எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக்கூறினேன்' பெருநாவலை வாசித்தேன். ஆகுதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள நாவல். எழுத்தாளர் அ.இரவியின் கடந்தகாலப் படைப்புகளூடு அவரது மண் வாசனை மிக்க , வாசகர்களை ஈர்க்கும் எழுத்து நடை பற்றி அறிந்திருந்தேன்; புரிந்திருந்தேன். அப்புரிதலுடன் இந்நாவலை வாசிக்கத்தொடங்கினேன். பொதுவாக எனக்கு எழுத்தாளர்களின் சுய சரிதைப் பாதிப்புள்ள நாவல்கள் , அதுவும் பெரு நாவல்களென்றால் மிகவும் பிடிக்கும். என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் பலவற்றில் அவரது சொந்த வாழ்வின் பாதிப்புகளிருக்கும், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கியின் நாவல்களிலெல்லாம் அவரது சொந்த வாழ்வின் அனுபவப் பாதிப்புகள் நிறையவே இருக்கும். டால்ஸ்டாயின் நாவல்களும் இத்தகையவையே. தமிழ் எழுத்தாளர் அகிலனின் 'பாவை விளக்கு' நாவல் அவரது சொந்த வாழ்வு அனுபவங்களை உள்ளடக்கிய நாவலென்று அவரே கூறியுள்ளதை வாசித்திருக்கின்றேன்.
இவ்விதமான சொந்த வாழ்வின் அனுபவங்களின் பாதிப்புகளை உள்ளடக்கிய நாவல்கள் ஒருவகை. இன்னுமொரு வகையோ எழுத்தாளர்களின் சுயசரிதை அனுபவங்களையே பிரதானமாகக் கொண்டு சிறிது படைப்பாற்றல் மிளிரும் கற்பனையையும் தூவிப் படைக்கப்படும் நாவல்கள். இதில் இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' நாவலை இரண்டாவது வகை நாவலாக நான் கருதுவேன். என் 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' இத்தகைய வகை நாவல்களே. இவ்வகை நாவல்கள் எனக்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று, என் சொந்த எழுத்தனுபவத்திலிருந்து கூறினால், எழுத்தாளர்கள் தாம் அடைந்த அனுபவங்களை, அவை விளைவித்த எண்ணங்களைத் தாராளமாக , அனுபவபூர்வமாக, உணர்வு பூர்வமாக, மனதொன்றி எழுத முடியும் மட்டுமல்ல, அவ்வகை எழுத்துகளுக்கு அவர்களே முதல் வாசகர்களாகவும் இருந்து விட முடியும் தன்மையால்தான். என் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் என் நாவல்கள் பலவற்றை நானே மீண்டும் , மீண்டும் விரும்பி வாசிப்பதுண்டு. அவ்வேளைகளிலெல்லாம் என் மனம் அக்காலகட்டங்களுக்கே சிறகடித்துச் சென்று விடும். உள்ளத்தில் இன்பத்தைப் பெருவெள்ளமெனப் பாய வைக்கும். எனவே இவ்வகையான நாவல்கள் வாசகர்களுக்காக எழுதப்படும் அதே சமயம் அவற்றை எழுதும் எழுத்தாளர்களுக்காகவும் எழுதப்படுகின்றன என்பது என் எண்ணம். எவ்விதம் எம் ஒருகாலப்புகைப்படங்கள் எமக்குக் அக்காலகட்டப் பிரதிபலிப்புகளாக இருக்கின்றனவோ அவ்விதமே இவ்வகையான நாவல்களும் ஒரு கால அனுபவ, உணர்வுப் பிரதிபலிப்புகளாக இருந்து விடுகின்றன.