ஊதா நிற மண்ணுள்ள அந்தக் கடற்கரையைப் பார்க்காமல் திரும்புவதற்கு எனக்கோ மனமிருக்கவில்லை. தேசிய பூங்கா ஒன்றுக்கு ஊடாகச் சென்று, காடு போன்ற பிரதேசமொன்றைத் தாண்டி Pfeiffer Beachஐத் தேடினோம். அதற்கான பாதையென மிகவும் ஒடுங்கிய வழியொன்றை google map காட்டியது. அதற்குள்ளால் கார் போய்வர முடியுமா என்பது பெரும் சந்தேகமாக இருந்ததால், அது சரியான வழிதானா என மகளுக்குக் குழப்பமாக இருந்தது. எனவே அதனைத் தாண்டிச் சற்றுத் தூரம் போய் வழியிலிருந்த கடை ஒன்றில் Pfeiffer Beachக்கு எப்படிப் போவதெனக் கேட்டோம். அந்த ஒடுங்கிய வழிதான் அதற்கான வழியென்றார்கள். இருட்டத் தொடங்கிவிட்டது, இப்படி ரிஸ்க் எடுத்து அங்கு போகத்தான் வேண்டுமா என்பது மகளின் கேள்வியாக இருந்தது. நானோ போய்த்தான் பார்ப்போமே என அடம்பிடித்து ஒருவாறாக அங்கு போய்ச் சேர்ந்தோம். அப்போது, அங்கிருந்தவர்கள் எல்லோரும் விலகிக்கொண்டிருந்தார்கள். அதனால் கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. இந்த மண் ஊதாவாக இருக்கிறதா, வந்ததற்குப் பிரயோசனமா என்றா மகள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது, இருப்பினும் நீண்ட நேரம் அங்கிருக்க முடியவில்லை. நன்கு இருட்ட முன்பாக அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. வழியில் சூரியன் மறைவதைப் பார்த்தபின் நகருக்குள் நுழைந்தோம்.
அடுத்ததாக இன்னொரு இடத்துக்கும் போகவேண்டுமென்றிருந்தது. அன்று காலை Big Sur போகும் வழியில், Santa Cruz என்ற நகரைக் கடந்து சென்றபோது, ஓரிடத்தில் strawberry விற்றுக் கொண்டிருந்தனர். California strawberriesக்குப் பெயர்பெற்றது என்றா மகள். பழங்கள் மிகவும் பெரியனவாகவும், அடர் சிவப்பாகவும், அழகாகவும் இருந்தன. மாதிரிக்கு ஒன்றைச் சாப்பிட்டுப் பார்க்கலாமென்றிருந்தது. அப்படிக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கட்டுமா என அருகே நின்ற ஒருவரிடம் கேட்டேன். அவர் தன் கையிலிருந்த கூடைகளிலிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கச்சொன்னார். “மிகவும் சுவையாக இருக்கிறது, என்ன விலை?” என்றேன். “இது உங்களுக்குத்தான்!” என சிறியதொரு கூடை நிறைந்த பழங்களை அவர் எனக்குத் தந்தார். “இல்லை, வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம்,” என்றோம். அது தன் அன்பளிப்பு என்றார் அவர். பின்னர் தான் ஒரு கடை வைத்திருப்பதாகவும் அங்கு வந்து தங்களின் strawberry பானத்தைக் குடித்துப் பார்க்கவேண்டுமெனவும் அன்பாகக் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அவரும் அந்தப் பழக்கடையின் ஒரு வாடிக்கையாளர் என்பது தெரிந்தது. என்னுடன் சேர்த்து தன்னை ஒரு படம் எடுக்கும்படியும், அந்தப் படத்தைக் காட்டினால் கடையில் நாங்கள் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாமென்றும் மகளிடம் சொன்னார். அதனால் திரும்பிவரும்போது, அந்த மனிதரின் அன்புக்கு மரியாதை செலுத்தும்முகமாக, நேரமானாலும் கட்டாயம் அங்கு செல்லவேண்டுமென முடிவெடுத்திருந்தோம்.
