1
இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக, இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சார்ந்தவர்கள் எனவும், ஒருவர் மாத்திரம் மாலைத்தீவு பிரஜை எனவும் கூறப்படுகின்றது. பிரதான நபர் இன்னும் கைதாகவில்லை எனக்கூறப்பட்டாலும் இன்றுவரை அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்துச் சரியான தகவல்களில்லை. தாக்குதல் தொடர்பிலான கைதுகளும், எழுந்த களேபரமும் கடந்த ஒக்டோபர் மாத இறுதியை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளாகும்.
தமிழ்த் தீவிரவாதத்தைப் போலவே, இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தலையெடுப்பும் இலங்கைக்கு ஒன்றும் புதிதானதில்லை. ஆனால், முன்னைநாள் சட்டமா அதிபர் லிவேரா முதல் முன்னைநாள் புலனாய்வு இயக்குனர் ஷானி அபேயசேகர வரையில், எடுத்துரைக்கும் பிரதான விடயம் யாதெனில், இவற்றில் அரச பங்கேற்பு உண்டு என்பதும் இத்தீவிரவாதிகள் அரசால் தீன்போட்டு வளர்க்கப்பட்ட சக்திகளாவர் என்பதுமேயாகும். இவ்அடிப்படையில், இத்தீவிரவாதிகள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு, ஓர் ஆழமான அரசியல் சதி உண்டு என்பதும் - அதற்கூடு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற (அல்லது மாற்றியமைக்க) செய்யப்படுகிறது, என்பதுமே மேலவர்களின் கூற்றில் முக்கியத்துவப்படும் செய்தியாகிறது.
இது உண்மையாக இருக்கலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அதற்கூடு நாட்டில் இனவாதத்தைத் தலைவிரித்து ஆடச்செய்துவிட்டு, அதற்கூடு கோட்டாபாய ஆட்சிக்கு வந்தார் என, வாதிடுவோரும் உண்டு.
இதுபோலவே, கிழக்கில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல் ஒன்று திட்டமிடப்பட்டது என்று கூறப்பட்டாலும், அது இறுதி நேரத்தில், இந்தியாவின் புலனாய்வுகள் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்றும், இது தொடர்பில் அமெரிக்காவிற்கு அறிவித்ததே இந்தியாதான் என்றும் இன்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எவ்வாறு இந்தியா ஓர் இறுதிக்கட்ட தகவலை வழங்கி எச்சரித்திருந்ததோ, அதேபோல இத்தாக்குதலைத் தடுப்பதிலும் இந்தியா பிரதான பங்கொன்றை வகித்துள்ளது.
2
ஆனால் இத்தாக்குதலானது, இஸ்ரேலியரை இலக்கு வைத்து நடத்த இருப்பதாகத் தோற்றம் காட்டினாலும், உண்மையில் அது கிழக்கின் முஸ்லீம்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட இருந்தது என்பதே கட்டுரையாளர் அய்னாவின் அனுமானமாக இருக்கின்றது. (விடிவெள்ளி : 31.10.2024) இதற்காக, அய்னா பின்வரும் விடயங்களைக் கோடிடுகின்றார் :
இக்காலப்பகுதியில், திருகோணமலையில் காஸாவுக்கு எதிரான சுவர் ஓவியங்கள் இஸ்ரேலியர்களால் வரையப்பட்டன. அங்கு, முஸ்லீம் பள்ளிவாசல்களை அண்மித்து ஹீப்ரு மொழியில் இஸ்ரேலிய வீரர்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு வெலிகம மதராசா பாடசாலை தொடர்ச்சியாகத் தீ மூட்டப்பட்டது. அதனருகே இருந்த கட்டிடத்தில் இஸ்ரேலியர்கள் தங்கியிருந்துள்ளனர். திருகோணமலையில், ஒரு சில இடங்களில் முஸ்லீம் மக்களைக் கோபமூட்டும் வகையில், காஸாவில் இடம்பெற்றுவரும் இனஅழிப்பு தொடர்பான சித்திரங்கள் மதில்கள்மேல் வரையப்பட்டிருந்தன. யுத்தத்தால் கொல்லப்பட்ட ஓர் இஸ்ரேலிய இராணுவ வீரருக்கு, இங்கே அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது படம் பொறிப்பட்ட சுவரொட்டிகள் திருகோணமலையில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இவையனைத்தும், முஸ்லீம் மக்களைத் திட்டமிட்டு, தூண்டிவிடும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருந்தன என்பதே அய்னா அவர்கள் முன்வைக்கும் வாதமாகின்றது.
