- ரோத்தன்பேர்க் - மத்தியகால மரக்கட்டடங்கள், கல் பதித்த தெருக்கள்... -
எமது படகு வுஸ்பேர்க் (Wurzburg) என்ற நகரத்துக்குச் செல்லும்போது அங்கு எனது சகோதரன் பல வருடங்களாக இருப்பதால் அவனைச் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், அவன் அன்றைய தினம் வேலை – அவன் வேலை இடம் வைத்தியசாலை என்பதால் விடுமுறை பகலில் எடுக்க முடியாது என்றபோது நான் வுஸ்பேர்கில் இறங்கி அந்த நகரத்தைப் பார்க்க விரும்பவில்லை. இரண்டு முறை தம்பியிடம் சென்றபோது, வுஸ்பேர்க்கில் பல இடங்களைப் பார்த்தேன் என்பதால் அங்கிருந்து புதிதான இடத்திற்கு போவோம் என நினைத்தேன். ஏற்கனவே படகில் சிலரை ரொத்தன்பேர்க் என்ற ஒரு மத்தியகாலத்து (Medieval town) நகரத்திற்குக் கூட்டிச் செல்வதாக இருந்தார்கள் . சியாமளா அன்று தனக்கு ஓய்வு வேண்டும் என்பதால் படகில் தங்கிவிட நான் மட்டும் தனியாகச் சென்றேன்.
கிட்டத்தட்ட ஐம்பது கிலோமீட்டர் தூரமுள்ள இந்தப்பாதை ரோமான்ரிக் வீதி (Romantic Road) என்பார்கள். தென் ஜேர்மனியிலிருந்து மத்திய ஜேர்மனிவரையுள்ள 27 மத்திய நகரங்களை இணைக்கும் 350 கிலோ மீட்டர் வீதியாகும். இந்த ரோத்தன்பேர்க் சிறிய நகரம் ரோபர் (Tauber River) நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அக்காலத்தில் இங்கு மிகப் பெரிய கோட்டை இருந்தது. கோட்டை பிற்காலத்தில் புவி நடுக்கத்தில் அழிந்தபோது சில பகுதிகளே எஞ்சியுள்ளன. ஆனால், கோட்டையின் வாசல் , சுற்று மதில் இன்னமும் உள்ளது. கோட்டை இருந்த இடத்தில் தற்போது பெரிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தில் நேசநாடுகளின் குண்டு வீச்சில் வுஸ்பேர்க் நகரம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் ரோத்தன்பேர்க் குண்டு வீச்சின் பாதிப்பிலிருந்து பெருமளவில் தப்பியது
எப்படி ?
இங்கு இருந்த நாஜிப் படையினர் மீது நேசநாடுகளின் விமானங்கள் ஆரம்பத்தில் குண்டு வீசியது. ஆனால், கோட்டைப் பகுதியிலுள்ள நாஜிப் படையினர் நேசநாடுகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, நகரை விட்டு விலகுவதாகச் சம்மதித்து, இரவோடு இரவாக இராணுவ தளபாடங்களுடன் வெளியேறியதால், பழைய நகரம், கோட்டை என்பன அழிவிலிருந்து தப்பியது. இப்பொழுது இந்த கோட்டைச் சுவருக்குள்ளே நகரம் அமைந்துள்ளது. இதையே பாதுகாக்கப்பட்ட ஜெர்மனின் முக்கியமான மத்திய காலத்து நகரம் என்கிறார்கள்.
- நகரத்தின் மத்திய காலக்கோட்டை மதில். இதற்குள்தான் நகரம் அமைந்துள்ளது.-
இதுவரை நான் பார்த்த ஜெர்மன் நகரங்களிலிருந்து ரோத்தன்பேர்க் வேறுபட்டது. இது புரட்டஸ்தாந்து மக்களை அதிகம் கொண்ட நகரம். இங்குள்ள தேவாலயமும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்ததாகும். இது புனித ஜேம்ஸ் லூர்தரன் தேவாலயமாகும். புனித ஜேம்ஸ், மேரியின் சகோதரியின் மகனும் யேசுவின் சீடனனும் ஆனவர் , யேசு நாதர் கொலை செய்யப்பட்ட அடுத்த நாளில் கொலை செய்யப்பட்டார். தேவாலயத்தின் பலிபீடத்தில் யேசுவின் இரத்தம் கண்ணாடி வில்லையில் உள்ளது மத்திய காலத்தில் ஸ்பெயின்- சந்தியாகோ நகரத்திலுள்ள புனித ஜேம்ஸ் தேவாலயத்திற்கு நடையாக யாத்திரை போகும் பாதையில் அமைந்துள்ளது. . என்பதால் இந்த ரோத்தன்பேர்க் தேவாலயம் அமைந்த இடம் மேலும் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது.
