
- செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில், பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது. -
இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க
கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்
சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள் எமது மகள்