1. வன்மம்
- மாதங்கி -
மேற்கூர்ப் பெருநகர
நாற்சந்தி முகப்படியில்
அறிவு சீவிகள் சிலர் கூடிநின்று
ஆளுக்காள் அடிபட்டனர்
சொட்டை பேசினர்
சொல்லெறிந்து மோதினர்
பிரமிளின் மிச்சமே
பின்நவீன எச்சமே
முள்ளிலா மீனே
வா…. வா
மூக்கிலே குத்துவேன்
முதுகிலேறி மொத்துவேன்
கல்லுக்கும் வன்மம்
கற்றுத் தரவல்ல
சொல்லின் செல்வர்களென்றால்
சும்மாவா?
குவியலாய்க் கிடக்கும்
கூழாஞ்சொல் பொறுக்கி
கன்னங்காதுடைய
என்னமாய் வீசி எறிந்தனர்
வயிறு வளர்க்கிறதுக்கு
இஞ்சையும் வந்து
இடியப்பமவிச்சு விற்க
நானென்ன
இளிச்ச வாயனோ
பிழைப்பின் பேர் சொல்லி
சாதி பிரித்தாண்ட
சந்ததி எழுத்தாள்வான்
ஒருவன்
வீசியெறிந்த
எள்ளலைச் சுமந்து
ஏவுகணையொன்று
சந்தியில் வீழ்ந்து
சன்னமாய்ச் சிதறியது!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2. வாழ்க்கை தத்துவம்
- இணுவை சக்திதாசன் -
ஆடத் தெரியாதவன்
மேடை சரியில்லை என்பதுவும்
ஓடத் தெரியாதவன்
வீதி சரியில்லை என்பதுவும்
வாழத் தெரியாதவன்
சமூகம் சரியில்லை என்பதுவும்
சிந்திக்கத்தக்க ஒன்று
தவறை தவறென்று
ஒத்துக்கொள்ளாதவரை
எல்லாம் தவறாகத் தான் தெரியும்.
கண்ணில் தூசி விழும் வரை
எண்ணிக் கூடப் பார்பதில்லை தூசியை
நீதியை தேடித் தோற்றாலும்
தீராசை இன்னும் கைவிட வில்லை
நல்லது கெட்டதை அறிந்தாலும்
சொல்லும் துணிவு வந்திடவில்லை
சரி பிழைக்கு அப்பால்
சமன்படுத்தி பார்ப்பது தான்
வாழ்க்கைத் தத்துவம்
தம் வாழ்வை இரை மீட்டு
அவரவர் திருந்தினாலே
சமன்பாடு தானாகவே
ஒருங்கிணைக்கப்படும்
கூட்டல் கழித்தல் செய்து பார்த்தால்
குப்பைகள் தான் மிஞ்சும்
இயற்கைக்குள்ளும்
இயலாமைக்குள்ளும்
இலக்கியத்துக்குள்ளும்
இயங்கிக் கொண்டிருப்பது
பூச்சியம் ஒன்றுதான்
புள்ளி போடுவது பின் அது
கோலமாவது - அழகை
வெளிப்படுத்துவது
ரசிப்புக்கு உள்ளாவது
எல்லாமே
சமற்படுத்தலின் போதுதான்.
தத்துவமாகிறது வாழ்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
3. கன்னியின் எண்ணம்.
- பிரகாஷ் -
மாலை நேர மயக்கம்
இளந்தென்றல் வீசும் காலம்
சாரல் காற்றும் வீசும்
சாளரத்தின் வழியே
சில்லென்ற தூரல் விழும்!
மாரனின் நெஞ்சம் தன்
அவளைத் தேடும்.
முல்லை மலரோ தேனுண்னும்
வண்டை தேடும்
மன்னவன் தன்னை கூடும் நாளை
எண்ணியிருப்பாள் இளங்கன்னி
நெஞ்சின் ஓரம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.