பஸ்ஸிலிருந்து இறங்கி ரோத்தன்பேர்க் நகரத்தை நோக்கி நடந்தபோது எனது காதில், வழிகாட்டி பேசும்போது கேட்பதற்காக ஒலி வாங்கி கருவியை அணிந்திருந்தேன். அப்போது ஒரு பழைய கட்டிடத்தைக் காட்டி இதுவே பழைய மருத்துவசாலை. இது அக்கால பிஷப்பால் நடத்தப்பட்டது என்று வழிகாட்டி சொன்னபோது திரும்பிப் பார்த்தேன் . கத்தோலிக்க மதத்தினர் வைத்தியசாலை நடத்துவது உலகளாவிய விடயம். ஆரம்பத்தில் ஸ்பெயினில் உள்ள சந்தியாகோ நகரத்திலுள்ள புனித ஜேம்ஸ் தேவாலயத்திற்கோ அல்லது ஜெருசலோமிற்கோ, கத்தோலிக்கர்கள் புனித யாத்திரை போகும் வழியெங்கும் இப்படியான மருத்துவசாலைகளும் அங்கு சேவையாற்ற கன்னியாஸ்திரிகளும் இருப்பார்கள். யாழ்ப்பாணம் , கரையூரில் புனித சிலுவை வைத்தியசாலையில் (Holy Cross Hospital) சியாமளா வேலை செய்ததும், அங்குள்ள கன்னியாஸ்திரி வைத்தியரின் உதவியுடன் எனது மகள் பிறந்தது ஞாபகம் வந்தது. அந்த நினைவுகளில் மிதந்தபடி நடந்தபோது எனக்குப் பின்பாக ஒருவர் முதுகில் தொட்டார்.
கிட்டத்தட்ட எனது வயதிருக்கும் அவர், சைக்கிளைத் தள்ளியபடி வந்தார் .
‘நீ அமெரிக்கனா ?’ என்று மரியாதையாக
நம்மைப் பார்த்து அமெரிக்கனா என கேட்க என்ன காரணம் உள்ளது? நான் கறுப்போ வெள்ளையோ இல்லையே! இதுவரை இந்தியனா எனக் கேட்பதே வழமை என்பதால் ஆச்சரியத்துடன்
‘இல்லை அவுஸ்திரேலியன்.’ என்றேன்
அதன்பின் சாதாரணமான தொனியில் “காது கேட்காதா ? பாதையில் விலகும்படி பல தடவை சைக்கிள் மணி அடித்தேன்” என்றார்.
எனது காதிலிருந்த ஒலிவாங்கியைக் காட்டி அவரிடம் காட்டி மன்னிப்பு கோரினேன்.
அந்த ஜேர்மனியர் என்னைக் கடந்து “விடுமுறையை அனுபவி“ எனக்கூறி கைகாட்டிவிட்டு தனது சைக்கிளில் ஏறிச் சென்றார்.
அமெரிக்கர்கள் இன்னமும் ஜேர்மனியில் இருப்பதும் அவர்கள் நடத்தையும் அவர்களுக்கான மரியாதையும் "நீ அமெரிக்கனா? " என்ற அந்த இரண்டு வார்த்தைகளில் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.
--
சின்டிரல்லா போன்ற சிறுவர் கதைகள் நமது பஞ்சதந்திரக் கதைகள்போல் உலகமெங்கும் வாய் மொழிக்கதைகளாக பல தலைமுறைகளாக இருந்தன. அவற்றைப் பல நாடுகளிலிருந்து எடுத்து எங்களுக்கு அச்சில் கோர்த்துத் தந்தது ,கிறிம் சகோதரர்கள் (Grimm Brothers ) ஜேர்மனியர்கள். அப்படியான ஒரு கதையை இந்த நகரில் நான் கேட்டேன்.
