1. அன்பின் விலை
யாருமே சொல்லாதவொரு காரோப்ளேன் கதை சொன்னான் –
பேரானந்தமாயிருந்தது குழந்தைக்கு.
சீராட்ட அதன் கையில் சில
புலிப்பஞ்சவர்ணக்கிளி யளித்தான்.
கலகலவென்று கைகொட்டிச் சிரித்தது பிள்ளை.
விண்ணோக்கிப் பாயுமொரு ஆறு பாரு
என்று காட்டினான்.
கண்விரியக் கண்டுகளித்தது குட்டிமனுஷி.
குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
யார் தனக்கு சாக்லேட்டுகள் தந்தாலும்
அதில் அதிகம் அவனுக்கென எடுத்துவைத்து
குறைவாய் தன் வாயில் போட்டுக்கொண்டது.
அவனுடைய தொண்டைக்குள் இறங்கும் இனிப்புச் சுவை
குழந்தை வாயில் அமுதமாய் ருசித்தது.
அவன் ஒரு புகைப்படக்காரன்.
புதுப்புது கதை சொல்லி பிள்ளைக்கு சிநேகக்காரனானான்.
படிப்படியே பிள்ளையின் உலகமே அவனாகிப் போனதை
அவன் அறிவானோ, அறியானோ…..
’உயிர்ப்பின் சாரம்’ என்ற தலைப்பில்
அகில உலக புகைப்படப் போட்டிக்கு அனுப்ப வாகாய்
குழந்தையைப் பலகோணங்களில் படம்பிடித்துக்கொண்டான்.
வந்த வேலை முடிந்தபின் விடைபெறவேண்டியதுதானே.
குழந்தையை ஒருமுறை தூக்கிக் கொஞ்சி
’போய்வருகிறேன், சாக்லேட் வாங்கிவருவேன்.’ என்றான்.
’சாக்லேட் வேண்டாம் -நீ சீக்கிரம்வந்தால் போதும்’ என்று
உதடு பிதுங்கச் சொல்லிக் கையசைத்தது குழந்தை.
முதற்பரிசு கிடைத்தபின் ஒருமுறை திரும்பிவந்தான்
வேறு பல குழந்தைகளோடு சேர்ந்து நின்று
ஸெல்ஃபி எடுக்கும்போது
இந்தக் குழந்தையையும் அழைத்தான்.
பத்தோடு பதினொன்றாகப் பிடிக்காமல்
அழுதபடி மறுத்துவிட்ட குழந்தை
தன்னோடு மட்டுமே பேசும் கரடி பொம்மைக்குக் கதைசொல்ல
மரநிழல் தேடிச் சென்றது.
அடுத்த புகைப்படப்போட்டிக்குத் தயாராகச் சென்றுகொண்டிருக்கும்
அவன் தோள்பையில் கனத்துக்கொண்டிருந்தன
காட்பரீஸ் சாக்லெட்டுகள்.
2. காலகாலம்
கண்ணாமூச்சி விளையாடித் தீரவில்லை காலத்திற்கு.
’கதவுக்குப் பின்னே இருக்கிறேன் , கண்டுபிடி’ என்று சொன்ன குட்டிப் பையன்கள்
கனவான்களாகி காணா நிலவெளிகளுக்குப் போய்விட்டார்கள்.
கனவான்களின் தலை நரைத்து தளர்ந்துவிட்டன கைகால்கள்.
சில கதவுகள் உளுத்துப்போய்விட்டன;
சில கதவுகள் வலுவாகவே நின்றிருந்தாலும்
வாழுமிடங்கள் வேறாகிவிட்டன.
வற்றியும் வற்றாமலுமான நனவோடைகளின்
நீள அகல ஆழங்களை யறியும் அளவுகோலையும்
களவாடிச் சென்றுவிடுகிறது காலம்.
மீண்டும் மீண்டும் அது மறைந்துகொள்ள
மரங்களை விதைகளாக்கி நடுவதை மட்டும் நிறுத்துவதேயில்லை.
ஒரு விடியலுக்கும் இன்னொரு விடியலுக்கு மிடையேயான
அந்தகாரத்தில் ஒளிந்துநிற்கும் காலத்தை ஒருவேளை
கண்டுபிடிக்கமுடிந்தாலும்
கைவசப்படுத்த இயலாது என்ற புரிதலில் நெரியும் உயிர்
கலங்கி நிற்பதைப் பார்த்து
மாயக்கோல் ஒன்றைத் தந்து
முன்னே தள்ளிவிட்டுத் தன் வழி சென்றது காலம்.
அந்தக் கோலை வைத்து
முயலை கைக்குட்டையாக்கப் பார்த்தேன் – முடியவில்லை.
