'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ' நூலிலிருந்து -தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே "சைவ சித்தாந்தம்" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.
பல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்றுவித்தது. ஆனால் திருவுந்தியாரோடு தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது.3 திருவுந்தியாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத்திரப் பண்பு அமையப் பெற்றது. சிவஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகம். எனவே இவற்றுள் ஒருவிதமான வளர்ச்சியை நாம் காணலாம். தத்துவத் துறையில் இவ்வகையான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது சமய நிறுவனங்களும் உருமாறிக் கொண்டிருந்தன. இதுபற்றிப் பேராசிரியர் நீல கண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.
"......மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இருபெருங் கொடைகள் கோயிலும் மடமும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விரு நிறுவனங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ்நிலைக்கேற்க மாற்றுமடைந்துள்ள; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதரவைப் பெற்றன. இக்கவனமும் ஆதரவும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பௌத்த விகாரைகளையும், சமணப்பள்ளிகளையும் மிஞ்சியெழுந்து, உறுதியான நிலைமையை அடைந்தன; இன்றுவரை இந்த உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன; சியாலயன் மரபுச்சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறுலாம்."4