மேலும் கூறுவார் : ‘இவ்வருடத்தில் கடந்த மாதங்களில் மாத்திரம் 20,515 இஸ்ரேலியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்... மேலும் இருபதாயிரம் வரையிலான இஸ்ரேலியர்கள் இலங்கையில் இருக்கின்றனர்.’ (விடிவெள்ளி : 31.10.2024)
இதுபோக, தெஹிவளை அல்வீஸ் பிரதேசம், வெலிகம, அறுகம்பே போன்ற இடங்களிலும் யூத வழிபாட்டு தலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதும் இவற்றுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அய்னா அவர்கள் கோடிடுகின்றார்.
சுருக்கமாகக் கூறுவோமெனில், இஸ்ரேலியரின் பிரசன்னமும் அவர்களது அரசியலின் பிரசன்னமும், தீர்க்கமாக இலங்கையில் பரவி இன்று, வேரூன்றிவரும் ஒரு பண்பாகின்றது என்பதே அய்னா அவர்கள் முன்வைக்கும் வாதமாகின்றது.
3
10 நிமிடங்களுக்கு ஒரு சிறுவன், இன்று, காஸாவில் கொலை செய்யப்படுகின்றான். இதனால் எழக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கவே இஸ்ரேலிய இராணுவத்தினர் இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றனர் என்பதனையும் கூறவரும் அய்னா - இல்லை இவர்களது வரவுக்கு இதற்கும் மேலாக ஒரு கதையும் உண்டு எனவும் அவர் தொடர்ந்து வாதிக்கின்றார். இதுவும் கூட உண்மையாக இருக்கலாம். ஏனெனில், மேலே பட்டியல் இடப்பட்டுள்ள சம்பவங்களை அல்லது நிகழ்வுகளை நாம் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து அவற்றை இலகுவாகப் புறந்தள்ள முடியாது.
இவையாவும், ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், ஒரு பூகோள அரசியலின் கண்ணோட்டத்தில், தற்போது இலங்கையில் நிழவும் விடயங்களை அணுகினால், தற்போதைய இடதுசாரி அரசாங்கத்தை (அநுரகுமார திஸ்ஸாநாயக்கவின் அரசாங்கத்தை) மாற்றியமைக்க வேண்டிய தேவைப்பாடும், மேற்கிற்கு உண்டு எனலாம்.
இலங்கையின் அமைவிடமானது இதற்கான முக்கிய கோரிக்கையை முன் வைக்கையில், ஐ.எம்.எப்பின் மூன்றாவது கொடுப்பனவு தொடர்பிலான தாமதம், இலங்கையின் பிரதான ஊடகங்கள் வகிக்கக்கூடிய பங்கு, இவை கட்டுவிக்கும் அரசியல் போன்றவை, மற்றும், இலங்கையின் ஆதிக்கச் சக்திகள் கொண்டுள்ள நடுக்கம், மேலும், இனிவரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் - இவையனைத்தும் மேற்படி கோரிக்கைக்கு மேலும் அரண் சேர்க்கும் காரணிகளாகின்றன.
வேறுவார்த்தையில் கூறுவதனால், இலங்கையை மையப்படுத்திக்கொண்டு, இதுவரையில் இருந்துவந்த ஒரு ‘மேற்கு-சீன-இந்திய’ இழுப்பறியானது, ‘தற்போது மாறியுள்ள’ ஒரு சூழ்நிலையில், மேலும் தன்வழியே சூடுபிடித்துக்கொள்வதும், மேலும் அது புதிய வடிவங்களை ஏந்தச் செய்வதும் தவிர்க்க முடியாததாகின்றது. ஆகவே இப்போது, சமன்பாடுகள் மாறவேண்டியுள்ளன.
