தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6): எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று. - வ.ந.கிரிதரன்-
அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.
ஒரு சில மாதங்கள் ஓடி மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும், அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.
"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.
"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங் என்று சரியான வேலை. அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "
"ஏன் கேட்கின்றாய் பானு. எனக்கு விருப்பமான ஒபரேட்டிங் சிஸ்டமே அதுதான். "
"எங்கள் கொம்பனியில் லினக்ஸ் சேர்வர் அட்மினுக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். உனக்கு விருப்பமென்றால் உன்னுடைய 'ரெசுமே'யைத் தா. பிடித்திருந்தால் இன்டர்வியுக்குக்கு அழைப்பார்கள். உனக்கு ஏற்கனவே லினக்ச் தெரிந்திருப்பதால் வேலை பிரச்சினையிருக்காது. நானும் உன்னை ரெகமன்ட் பண்ணுவேன்."
"பானு தாங்ஸ். படுக்கப் போவதற்குள் உன்னுடைய இமெயிலுக்கு அனுப்புவேன். "
இவ்விதம் பதிலளித்தான் மாதவன். இதனைத்தொடர்ந்து அவர்களது உரையாடல் பல்வேறு பல்வேறு விடயஙக்ளைப் பற்றித் தொடர்ந்தது.
"மாது , வாழ்க்கையிலைன் செட்டில் ஆகிற பிளான் ஏதாவதிருக்குதா?"
"பானு, செட்டில் என்று எதைச் சொல்லுறாய்?"
"குடும்பம், குழந்தை, வீடு, வாசலென்று.. ஏதாவது ஐடியா இருக்குதா என்று கேட்டேன் மாது." என்று கூறிவிட்டு இலேசாகச் சிரித்தாள் பானுமதி.
இதைக்கேட்டதும் மாதவன் பலமாகவே சிரித்து விட்டான். இது பானுமதிக்குச் சிறிது கோபத்தையே ஏற்படுத்தி விட்டது.