- மத்திய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் -
இங்கு நகரின் மத்தியில், மத்திய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் உள்ளது. அதன் இரு பக்கத்திலும் இரண்டு யன்னல்கள். அதில் ஒரு யன்னலால் நகரத்து மேயரது உருவம் மதுக்கோப்பையுடனும், மறு யன்னலால் இராணுவ தளபதியின் உருவமும் மணிக்கொரு தடவை வந்து போகும்- இதன் பின்னணியில் கதையொன்றுள்ளது. மத்திய காலத்தில் புரட்டஸ்தாந்தினரது பொறுப்பில் இருந்த இந்த நகரை தங்கள் வசப்படுத்த 30 வருடங்கள் கத்தோலிக்கர்கள் யுத்தம் செய்தார்கள். இறுதியில் போரில் வென்று கத்தோலிக்க இராணுவத் தளபதி நகரைக் கைப்பற்றியதும் அவர் நகர மேயரால் விருந்துக்கு அழைக்கப்பட்டார்.
மேயர், இராணுவ தளபதியிடம் “3.5 லீட்டர் வைனை ஒரே முடக்கில் குடித்தால் இந்த நகரம் உனது” என்றார். இந்த பந்தயத்தை ஏற்றுக்கொண்ட இராணுவ தளபதியால் முழு வைனையும் குடிக்க முடியவில்லை. ஆனால், மேயரால் குடிக்க முடிந்ததால் பந்தயத்தில் தோல்வியடைந்த இராணுவத் தளபதி நகரைவிட்டு விலகினார். அந்த நகரம் அழிவிலிருந்து தப்பியது. அதனைப் பிரதிபலித்து, மேயரும் இராணுவத் தளபதியும் மதுபானக் கோப்பையோடு மணிக்கொரு தடவைகள் இன்னமும் அந்த மனிகூட்டுக்கோபுரத்தில் தோன்றுவார்கள் .
இங்குள்ள தேவாலயம், கோட்டை, பூந்தோட்டம் என்பவற்றைப் காண ஒரு வருடத்தில் 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் இந்த ஊர் வருகிறார்கள்
--
இங்கு கோட்டை இருந்த இடம் விசாலமான அழகான பூங்காவாக இருந்தது . நான் தனிமையில் ஒரு மணிநேரம் நடந்தேன் . சுற்றி கோட்டைச் சுவரானதால் நகரைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
அந்த பூங்காவில் அங்கு ஒரு நினைவுக் கல்லைப் பார்த்தேன் அதில் எழுதப்பட்ட வாசகம் என்னை அதிரவைத்தது . அக்காலத்தில் இந்த ஜேர்மனிய பிரதேசங்களை பிரங்கோனியா என்பார்கள். இங்கு யூதர்கள் மிகவும் செல்வாக்காக வாழ்ந்தார்கள் .1298 இல் ஜேர்மனியரொருவர் (Lord Rindtfleisch) மனத்தில் திடீரென யூதர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் என்று அவர்களைக் கொலை செய்யப் பலரோடு தேடியபோது, 450 யூதர்கள் குழந்தைகள், பெண்கள் குடும்பமாக இங்கிருந்த இந்த கோட்டையில் புகலிடம் தேடினார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் கிறிஸ்துவ அயலவர்களால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள் அப்படி இறந்தவர்களுக்காக இந்த நகரைச் சேர்ந்த கலைஞர் ஒருவரால் (Rothenburg artist Peter Nedwal) இந்த நினைவுக் கல் நாட்டப்பட்டது என எழுதியிருந்தது.
- அந்த பூங்காவில் அங்கு ஒரு நினைவுக் கல். அதில் எழுதப்பட்ட வாசகம் என்னை அதிரவைத்தது ..-
ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிரான மனநிலை முதலாவது சிலுவை யுத்தத்தின்(1095) பின்பாக தொடங்கியது. இந்த கொலைகளை (Rintfleisch massacres) தொடர்ந்து இந்த பிரதேசங்களில்( Franconia to Bavaria and Austria, destroyed 146 communities, and 20,000-100,000 Jews were killed). பல்லாயிரக்கணக்கில் யூதர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
இப்படியான அப்பாவிகளின் கொலைகளுக்கு முக்கியமான உந்து சக்தி ஏதாவது இருக்க வேண்டும். மனிதரைக் கொலை செய்வது இலகுவான விடயமல்ல. அக்கால மேற்கு ஐரோப்பாவில் எல்லோரும் ஒரே நிறம் , கலாசாரம், மதத்தை சேர்ந்தவர்கள். யூதர்கள் மட்டுமே வித்தியாசமானவர்கள் என்பதுடன் வியாபாரப் பின்னணி கொண்டவர்கள் என்ற தகவலை வைத்துக்கொண்டு பின்னணியைத் தேடியபோது எனக்கு கிடைத்த தகவல்கள் இலங்கையில் நடந்த 1983 ஜுலை கலவரம் , புது டெல்லியில் நடந்த இந்து -சீக்கியர் கலவரங்கள் எல்லாம் ரெனிஸ் பந்தில் நடந்த சிறுபிள்ளைகளின் தெரு கிரிக்கெட் விளையாட்டாகவே தெரிந்தது.
