அறிமுகம்தமிழ்ப் புனைகதைத் துறைக்கு வளஞ்சேர்க்கும் படைப்பாளிகள் வரிசையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜாவும் ஓருவர். அறிதொழில் சார்ந்த தனது பேராசிரியர் பணிக்கு அப்பால் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருபவர். 80களின் பின்னர் போரும் வாழ்வும் இடப்பெயர்வும் ஆயுதக்கலாசாரமும் என்று சுற்றிக்கொண்டே இருந்த ஈழப் புனைகதைப் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியோடு புதிய வாழ்வியல் அனுபவங்களையும் தந்தவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகிய 'பாவனை பேசலன்றி' (2000, மித்ர பதிப்பு) குறித்த பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.
ஆசி. கந்தராஜா தனது தொழிலின் நிமிர்த்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டவர். அதன்மூலம் தனது தரிசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்திரிப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகப் பல புதிய களங்களையும் கதைகளையும் ஆசி. கந்தராஜாவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதில் சில கதைகளை இத்தொகுப்பில் காணலாகும்.
தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள், போலிப் பெருமைகள், புதிய களங்களில் கிடைத்த அநுபவங்கள், தனித்துப்போன முதியோரின் வாழ்வில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பு மையமாகக் கொண்டமைந்துள்ளது.
குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள்
தொகுப்பில் உள்ள கதைகளில் அம்மா பையன், அடிவானம் ஆகியவை குடும்பத்தில் ஆண் பெண் குறித்த சிக்கல்களைக் கூறும் கதைகளாக உள்ளன. இக்கதைகளின் ஊடாக மேலைத்தேயக் குடும்பங்களையும் தமிழர் குடும்பங்களையும் இரண்டு புறமும் வைத்து சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
புலமைப் பரிசில் பெற்று ஜேர்மனிக்குப் படிப்பின் நிமித்தம் சென்றபோது வியட்நாமியப் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பும் பிரிவும், நீண்ட காலங்களின் பின்னரான சந்திப்பும் குழப்பகரமான நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றன. அதனை 'அம்மா பையன்' என்ற கதையில் ஆசிரியர் காட்டுகிறார். தனது தாய் ஏமாற்றப்பட்டாள் என்பதை மகன் அறிந்தபோது மதிப்புக்குரிய பெரிய மனிதராக இருந்தாலும் முகத்தில் அடித்தாற்போல் கூறுகின்ற வார்த்தைகளாக,
'புத்திஜீவி என்ற மமதையிலே மானிட தர்மங்களை மறந்த ஒருவரை என் தந்தை என்று அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. கிம்மின் மகனாகவும் வியட்நாம் குடிமகனாகவும் வாழ்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.' (அம்மா பையன்)
என்று கூறுகின்றான். வெளிநாட்டில் கல்வி கற்கும் காலத்தில் ஏற்பட்ட இந்த உறவுநிலை பல வருடங்களின் பின்னர் மீண்டும் தற்செயலான சந்திப்பின்போது நிராகரிப்புக்கும் அவமானத்திற்கும் ஆளாகின்றது. மேலைத்தேய வாழ்நிலையாக இருந்தாலும் இங்கும் பெண் ஏமாற்றப்படுகின்றாள்.
அடிவானம் என்ற கதை மேலைத்தேய குடும்ப வாழ்வில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுச் செல்ல விரும்பும் ஜேர்மனிய றொனால்ட் - மொனிக்கா கதையினையும் தமிழ்ச் சூழலில் கணவன் எவ்வளவுதான் கொடுமையானவனாக இருந்தாலும் சேர்ந்து வாழ விரும்பும் தவமணி - சின்னராசா கதையினையும் ஆசி கந்தராசா தருகிறார். இரண்டு சமூகத்திலும் இருக்கக்கூடிய குடும்பங்கள். அவர்களின் வாழ்வில் ஏற்படும் விரிசல்கள், அவற்றுக்கான காரணங்கள் ஆகியவற்றை வீரசிங்கம் என்ற பாத்திரத்தின் ஊடாக இணைக்கின்ற கதைப்போக்கு சீராக அமைந்துள்ளது. ஒரு நாவலாக விரியக்கூடிய அளவுக்கு கதைகளும் கதாமாந்தர்களும் கதைக்களங்களும் அமைந்துள்ளன.
