திக்கு ஒன்றில் செல்லும் தீபாவளியினைத் தேடி அலைந்து வந்தேன்.
திக்கெட்டும் அதன் சவாரி இன்று, என்று, சிலர் சொல்லக் கேட்டேன்.
திக்கு முக்காடி அடிமுடி எல்லாம், அண்டம் முழுதிலும் தேடினேன், யான்.
திக்கு எட்டல்ல, எட்டெட்டு இன்று, அதற்கு, என்று அறிந்து திகைக்கிறேன்.
நரகாசுரன் எனும் நரகத்து அசுரன் மடிந்த திதியே தானா எம் தீபாவளி?
பரதனின் அண்ணன் ராமன் ஈரேழு ஆண்டின் பின்அயோத்தி திரும்பிய அதா?
இரக்கமிலாக் கௌரவரைப் பாரதத்தில் வென்று பாண்டவர் சென்ற அன்றா?
அரசன் விக்கிரமாதித்தன் அரியணை ஏறியது எனச் சொல்லும் அத்-தினமா?
எத்தனையோ பழங் கதைகள் ஊருக்கூர் உண்டெனக் கண்டு கொண்டேன்.
எத்தனையோ திக்குகள் திசைகளிலே தீபாவளி செல்கிறது என்று அறிந்தேன்.
பக்தியுடன் கொண்டாடும் பண்டிகை அல்ல எம் தீபாவளி எனவும் கண்டேன்.
தீபாவளியின் வேர் இந்தியாவில்ளூ இந்து மதத்தின் வைஷ்ணவ அலகில். ஆனால்
இன்று அதைச் சைவர், ஜெயின் மதத்தோர், சீக்கியர் மட்டுமல்ல, உலகில் அவர்
சென்ற இடமெல்லாம்: மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்திய மற்றும் பிஜித் தீவுகள்,
அவுஸ்திரேலியா, நியூசீலந்து, ஏன் ஐரோப்பா, அமெரிக்கா, என் பிரிய பிரித்தானியா
என்ற இடங்களை எல்லாம் பாதகன் நரகாசுரன், தன் சாவினால் பிடித்து விட்டான்.