இந்த கொலைகளுக்கான காரணத்தை சுருக்கமாக சொல்வதானால் இது நடந்து 12 வருடங்களுக்கு முன்பாக ஜெர்மனியின் மலைப்பிரதேசத்தில் கடவுளின் கிருமை பெற்றதாகக் கருதப்பட்ட 16 வயது சிறுவன் (Werner of Oberwesel) ஏதோ காரணத்தால் இறந்துவிட்டான். அவனை யூதர்கள் தங்களது பாஸ்ஓவர் காலத்தில் கொன்றார்கள் என்பதே குற்றச்சாட்டு . இதற்கு ஆதாரம் எதுவுமில்லை . ஆரம்பக் காலத்தில் இந்த சிறுவன் கத்தோலிக்க நாட்காட்டியில் ஒரு புனிதனாகக் கருதப்பட்டாலும் பின்பு கிறிஸ்துவ மதத்திலிருந்து பிற்காலத்தில் இவனது பெயர் நீக்கப்பட்டது. ஆனாலும் இதிலிருந்து தொடர்ந்ததே நான் மேலே குறிப்பிட்ட கொலைகள்.
இக்காலத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்தும் விடயங்கள் ஒரு காலத்தில் ஐரோப்பாவில் அவர்களுக்கு நடந்தது என்பது மிக கசப்பான விடயம்.
இங்கு தான் மகாபாரதக் கதையில் ஒரு கட்டத்தில் நடந்த சம்பாசணை நினைவுக்கு வந்தது.
கர்ணன் பிறந்தவுடன் தன்னை தாய் கைவிட்டது, தேர்ப்பாகனிடம் வளர்ந்தது, அரசுரிமையற்று போனது, குரு வில்வித்தை கற்றுத்தர மறுத்தது எனப் பல குறைகளால் தனக்கு ஏற்பட்டபோது துரியோதனன் மட்டுமே அன்பு காட்டினான் என்றான். அதைக் கேட்ட கண்ணன், அதை விட எனது வாழ்வு கடினமானது: எனது சகோதரர்கள் எல்லோரும் பிறந்தவுடன் கொல்லப்பட்டார்கள். பெற்றோர் சிறையில் , மாமன் கொலை செய்யத் திரிந்தான். தாய் தந்தையின்றி அனாதையாக வளர்த்தேன் . இப்படி கஸ்டங்கள் அனுபவித்தபோதும் அவைகளால் நான் கெட்டவனாக மாறவில்லை. உனக்கு கிடைக்காதவைகள், உனது கெட்ட நடத்தைக்கு காரணமல்ல . அவை உன்னை மேலும் மெருகூட்டவேண்டும் என்றது மனத்தில் வந்தது.
பூங்காவைச் சுற்றி நடந்து விட்டுப், பார்த்த விடயங்களை இரை மீட்டியபடி தேவாலயத்தில் வாசலருகே இருந்தபோது எனது படகில் பிரயாணம் செய்த இரு கனேடிய பெண்கள் பியர் குடிப்பதற்கு என்னை அழைத்தார். அவர்கள் இருவரும் கனடாவின் முக்கிய பங்குச் சந்தை வியாபாரம் செய்யும் கொம்பனியில் வேலை செய்பவர்கள். அவர்களுக்கு எனது கனடா தொப்பியை கண்டது மிகவும் சந்தோசம். இரண்டு மணி நேரம் ஒன்றாகப் பங்குச் சந்தை, குடும்ப வாழ்வு , பிரயாணங்கள் எனப் பல விடயங்களைப் பேசிவிட்டு மூவருமாக மீண்டும் பஸ்ஸில் ஏறி படகிற்குச் சென்றோம். அவர்கள் என்னுடன் நன்றாக நேரம் போனது என்று சியாமளாவிடம் சொல்லிவிட்டே
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[நதியில் நகரும் பயணம் தொடரும்]