நாம் வாழும் இந்த அழகான, வளமான பூமிக்கோளை போர்களினால், தவறான அணுகுமுறைகளினால் சீரழித்து வருகின்றோம். இதனைப்பாதுகாப்பது மனித குலம், சக உயிர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவசியம். இதற்கு முதற் படி இயற்கை வளங்களைப் பேணுவதாகும். இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உணவுச்சங்கிலி முறையாகப் பேணப்படுவது அவசியம். இதற்கு முதற்படி காடுகளைப் பேணுவதாகும். அபிவிருத்தி என்னும் பெயரில் காடுகளை அழித்துக்கொண்டே வருகின்றோம். இப்படியே நிலை நீடித்தால், உணவுச்சங்கிலி சீர்குலைந்தால், இந்த நீலவண்ணக் கோளில் உயிரினங்கள் வாழும் நிலையே இல்லாது போய்விடும். இதனால்தான் சூழலியலாளர்கள் சூழலைப்பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.
இவ்விதமான நிலையில் அண்மையில் கிளிநொச்சியில் நடந்த ஒரு நிகழ்வு என் கவனத்தை ஈர்த்தது, கனடாவிலிருந்து இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் , கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட விதைப்பந்து வீசும் நிகழ்வு நடத்தப்பட்டதைத்தான் கூறுகின்றேன். வருடா வருடம் நடக்கும் விதைப்பந்துத் திருவிழாவின் இறுதி நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 10,000ற்கும் அதிகமான விதைப்பந்துகள் அக்கராயன் பகுதியில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பிரதேசத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டன. இந்நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் பலர் இணைந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர், கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதி அதிபர் அரவிந்தன், சூழலியலாளரும் இலங்கை வனவிலங்குகள் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் வட மாகாண பிரதிநிதி ம.சசிகரன், ஊடகவியலாளரும் சூழலியலாளருமான மு. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது இளஞ்சமுதாயத்துக்குச் சூழலைப் பேணுவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றது. அது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றது. எதிர்காலச் சந்ததிக்கு வளமான, ஆரோக்கியமான சுற்றுச் சூழலை விட்டுச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய மாணவர்களுக்கும், விரிவுரையாளர், ஆசிரியர்கள், வனப் பாதுக்காப்புத் திணைக்கள மற்றும் சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் , சூழலியலாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பெருந்தொற்றுக் காலத்தில் கனடாவில் யாழ் இந்து மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஓராயம் அமைப்பானது இலங்கையில் கல்வி, சூழற் பாதுகாப்பு போன்ற விடயங்களில் செயற்பட்டு வருவது காலத்தின் முக்கியமானதொரு சேவை. தேவையுமாகும், ஓராயம் அமைப்பு பற்றிய மேலதிகத் தகவல்களை அதன் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதன் இணையத்தள முகவரி - https://oraayam.org
முக்கியமான நிகழ்வு. இதனைச் சாத்தியமாக்கிய மாணவர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஓராயம் அமைப்பினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.