புறாவைப் பூச்சாடியாக்கப் பார்த்தேன் – முடியவில்லை.
வெறும் பைக்குள் கையை விட்டு
வைரமோதிரங்கள் எடுக்கப் பார்த்தேன் - – முடியவில்லை.
ஆனால்
என்னைக் குழந்தையாக்கி இல்லாத கதவுக்குப் பின் ஒளித்து
கண்ணைப் பொத்திநிற்கும் காலத்தை விளித்து
கண்டுபிடிக்கச் சொல்லும் கண்ணாமூச்சி யாட்டத்தை
எண்ணாயிரம் வண்ணங்களில் ஆடிப்பார்க்க முடிகிறது….!
காலத்தை கலைடாஸ்கோப்பாக்கி
நினைத்த நேரத்தில் நினைத்த கோலத்தைக் காட்டவைக்க முடிந்ததில்
காலவழுவமைதியே காலமாக…..
3.. எழுத்துண்ணிகள்
(i)
முனைவர் பட்ட ஆய்வுக்காக
படைப்பாளியை வெட்டிக்கு
அக்குவேறு ஆணிவேறாக்கியவர்
இனி வாசகர்களால் அவரை நன்றாகப் புரிந்துகொண்டு
மெச்சமுடியும் என்றார் _
உயிரற்ற சோளக்கொல்லைபொம்மையாக்கிவிட்டு
பொன்னாடை போர்த்தியிருந்த
படைப்பாளிமேல்
தானே காக்கையாய் எச்சமிட்டுக்கொண்டிருப்பதைப்
புரிந்துகொள்ளாமல்.
(ii)
அவர் எழுதிக்கொண்டிருந்தபோது
அரை டிராயர் சிறுவனாகக்கூட இருந்திருக்க மாட்டார்..
இவர்.
ஆனாலும்
Inverted Comma க்களேதும் இல்லாமலே
'அவர் இதை நினைத்து எழுதினார்;
இந்தப் பொருளில் மட்டுமே
இந்த வார்த்தையை பயன்படுத்தினார்'
என்று அடித்துக்கூறுகிறார்.
அப்படியில்லை என்றால்
அடித்துவிடுவார் போலும்.
அச்சமாக இருக்கிறது
(iii)
ஒருவர் எழுதிய ஆவணத்தை அலசியாராய்ந்து
ஆறாயிரம் பக்க கட்டுரையொன்றை எழுதுவதற்காக
'அவருடைய நண்பரைப் பார்த்தேன்,
எதிரியைப் பார்த்தேன்
அவருடைய பேராசிரியரைப் பார்த்தேன்,
பள்ளியாசிரியரைப் பார்த்தேன்,
அவ்ரோடு பாண்டியாடியவரைப் பார்த்தேன்,
பக்கோடா பகிர்ந்துண்டவரைப் பார்த்தேன்,
என்று பக்கம்பக்கமாகப் பட்டியலிட்டிருந்தவரைப் பார்த்து
‘அவரை’ப் பார்த்தீர்களா என்று கேட்டால்
ஆசாமி கப்சிப்.
(iv)
வாழ்வின் பல்பொருளாழங்காட்ட
கவி வரைந்துசென்ற
புனல் விட்ட மணல் கட்டத்தை மிக கவனமாய்
புகைப்படமெடுத்துக்கொண்டுவிட்ட மாமுனைவர்
மறவாமல் அதனருகே நின்றொரு ஸெல்ஃபியும்
எடுத்துக்கொண்டு
எல்லையற்ற அதன் விரிபரப்பில்
நல்லதோர் ரியல் எஸ்டேட் வர்த்தகராய்
அடுக்குமாளிகைக் குடியிருப்பு கட்டி
One Hall, Two Bedrooms, Kitchen, Attached Bathroom
என்று
அச்சு ஒளி-ஒலி ஊடகங்களில்
பிச்சுப் பிச்சுக் காட்டி
கூவி விற்கும் பாங்கு
திறந்தமுனைக் கவிதையார்வலர்களுக்கு
குத்து கும்மாங்கு.
4. கடைசி வரை….
சொல்லாகி உணர்வாகி வலியாகி களியாகி
மொழிக்கப்பாலான மொழியாகி
விழிக்குள்ளான வழியாகி
காலாதிகாலமாகி
கடந்து தீரா ஆறாகி
வேறாகி
மறதியின் விளிம்பில்
துருத்திநிற்கும் முள்ளாகி
இல்லாதிருந்துவரும்
உறவைச் சுமந்தவண்ணம்
சென்றிருப்போம் நாம்
ஒருவருக்கொருவர் ஆறுதலாய்
சில வார்த்தைகளைப் பகிர்ந்தபடி.