உதாரணமாக, கொடுக்கப்படும் எச்சரிக்கைகள், முன்னையநாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புறந்தள்ளியது போன்று வேண்டுமென்றே புறந்தள்ளப்படவில்லை. மாறாக, இன்றைய ஜனாதிபதி, அநுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்கள், இன்று விடுக்கப்படும் இவ் எச்சரிக்கைகள் குறித்து, உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை, மேற்படி இலங்கையின் மாறியுள்ள அரசியல் சுவாத்தியத்தை எடுத்துரைப்பதாக உள்ளது. அல்லது, எமது வழமையான பனங்காட்டு நரியான கிழ ரணில் விக்ரமசிங்க, மெல்கம் ஆண்டகை கூறினாற் போல, கயவர்களைப் பாதுகாக்கக் கூடிய, ஓர் அரசியல் சுவாத்தியம் இன்றில்லை. இதுவும், வேறுபட்டு நிலவும் ஓர் அரசியல் சுவாத்தியத்தைக் குறிப்பதாக உள்ளது. ஆனாலும், விடயம் இத்துடன் முடிந்ததாகவும் இல்லை.
4
இஸ்ரேலியர்கள் மீது கோபம் கொள்ளும் வகையில், இலங்கை முஸ்லீம் மக்கள், திட்டமிடப்பட்டு, தூண்டுவிக்கப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில், தீவிர இஸ்லாமிய வாதிகளை எங்கிருந்தோ, களமிறக்கச் செய்து, பின், தாக்குதல்களை நடத்தி, அதற்கூடு நாட்டின் அரசியல் சுவாத்தியத்தை மாற்றி அமைத்துக்கொள்வது என்பது ஒரு தந்திரோபாயமான நகர்வாகவே இருக்கின்றது, என்பதனை ஒரு சில இந்திய ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதை இங்கே நாம் மீண்டும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
ஆனால், இந்நகர்வானது அல்லது இவ்வகை கண்ணோட்டமானது, இலங்கையுடன் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல், உலகளவிற்கு, சர்வதேசரீதியாக, விரிந்துள்ளது என்பதே இங்கு நாம் கூறவரும் முக்கிய விடயமாகின்றது. உதாரணமாக, இஸ்ரேலால், இன்று காஸாவிலும், லெபனானிலும் மேற்கொள்ளப்படுவது வெறும் தாக்குதல் மாத்திரம் அல்ல. ஆனால் அதற்கும் மேலாக அது ஓர் ‘இன அழிப்புச்’ செயற்பாடேயாகும், என ஐ.நா. இன்று கூறி, வரையறை செய்துள்ளமையை, இருபக்கங்கள் கொண்ட, ஓர் அரசியல் நகர்வாகவே பார்க்கலாம்.
ஏனெனில் இவ் அறிவிப்பானது, ஒரு புறத்தில், மத்திய கிழக்கில், நடந்தேறும் உண்மை யதார்த்தத்தை எடுத்துரைக்கும் அதேவேளை, மறுபுறத்தில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை உலகெங்கும் பரப்பி, தூண்டிவிடும் காரணியாகவும் இது செயல்படக்கூடும், என்பதிலேயே இதன் இருபக்க அரசியல் வேரூன்றத் தொடங்குகின்றது.
அதாவது இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒருபுறம் ‘ஊக்குவித்து’ அதனை, உலகெங்கும், ஓரிடத்திலிருந்து வேறோரிடத்துக்கு, ‘இறக்குமதி’ செய்யக்கூடிய ‘கள யதார்த்தங்களை’ மாற்றி உருவாக்கும் செய்முறையை ஒட்டியே, இவ்வகை அரசியல் செய்யப்படுவதாக இருக்கின்றது.
