காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு ,பதிவுகள்.காம் வெளியீடு!
எனது காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0DV76H5BS
நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.
இவ்வகையில் அல்பேர்ட் ஐன்ஸ்ட்டைனின் சார்பியற் கோட்பாடுகள் என்மேல் ஏற்படுத்திய பாதிப்பும், ஆதிக்கமும் முக்கியமானது. வெளி, நேரம் , ஈர்ப்புச் சக்தி பற்றிய அவரது சார்பியற் தத்துவங்கள் அறிவியற் துறையை மட்டுமல்ல, இருப்பு பற்றிய தத்துவத்துறையையும் மாற்றியமைத்தன என்பேன். குறிப்பாகக் காலவெளி என்னும் சொற்பதம் சிறப்பான சொற்றொடர். சிந்தையை விரிவடைய வைக்கும் தன்மை மிக்க சொற்றொடர்.