அங்கு போனபோது அவரைப் பற்றியும், strawberry பானம் பற்றி அவர் சொன்ன கதையைப் பற்றியும் சொல்வதற்கு முயற்சித்தோம். ஆனால், கடையிலிருந்த எவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. கடைசியில் அந்த மனிதரின் மகன் தன் தாய்க்கு அதனை விளங்கப்படுத்தினான். அங்கு pizzaவும் விற்றார்கள். Pizza ஒன்றை ஓடர் பண்ணிவிட்டு நாங்கள் வந்ததாக அவருக்குச் சொல்லும்படி அவரின் மகனுக்கூடாக அவரின் மனைவிக்குச் சொன்னோம். அவர்கள் அந்த strawberry பானத்தை இலவசமாக இருவருக்கும் தர முன்வந்ததுடன், pizzaவுக்கும் காசு வேண்டாம் என்றனர். ஒரு பானம் போதுமென அதை மட்டும் பெற்றுவிட்டு, pizzaவுக்கான பணத்தை வற்புறுத்திக் கொடுத்தோம். இப்படித்தான் பலருக்கும் அவர் செய்வதாகவும், இந்திய மக்களைக் கண்டால் அவருக்கு மகிழ்ச்சி என்றும் அவர்கள் கூறினர். சொந்த நாட்டவர் ஒருவரைக் கண்டால் பார்க்காதது போலப் போகும் மக்களும் இருக்கின்றனர், இப்படியானவர்களும் இருக்கின்றனர். உலகம் பலவிதம். ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம்
HWY 1இல் ஓடவேண்டிய வேகத்தில், என்னால் கார் ஓட்டமுடியாமல் இருந்ததால் Big Sur இல் பார்க்க வேண்டுமெனப் பட்டியலிட்டிருந்த இடங்கள் எல்லாவற்றையும் பார்க்கமுடியவில்லை என்றாலும்கூட, அந்த நாள் மனதுக்கு மிகவும் ரம்மியமான ஒரு நாளாக இருந்தது. Big Sur இன் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் Big Sur (version 11) எனும் macOSஐ November 12, 2020இல் Apple வெளியிட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரவு 10 மணியளவில் ஹோட்டலுக்கு வந்தபோது, அதிஷ்டவசமாக ஹோட்டலுக்கு முன்னால் இருந்த வீதியில் காரை நிறுத்தக்கூடியதாக இருந்தது. இரவில் இலவசமாக வாகனங்களை நிறுத்தும் வசதி Nob Hillஇல் இருப்பது வசதியாக இருந்தது.
சூரிய உதயம்
சூரிய உதயத்தினதும் அஸ்தமனத்தினதும் அழகைப் பார்ப்பதற்குப் பெயர்பெற்ற குன்றுகளான Twin peaks எனப்படும் குன்றுகளுக்குக் காரில் மட்டுமே செல்லமுடியுமென்பதால், காரை ஒப்படைக்க முன்பாக அடுத்த நாளின் ஆரம்பத்தை Twin peaks இல் இருந்து வரவேற்பதென முடிவெடுத்தோம். அப்படியே அதிகாலை ஐந்து மணிக்கு முன்பாகவே எழுந்து அங்கு சென்றோம். ஏற்கனவே சிலர் அங்கு காத்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சில்லிடும் குளிருக்குள் சூரியன் வரவை எதிர்பார்த்து நாங்களும் காத்திருந்தோம். ஒரே foggyஆக இருந்ததால் சூரியன் தெரியாமல் விட்டுவிடுமோ எனப் பதற்றமாக இருந்தபோதும், 900 அடி உயரத்தில் நின்று, 360 பாகை விஸ்தரணத்தில் நகரின் அழகைப் பார்க்கக் கிடைத்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது.
பின்னர் காரை Enterprise இனரிடம் ஒப்படைத்துவிட்டு தனியாருக்குச் சொந்தமான ஆனால் பொதுமக்களும் அணுகக்கூடிய 5.4 ஏக்கர் விஸ்தீரணமான Salesforce Park என்ற இடத்துக்குச் சென்றோம். புற்களாலான தரை, செடி கொடிகள், நிரூற்றுக்கள் நிறைந்த அவ்விடத்தின் நடைபாதையில் நடப்பது இயற்கையில் இருப்பது போன்ற பிரமையைத் தந்தது. அடுத்ததாக Google க்குப் போகும் வழியில் Ina Coolbrith Park இல் பச்சைக் கிளிகள் பலவற்றைப் பார்த்ததில் பரவசமாக இருந்தது.
