தமிழியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,ஹ_ஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமெரிக்கா, உகண்டா தமிழ்ச்சங்கம், உகண்டா கிருஷ்ணகிரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து நடாத்தும் 100 நாள் தேசிய நாடகவிழா மற்றும் நாடகமும் பண்பாடும், திறன் மேம்பாட்டுத் தேசிய பயலரங்கம் நிகழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் தமிழில்துறை தலைவர் முனைவர் யோ.சத்தியமூர்த்தி, கலைமணிச்சுடர் ம.வெ.குமரேசன், நாடக ஆசிரியர் மாதையன், நாடக மனேஜர் பெ.முருகேசன் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள், கலை ஆர்வலர்கள், இளையவர்கள் அனைவருக்கம் எனது இனிய வணக்கம்!
‘ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் பேச உள்ளேன். யாழ்ப்பாண வரலாறு ஆய்வுகளில் அக்கறை கொண்ட என் தந்தை அகஸ்தியர் யாழ்ப்பாணக் கூத்து வடிவங்கள் பற்றி அதாவது வடபாங்கு, தென்பாங்கு, மன்னார் கூத்து வடிவங்கள், மட்டக்களப்பு கூத்து, காத்தவராயன் கூத்து, மலையக வடிவங்கள், கண்டிய நடனங்கள் என்று பேசுவதை அவதானித்து வந்திருக்கிறேன். அத்தோடு அவர் சிறந்த பாடகர். தாள லயம் குன்றாது நாட்டுக் கூத்து மெட்டுக்களை பாடக்கூடியவர். அத்தோடு மிருதங்கக் கலையை முறைப்படி கற்றவர். அவரது மிருதங்கக் கச்சேரிகளையும் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். எனது பாட்டனாரான சவரிமுத்துவும் கலையார்வம் கொண்டவர். அவர் உண்மையான குதிரையை மேடையில் ஏற்றி நடித்தவர் என்று எனது தயார் நவமணி கூறியதைக்கேட்டு வியந்திருக்கிறேன். அவர் நடித்தவற்றை நான் நேரில் பார்க்காவிட்டாலும் கூத்துப் பாடல்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். எனது பெரிய தந்தை எஸ் சிலுவைராஜாவும் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞன். ‘சங்கிலி மன்னன், ‘கண்டி அரசன்’ போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களில் அரசனாகி கொலுவில் உட்கார்ந்து அவர் கர்ஜித்ததை நான் மேடைகளில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். அத்தோடு எனது மகன் அகஸ்ரி யோகரட்னம் லண்டனில் மிருதங்கக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டு, லண்டன் மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றான். இத்தகைய கலைச் சூழலின் பின்னணியிலிருந்து வந்தவள் என்றவகையில் இங்கு பேசுவது பொருத்தமாகி மகிழ்விக்கின்றது.