இவ்வாறான குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்களை தமிழ்ப் பண்பாட்டுச்சூழலையும் மேலைத்தேய பண்பாட்டுச் சூழலையும் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலம் கேள்விக்கு உட்படுத்துகின்றார் ஆசி. கந்தராஜா. தனது குடும்ப வாழ்வுக்குப் பொருத்தமில்லாத ஆடவன் எனத் தெரிந்து கொண்ட ஜேர்மனியப் பெண் மொனிக்கர் றொனாட்டை விவாகரத்துச் செய்துவிட்டு வேறு ஆடவனைத் திருமணம் செய்து வாழ விரும்புகிறாள். அதற்கேற்ப சொந்தமாகத் தொழில்தேடி தனது வாழ்வை தானே அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் கொண்டவளாகக் காட்டப்படுகின்றாள். ஆனால் தமிழ்ச்சூழலில் வாழத் தலைப்பட்ட தவமணி, குடும்பத்திற்காகத் தானே உழைத்து, உழைப்பில்லாத குடிகாரக் கணவனையும் ஏற்றுக் கொண்டு அவன் அவளுக்குச் செய்யும் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டு வாழ்ந்தாலும் தனித்து வாழவோ அல்லது அவனை விவாகரத்துச் செய்து கொள்ளவோ மறுக்கிறாள். இவ்வாறான வாழ்வுமுறை தேவைதானா என்ற வினாவையும் ஆசிரியர் எழுப்புகிறார்.
தவமணி போன்றவர்களுக்கு உதவி செய்ய விழைகின்ற சந்தர்ப்பங்களையுங்கூட தமிழ்ச்சமூகம் கதைகட்டி அநாகரிகமான நோக்குகின்ற அபத்தத்தையும் வீரசிங்கம் மனைவியின் உரையாடல்களினூடாகக் காட்டுகிறார். இவை களங்கள் மாறினாலும் மனிதர்கள் தங்கள் மனநிலையை இன்னமும் மாற்றாமலே இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றன.
போலிப் பெருமைகள்
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களில் பலர் தமது போலிப் பெருமைகளையும் பழக்க வழக்கங்களையும் இன்னமும் விட்டுவிட முடியாமல் ஒருவர் மற்றவரை ஏமாற்ற போலி முகங்களுடன் வாழ்ந்து வருவதை 'காலமும் களமும்', 'பாவனை பேசலன்றி' ஆகிய கதைகளில் எள்ளல் தொனிக்கக் கூறுகிறார். போலிப்பெருமைகளால் திருப்திப்படுகின்ற தமிழ்ச் சமூகத்தை கண்முன் கொண்டு வருகின்ற கதைகளாக இவை அமைந்துள்ளன. காலங்களும் களங்களும் மாறினாலும் தமிழனின் குணம் மாறாமல் இருக்கின்றது. தாயகத்தில் கிராமத்துப் பெரிய மனிதர்களாக உலாவந்தவர்கள் புகலிடத்திலும் கூட தமது பெருமையை நிலைநாட்ட விழைகின்றனர். சமூக நிறுவனங்களில் தலைவர் பதவியைப் பெறவேண்டும், இங்கும் பெரியமனிதர்களாக உலாவரவேண்டும் முதலான 'ஆசை பற்றி அலையலுறுதல்' அவர்களை விடாமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன.
