மெல்போர்னில் வீடு கட்டுவதற்கு நகரசபையில் அனுமதி வாங்கும்போது, வீடு கட்டி மிகுந்த நிலத்தில் எப்படி பூந்தோட்டம் அமைப்பீர்கள்? வீட்டின் முன்பகுதியில் எப்படி வேலி அமையும்? எனப் பல கேள்விகள் கேட்பார்கள். இப்படிப் சில கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியே அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமான நாங்கள் அதற்காக, பதிலைக் கூறாது கட்டடக் கலைஞரையும் (Architect) லாண்ண்ட்ஸ் ஸ்கேப் கலைஞரிடமும் ( Landscape Architect) விட்டு விடுவோம். இவற்றின் வழமை எப்படி மேற்கு நாடுகளில் உருவாகியது?
15 ஆம் நூற்றாண்டுகள் வரையில் மனிதர்கள் வசிக்காத இடமெல்லாம் விவசாயம் செய்ய வேண்டும். முக்கியமாக உணவு உற்பத்தியே விவசாயத்தின் நோக்கம். அலங்கார தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் என்பவற்றை அரசர்கள் மட்டுமே செய்வார்கள். மற்றவர்களுக்கு வசதியில்லை . ஆனால், 16ஆம் நூற்றாண்டுகளின் பின்பாக ஐரோப்பாவில் பிரபுக்கள், மத நிறுவனங்கள் தங்களது நிலங்களை அழகுபடுத்த முடியும். தங்களது செல்வத்தை வெளிக்காட்ட முடியும் என்பதால் வீடுகளிலும் மதகுருக்களின் மடங்களைச் சுற்றி பூந்தோட்டங்கள் வைத்தார்கள். இப்படியான புல்தரை , பூந்தோட்டங்கள் பேணும் முறையும் பரோக் வடிவமைப்பு (Baroque architecture) என்ற கட்டிடக்கலை மரபோடு இணைந்து உருவாகியது. இந்த வழமை ஐரோப்பிய நாடுகளிலிருந்து காலனி நாடுகளுக்கு உலகெங்கும் பரவுகிறது.
அது என்ன பரோக் வடிவமைப்பு?
அதுவரையும் நேரான கட்டிடங்கள், நேர் கோடுகளாகவும், வளைவுகளற்று இயற்கையிலிருந்து பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான இடவசதிகளோடு (Functional Space) மட்டுமே தேவை எனக் கட்டப்பட்டன. கட்டிடங்களது உறுதியும் நீடித்த தன்மையுமே முக்கிய விடயமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டிலே வளைவுகள், பூந்தோட்டங்கள், நீச்சல் தடாகங்கள் என உருவாகியது .
பல வருடங்களுக்கு முன்பு பாரிஸ் சென்றபோது வேர்செயில் மாளிகை உள்ளே போய், அங்குப் பார்த்தபோது, அதனது செழிப்பு , ஆடம்பரம் மட்டும் மனத்தில் நின்றது. ஆனால், இம்முறை எனது எழுத்தாள நண்பராகிய அகரன் அரண்மனையின் வெளிப்பகுதிக்குக் கூட்டிச் சென்றார். அப்படிச் சென்றபோது வெளியே உள்ள தோட்டம், நீச்சல் குளம், வளைவுகள், புற்தரை என்பவற்றைப் பார்த்து முன்பு பார்த்தபின் உள்பகுதியோடு வெளியே உள்ளவற்றையும் மனத்தில் பொருத்தி பூசலார் நாயனாராக எண்ணத்தில் நிர்மாணித்தபோது, வேர்செயில் மாளிகை பரோக் வடிவமைப்பின் (Baroque architecture) உன்னத உதாரணமாக எனக்குத் தெரிந்தது.
பிரான்சின் 14 லூயிஸ் இதைக் கட்டும்போது தானே இது உலகத்தின் மையம் என்ற உணர்வு அவருக்கிருந்தது. ஸ்பெயின், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களும் அவரது உடைமையாக இருந்ததால் எந்த பொருட்செலவையும் பொருட்படுத்தாது இப்படியான அழகிய கட்டிடத்தைக் கட்ட முடிந்தது.14 லூயிஸ், இந்த கட்டுமான வேலையைத் தனது சொந்த மேற்பார்வையில் நடத்தினார் என்கிறார்கள் .
எங்களது டான்யூப் நதிப் பயணத்தில், உலகின் முக்கியமானதும் அழகானதுமான ஒரு பரோக் வடிவமைப்பில் அமைந்த கட்டிடத்தை பாரக்கபோனோம் என்பதாலே இந்த பரோக் வடிவமைப்பை என்னால் முடிந்தவரை வாசிப்பவர்களுக்கு விடயத்தை தெளிவாக்க வேண்டியிருந்தது. பரோக் வடிவமைப்பு ஏன் உருவானது என்ற கேள்வியும் உள்ளது.