அவரவர் பசி அவரவர் கும்பியெரிக்க.
(* சமீபத்தில் தந்தையை இழந்துவிட்ட தோழர் ’புது எழுத்து’ மனோன்மணிக்கு)
5. மூன்றின் கூட்டநெரிசல்
அழுகிவரும் நுரையீரலில் பிராணவாயுவை நிரப்பிக்கொள்ள
வந்த இடத்தில்
கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறுகிறது. முழிபிதுங்குகிறது;
கால்கள் தள்ளாடுகின்றன;
வியர்வையின் நெடி குமட்டுகிறது;
வாய் குழற கைகள் அலைகின்றன இலக்கின்றி;
கும்பலைப் பிளந்துகொண்டு வெளியேற
நாயாய் குலைக்கும் மனதின் குரல்வளை அறுபட,
குற்றுயிராய்க் கிடக்குமதை மிதித்துக்கொண்டோடி
பல்கிப்பெருகும் பாதங்கள் ஒரு ஜோடி.
6. அ(ன)ர்த்தங்கள்
”என் அண்ணனை எப்படிவேண்டுமானாலும் கொஞ்சுவேன்” என்று
அன்று சொன்னதற்கு செய்முறைவிளக்கம் தருவதாய்
நான் பார்க்க நெருக்கியணைத்து முத்தமிடுகிறாய்.
நல்லது…..
வேண்டுமென்றே செய்திருந்தால் அது வியர்த்தம்.
தொடுவுணர்ச்சியைத் தாண்டியது என் வலி; பித்தம்.
காலாற நடைபழகிக்கொண்டிருக்கிறேன் திரிசங்கு சொர்க்கத்தில்.
முயலும் ஆமையும் பந்தயங்களில் நான் பங்கேற்பதில்லை.
நான் ராஜாளிப்பறவை.
ஒவ்வொரு நாளும் கடைமூடும்போதெல்லாம்
உடைமைகளனைத்தையும் உதிர்த்துவிடவே விரும்புகிறேன்
மறதிப்பள்ளத்தாக்கில்.
இருந்தும்,
ஒருமுறைக்கு இருமுறையாய் சொல்லத்தோன்றுகிறது _.
மறந்தும்
நான் பார்த்ததை ஊர் பார்க்கச் செய்துவிடாதே.
அண்ணனுக்கு இங்கே ஆயிரம் அர்த்தம்.
7. வேண்டுகோள்
ஒரு கோயிலுக்குள் நுழைவதுபோலவே _
ஒரு கலைக்கூடத்திற்குள் நுழைவதுபோலவே _
காலாதீத வெளியில் நுழைவதுபோலவே _
உயிரின் அடியாழத்திற்குள் நுழைவதுபோலவே _
உணர்வேன்தான்… எனினும்
அருள்கூர்ந்து இனி ஒருபோதும் அழைத்துவிடாதே
உன் வீட்டுக்கு வரச்சொல்லி.
உண்மையானதாகவே இருக்கக்கூடுமென்றாலும்,
யாருடைய பரிந்துரையிலோ வருவதாய் புரிபடும் அழைப்பு
அந்தரத்தில் அறுந்த கயிற்றில்
ஊசலாடிக்கொண்டிருக்கும் கழைக்கூத்தாடியின் அவலமாய்
உணரவைக்கும் என்னை...
இல்லாத என் அரியணையில் நான் ராணியாகவே
இருந்துகொள்கிறேன். இதுபோதும்.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா….
8. சிகிச்சை
எதிரில் பார்த்தால் மரியாதை நிமித்தம் சிரிப்பேன்.
இரண்டொரு வார்த்தைகள் பரிமாறிக்கொள்வேன்.
“புறப்பட்டாயிற்றா அலுவலகத்திற்கு?”
வரும் வியாழக்கிழமை கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறோம் –
விருந்துண்ண வாருங்கள் மறவாமல்.”
”கருவேப்பிலை இப்போதெல்லாம் கொள்ளைவிலை.”
“கட்டப்பஞ்சாயத்துகள் இலக்கியவுலகில் இல்லாமலில்லை.”
விடைபெற்றுச் சிறிது தூரம் சென்றபிறகு
திரும்பிப் பார்த்துக் கையசைக்கவும் செய்வேன்.
அத்தனை நேரமும் ஆறாத்துயரமாக
என் மனதில் நீ மண்டியிருப்பதை
கூச்சநாச்சமில்லாமல் எடுத்துக்காட்டும் என் கவிதையின் வீச்சம்
கிருமிநாசினியாகி என்னைக் காத்துக்கொண்டிருக்கிறது கொள்ளைநோய்களிலிருந்து.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.