முன்னுரை
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்த்து அணியாகும். தண்டியலங்காரத்தில் வாழ்த்து அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
வாழ்த்து அணி
இன்ன தன்மையுடையவர்களுக்கு இன்ன நன்மைகள் ஆகுக என உரைப்பது வாழ்த்து என்னும் அலங்காரம் ஆகும்.
"இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
. முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப"
(தண்டியலங்காரம் 60)
அயோத்தி மக்கள் இராமனை வாழ்த்துதல்
அயோத்தி நகரத்து மகளிர் அனைவரும் வலிமையுடைய ஆடவரும் கௌசல்யா தேவியும், தசரத சக்கரவர்த்தியும் போலவே இக்குமாரர்கள் வாழ்க என்று அவரவர் மனதுக்குப் பொருந்திய கடவுளை வணங்கி வேண்டுவார்கள். 60,000 வருடங்கள் பேரோடும், புகழோடும் நாட்டு மக்களின் நலத்தையேப் பெரிதாக எண்ணி தசரதன் ஆட்சி புரிந்தார். அவ்வாறு பன்நெடுங் காலம் மக்கள் போற்றும் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.
“ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழி என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தசரதன் எனவே”
(திரு அவதாரப் படலம் 310)
தெய்வங்கள், இராமனை வாழ்த்துதல்
தாடகை வதத்தைக் கண்ட தெய்வங்கள் இனி நாங்களும் எங்கள் இருப்பிடங்களை மீண்டும் பெற்றவர்களானோம். வேள்வி செய்ய விரும்பும் உனக்கும் இனி ஒரு தடையும் இல்லை. சக்கரவர்த்தித் திருமகனான இராமனுக்குச் சிறந்த தெய்வத்தன்மையுள்ள ஆயுதங்களைக் கொடுப்பாயாக. என்று விசுவாமித்திரருக்குக் கூறிய பின்பு, இராமன் மீது மலர் மழையைச் சொரிந்து வாழ்த்தி விட்டு தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
“யாமும் எம் இறுக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை
கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்னா
மாமுனிக்கு உரைத்துப் பின்னர் வில் கொண்ட மழை அனான் மேல்
பூ மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே”
(தாடகை வதைப் படலம் 3 98)
இராமன் சுபாஹுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் தள்ளினான். அப்போது ராம லக்ஷ்மணர்கள் மீது தேவர்கள் சொறிந்த மலர் மலைகள் பறவை பந்தல்களைக் கிழித்துக்கொண்டு கீழ் இறங்கி பூமியில் பரவின. தேவர்கள் போல முழங்கின. இந்திரன் முதலான தெய்வங்கள் எழுப்பிய பேரிகை ஒலிகள் வானத்தில் மேகங்களைப் போல முழங்கின. இந்திரன் முதலான தெய்வங்கள் வானத்தில் வந்து கூடினார்கள். அவர்கள் அழகிய வில்லை உடைய இராமனை வணங்கி வாழ்த்தினார்கள். வேள்விப் படலம் 453, 454)
மங்கல மடந்தையர்கள் வாழ்த்துப்பாடல்
இராமன், சீதை திருமணத்தைக் காண தசரதன் உள்ளிட்ட அனைவரும் மிதிலை நோக்கிச் சென்றனர். இரு பிறப்பாளரான அந்தணர்கள் 8000 பேர் ரத்தின கும்பங்களைக் கையில் ஏந்திக்கொண்டு, வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு, தம் அழகிய கைகளால் புனிதமான மந்திர நீரைத் தெளித்து வாழ்த்தினர். பரம்பரையாக அரசர்கள், அரசருக்கு பல்லாண்டு பாடும் குலத்திலே பிறந்த மங்களமான இனிமை பொருந்திய சொற்களைச் சொல்லும் செவ்வாயை உடைய எண்ணற்ற மங்கல மடந்தையர்கள் வாழ்த்துப் பாடலைப் பாடி புகழ்ந்து கொண்டு போனார்கள். (எழுச்சிப்படலம் 754)
“இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணிக் கலசம் ஏந்தி
அருமறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்த
வரன்முறை வந்தார் கோடி மங்கலம் மழலைச் செவ்வாய்ப்
பரு மணிக் கலாபத்தார் பல்லாண்டு இசை பரவப் போனார்”
(எழுச்சிப்படலம் 753)
ஜனகன் கன்னிகா தானம் செய்த போது அந்தணர்களது வாழ்த்துக்களும், அருங்கலமாகிய மாங்கல்யம் அணிந்த சுமங்கலி பெண்கள் பல்லாண்டு பாடும் இசையும், மாலை சூடிய மகுடம் புனைந்த மன்னர்களின் பாராட்டும், புலவர்களின் வாழ்த்துமாகிய அந்த ஒலிகளைப் போல மங்கள நிகழ்சியில் முதன்மை இடம்பெறும் சங்குகள் முழங்கின. (கடி மணப் படலம் 1193)
அனுமனை,தேவர்கள் வாழ்த்தினர்
அனுமன், சீதையைத் தேடும் பொருட்டு கிளம்பும்போது தேவர்கள் துதி செய்யவும், வேத முனிவர்கள் வாழ்த்தவும், மண்ணுலகத்தினர் வணங்கவும், வானத்தே செல்லும் அனுமன் மனதில் பழைய பகையை அதிகரிக்க அரக்கர் தலைவரான இராவணனை இன்னும் அமுக்குவோம் என்று எண்ணிச் சிவபெருமானை விட்டு தனியே செல்கின்ற கயிலை மலையையும் ஒத்தவன் ஆனான். (கடல் தாவு படலம் 25)
நீண்டு வளர்ந்த அனுமன் தன் உடல் மிகவும் பெரிதாகுமாறு சுருங்கி உயர்ந்து நிற்கும் சுரசையின் வயிற்றுக்குள் தான் உணவு என்று அவள் நினைக்கும் படி, வாயினுள் புகுந்து ஒரு முறை சுவாசிக்கும் முன்னர் வெளி வந்து விட்டான். அதைக் கண்ட தேவர்கள் ’இந்த அனுமன் எம்மைக் காப்பான்’ என்று கூறி மலர்களைத் தூவி சிறந்த வாழ்த்துக்களைச் சொன்னார்கள்.
“நீண்டான் உடனே கருங்கா நிமிர்வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று ஓர்உயிர்ப்பு உயிராத முன்னா
மீண்டான் அது கண்டனர் விண்உறைவோர்கள் எம்மை
ஆண்டான்வலன் என்று அலர் தூஉய்நெடிது ஆசிசொன்னார்”
(கடல் தாவு படலம் 71)
அனுமன், அங்காரதாரையைக் கொன்றுவிட்டு வெளியே வருவதைக் கண்ட தேவர்கள் ஆரவாரம் செய்து ஆனந்திட்டார்கள். அரக்கர்கள் வருந்தினார்கள். பிரம்மன் வியப்படைந்து மலர் மழை பொழிந்தான். கயிலையில் வாழும் அழிவற்ற சிவபெருமானும் வியப்போடு பார்த்தான். முனிவர்களின் தலைவர்கள் வாழ்த்து வழங்கினார்கள். (கடல் தாவு படலம் 85)
சீதை, அனுமனை வாழ்த்துதல்
இராமன் அனுமனிடம் அடையாள மோதிரத்தைக் கொடுத்தனுப்பினார். அந்த மோதிரத்தை அனுமன் தரப் பெற்றுக் கொண்ட சீதை, போன உயிர் மீண்டும் பெற்றவர்கள் போலவும், இழந்த செல்வத்தைப் பெற்றவர்கள் போலவும், குழந்தை பெற்ற மலடி போலவும் ஆனந்தக் கடலில் மூழ்கி, மோதிரத்தைக் கையில் வாங்கி தன் மார்பில் வைத்தாள். தலை மீது வைத்தாள். கண்ணில் நீர் பெருகினால் வாய் திறந்து பேச வைத்தாள். ஆனால் பேச முடியாமல் போனது. இராமனின் மோதிரத்தால் சீதையின் மேனியில் புதியதோர் பிரகாசம் ஏற்பட்டது. கண்ணீர் சிந்திய வண்ணம்,“உத்தமனே, நீ எனக்கு உயிர்த் தந்தாய். துணை இல்லாமல் என் துன்பத்தைத் தீர்த்த வள்ளலே, நீ வாழ்வாயாக, நான் கற்பு நிலையில் களங்கமற்றவளாக இருந்தால் பல யுகங்கள் ஒருநாள் என்று சொல்லப்படும் ஆண்டுகள் எல்லாம் 14 உலகங்களும் அழியும் காலத்திலும் கூட, இன்று போல் என்றும் இருப்பாயாக” என்று சீதை அனுமனை வாழ்த்தி வரம் அளித்தாள்.