'மறுக்கப்படும் வயதுகள்' என்ற சிறுகதையில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைக்குப் புலம்பெயர் சூழலில் பெற்றோரால் திணிக்கப்படுகின்ற கல்விச்சுமைகள் சொல்லப்படுகின்றன. அந்நாட்டு வெள்ளையினப் பிள்ளைகள் இவர்களின் செயற்பாட்டை அதிசயமாகப் பார்க்கின்றனர். ஆனால் நடைமுறையில் இதற்கு புலம்பெயர்ந்தவர்கள் கூறும் காரணம் யாதெனில், யுத்தத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட சமூகம் நாங்கள். வேற்றுநாட்டுச் சமூகங்களுடன் மிகப்பெரும் போட்டிபோட்டுத்தான் முன்னேறவேண்டியிருக்கிறது என்பது. இதற்காக குருட்டுத்தனமாகப் பிஞ்சுப்பருவத்திற்கு பொருத்தமில்லாத பாரத்தை ஏற்றுவது சரிதானா என்ற கேள்வியை இக்கதை எழுப்புகிறது. இது ஈழச்சூழலிலும் இருப்பது வியப்புக்குரியதல்ல.
தனித்துப்போன முதியோரின் வாழ்வு
ஆசி. கந்தராஜாவின் கதைகளில் சமூகத்தால் தனி;த்து விடப்பட்ட மாந்தர்களின்; உணர்வுக் கோலங்கள் முக்கியமானவை. இதனை தொகுப்பின் தலைப்புக் கதையான 'பாவனை பேசலன்றி' எடுத்துக்காட்டுகிறது.
புலம்பெயர்ந்த சூழலில் மனிதர்கள் எவ்வாறான கீழ்மையான எண்ணங்களுடன் உலாவருகிறார்கள் என்பதற்கு இக்கதை சாட்சியமாக அமைந்துள்ளது. ஈழச்சூழலில் மிக மதிக்கத்தக்க பேர்வழியாக இருந்த சின்னத்துரை வாத்தியார் அவரின் குடும்பத்தினராலேயே அவமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதும் அந்த தனிமை வாழ்வும் ஒதுக்குதலுமே அவரின் உயிரிழப்புக்குக் காரணமாவதையும் ஆசிரியர் காட்டுவார். உள்ளே ஒன்றைச் செய்துகொண்டு வெளியே போலிப்பெருமை பேசும் சமூகமாக நாங்கள் மாறிவருவதை இக்கதையில் தரிசிக்கலாம். வெள்ளையருக்கு மட்டுமல்ல. தமது இனத்தவருகே தாங்கள் பெரியமனிதர்கள் நாகரிகமானவர்கள் பெரிய படிப்பும் மேலான உத்தியோகமும் உடையவர்கள் என்ற போலிப்பெருமையைக் காட்டுவதற்காக வயதான தனித்துப்போன சின்னத்துரை வாத்தியார் பகடைக்காயாக்கப்படுகிறார். இதனை அவரின் மரணவீட்டுச் சடங்குக்கு ஊடாக ஆசி. கந்தராஜா காட்டுகிறார்.
கதையை வாசிக்கின்றபோது இவ்வாறான பாத்திரங்கள் கண்முன்னேயே நடமாடுவதை ஒவ்வொருவரும் உணரக்கூடியதாக இருக்கும். வாத்தியார் இறந்தவுடன் முதியோர் இல்லத்தில் இருந்து அவரின் சடலம் வீட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. கதைசொல்லி, வாத்தியாரை நன்கு அறிந்தவர். அவரிடம் படித்தவர். சின்னத்துரை வாத்தியார் குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்ட வேளையெல்லாம் அந்தக் குடும்பத்தாருக்குத் தெரியாமல் பல்வேறு உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்தவர்.
அவரின் மரணச் சடங்கில் நடக்கும் போலிப்பெருமைகளின் ஒரு காட்சியை இப்படி வர்ணிப்பார்.
'வாத்தியாரின் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி, ஜிப்பா, அகலமான ஜரிகையுடன் கூடிய பட்டுவேட்டி, அதற்குச் சோடியான சால்வை, விசிறி மடிப்புக் கசங்காது நேர்த்தியாகச் சாத்தப்பட்டிருந்தது. இத்தகையதொகு ஆடம்பரக் கோலத்தில் வாத்தியாரை இன்றுதான் முதன்முதலாக நான் பார்க்கிறேன்.'(பாவனை பேசலன்றி)
அவுஸ்திரேலியத் தமிழ்ச் சூழலில் தனித்துப் போன சின்னத்துரை வாத்தியார்போல இன்னமும் பலரை நாங்கள் காண்கின்றோம். இவ்வாறான கதைகளின் ஊடாக ஆசி. கந்தராஜா தமிழ்ச் சமூகத்தின் இழிந்த செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றார்.
