இவளும் அவளும் - ஶ்ரீரஞ்சனி -
விமானம் தரையிறங்க ஆரம்பித்தது. மனமெங்கும் மகிழ்ச்சி வியாபிக்க, ஓங்கி உயர்ந்து நின்றிருந்த கட்டங்களையும் ஊர்ந்துகொண்டிருந்த வாகனங்களையும் யன்னல் கண்ணாடிக்குள்ளால் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள், பாமதி.
இருபது வருடங்களுக்கு முன், முதன்முதலாக ரொறன்ரோவுக்கு வந்திருந்த அந்தப் பொழுது மீண்டும் அவளின் நினைவுக்கு வந்தது. அவளின் கண்கள் சட்டென ஈரமாகின. மனம் சற்றுக் கனத்தது.
ஸ்பொன்சரில் அம்மாவைக் கனடாவுக்குத் தேவகி கூப்பிட்டிருந்தபோது பாமதிக்கும் அவளுக்கும் பல கனவுகள் இருந்தன. தன்னந்தனியனாகத் தங்களை வளர்த்து ஆளாக்கிவிட்ட அம்மாவைக் கண்கலங்காமல் கவனிக்க வேண்டும், குளிர்காலத்தின் கஷ்டம்கூடத் தெரியாமல், ஆறு மாதம் சிட்னியிலும், ஆறுமாதம் ரொறன்ரோவிலுமாக மாறிமாறி அவவை வைத்திருந்து, விரும்பியதெல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், விதி வேறொரு பாதையை வகுத்திருந்தது. மனமெல்லாம் சிலிர்க்க அம்மாவைச் சிட்னியில் வரவேற்பதற்குப் பதிலாக, அழுதழுது வீங்கிய கண்களுடன், வானம்கூட இருண்டுபோயிருந்த ஒரு நாளில், அம்மாவுக்கு விடைகொடுப்பதற்காக பாமதி ரொறன்ரோவுக்கு வந்திருந்தாள். ரொறன்ரோவில் அவள் தங்கியிருந்த அந்தப் பத்து நாட்களும் தேவகியும் அவளும் அம்மாவைப் பற்றியே மீளவும்மீளவும் கதைத்துக் கதைத்து மறுகினர்.