- ஆய்வாளர் மன்னர் மன்னன் -
அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன். ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது. Saattai யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68
சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.
1. குற்றெழுத்த சொல்லுக்கு முதலில் வராது.
இக்கூற்று பொதுவாகச் சரியென்று பட்டாலும் , ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இதற்கெதிராகவும் தர்க்கிக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு வசனத்தை எடுப்போம். அது - நான் திரைப்படம் பார்த்தேன். இதன் முதலெழுத்து நா. நெடில். இவ்வசனத்தில் முதற் சொல்லான நான் என்பதைப் பிரித்து எழுதினால் அது எப்படி இருக்கும்? இப்படி இருக்கும் - ந்+ஆ+ன் . அதாவது நான் என்பதன் முதல் எழுத்து ந். இப்படிப்பார்த்தால் இவ்வசனத்தின் முதலெழுத்து குற்றெழுத்தில் ஆரம்பமாகின்றது எனத் தர்க்கரீதியாக வாதிடலாமல்லவா.
2. இரண்டாவது திராவிடம் என்பது வடமொழி. தாய் மொழிக்கு எப்படி அந்நிய மொழியில் பெயர் வைக்கலாம்? அப்படி யாராவது வைப்பார்களா?
இதற்கு என் பதில்: தமிழ் மொழியில் பல சொற்கள் பல திசைகளிலிருந்து வந்து சேர்ந்துள்ளன. அவ்வகையில் தமிழில் பல வட சொற்கள் அடங்கியுள்ளன. சுதந்திரம், சுந்தரம், பிரபாகரன், இப்படிப் பல. பலர் தம் குழந்தைகளுக்கு இவ்விதம் அந்நிய மொழியில் பெயர்களை வைக்கின்றார்கள். இதற்குக் காரணம் இம்மொழிச் சொற்கள் அவ்வளவுதூரம் தமிழில் கலந்துள்ளன. பாரதியாரின் கவிதைகள் பலவற்றில் வட சொற்கள் உள்ளன. உதாரணத்துக்கு வீர சுதந்திரம் வேண்டி நின்றார் என்னும் கவிதையினைக் கூறலாம்.
திராவிடம் என்னும் சொல்லை மேனாட்டு அறிஞரான கால்ட்வெல் தென்னிந்திய மொழிபேசும் மக்கள் அனைவரையும் குறிப்பதற்குப் பயன்படுத்தினாலும் , வடமொழியில் தமிழ் என்பதைக் குறிக்கவே பயன்பட்டது என்பர் தேவநேயப் பாவாணர் போன்ற மொழி அறிஞர் பலர். எனக்கும் அதில் உடன்பாடே.
மேலும் மன்னர் மன்னன் 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் யாராவது திராவிடம் என்னும் சொல்லைப்பாவித்துள்ளனரா என்று கேள்வி கேட்கின்றார். பின்னர் அதை மறந்து போய் வடமொழியில் திராவிடம் என்னும் சொல் பாவிக்கப்பட்டதையும் ஏற்றுக்கொள்கின்றார்.
எதற்காகத் தமிழ் என்னும் சொல்லைப் பாவிக்காமல் திராவிடம் என்னும் சொல்லைப் பெரியார் பாவித்தார்? அவர் திராவிடக் கழகத்தை உருவாக்கியபோது அவரது கனவு இந்தியாவை ஜின்னாவின் பாகிஸ்தானாக, காந்தியின் வட இந்தியாவாக, ஆரிய இந்தியாவாகப் பிரிப்பதுபோல் தென்னிந்தியாவாகவும் அதாவது திராவிட இந்தியாவாகவும் பிரிக்க வேண்டுமென்பதுதான். அதற்காக அவர் ஜின்னாவிடமும் கூறி ஆதரவு கேட்டிருக்கின்றார். அதை ஜின்னா அலட்சியப்படுத்திவிட்டார். தென்னிந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிபடுவதை பெரியார் விரும்பவில்லை.
