வசிகரன் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி ஆக்காட்டி வெளியீடாக வந்துள்ளது. வசிகரன் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் சூழலியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கின்றார். தொண்டைமானாற்றையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பகைப்புலமாகக் கொண்டமைந்த மரபுரிமைச் சின்னங்கள் தொடர்பான 'கரும்பவாளி' என்ற ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி போருக்குப் பிந்திய தலைமுறையினர் வாழ்வைப் பார்க்கும் கோணத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.
அன்பு, காதல், இரக்கம், தனிமை, ஏமாற்றம், துயரம் முதலான அகவுணர்வுகள் விரவிய வகையில் இக்கவிதைத்தொகுதி அமைந்துள்ளது. கவிதையில் அவர் எடுத்தாளும் சொற்கள் மரபுவழியிலிருந்து வேறுபட்டு விரிவதைக் காணலாம்.
வியக்க வைக்கும் வானவில்லாகவும் பூக்களாகவும் அன்பின் நேசம் இருந்தது. இவ்வாறு துருத்திக் கொண்டுநிற்கும் அன்பின் திரள் பேரழிவின் முன்னான நகர்வாக இருக்கிறது. அன்பிருந்தால் அதன் பின்னர் ஓர் அழிவும் இருக்கும் என்பதை கவிஞர் தன் வாழ்வனுபவங்களில் இருந்து கூறவருகின்றார்.
'நினைக்காத கள்ளு' என்ற கவிதையில் அன்புக்குரியவளைக் காணச் செல்லும் தெரு நீண்டதாக இருக்கிறது. அவளின் ஞாபகங்கள் எவ்வளவு நீண்டனவோ அதேபோல என்று பாடுகிறார். ஆனால்
'கள்ளைப்போல் புளித்து
நம் காதல் மணம் வீசும்'
என்று பொதுப்புத்தியில் அர்த்தப்படுத்தப்படுவதை இங்கு மாறாகச் சொல்கிறார். விருப்பமில்லாத செயல் காதலர்களுக்கு இங்கு விருப்பமானதாக மாறுகிறது.
சங்கக் கவிதைகளில் நிலமும் காதலும் பலவாறாகப் பாடப்பட்டமை நமக்குத் தெரியும். இங்கு மாரிகால நிலத்தையும் உடலையும் கவிஞர் பொருத்திப் பார்க்கிறார்.
அன்பே
நிலம் போன்றது நம் உடல்
நீர்சேர நிறம் மாறும்
ஈரம் ஊறுகையில்
இளகும்
புதையவிடும்'
தோழியுடன் உரையாடல் என்ற கவிதையும் அவ்வாறே அமைந்துள்ளது. 'மூழ்கிப் போதல்' என்ற கவிதையில்
'கடலில் மிதக்கும்
பாசித்துண்டைப்போல்
அதன் உப்பில் தேய்ந்து
அலைகளிடம் தன்னைக் கொடுத்துவிட்டு
அதன் கருமைக்குள் மூழ்கிப் போகிறேன்.'
என்கிறார். 'அந்திசாயும் முன்னிரவில்' என்ற மற்றொரு கவிதையில் காமம் முளைக்கும் தெருவில் கள்ளம் வளர நெஞ்சு கனக்க நான் வருவேன். அந்த நாளெல்லாம் இரவு உன் கால்களில் அசையும் என்கிறார். அன்பின் ஆழத்தில் கோபம் கொண்டு பேசாது மௌனமாக இருந்தாலுங்கூட அதுவும் கவிஞருக்கு விருப்பத்திற்குரியதாக மாறுகிறது.
'மௌனமே அன்பாய்
மௌனமே காதலாய்
மௌனமே பரிவாய்
விரவியிருந்தது நாளெங்கும்'
மேகங்களை விலக்கி வெளியில் குதிக்கும் வெய்யிலும் பிரியத்திற்குரியதாகப்படுகிறது. வேறொரு கவிதையில் 'குத்திய முள்ளாய் புதைந்திருக்கிறது உன் நினைவு' என்றும் பாடுவார். காமத்தில் தகிக்கும் உடலின் அந்தரத்தையும் ‘தொடச்சுடும் கனா’, ‘தூரநிலத்துப் பெண்’, ஆகியவற்றில் கனவுக்கும் விளிப்புக்கும் இடைப்பட்ட கணங்களை மொழி ஊடறுத்துச் செல்லும் தருணத்தைக் காட்டுகிறார்.