அதாவது இஸ்லாமியத் தீவிரவாதத்தை எங்கேனும் உருப்படியாக ஊக்குவித்து, அதனை தமக்கேற்ற வகையில், தமக்கேற்ற இடங்களில் இறக்குமதி செய்யக்கூடிய கள யதார்த்தங்களை மாற்றி உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டை மேற்படி சக்திகள் கோருவதாயுள்ளன.
இவ் அடிப்படையிலேயே, அய்னா அவர்கள் கூறுவதுப்போல, அறுகம்பேக்கூடாக இலங்கையில் ஒரு செயற்கையான இனக்கலவரத்தை ஏற்படுத்தி, அதற்கூடாக நாட்டின் அரசியல் சுவாத்தியத்தை மாற்றியமைத்து, அதற்கூடு இங்கே ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளும் திட்டம் உண்டென்பது போல, காஸாவில் மேற்கொள்ளப்படும் இன்றைய இன அழிப்பை, ஐ.நா. இனவழிப்பு என்று அறிவிப்பதானது, வெறுமனே இஸ்ரேலிய நலன்களுக்கு எதிரானது என்பதனை விட, இது ஆழமான அரசியல் வேர்கொண்ட ஒன்று என்பதே முக்கியத்துவம் பெறும் செயலாகின்றது.
இச்சூழ்நிலையிலேயே, அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்த எச்சரிக்கையானது முதல் முதலாக இந்தியாவால் விடுக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க அவர்கள் தன் ஆட்சியின்போது, பாலஸ்தீனத்தைத் தினமும் போற்றி பாடுவதும், அவர்களுக்காய் நிதி சேமிப்பது, எனக்கூறி ஈடுபடுவதும், பின் தனது ஒவ்வொரு நடைமுறையிலும் முஸ்லீம் மக்களை ஆசுவாசப்படுத்துவது போல் காட்டிக்கொள்வதும், அவரது நாளாந்த செய்கை என்றாலும், அதற்கு அடியில், தமது அந்தரங்க அளவில், இஸ்ரேலியர்களின் வருகைகளை அவர் ஊக்குவித்தும் அவர்களைப் போசித்தும், அவர்களது வியாபார அல்லது ஏனைய நடவடிக்கைகளை விஸ்தரிக்க உதவியும், அவர்களின் மத வணக்கஸ்தளங்களுக்குப் போதிய பாதுகாப்பினை அளிப்பதுமாக, அவரது அந்தரங்கம் செயற்பட்டுள்ளது என்பதே இன்று நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுபவையாகின்றன.
5
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, இந்திய-சீன உறவுகள் இன்று மாறுபட முனைந்துள்ளதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பிரிக்ஸ் (BRICS) மாநாட்டின் போது இந்திய-சீன எல்லை தொடர்பிலான ஓர் உடன்படிக்கையைக் கைசாத்திடப்பட்டுள்ளமை, ஒரு வரலாற்று மைல்கல்லாக நோக்கப்படுகின்றது. தீபாவளிக்கு, நாடுகளின் எல்லையில், இந்திய இராணுவ வீரர்கள், சீன இராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி கௌரவிக்கும் படங்கள் இந்திய ஊடகங்களில் பிரசுரமாயின.
