"சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் பேசி வந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும், சங்க காலப்புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை ஓட்டினர். விதிவிலக்காக"மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ..." என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
வள்ளுவரும் இளங்கோவும் அவருக்குப் பின்னர் வந்த பாரதியும் அரசியல், அறம் பற்றியெல்லாம் எழுதினார்கள். நவீனகாலத்து எழுத்தாளர்கள் அரசியல் பேசியதுடன் எழுதினார்கள், அரசியல்வாதிகளாக தேர்தல்களிலும் தோன்றினார்கள். அரசியல் தலைவர்களை நம்பி அவர்கள் பின்னாலும் சென்றார்கள். " எனத்தொடங்கிய பதிவென்றை சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுத நேர்ந்தது. காரணம் இல்லாமல் காரியம் இல்லையல்லவா..?
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நானறிந்த சில இலக்கியப்படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர். மலையகத்தில் வீரகேசரி முன்னாள் ஆசிரியர் தேவராஜ், சக்தி தொலைக்காட்சி ‘ மின்னல் நிகழ்ச்சி ‘ ரங்கா, மற்றும் இலக்கியவாதி மல்லியப்பு சந்தி திலகர் என அழைக்கப்படும் மயில்வாகனம் திலகராஜன், ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் வல்வை அனந்தராஜ் என்ற எழுத்தாளரும் போட்டியிட்டனர். அனந்தராஜ் ஆசிரியராகவும் பின்னர் நகரசபையில் மேயராகவும் அங்கம் வகித்தவர். முன்னாள் உதயன், சுடரொளி பத்திரிகைகளின் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன், ஊடகவியலாளர் யதீந்திரா, கவிஞர் அதாவுல்லா, எழுத்தாளர்கள் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் , அந்தனி ஜீவா ஆகியோரும் தேர்தல்களில் போட்டியிட்டனர். ஆனால், மல்லியப்பு சந்தி திலகரைத்தவிர மற்றவர்கள் தோல்வியுற்றனர்.