'உதடுகள் உரச பிரிந்து சென்றாய்' இல் காதல் எண்ணெய் ஊற்ற தீபம் எரியும் என்பது காதலின் ஒளிர்வுக்கு புதிய படிமமாய் இருக்கிறது. இக்கவிதைகளில் எதிரிடையான அர்த்தப்பாடுகளில் காதலைப் பாடுதலும் புதிய படிமங்களை எடுத்தாளுதலும் முக்கியமாக இருக்கிறது. இதனாற்தான்
'அவரின் கவிதையுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது'
என்று கிரிசாந் பின்னட்டைக் குறிப்பில் எழுதுகிறார்.
ஏமாற்றம் வாழ்வில் ஏற்படுத்தும் வலிகளை பல கவிதைகளில் காட்டியுள்ளார். 'சிக்கு' என்ற கவிதையில் பாடசாலைத் தண்ணீர்க் குழாயில் கல்சியம் படிந்திருப்பதுபோல் நாம் நட்பெனும் கொடியைப் பற்றிக்கொண்டோம். நெருக்கத்தில் எவற்றையும் மறைத்து வைக்காமல் உண்மையாக இருந்தோம். ஆனால் தொண்டைக்குள் மீன் முள்ளாய் உரசிக் கொண்ருக்கிறது நம் நினைவு என்பதன் மூலம் வேண்டாத நிலைமையை நம் நட்பு அடைந்து விட்டது என்று ஏமாற்றத்தின் துயரத்தைப் பாடுகிறார். தண்ணீர்க் குழாயில் கல்சியம் படிவது விரும்பத்தகாதது. அதை நட்புக்கொடியைப் பற்றும் விருப்பத்திற்குரியதாகவும், நினைவு என்பது எப்போதும் சுகமாக இருப்பதைத்தான் நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் நினைவு தொண்டைக்குள் மீன் முள்ளாய் குத்துகிறது என துன்பத்தின் தொடர்ச்சியையும் பாடுகிறார். எதிரிடையான உவமைகளை வித்தியாசமான சொற்சேர்க்கைகளை கவிஞர் எடுத்தாள்கிறார்.
தனிச் சொற்கள் தம்மளவில் அர்த்தம் தருவன என்பதிலும் பார்க்க அவை ஒன்றுக்கொன்று கொள்ளும் தொடர்புதான் அர்த்தத்தை உருவாக்குகின்றன. அதேபோல் கவிதைகளும் சொல்லுகின்ற முறைமையால் புதிய அர்த்தங்களை உருவாக்க வல்லவையாக இருக்கின்றன. அவற்றை வசீகரனின் கவிதைகளில் காணக்கிடைப்பது கவிதையின் சிறப்பென்றே கூறலாம்.
'வேண்டாத மாலை’ யிலும் உடலும் மனமும் போக்கிடம் கிடையாது காடையாய் ஆந்தையாய் அலைவதையும் காட்டுவார். அலைச்சலும் ஏக்கமும் தனிமையும் வாழ்வின் இருளாய்க் கவிவதை இக்கவிதையில் காணலாம்.
'முகம் இறுகி
உதடுகள் ஒட்டிக் கொள்ளும்
உடல் கல்லாகும்
காடையாய் இரவினில் ஆந்தையாய்
மனம் அலையும்
ஆதரவற்ற உடல்
போக்கிடம் கிடையாது
வந்து சேரும் துயிலும் இல்லம்'
'இப்போது உன்னைக் காண்பதேயில்லை' கவிதையில் அவளின் வருகையும் விருப்பமும் தேவையானது என நினைக்கின்ற சந்தர்ப்பங்கள் தடுக்கப்படுகின்றனவா என்று பெண் ஒடுக்குமுறையைப் பேசுவார்.
'என்றும் கல்லாய்ச் சமைந்திருக்கும் தேவி
சாத்தப்பட்ட கதவுகளுக்குள்
பூக்களை முகர்வாள்'
இவளும் வீட்டுக்குள்ளே கல்லாய்ச் சமைந்து விட்டாளோ என்ற வினாவை கவிஞர் எழுப்புகிறார். 'கைவிட்டு விலகி' கவிதையில் சமூகத்தில் நிகழ்த்தப்படும் புறக்கணிப்பைச் சொல்லுவார்.
