புராதன சாமான்களுக்கென
ஒதுக்கப்பட்ட அறையொன்றில்
விடுதலை கிடைக்காத
போர்க்காலக் கைதியைப்போல
முடங்கிக் கிடக்கும்
முற்காலங்களில்
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள்
இருக்கின்றார்கள் என்பதற்கு
அடையாளமாக இருந்த அது
ஒருவேளை பாட்டிக்குத் தன் அம்மா
சீதனமாக கொடுத்ததாகக் கூட
இருக்கலாம்.
நான் சிறுவனாய் இருந்த
அந்த நாட்களில்
பல்லில்லா என் பாட்டிக்கு
பாக்கோடு வெற்றிலை சுண்ணாம்பு
மூன்றையுமிட்டு இடித்து கொடுக்க
பாட்டி பரிசளித்தக் கதைகள்
இன்னும் இதய பக்கங்களில்
கறையான் அரிக்காமல்
இருப்பதற்குக் காரணம் அந்த
ஞாபக அலைகளை மீட்டுக்கொடுக்கும்
இந்த உரலும் (உலக்கை)இரும்புமாகக் இருக்கலாம்
நேற்றைய முதியவர்களுக்கும்
சிறுவர்களுக்குமான
உறவுப்பாலமான உரலுலக்கைகள்
இன்றைய சிறுவர்கள் அறியாத
புராதன பொருளாக.
நேற்றைய தலைமுறைகளை
நிராகரித்து ஒதுக்கித் தள்ளி
நாளைய தலைமுறையினரோடு
ஒட்டுறவில்லா சாலைகளில் எங்கள்
தெளிவற்றப் பயணங்கள்
தொடர்கதையாகத் முடிவின்றித் தொடர,..
நேற்றுகளின் முதியவர்கள்
பாவனைபொருட்களை மறைக்க
அறை ஒதுக்கி மறந்த நாம்
இன்றில் முதியவர்களையே
ஒதுக்கி மறைத்து மறக்க
உருவாக்கி விட்டோம்
முதியோர் இல்லம்.
நாளைய எம் பிள்ளைகள்
அவர்களின் வளர்ச்சிப்பாதையில்
துரிதகதியில் எமக்கான
இறுதிக் கடன்களை எங்கிருந்தோ
ஸ்கைப் வழி செய்துவிட்டுப்போக
இப்போதே மயானத்தில்
இடம்பிடித்து வைப்பதற்குள் சற்றே
கொஞ்சம் நமதுகால
வயோதிபங்களுக்கு எங்கள் அன்பின்
நிழல்விரித்து வைப்பதானது
வாழ்தலின் கட்டாயம்.
இன்றைய விதைகள்
நாளைகளில் விருட்சமாவது
நிஜமென நம்பும் நாம்
நமது சந்ததிகளின் மனதிலும்
அன்பினதும் அரவணைப்பினதும்
அதி உன்னத விதைகளை விதைத்தலானது
நேற்று யாரோ நாட்டியத் தென்னையில்
இன்று இளநீரருந்தும் நாம்
நாளை எவரேனும் இளநீரருந்த
நாட்டும் தென்னைக்கொப்பாகும்.
முதுமைகளின் கரம்பற்றி நடக்க
சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்
பாடங்களில் நிச்சயம் எங்களின்
முதுமைக் கரம்பற்றி நடக்க
பேரப்பிள்ளைகளின் வரிசை நீளும் என்னும்
நம்பிக்கையோடு துளிர்விட்டுத்
தொடங்கட்டுமே நமது
முதியோர் மீதான ஆதரவும்
சிறுவர்கள் மீதான அவதானமும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.