- நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் -
இதுவரையும் பார்த்த நகரங்களில் எது அழகானது என்று கேட்டால் பாம்பேர்க் என்பேன். இது பவேரியா மாநிலத்தில் உள்ள ஜெர்மனியின் புராதன நகர். இந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் அமைந்திருக்கிறது. இரண்டு ஆறுகள், அழகான தேவாலயம் , கோட்டை , பெரிய மாளிகையும் அதனருகே தோட்டம் புகையூட்டப்பட்ட பியர், பல உணவகங்கள் எல்லாம் பொடி நடையில் சென்று பார்க்கும் தொலைவில் அமைந்துள்ளது. பல காலமாக முழு நகரமும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மரத்தால் அமைக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள் என்ற கட்டிடங்கள் ஆற்றின் அருகே இங்கு பாதுகாப்பாக உள்ளது. இங்கும் நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் முக்கியமான கட்டிடம் . ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த நகரம் அக்காலத்தில் ரோமன் பேரரசர் (Holy Roman Emperor Hentry11) தலைநகராகச் சில காலம் இருந்தது.
ஐரோப்பிய வரலாற்றில் ரோமர்கள், நான்காம் நூற்றாண்டின் பின் அதாவது, கிறிஸ்துவத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்ட கொன்ஸரன்ரைன் இறப்புக்குப்பின், ரோமர்களின் ஆட்சி நலிவடைந்து போனது. தற்கால துருக்கியில் அமைந்த பைசான்ரனம் கிழக்கு ரோம ராச்சியமாக வளர்ந்தபோது அவர்களது மதம் ஈஸ்ரேன் ஓதோடொக்ஸ் மதம். அதற்கான விசேட மதத் தலைவர் அங்குள்ளார். இப்படியான பலகாரணிகளால் வத்திக்கானில் அமைந்துள்ள கத்தோலிக்க பாப்பரசரின் மதிப்பு நலிவடைந்து, சில இத்தாலியச் செல்வந்தர்கள் குடும்பங்களால் இயக்கப்பட்டார்.
இக்காலத்தில் ஜேர்மன் பிரதேசத்தில் பல சிறிய அரசுகள் இருந்தன. அங்குள்ள அரசர்களே பாப்பரசரையும் பாதுகாத்து தங்களைப் புனித ரோமப் பேரரசின் வாரிசாக (Holy Roman Empire) பிரகடனப்படுத்தினார்கள். ஒரு வகையில் அவர்கள் இல்லாதிருந்திருந்தால் தற்போதைய கத்தோலிக்க மதம் நலிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பின்பாகவே 1871இல் பிஸ்மார்க் ஜேர்மனியை ஒரு சமஷ்டி பிரதேசமாக ஒன்றிணைத்தார்.
இக்காலம் பிஷப்புகள், தேவாலயங்களின் பொற்காலம். ஒவ்வொரு பிஷப்பும், அரசருக்கு சமமானவர்கள். ஐரோபிய அரச குடும்பங்களில் மூத்தவன் அரசரானால் அவரது சகோதரர் பிஷப்பாகுவார்கள். இங்கு இவர்கள் பிஷப் என்பதுடன் இளவரசராகவும் இருப்பார்கள். இவர்கள் பாப்பரசரின் வழி நடத்தலின் கீழ் இருந்தாலும் இவர்களிடம் வரி வசூலிக்கும் அதிகாரம் இருந்தது. இதனால் இவர்களிடம் சொத்துக்கள் காணிகளுக்கான அதிகாரம் குவிந்திருந்தது.
- பாம்பேர்க்கில் நாற்பது அறைகள் கொண்ட அழகான ஒரு மாளிகை -
பாம்பேர்க்கில் நாற்பது அறைகள் கொண்ட அழகான ஒரு மாளிகை உள்ளது அதனுள்ளே பெரிய ரோசாப் பூந்தோட்டமும் உள்ளது. தற்பொழுது அருங்காட்சியகமாக இயங்கி வருகிறது . இங்குள்ள ஓவியங்கள், சிலைகள் , அக்காலப் பொருட்கள் கண்களைக் கவரும் தன்மையுடன் அக்காலத்தின் செல்வத்தை எங்கள் முன்னிறுத்தும்.