ஜெர்மனிய மதகுருவும் பேராசிரியருமாகிய மார்டீன் லூதர் (Martin Luther-1483-1546) கிறிஸ்துவ மதம் ஒரே தலைமையின் கீழ் இருக்கத் தேவையில்லை, அதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வாதிக்கிறார். அதே நேரத்தில் இங்கிலாந்து அரசர் (Henry V111) தனது அழகற்ற மனைவியை விவாகரத்து செய்து மறுமணம் செய்ய, போப்பாண்டவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இங்கிலாந்து, ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிகிறது. இப்படி மதப்பிளவு ஏற்பட்டு பிரிந்தவர்கள், புரட்டஸ்டான்ட் பிரிவாகப் பிரிந்து சென்றார்கள். அதில் வட ஐரோப்பியர்களும் பிரித்தானியர்களும் அடங்குவார்கள் .
இப்படியான பிளவுகளால் நிலைகுலைந்திருந்த கத்தோலிய மதப்பிரிவினருக்கு அக்காலத்தில் மக்களைத் தேவாலயங்களுக்கு வரவைக்கவேண்டிய தேவை இருந்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் இந்த பரோக் வடிவமைப்பு இத்தாலியில் உருவாகி மற்றைய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் மிலானை சேர்ந்த கரவாஜியோ (Caravaggio-1571 1610) முக்கியமான பாரோக் ஓவியர். இதில் குடி, சண்டித்தனம், விபச்சாரம் என்ற எல்லா விடயங்களும் நிறைந்தவர். ஆனால், மிலானில் இவரே சிறந்த ஓவியர். இவர் தனது நண்பர்களாக தெருவில் திரிபவர்களை அழைத்து யேசுவாக வரைந்தார். இவை சில கத்தோலிக்க மதபீடத்திற்கு தெரிந்தும் தெரியாமலும் நடந்தது. நாம் வணங்கும் சில யேசுவின் உருவங்கள் மிலானில் திரிந்த வீடு வாசலற்றவர்களாகவும் இருக்கலாம். அது பிரச்சினையில்லை. சிலுவை ஒரு மதக் குறியீடுபோல், நமக்குக் குறியீடுகளை மட்டுமே எல்லா மதங்கள் வழங்கியுள்ளன என எடுத்துக் கொள்வோம். அதில் முன்னோடி கரவாஜியோ என்ற ஓவியர் அவர் இறுதியில் மர்மமாக மரணிக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது எவருக்கும் தெரியாது. சிறிது மட்டும் தெரிந்து கொண்ட அவரது வாழ்க்கை வரலாறு சுவையான நாவல் போன்றது.
இன்னமும் டான்யூப் நதி அவுஸ்திரிய நாட்டிலே மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது , அதிலேயே நாங்களும் நகர்ந்தோம்.
- Wachau Cultural Landscape -
வீயன்னாவிலிருந்து மெல்க் (Melk) என்ற சிறிய நகரத்திற்குப் படகு சென்றபோது அங்கு 900 வருடங்கள் பழமையானதும், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதுமான குருக்கள் மடம் (Melk Abbey) உள்ளது . அது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பெரிய கட்டிடம். அதாவது ஃபிரான்சிஸ்கன் பிரிவைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்கள் படிப்பதற்கும் வணங்குவதற்குமாக அமைந்த இந்த இடத்தில் தற்பொழுது கல்விச்சாலையுடன் பெரிய லைபிரறி உள்ளது. முக்கியமாகப் பல பண்டைய நூல்களின் மூலப் பிரதிகள் உள்ளன. இதையையே ஐரோப்பாவின் சிறந்த ஒரு பரோக் வடிவமைப்பு கட்டிடமாகக் கருதுகிறார்கள்.
Melk Abbey Dome -
கட்டிடக்கலையில் 16ம நூற்றாண்டில் அதாவது மறுமலர்ச்சிக் காலத்தில் உருவாகிய பரோக் வடிவமைப்பு (Baroque architecture). இந்த கட்டிடம் ஒரு உயரமான குன்றின் உச்சியில் இருப்பதால் பள்ளத்தாக்கில் ஓடும் டானியூப் நதியில் படகில் மிதந்தபடி செல்லும் எம்மை கை நீட்டி வரவேற்பது போலிருந்தது. பச்சையான பின்னணியில் அமைந்த கண்கவரும் சிவப்பும் பொன்னிறமும் கலந்த வண்ணக்கட்டிடம் அது. நதியின் கரையில் இறங்கிக் கட்டிடத்தின் முன் வாசல் செல்ல, அங்கே அமைந்திருந்த அழகிய பூங்காவைக் கடந்தே கட்டிடத்திற்குப் போகவேண்டும்.