புதிய களங்களின் புதிய அனுபவங்கள்
'இனமானம்' நாயைப் பற்றிய கதையாக இருந்தாலும் அதற்கு ஊடாகச் சொல்லப்படுகின்ற விடயம் மிக முக்கிமானது. ஒரு நாய்க்கு இருக்கும் இனமானம் கூட இந்த மனிதர்களுக்கு இல்லாமற் போய்விட்டது என்பதைக் கூறும் கதைதான் அது.
'மனிதனிலும் பார்க்க நாய்க்கு இனமான உணர்வு அதிகம் என்ற புதிய ஞானத்தினை யாருக்குமே சொல்லமுடியாதவாறு சாம்பசிவம் இன்றும் தவித்துக் கொண்டு இருக்கிறான்.'(இனமானம்)
ஒரு நாய்க்கு அந்த இனத்தின் இறைச்சியைப் போட்டாற்கூட சாப்பிடாதது மட்டுமல்ல. கொரியாவுக்குச் சென்று திரும்பிய கதைசொல்லி நாய் இறைச்சியைப் புசித்துவிட்டு வந்திருக்கிறார் என்ற உண்மையை உள்ளுணர்வால் அறிந்த அவரது வீட்டு நாயே அவரை விட்டு விலகிவிடுகிறது. இதனை மிகச் சிறப்பாகப் புனைவாக்கியிருப்பார்.
இக்கதையில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதிநிலையில் போட்டிபோட்டிருந்த ஒப்பந்தத்தில் தான் பிறந்த நாட்டினரின் போட்டியை குறுக்குவழியில் முறியடித்து அவுஸ்திரேலிய நாட்டு நிறுவனத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கிறார் கதைசொல்லி. இறுதியில் அவரை ஒரு விடயம் உறுத்துகிறது அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை வெற்றி பெற்றால், பெறப்படும் வருமானம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சேருவதாக அறிகிறார். ஒரு நாய்க்கு இருக்கும் இனமான உணர்வுகூட தன் நாட்டின்மீது இல்லை என்ற உண்மை இக்கதையில் சொல்லப்படுகிறது. வேற்றுநாட்டு புதிய அனுபவமும் தாயக நினைவும் மனித இயல்பும் ஒரு புள்ளியில் இணைவதை இக்கதையிற் காணலாம்.
பிராணிகள் பற்றிய கதைகளை பல படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். உமாவரதராஜனின் எலியம், சி. புஸ்பராஜாவின் பூச்சியும் நானும், ஞானசேகரனின் அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும், தானா விஷ்ணுவின் பூனைகளைக் கொல்பவனின் இரவு, சித்தாந்தனின் சஹ்ரானின் பூனை முதலான சிறுகதைகள்; ஈழச்சூழலில் நிகழ்ந்த ஆயுதக் கலாசாரத்தை குறியீடாகப் பேசுவனவாக அமைந்தவை. ஆனால், ஆசி கந்தராஜாவின் 'எலிபுராணம்' அவ்வாறல்லாமல் சூழலுக்கு ஏற்றவாறு பிராணிகளின் இயல்புகளிலும் மாற்றம் ஏற்படும் என்பதைக் கூறும் கதையாக அமைந்துள்ளது. 'பூனை எலி பிடிக்கும்' என்பதுதான் பொதுவழக்கு. ஆனால் அவுஸ்திரேலியச் சூழலில் பூனை மிகச் சாதாரணமாக இருக்க அதன்மீது எலிகள் துள்ளி ஏறிப் பாய்ந்து ஓடும்போது பூனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் படுத்துவிடுகிறது. அங்கு நாய்தான் எலியைப் பிடிக்கின்றது. இங்கு கதைசொல்லியை (கணவனை), மனைவி ஏளனம் செய்யும் பகுதி மிக நயமான சித்திரிப்பாக அமைந்துள்ளது. இதனை அவுஸ்திரேலிய தமிழ்க்குடும்பச் சூழலை அடிப்படையாக வைத்து புனைவாக்கியுள்ளார்.