'விபத்து ஒன்றைப்போல் விட்டுச் சென்றாய்
மதியச் சூரியனின்கீழ் விழுந்து கிடக்கிறேன்
கைகளின் கீழ் கொதிக்கிறது தார்வீதி'
மனமும் உடலும் ஓரிடத்தில் நில்லாது அலைந்து திரியும் ஒட்டாத வாழ்வு இதுபோன்ற கவிதைகளில் சொல்லப்படுகின்றன, தேசாந்திரியாய் ஆதரவற்று பிடிப்பற்று அலையும் மனிதன் அங்கு காட்சிப்படிமம் ஆகின்றான். இது ‘வேண்டாத மாலை’ கவிதையில் உச்சம் பெறுவதைக் காணலாம்.
படைப்புக்கள் எப்போதும் வாழ்க்கை பற்றிய உணர்வையும் பார்வையையும் தருவனவாகவும் அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாகவும் வசிகரனின் சில கவிதைகளைக் கூறலாம். வறுமை மற்றும் துயரந் தோய்ந்த வாழ்வை இன்னமும் இந்த மனிதர்கள் சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை 'வாடிய பூவே'யில் காட்டுவார். படிகளில் ஏறி ஏறித் தளர்ந்து போன ஒரு பெண்ணைப் பார்க்கிறார் அவள் முகத்தில் தன் தாயின் முகத்தைக் காண்பதாகவும் அதுவே வேதனையின் முகமாகவும் இருப்பதாகக் கூறியவர் அதற்கு எடுத்தாளும் படிமத்தையும் சூழலிலிருந்தே பொருத்தமாகக் கையாளுகிறார்.
படிகளில் ஏறி ஏறித் தளர்ந்து போயிருந்தாய்
கால்கள் விறைத்திருந்தன
ஈரம் காயாத பச்சை விறகாய்
இழுத்துக்கொண்டு நடக்கிறாய்
அடிபட்ட பறவை நிலத்தில் ஊரும்
தொண்டைக்குள் நீர் ஊற்றத் தந்தாய்
உன் அன்பைப் போல் குளிரும் நீர்
உன் முகம் பார்த்துச் சிரிக்க மறந்த இரவு
நெஞ்சு நோகிறது
நெஞ்சில் ஏறிக்கிட
நோவற்றுப் போக
என் தாயின் முகம் உனக்கு
வேதனையின் முகம். (வாடிய பூவே)
நிலத்தில் அடிபட்ட பறவையால் எப்படிப் பறக்கமுடியாதோ அதுபோல வாழ்வில் அடிபட்டுப்போன மாந்தரால் எழுந்திருக்கமுடியாதிருக்கின்ற துர்ப்பாக்கியத்தை இந்த வாழ்வு சமைத்திருக்கிறது. கவிஞரின் சமூகப்பார்வையை கீழ்வரும் கவிதையில் மேலும் துலக்கம் பெறுவதைக் காணலாம்.
'நான் நாகரீக விலங்கு
கறள் படிந்த நம்பிக்கைகளுடன் திரிவது
புதிய விலங்குகளிடம் அஞ்சும்'
என்று இன்றைய மனிதர்களின் சிதைவைக் காட்டுகிறார். காதல், பிரிவு குறித்த கவிதையாக இது இருந்தாலும் அன்றைய மனிதர்கள் கூட்டாக இருந்தார்கள். பாடினார்கள், நடனமாடினார்கள். ஆனால் இன்று மனித மனங்கள் ஒரு தொகையான கறள்களுடன் நடமாடுவதாக இக்கவிதைக்கூடாக அர்த்தப்படுத்தமுடிகிறது.
இழப்புக் குறித்த கவிதைகள் அதிக வலியுடன் எழுதப்பட்ட அனுபவத்தைக் காட்டுகின்றன. ஒருவரின் இழப்பினால் சுற்றமே தலையிலடித்துக் கதறுகின்ற காட்சியை இக்கவிதை வரிகளுக்கு ஊடாக கவிஞர் சித்திரிக்கின்றார். இழப்பு, வலி, கதறுதல் இவ்வளவுக்குப் பின்பும்
'சித்தம் தெளிய
பந்தம் சூழ வீற்றிருக்கும்
சிலையைப்போல் அமைதியாக
துயிலும் பிஞ்சைப்போல்
ஏதுமறியாது'
இதுவே தொகுப்பில் தொடக்கக் கவிதையாகவும் உள்ளது. இத்தகைய இறுக்கத்துடனே கவிதைத் தொகுப்பில் உள் நுழைய முடிகிறது. ‘சிந்தாத கண்ணீர்’ என்ற கவிதையில் பிரிவுத் துன்பம் எப்படியிருக்கிறது என்பதற்கு எடுத்தாளும் உவமையைப் பாருங்கள்.