இத்தகைய ஒரு பின்னணியில், அநுரகுமார திஸ்ஸாநாயகவை இந்திய தூதுவர்கள் சந்திப்பதும், வெறுமனே மேலோட்டமானது அல்லது சம்பிரதாயபூர்வமானது என கொள்வதற்கும் இடம் இல்லை. அதாவது, ஐ.நா. முதல் அறுகம்பே வரையிலான அரசியல் ஒருவகை பண்பைக் கொண்டிருக்கும் இன்றைய ஓர் பின்னணியில், இச்சந்திப்பு பல பரிமாணங்களையும் முக்கியத்துவங்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதாவது, இந்திய-சீன உறவுமுறை ஒரு புதிய தளத்தில் பிரவேசித்திருக்கும் இவ்வேளையில், இடம்பெற்றுள்ள மேற்படி சந்திப்பானது வித்தியாசமுற்றதாகும். ஆனால், இவ்வகை சந்திப்புகளும் பல பக்கங்களைக் கொண்டது என்பதனையும் புரிந்து வைத்தாக வேண்டியுள்ளது. இங்கேயே, இன்று உருவாகியுள்ள கனடிய-இந்திய முரணானது அமெரிக்கா ஆசிர்வாதத்துடன் உருவாகிய ஒன்று என மட்டுப்படுத்தி விடுவதைவிட, அது, இன்று முகிழ்த்துள்ள இந்திய-சீன நல்லுறவின் விளைப்பயனாய் எழுந்த ஒன்று என முடிவு செய்வது பொருத்தமானது. பங்களாதேஷின் பின்னணியில், இந்தியாவை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்ற உண்மையும் சேர்த்து பார்க்கத்தக்கதே.
ஆனால், இவற்றை இலங்கையின் சிறுபான்மை இனங்கள், கணக்கெடுக்காது, தமிழ்வின் அல்லது ஐ.பி.சி அல்லது லங்காசிறி போன்றவை “தரிசனங்கள்” அல்லது ஊடறுப்பு என்ற போர்வையில், கட்டவிழ்த்து விடும், பொய்மைகளை நம்பி இருப்பார்களேயானால், இவர்கள் போய்ச்சேர வேண்டிய இடம் ஒரு துரதிஷ்டம் பிடித்த இடமாகவே இருக்கும் என்பதில் ஐயம் கொள்ளல் ஆகாது. ஏனெனில், நடுநிசி ஆவிகளின் குரல் (ஊடறுப்பு) மாத்திரம் ஒருபோதும் தீர்வைத் தரப்போவதில்லை. (ஒருவேளை மனசாந்தியை வேண்டுமானால் நேயர்களுக்குத் தரலாம்). ஆனால், இதுவும் கூட ஒரு துரதிஷ்ட பாதையைத் திறந்துவிடுவதாக இருக்கும்.
யாரையும் விட இதனை நமது கம்பவாரதி ஜெயராஜ் அவர்கள், பின்வரும் பொருள்படத் தீர்க்கமாகக் கூறுவார்: “புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சில கோமாளிக் கூட்டத்தினர் தமது நடவடிக்கைகளை மீள எண்ணிப்பார்த்தல் தகும் எனக்கூறலாம். முக்கியமாக, இவர்கள் நிதியை அள்ளி வீசுவதன் பின்னணி குறித்து யோசித்து பார்த்தல் வேண்டும்…” (கம்பவாரதி கடிதங்கள்: 03.11.2024). இப்பின்னணியிலேயே நாம் அய்னாவின் கட்டுரை முன்வைக்கும் தரவுகளையும் அணுகவேண்டியுள்ளது. தரவுகளின் முக்கியத்துவம், நிதியை அள்ளி வீசுவதுப்போல, அவற்றின் பின்னால் மறைந்துள்ள அரசியலைக் கட்டுடைப்பதிலேயே தங்கியுள்ளது. அவற்றைக் காண்பதும் கண்டுணர்வதும் அத்தகைய ஒரு பின்னணியில் விடயங்களை மேலும் ஆய்வதும் முக்கியமானதாகின்றது.
இவை அனைத்திற்கும் மத்தியில்தான், அருகம்பே தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய தலையீட்டால், இறுதிக் கணத்தில் இத்திட்டம், தோல்வியைத் தழுவி இருக்கலாம். ஆனால், இத்தோல்வி, இக்கணத்தின், யதார்த்தின், யதார்த்த சூழல் மாத்திரமே. நாளை வேறு ஒரு திட்டம் களம் இறக்கப்படலாம் இதனை முகம் கொடுக்க, இலங்கையில், சிறுபான்மை இனங்கள் தயாராக உள்ளனரா என்பதே அய்னா முன்வைக்கும் மறைமுகக் கேள்வியாகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.