இங்குள்ள தேவாலயத்தின் பின்பாக அக்காலத்தில் அமைக்கப்பட்ட மரத்திலான பழமையான நீதிமன்றக் கட்டிடமும் பாதுகாக்கப்படுகிறது. அதுவும் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இந்த நகரத்தின் ஊடாகச் செல்லும் மெயின் நதியின் பாலத்தில் அழகான சிற்பங்கள் உள்ளன. அக்காலத்தில் உள்ள பிஷப் மக்களது வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த நகரசபைக்கு ஒரு கட்டிடம் கட்டுவதற்கு, காணி கொடுக்க மறுத்ததால் அக்கால மக்கள் நதிக்குள் ஒரு செயற்கையான தீவொன்றை அமைத்து நகரசபை கட்டிடத்தை கட்டினார்கள். இந்த பழைய மரத்தாலான நகரசபை கட்டிடம் தற்போது பாம்பேர்க் நகரின் முக்கிய சின்னமாக (Iconic Building) அதுவே பல வீடியோக்களில் காண்பிக்கப்படும்.
இரண்டாவது உலகப் போரினால் பாதிக்கப்படாத நகரமானதால் பழைய மரத்தாலான கட்டிடங்கள் பாதுகாப்போடு மட்டுமல்ல புதுப் பொலிவோடு உள்ளது. நதியின் மேலாகச் செல்லும் பாலத்தில் பல சிற்பங்கள் உள்ளன. இங்கு பெரிய கட்டிடங்களாகத் தேவாலயங்களும் பிஷப்பின் அழகான இல்லமும் உள்ளது. சில வேளையில் ஜேர்மனியின் வெனிஸ் என அழைக்கப்படும் நகரம் கண்களால் பார்ப்பதற்கு மட்டுமே என் வார்த்தைகளுக்கு அடங்காதது.
பாம்பேரக் நகரூடாகச் செல்லும் சிறிய நதியான ரெக்னீற் (River Regnit) மெயின் நதியில் விழுகிறது. மெயின் நதி 171 கிலோமீட்டர் நீளமானது. பல இடங்களில் ஏற்ற, இறக்கமுள்ளதான சிறிய நதி போல் டான்யுப் நதியையும் ரைன் நதியையும் இணைக்கிறது. இதன் மூலம் கருங்கடலும் வடகடலும் இணைக்கப்பட்டு 15 ஐரோப்பிய நாடுகளின் பயண, சரக்குகளது போக்குவரத்து நடக்கிறது.
பாம்பேர்க்கில் கறுப்பு பியர் (Smoked Beer) மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், பியர் எங்கள் படகில் இலவசமாகக் கிடைப்பதால் நான் அங்குக் குடிக்க முயலவில்லை . வரலாற்றில் பயணிப்பவனாக இதுவரையில் கட்டிடங்களையும் நகரங்களையும் பார்த்த எனக்கு வாசகனாக என்னைக் கவர்ந்த ஒரு விடயம் உள்ளது. அது பாம்பேர்க் நகரில் நடந்தது. ஒரு முதியவர் நடந்து வந்து அங்குள்ள பழைய தொலைபேசிச் சாவடியுள்ளே தான் கொண்டு வந்த புத்தகங்களை வைத்துவிட்டு புதியதாக எடுப்பதற்காக சில நிமிடங்கள் புத்தகங்களைப் புரட்டியபடி நின்றார். நான் அதைக் கவனித்தபடி நின்றேன்
நமது நாடுகளிலும் இப்படிச் செய்தால் என்ன ?
மீண்டும் நதிக்கரைக்கு வந்தபோது சினிமாப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. கரையெல்லாம் செண்பகப்பூ என்பதுபோல் ரெக்னீற் நதிக்கரையெங்கும் சிவந்த பொப்பி செடி மலர்ந்து நதிக்கரையில் கம்பளமாக விரிக்கப்பட்டிருந்தது. நாங்கள் சென்ற காலம் ஐரோப்பாவின் வசந்த காலமானது கண்ணுக்கு அழகாக இருந்தாலும் எனது மூக்குக்கு ஒவ்வாமையைக் கொடுத்து அரித்தபடியிருந்தது தொண்டையை அடிக்கடி செரும வைத்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.