‘ஒட்டியிருந்த நீ
பிய்த்துக் கொண்டு சென்றாய்
வாள் வெட்டிச் செல்லும்
தசைத் துண்டைப்போல்’
‘கண்கள் மழைக்காலக் கேணியைப் போல
முட்டியுள்ளன.’
உயிர் சிதம்பிய நீ கவிதையில் இதுவரை வலியால் நைந்த காலம் போதும் என்ற ஆற்றாமை வெளிப்படுகிறது.
'உடல் முழுவதும் துக்கம்
சாவின் துயர் தோய்ந்த முகம்
சாய்வதற்கு தோள்களும்
தாங்குவதற்கு உயிரும் இல்லை.'
கழிவிரங்கலில் வருகின்ற காட்சிப் படிமங்கள் உருவமாகவும் அருவமாகவும் மொழியில் வெளிப்படுகின்றன.
'கருங்கல் முற்றம்
தனித்த நிலவு
மரங்களின் சவக்காலை
நாசியேறும்
உடல் பிளந்த வேம்பின் உயிர்நெடி'
…………
'என் காளியே
உன் மாமிசம்
எந்தன் தீன்
தீனிட்டு துடித்து எழுந்து வெடித்துக் குளிர்'
ஏமாற்றத்தினதும் வலியினதும் இழப்பினதும் எல்லையில் தெறிக்கும் வார்த்தைகளாக இவை அமைந்துள்ளன. இவை தவிர கவிதைப் புனைதிறன் அம்சங்களில் ஒன்றாக பிரதேச வழக்குச் சொற்கள் குறிப்பிடற்பாலது.
'சாயத் தொடங்கும் உடல்கள் பொதக்கென்று வீழும்.'(ப.11)
'நீ இழுத்த புகை எனை அண்டவில்லை.'(ப.18)
'மனசு கெலிக்கும் உன் வருகையில் அசைவுகளில்.' (ப.23)
'மூச்சாய் எரியும் பீடிப்புகை நினைவுகள் நாக்கில் கயறும்.' (ப.34)
பொதக்கென்று, அண்டவில்லை, கெலிக்கும், கயறும் ஆகிய சொற்கள் வடமராட்சிப் பிரதேசத்தில் வழங்கப்படும் வழக்குச் சொற்களாக அமைந்துள்ளன.
மனிதன் கூட்டாக வாழ்ந்தாலும் தன்னைத் தனித்தவனாகத்தான் உணருகிறான். கணந்தோறும் புதிய புதிய எண்ணங்கள் ஏற்படுகின்றபோது வானத்தில் பறக்கிறான். அன்பில், நட்பில், காதலில், காமத்தில் தோய்கிறான். மறுபுறத்தில் தனித்துப் போனதாக உணருகின்றபோது அல்லது சுமைகளால் இழப்புக்களால் வலிகளால் தத்தளிக்கும்போது விரக்தியடைகிறான். நெடுந்தெருவிலும் அமைதியான மயானத்திலும் கைகொடுத்துச் தூக்கிவிட யாருமில்லாமல் தனித்து விடப்பட்டதாக உணருகிறான். இந்த இரண்டு பக்கங்களையும் அன்பும் அன்பின்மையும் மகிழ்ச்சியும் துயரும் வாழ்தலும் சாதலும் இணைந்த வகையில் கவிதையாகியுள்ளார் வசிகரன்.
உடலினதும் உள்ளத்தினதும் பல்வேறு அலைக்கழிவுகள், இயற்கையை தன்னுணர்வுடன் ஏற்றுதல், வித்தியாசமான சொல்முறைகள் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியவை.
சில கவிதைகளில் மீள மீள வரும் பொருண்மை குறித்த சொற்களைச் செப்பனிடுவதன் சொல்லவரும் விடயத்தை இருண்மைக்குள் அமிழ்த்தாமல் எடுத்துரைப்பதன் மூலமோ வாசிப்பில் மேலும் பல தளங்களை வாசகர் எட்டுவதற்கு வழிதிறக்கலாம்.
இதுவரை போரையும் சிதைவையும் எழுதிவந்த கவிதைகளில் இருந்து சற்று வேறுபட்டு மனித மனத்தின் அன்பையும் அலைக்கழிப்பையும் புதிய நிலவியல் காட்சிகளின் ஊடாக புதிய மொழிதலில் வசிகரன் எழுதுகிறார். வாழ்வு இன்னமும் இரகசியங்களை ஒளித்தே வைத்திருக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.