பெருகிவரும் மக்கள்தொகை பீதியூட்ட, தேவைகளும்
பெருக்கெடுக்கும் காலமொன்று பேதலிப்பை ஏற்படுத்த
எரிசக்தி நீர்வளங்கள் நிலவளங்கள் பற்றாக்குறை
ஏற்படுத்தப் போகின்ற எதிர்கால விபரீதம்
உருகிவரும் பனிமலைகள் ஒழுகிடவே ,கடல்மட்டம்
உயர்வடைந்து நிலம்குறைந்து மழைவெள்ளம், இடிமின்னல்
ஒருபோதும் இல்லாத வகையினிலே பயங்கரமாய்
உலகத்தை ஆட்டிவைக்கும் நிலைவரும்நாள் தூரமில்லை.
கரியமில வாயுக்கள் கட்டுகின்றக் கூட்டினிலே
கதிரவனும் வெப்பமெனும் முட்டையிட கடும்வரட்சி
விரிவடைய அடைகாத்து விளைகின்ற குஞ்சுகளால்
விரைவாக உண்ணப்படும் உணவாகும் பிரபஞ்சம்
புரிகின்றத் தவறுகளால் புல்பூண்டோ டின்னுமின்னும்
பொழிகின்ற பசுமைக்கு பொழிலான தாவரங்கள்
சரிந்தேதான் சருகாகி மாய்ந்திடவே உயிரனங்கள்
சத்தியமாய் கருவாடாய் ஆகும்நாள் தூரமில்லை.
அதிகரிக்கும் உஷ்ணத்தின் அளவுதனை மதிப்பிட்டு
அறிந்தவர்கள் வழங்குகின்ற அறிவியலி னடிப்படையில்
கதிரியக்கப் பொறிமுறைகள் கனிப்பொருட்க லுபயோகக்
கழிவுகளாய் கக்கும்புகை காற்றுவெளி மாசாக்க்க
எதிர்வினையோ மனிதகுல அழிவதனை பறைசாற்ற
எத்தனித்து முன்னேறும் விஞ்ஞான வளர்ச்சிஎனும்
மதிநுட்பக் கோளாறை திருத்தாமல் விட்டால்வெறும்
மணல்மேடாய் இத்தரையும் மாறும்நாள் தூரமில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.