'கள்ளக்கணக்கு' என்ற சிறுகதையில், ஒரு கருத்தரங்கின் நிமிர்த்தம் சீனா சென்றவர் அந்நாட்டின் தத்துவம் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். அந்நாட்டவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறார். ஆனால் தத்துவம் வேறு நடைமுறை வேறாக இருப்பதை அங்கு சென்றடைந்தபின்னர்தான் கற்றுக் கொள்கிறார். இதுபோன்ற பாத்திரங்களையும் களங்களையும் முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாக ஆசி. கந்தராஜாவும் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார்.
தாயகம் குறித்த நினைவுகள்
தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளுக்கு தாயகம் குறித்த மீள் நினைவுகள் மையச்சரடாக இருந்தாலும் அவை குறித்து மட்டும் எழுதப்பட்ட கதைகளாக 'யாவரும் கேளிர்', 'சூக்குமம்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 'பாவனை பேசலன்றி' கதையின் பெரும்பகுதி தாயகம் குறித்த நினைவோடையின் ஊடாகச் சொல்லப்படுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
'யாவரும் கேளிர்' என்ற கதை மலையகத் தமிழர் குறித்ததாக அமைந்துள்ளது. காலனிய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு மலையகத்தை வளப்படுத்திய மக்கள் இவர்கள். இலங்கையில் 'இந்தியாக்காரர்' என்றும் இந்தியாவில் 'சிலோன்காரர்' என்றும் பாகுபாடு காட்டப்பட்டு ஒடுக்கப்படும் கதை இங்கு சொல்லப்படுகிறது. இலங்கையில் பேரினவாதத்தின் தாக்குதல்களுக்கு ஆளாதலும் பின்னர் சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்துடன் இந்தியா சென்றவர்கள் அங்கும் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு சொல்லெணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இரண்டு பக்கத்திலும் குடும்ப உறவுகள் சூழலின் கைதிகளாகி உயிரிழத்தல் இக்கதையில் கூறப்படுகிறது.
'சூக்குமம்' என்ற கதையில் சித்திரவதையின் ஊடாக ஒரு சந்ததியை அழிக்கும் கொடுமை சொல்லப்படுகிறது. அதனை மாடு, நாய் ஆகிய மிருகங்களுக்குச் செய்யும் குறிசுடுதல் முதலானவற்றின் ஊடாக ஆசிரியர் இணைத்துக் காட்டுகிறார். அதில் வரும் பாதிக்கப்பட்ட ஒரு பாத்திரத்தின் கூற்று பின்வருமாறு அமைகின்றது.