“ஊழி ஓர்பகலாய் ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள்"
(உருக்காட்டுப்படலம் 559)
இராமன் வீடணனை வாழ்த்துதல்
வீடணன், இராமனிடம் தன்னை அடைக்கலப்படுத்தினான். அப்பொழுது இராமன், “பதினான்கு உலகங்களும், என் பெயரும் எவ்வளவு காலம் வரை இருக்குமோ, அந்தக் கால எல்லை வரை அரக்கர் வாழ்கின்ற ஆழ்ந்த கடலில் நடுவண் அமைந்திருக்கின்ற இலங்கை அரசை உனக்குத் தந்தேன். ஆட்சி புரிவாயாக” என்றான்.
“ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும்நாள் அன்றுகாறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்"
(வீடணன் அடைக்கலப் படலம் 444)
அனுமன் சீதையை வாழ்த்துதல்
“எளியவள் போன்று இருந்த தாயே, உனக்கு மங்கலம் உண்டாகுக. அணிகலன்கள் அணிந்தவளே, உனக்கு மங்கலம் உண்டாகுக. நீ வாழ்வாயாக. உனக்கு மங்கலம் உண்டாகுக. கொடுமை கடல் போன்றவனாகிய இராவணனை, இராமனாகிய முகப்படாம் அணிந்த யானையானது மிதித்துக் கொன்றது, ஆதலால், உனக்கு மங்கலம் உண்டாகுக”என்று கூறி அனுமன், சீதையைவாழ்த்தினான்.
"ஏழை சோபனம், ஏந்திழை சோபனம்
வாழி சோபனம் மங்கல சோபனம்
ஆழி அன அரக்கனை ஆரியச்
சூழியானை துகைத்தது சோபனம்" (மீட்சிப்படலம் 3908)
தேவர்கள், அந்தணர்கள் இராமனை வாழ்த்துதல்
இராவணவதம் முடிந்தவுடன் அவன் மேல் பாய்ந்த அந்தப் புனித அம்பு, மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்யும் தேவர்களும்,பூ தேவராகிய அந்தணர்களும் வாழ்த்திப் பொலிந்த மலர் தன்னைத் தொடரச் சென்று, தூய பாற்கடலில் நீராடி, மலை போன்ற தேரினையுடைய இராவணன் தன் மிகுதியான இரத்தக்கடலின் அலைகளின்மேல் சென்று கருமலைப் போன்ற இராமனுடைய அம்பறாத்தூணியின் நடுவே சென்றது.(இராவணன் வதைப்படலம் 3839)
முடிவுரை
இன்ன தன்மையுடையவர்களுக்கு இன்ன நன்மைகள் ஆகுக என உரைப்பது வாழ்த்து என்னும் அலங்காரம் ஆகும். அயோத்தி மக்கள் இராமனை வாழ்த்துதல், தெய்வங்கள், இராமனை வாழ்த்துதல், மங்கல மடந்தையர்கள் வாழ்த்துப்பாடல், அனுமனை,தேவர்கள் வாழ்த்தினர். சீதை, அனுமனை வாழ்த்துதல், இராமன் வீடணனை வாழ்த்துதல், அனுமன் சீதையை வாழ்த்துதல் தேவர்கள், அந்தணர்கள் இராமனை வாழ்த்துதல் என்று பல வாழ்த்துதல்களை கம்பராமாயணத்தின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
2.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
3.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.