- Salesforce Park -
Googleஇல் programmer ஆக வேலைசெய்யும் மகளின் சினேகிதி Google நிறுவனத்தின் San Francisco கிளையைப் பார்க்க அழைத்திருந்தா. அங்கு மதியவுணவும் சாப்பிடலாமெனச் சொல்லியிருந்தபோது, பல்வகமையுள்ள மதியவுணவு கிடைக்குமென நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கோப்பி முதல் சலட், மேலைதேய, கீழைத்தேயச் சாப்பாடு, desert என அத்தனையும் buffet style இல் இருந்தன. Bay bridge இன் அழகை ரசித்தவண்ணம் அங்கிருந்து அனைத்து உணவுகளினதும் மாதிரிகளை ருசிபார்த்தோம்.
தன் பணியாளர்கள் அனைவருக்கும் காலையுணவு, மதியவுணவு, இரவுணவு என அத்தனை உணவுகளையும் பல்வகைமையுள்ள உணவாக Google இலவசமாகப் பரிமாறுவதுடன், ஒவ்வொரு மாடியிலும் nuts, sweets, chocolates என இடையுணவுக்காக வைத்திருக்கிறது. அங்கு வேலைசெய்பவர்கள் சமைப்பதைப் பற்றியோ, சாப்பாட்டைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை என்பதில் அவர்களின்மேல் எனக்குச் சற்றுப் பொறாமையாக இருந்தது. சாப்பிடவே நேரமில்லாமல் இயங்கும் மருத்துவர்களுக்கும் இப்படி ஒரு வசதியிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும், ஆனால், மருத்துவமனைகள் பணம் ஈட்டும் தனியார் நிறுவனங்கள் அல்லவே என நினைத்துக் கொண்டேன்.
பின்னர் மகள் தன் சினேகிதியின் வீட்டுக்கு இரவுணவுக்குப் போக பதின்ம வயதுகளில் என் பேனா நண்பராக இருந்த ஒருவருடன் தொலைபேசினேன். நாங்கள் இருக்குமிடத்திலிருந்து நான்கு மணி நேர தூரத்தில் உள்ள Fresno எனும் இடத்தில் தாங்கள் இருக்கிறோம் என்றும், எங்களைப் பார்க்க விரும்புவதாகவும் கூறிய அவர், இயற்கையெழில் மிக்க Yosemite National Park க்கு தான் அழைத்துச்செல்வேன் என்றும், தங்கள் வீட்டில் எத்தனை நாளானாலும் தங்கலாமென்றும், நாங்கள் கட்டாயம் வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். முதலிலேயே அவருடன் கதைத்து, அதற்கேற்பத் திட்டமிட்டிருக்கலாமெனக் கவலையாக இருந்தது. 40 வருடங்களின் பின் நாங்கள் சந்திக்கப் போகிறோம் என்பதால், 12ம் திகதி போய் 13ம் திகதி திரும்புவோம் என மகளும் ஒத்துக்கொண்டார். எனவே இரவு இணையத்தில் கார் ஒன்றைப் பதிவுசெய்தோம்.
பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலங்களில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய சேவையில் ஒலிபரப்ப்பான இசையும் கதை ஒன்றைக் கேட்டுவிட்டு அதன் எழுத்தாளருக்குப் பாராட்டிக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அப்படித்தான் ராஜா என்பவருடனான பேனா நண்பர் தொடர்பு ஆரம்பமாகியிருந்தது. மிகவும் interestingஆக எழுதக்கூடிய அவரின் கடிதங்களை என் தங்கையும் அந்தக் காலத்தில் ரசித்து வாசித்திருக்கிறா. பின்னர் நான் பல்கலைக் கழ்கத்தில் இருந்தபோது, 1982இல் அவரும் அவரின் நண்பருமாக சென்னையிலிருந்து தெல்லிப்பழைக்கு வந்திருந்தனர். அவர்களை அழைத்துக்கொண்டு நானும் என் இரு தங்கைமாரும் திருகோணமலை, சிகிரியா, கண்டி எனச் சில இடங்களுக்குச் சுற்றுலா போயிருந்திருக்கிறோம். காலவோட்டத்தில் அவரவர் திருமணமாகிய பின்னர் தொடர்புவிட்டுப் போயிருந்தது. அண்மையில் இணையத்தில் அவர் கேட்டிருந்த எனது பேட்டி ஒன்று எங்களை மீளவும் இணைத்திருந்தது. சரியாக 42 வருடங்களின் பின்பான சந்திப்பு எப்படியிருக்கும் என்ற நினைவுடன் தூங்கச் சென்றோம்.
தொடரும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.