கட்டிடத்தின் விஸ்தீரணம், அழகைப் பார்த்தபோது அக்காலத்தில் மதவாதிகளது கையில் பணம் ,அதிகாரம், செல்வாக்கு எவ்வளவு மேலோங்கி இருந்துள்ளது என்பதை நினைத்தபடியே உள்ளே கால் வைத்தேன்.
மத்திய காலத்தில் கத்தோலிக்க மதத்தில் பேர்கரோறி (Purgatory))என்ற விடயம் முக்கியமானது. இறந்தவுடன் மனிதர்கள் இந்த பேர்கரோறியில் தங்கி அவர்களது பாவங்களைச் சுத்திகரித்த பின்பே சொர்க்கத்துக்குப் போக முடியும் . இந்த இடைத்தங்கல் இடத்தில் இருக்கும் காலத்தைக் குறைக்கச் செல்வந்தர்கள் தங்கள் சொத்தை கத்தோலிக்க கோவில்களுக்கு இறக்கும்போது எழுதுவார்கள். இதனால் மத்தியகால குருமாரிடம் அரசனைவிட அதிக செல்வம் இருந்தது.
பரோக் வடிவமைப்பு ஆரம்பத்தில் இத்தாலியக் கத்தோலிக்க தேவாலயங்களில் உருவாக பின்பே பிரான்ஸ் சென்றபோதிலும் போதிலும், நான் கிழக்கே ரஸ்சியாவின் ஓதோடக்ஸ் தேவாலயங்களிலும் பார்த்துள்ளேன். ஏற்கனவே சொன்னபடி தற்போதைய பாரிசில் உள்ள வேர்செல்ஸ் மாளிகை இந்த அமைப்பிலே அமைந்துள்ளது
இந்த பரோக் அமைப்பின் பிரதானமாக நமக்கு வெளியே வித்தியாசமாகத் தெரிவது பெரிய தூண்கள் செறிந்த வெளிப்புறமும், குவிந்த கூரை (Dome) என்பனவாகும். உள்ளே சென்றதும் ஊட்கூரை (Ceiling) எல்லாம் கண்ணைப் பறிக்கும் ஓவியங்களுடன் காணப்படும் அத்தோடு உட்புறமும் வெளிப்புறமும் பல இடங்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் . அத்துடன் சிற்பங்கள், ஓவியங்கள், சூரிய ஒளிபடும்வகையில் யன்னல்கள் அதற்கேற்ப அமைந்திருக்கிறது.
கத்தோலிக்க மதத்தில் நமக்குச் சொல்லப்பட்ட மேரி, யேசு, அவரின் சீடர்கள், தேவதைகளும், தேவதூதர்களை அசைவற்று ( Still) காட்டாது இயங்குவதான (Dynamic) காட்சிகள் நிறைந்து, நமக்கு கதைகளில் சொல்லப்பட்ட ஒரு சொர்க்கத்தை நம் கண்ணெதிரே பூமியில் பார்ப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதைத் தோற்ற மயக்கம்( Illusion) அல்லது நாடகத்தன்மை எனலாம். இதனுடன் பரோக் வடிவமைப்பில் உள்ள வளைவுகள், முறிவுகள், அத்துடன் பல வடிவத்தில் ஆடம்பரமாக உள்ளமைந்துள்ள மாடிப்படிகள் என்பனவும் முக்கியமானது என்கிறார்கள். இவைகளே பரேக் வடிவமைப்பின் முக்கிய தன்மைகளாகும்.
இந்த கட்டிடங்களே, ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம், மனித இனத்திற்குத் தந்த கொடையாகும். இதனாலே ஓவியர்கள், சிற்பிகள் கட்டிடக் கலைஞர்களின் கற்பனை வளர்ச்சிக்கும், செயல் தூண்டலுக்கும், அரசர்கள் தேவாலயங்கள் மற்றும் பிரபுக்கள் களம் கொடுத்தார்கள். இவற்றின் பரவலை ஐரோப்பாவில் மட்டுமல்ல, தென்னமெரிக்க நகரங்களிலும் காணமுடிந்தது. கத்தோலிக்க மதத்திலிருந்து விலகியதால் இத்தாலியக் கலைஞர்கள் பிரித்தானியாவுக்கு செல்லவில்லை. இதனால் இவர்களது கட்டிடங்களில் ஐரோப்பியக் கட்டிடங்கள்போல் முழுமை இல்லை என்பது பலரது கருத்து. தற்காலத்தில் கூட ஐரோப்பிய நகரங்களில் பார்க்கும் கலை அம்சம், பிரித்தானியாவின் கட்டிடங்களில் பார்க்க முடியாது.