அவர் தமிழே தெலுங்காக, மலையாளமாக, கன்னடமாகப் பேசப்படுகின்றது என்பதை உறுதியாக் நம்பினார். அதை அவர் எழுத்துகள், உரைகளிலும் எடுத்துரைத்துள்ளார். அக்காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகள் அழைக்கப்பட்டு வந்ததால், தென்னிந்தியர்களை ஒருங்கிணைப்பதற்குப் பொதுவான சொல்லான திராவிடம் என்னும் சொல்லைப் பாவிப்பது நல்லது என்று பட்டது, ஏனெறால் தென்னிந்தியர்களைப் பாவிக்கவும் இச்சொல்லைப் பாவிக்கலாம். தமிழுக்கும் இச்சொல்லைப் பாவிக்கலாம். இதற்காகவே அவர் திராவிடம் என்னும் சொல்லைப் பாவித்தார். அதே நேரம் அவர் தனது பத்திரிகைக்கு 'விடுதலை' என்னும் தமிழ்ச்சொல்லைத்தான் பாவித்தார். சுதந்திரம் என்னும் வடசொல்லைப் பாவிக்கவில்லை.
ஆனால் பெரியாரின் கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில் திராவிடம் என்னும் சொல்லைப்பாவிக்க வேண்டுமா என்னும் கேள்வி எழுகின்றது.
தமிழில் நூற்றுக்கணக்கில் பிறமொழிச் சொற்கள், வடமொழிச் சொற்கள் உட்பட , பாவிக்கப்படுகின்றன. பொதுவாக மொழிகள் இவ்விதம் பிறமொழிச் சொற்களை உள்வாங்கியே வளர்ந்துள்ளன. ஆங்கில மொழியில் இல்லாத பிறமொழிச் சொற்களா? பாவிக்கப்படும் இச்சொற்களையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை.
மேலும் தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். அதே சமயம் இன்று திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் அதே சமயம் சமத்துவம், சமநீதி, சுயமரியாதை & பகுத்தறிவு ஆகியவற்றைக் குறிக்குமோர் அடையாளமாகவும் இருக்கின்றது. எனவே அதனை அப்படியே வைத்திருக்கலாம். இல்லாவிடில் தமிழக மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தி அதன் மூலம் அவர்கள் தெரிவு செய்யும் சொல்லைப்பாவிக்கலாம். தமிழக மக்கள் திராவிடம் என்னும் சொலையே பாவிக்கலாம் என்றால் அதை அப்படியே தொடரலாம். அல்லது தமிழ் என்னும் சொல்லைப் பாவிக்கலாமென்றால் தமிழ் முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை மாற்றலாம். அது தமிழில் தமுக என்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்தும் TMK என்றும் இருக்கும்.
3. அடுத்தது மன்னர் மன்னன் தமிழ்ப்பிராமணர்களைத் திராவிடர் என்று அழைத்தார்கள் என்கின்றார். அப்படி யாரும் அழைக்கவில்லை.அவரே தனக்குள் தர்க்கம் செய்து அப்படி ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கின்றார். அதற்கு அவர் கூறுவது - திருஞானசம்பந்தரைத் திராவிடர் என்று கூறுகின்றார்களாம். அப்படி யாரும் கூறவில்லை. திராவிடச் சிசு என்றுதான் கூறியிருக்கின்றார்கள். அதன் அர்த்தம் திராவிடம் தமிழ் என்பதைக் குறித்தால் தமிழ்க் குழந்தை, திராவிடம் தென்னிந்தியாவைக் குறித்தால் தென்னிந்தியக் குழந்தை. இதை மன்னர் மன்னன் விளங்கிக் கொள்ளாமல் புதியதாக எவ்வித ஆதாரமுமற்று ஞானசம்பந்தரைத் திராவிடர் என்று அழைத்ததாகக் கூறுகின்றார்.
காஞ்சிக் காமகோடி அடிகளின் தளத்திலுள்ள 'தெய்வத்தின் குரல் 5' இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது - '‘த்ரவிட சிசு’ ஸமாசாரத்தைப் பார்ப்போம். ஆசார்யாளே த்ராவிட சிசுதான் – தமிழ்க் குழந்தைதான் – என்று சொன்னேனல்லவா? அவரேதான் குழந்தையாயிருந்த போது அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணி அற்புதமான கவிதாவிலாஸம் பெற்றாரென்று மலையாள தேசத்தில் சொல்கிறார்கள்.' இதையும் மன்னர் மன்னன் கவனிக்க வேண்டும்.