1. கூடு
இளைப்பாற
ஓர் இடம் வேண்டும்
மாட மாளிகையோ
மண்குடிசையோ வேண்டாம்
புங்க மரத்திற் கூடுகட்டி
முட்டையிட்டு
குஞ்சு பொரித்ததும்
பறந்து போன
சாம்பற் குருவியின்
கூடு போல
ஒரு சின்னக் கூடு போதும்
இரவு நேரங்களிலும்
மழை நாட்களிலும்
இளைப்பாறிக் கொள்வதற்கு
2.கடந்து போதல்
பயணங்களின் போது கடந்து போகின்ற
மரம், மலை, குளங்களைப் போலவே
ஒரு சாதாரணப் பொழுதினில்
உன்னைக் கடந்து போயிருந்தேன்.
ஆயிரம் மின்னற் கீற்றுகள்.
மழைக்கு ஒத்திகை பார்த்து
பூமியைத் துளைக்கும் ஒளிப் பிரவாகமாய்
எனக்குள் இறங்கிக் கொண்டிருக்கின்றன.
அணிலாய், சப்பிச் சுவைத்த பின்பும்
தீர்ந்து போகாத கனிகளிலிருந்தும்,
புற்கள் நிறைந்திருக்கும்
குளக்கரையின் உடைவுகளிலிருந்தும்
மேலெழுகின்ற காம வாசமானது,
பேனாவின் மையினைச்
சிந்தச் செய்து கொண்டிருக்கின்றன.
உயிர்த்துவமான கவிதையை எழுத முடியாதபடி…….
3.இளைப்பாறுதல்
செக்கச் சிவப்பும், ஆரஞ்சும்
அடர் கறுப்பும். நீலமும், வெண்மையுமாய்
வண்ணங்களின் குழைவினில் செய்யப்பட்டு
பந்தலாய் விரிக்கப்பட்டிருக்கிறது வானம்.
கொடிகள் இல்லாமலேயே
பூத்துக் குலுங்குகின்றன நட்சத்திரங்கள்.
தேய்பிறை, வளார்பிறை, சிவபிறை
முழுநிலவென பொழுதொரு மாற்றமாய்
முகம் காட்டிக் கொண்டிருக்கின்றது நிலவு.
யாவற்றையும் மறைத்தபடி
அடர்த்தியாய் தம்மை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது
சாமத்து கரிய இருள்.
விடியலில்
சலனப்பட்டு ஏங்கிக் கிடந்த
ஆயிரம் ஆயிரம் மனசுகள்
விரும்பியபடி உணர்வுகளை வெளிப்படுத்திட.
இளைப்பாறுதலின் ஆசுவாச மூச்சுக் காற்று
மெல்லமாய் பிரபஞ்சத்தோடு
தம்மைக் கரைத்துக் கொள்கின்றன.
இயலாதவனின்
சூட்சுமங்களின் அரங்கேற்றத்தில்
சமநிலை ஆகிக்கொண்டிருக்கின்றது உலகம்
முகம் பார்க்க முடியாத சாமத்து கரிய இருளில்.
4. பதறுகள்
காற்றின் திசைகளில் நிற்கின்றேன்.
திராணியற்ற பதறுகள் ஓடிவந்து
வோ் பகுதியினை நிறைக்கின்றன.
அவைகளின் வருகை
என்னை பலப்படுத்துவதாய்
கூச்சலிடுகின்றன.
அவைகளின் மீது எனக்கு
நம்பிக்கை இருந்ததில்லை
ஒரு போதும்.
நாளைய மழைநாட்களில்
அவைகள் நசிந்து போகக் கூடும்.
அல்லது நாளைய காற்றில்
வேற்று திசைகளில் பறந்தும் போகலாம்.
எதுவாயினும் நிகழலாம்.
இன்றைய நாளைப் போலவே.
விழுந்த இடத்தில் வேர்களை இறக்கி
பச்சைக் குருந்தினை மேலெழுப்பி
படர்தலுக்காய் மழைவேண்டி காத்திருக்கும்
ஒன்றிரண்டு நெல்மணிகள் மீதே
ஆர்வம் எப்போதும் எனக்கு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.