உட்கூரையில் உள்ள ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்து, கழுத்து நோவுடன் காலும் வலிக்க நாங்கள் பார்த்த இந்த பெனடிக்ரன் குருமடம் பரோக் வடிவமைப்பில் ஒரு சிறந்த உதாரணம். தற்பொழுது மிகவும் குறைந்த அளவு மதகுருமார்கள் இங்கு வசிக்கிறார்கள். பெரும்பகுதி கல்விச்சாலையாக இயங்குகிறது. ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் மக்கள் இங்கு வந்து பார்க்கிறார்கள். குருமடத்திற்கு வெளியே அழகான தோட்டமும் உள்ளது.
ஐரோப்பாவின் ஓவியம், சிற்பம் , கட்டிடக்கலை இந்தியாவைப்போல் மதம் சார்ந்து வளர்ந்துள்ளது என்ற எண்ணத்துடன் வெளிவந்தேன்.
நாங்கள் மெல்க் நகரத்திலிருந்து பல மைல்கள் படகில் சென்றபோது அழகான நதிக்கரையாக அமைந்திருந்தது. அந்த டான்யூப் நதிக்கரையை யுனெஸ்கோ பட்டியலில் சேர்த்துள்ளார்கள். இதை (Wachau Cultural Landscape) வாச்சு பண்பாட்டுப் பள்ளத்தாக்கு எனத் தமிழ்ப்படுத்தலாம். ஆரம்பக் காலத்திலிருந்து இங்கு ஆற்றோரம் தழுவிய நாகரீகமாக உருவாகியுள்ளது.
பிற்காலத்தில் விவசாயம் அதன்பின் பின்பு திராட்சை தோட்டங்கள் உருவாகின. அவற்றின் இடையே ஏராளமான தேவாலயங்கள் , கோட்டைகள் என்பன ஆற்றில் பயணம்செய்யும்போது பார்க்கக் கூடியதாக இருந்தது. பல்கணியிலிருந்து பார்க்கும்போது தெரியும் காட்சிகள் எங்களுக்கு அழகாக இருந்தாலும் அவைகள் கிட்டத்தட்ட 2000 வருடங்கள் மேலாக ஐரோப்பிய மனித வாழ்வின் பரிணாமம் உருவாகிய இடம் . ஆற்றிலிருந்து பார்ப்பது மட்டுமே எங்களுக்குக் கிடைத்த தரிசனம். உண்மையாக பார்ப்பதற்கு 36 கிலோமீட்டர்கள் மட்டும் செல்லவேண்டும் . அதாவது வாகனத்திலோ சைக்கிளிலோ உள் சென்று பார்க்கக்கூடிய இடம் சொன்னார்கள்.
ஒரு இடத்தில் இறங்கி நடந்தபோது, மைல் கணக்கான தூரத்திற்கு திராட்சை பயிரிடப்பட்டிருந்தது. வசந்த காலமானதால் இலைகளை மட்டுமே துளிர்த்து பாரக்கக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான வெள்ளை வைன் வகையை சேர்ந்தவை . சிவப்பு வைனுக்கு பிரான்ஸ், இத்தாலி மண்ணே சிறந்தது அதேபோல் சுவிட்சர்லாந்து, ஜேர்மன்,ஆஸ்திரியா வெள்ளை வைனுக்கான மண்ணென்றார்கள்.
நான் ஐரோப்பாவில் பார்த்த இடம் எங்கும் வைன் , பியர் என்பன தாராளமாக எங்கும் கிடைக்கும். குடிபானங்கள்மீது சமூகத்தில் நல்ல அபிப்பிராயமே உண்டு . இதைப்பற்றிக் கேட்டபோது “ஆரம்பத்தில் ஆற்றுக்கரையில் வாழ்ந்தவர்கள் ஆற்று நீரைக் குடித்தார்கள். ஆனால், பின்பான விவசாய காலத்தில் ஆற்றுநீர் குடித்தபோது குழந்தைகளுக்குப் பல நோய்கள் வந்தன. இதே பிரகாரம் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கே வைனும் பியரும் கொடுக்கும் பழக்கம் வந்தது . இதில் எவ்வளவு உண்மையிருக்கோ எனத் தெரியாத போதிலும் விடயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது . வைன் பியர் மதரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் நமது நாடுகளில் போல் அளவுக்கு மீறிக் குடிப்பவர்கள் குறைவு. மது போதையாகாது, மற்றவர்களை இணைக்கும் சமூக சங்கிலியாகவும் அதே நேரத்தில் மனத்தின் பாரங்களை இறக்கிவைக்கும் சுமை தாங்கியாகவும் எனக்குத் தெரிந்தது.
நாங்கள் பயணித்த படகிலும் மதியத்திலும் மாலையிலும் வைனுக்கும் பியருக்கும் எந்த கட்டுப்பாடுமில்லை. ஆனால், மற்றைய மதுபானங்களுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.