கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -
சென்ற ஞாயிற்றுக் கிழமை 02-06-2024 அன்று கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் அமரர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய ‘இலக்கிய உறவுகள்’ என்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்விற்கு கனடா – குரும்பசிட்டி நலன்புரி சபையின் தலைவர் ஐயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலில் அமரர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இடம் பெற்றது. குடும்பத்தினர், மற்றும் வருகை தந்தோரின் மலரஞ்சலியைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம் பெற்றது. கனடா பண், தமிழ் வாழ்த்து, இறைவணக்கம் ஆகியன சாச்சவி திலீபன் அவர்களால் பாடப்பெற்றன. அதன்பின் அமைதி வணக்கம் இடம் பெற்றது.
செயலாளர் கணேஸ்வரி குகனேசன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஐயாத்துரை ஜெகதீஸ்வரனின் தலைமையுரை இடம் பெற்றது. அடுத்து மறைந்த கவிஞருக்கான அஞ்சலி உரைகள் இடம் பெற்றன. திரு. வி.எஸ் துரைராஜா, திரு. க.சிவதாசன், எழுத்தாளர் இரா. சம்பந்தன், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், வீணைமைந்தன் சண்முகராஜா, பொன்னையா விவேகானந்தன், தமிழ்ப்பணி வா.மு. சே. திருவள்ளுவர் ஆகியோரது அஞ்சலி உரைகள் இடம் பெற்றன.