'மனிசனுக்கு மனுசன் விதையடிக்கிறதை நான் இங்கைதான் உடையார் பார்த்திருக்கிறன். இளம்பொடியளுக்கு இதைச் செய்யிற கொடுமையை இங்கை என்ரை கண்ணால கண்டன். இப்பிடியும் இனத்தை அழிக்கலாம் எண்ட எண்ணத்தோடதான் பொடியளை ஆமிக்காம்புக்கு அள்ளிக்கொண்டு வாறாங்கள்.' (சூக்குமம்)
நிறைவாக
இங்கு கூறப்பட்ட எல்லாக் கதைகளிலுமே குறைந்த பட்சம் மானிட நேயமுள்ள ஒரு மனிதன் உலா வருகின்றான்
'ஒரு நீளும் கை கந்தராஜாவின் வார்த்தைகளுக்கு முளைத்;து விடுகிறது. அந்தக்கை நம் தோளைத் தொடுகிறது. தொட்டு நம் கவனத்தை அவர் சொல்லும் விஷயத்தின் பக்கம் நகர்த்துகிறது. உணர்வு கொப்பளிக்க ஆனால் உரக்கச் சத்தம் போடாத நளினம் ஆசிரியருக்கு கைவந்து விடுகிறது. இதுதான் அவரைத் தனித்துவப்படுத்துகிறது. சாதாரண சொற்கள் சத்தியத்தில் நனைந்து விடுகின்றன. எனக்கு கதைகளைக் காட்டிலும் கதைக்குப் பின்னால் இருக்கும் ஆத்மா முக்கியமாகப் படுகின்றது.' (பிரபஞ்சன்)
என்ற கூற்று கவனிக்கத்தக்கது. மிகத் தெளிவான கதைக்கரு, வாசகரை ஈர்க்கும் இலாவகமான நடை, கோட்பாடுகளைப் போட்டுக் குழப்பாத நிலை, கனகச்சிமான பாத்திர வார்ப்பு, கதைக்குத் தேவையான களவர்ணனை எல்லாம் சேர்ந்து ஆசி கந்தராஜாவின் கதைகளுடன் வாசகரை ஒட்ட வைக்கின்றன.
புலம்பெயர் இலக்கியம் என்பது பல்வேறு கூட்டு அனுபவங்களின் தொகுப்பாக ஈழச்சூழலுக்கு அறிமுகமாகின்றது. போரும் இழப்பும் அதற்குள்ளான வாழ்வும் மட்டுமல்ல. இன்னமும் எங்களிடம் இருந்து நீக்கமுடியாத எத்தனையோ இழிநிலைகளையும் சுமந்து கொண்டுதான் இந்த உலகம் எங்கும் தமிழ்ச் சமூகம் பரந்திருக்கின்றது என்பதையும் பல படைப்பாளிகள் மீளவும் மீளவும் நினைவுபடுத்தியபடியே இருக்கிறார்கள். இந்த அலைவுகள் என்றாலும் இந்த மனிதர்களில்; மாற்றத்தைக் கொண்டுவந்தனவா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. அவற்றில் சாதியம் மிகத் தூக்கலாக இருந்தாலும் இத்தொகுப்பில் அது குறித்துப் பேசப்படவில்லை. வர்க்கம் குறித்துப் பேசப்படுகிறது. போலிப்பெருமை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பாலியல் சுரண்டல், ஆகியவற்றையெல்லாம் இத்தொகுப்பில் முதன்மையாகப் பேசுபொருளாக்கியுள்ளார்.
மனிதர்களை மனிதர்களாக மதிக்கின்ற பண்பு எங்களுக்கு வரவேண்டும். அறம் சார்ந்த விழுமியங்களை நாங்கள் ஓரளவாவது காப்பற்ற முயலவேண்டும் என்பதைத்தான் இக்கதைகள் சுட்டுகின்றன.
புலம்பெயர் இலக்கியமானது தாயக வாழ்வு குறித்த நினைவுகள் ஊடாகவும் புகலிட வாழ்வு குறித்த மாற்றங்கள் ஊடாகவும் பண்பாடு குறித்த எண்ணப்பாடுகள் ஊடாகவும் புதிய களங்களில் புதிய சமூகங்களுடனான இணைவின் ஊடாகவும் ஏராளம் கதைகளுடன் வந்து சேர்கின்றது. ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி' என்ற இத்தொகுப்பு அறம் வலியுறுத்தப்படவேண்டும். மானுட விழுமியம் போற்றப்படவேண்டும் என்பதை உரத்துக் கூறுகின்றது. இந்தப் பொதுமையான அம்சத்தை இத்தொகுப்பில் மட்டுமல்ல அவரின் ஏனைய கதைத் தொகுப்புக்களிலும் கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் புனைவு சார்ந்தும் புனைவு சாராமலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஆசி. கந்தராஜா தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த ஒரு சொத்து. அவரின் எழுத்துக்கள் இன்னமும் வற்றாத ஊற்றாக ஊறிக்கொண்டேயிருக்கும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.